full screen background image

குடிமகான் – சினிமா விமர்சனம்

குடிமகான் – சினிமா விமர்சனம்

சினாரியோ மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.சிவகுமார் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

படத்தில் அறிமுக நாயகனாக நடித்திருக்கிறார் விஜய் சிவன். மேலும் சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன் மூவரும் மிக முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் சேதுராமன், ஜி.ஆர்.கதிரவன், கே.பி.ஒய்., ஹானஸ்ட் ராஜ், லவ்லி ஆனந்த், விஜய் ஆனந்த், யுகன், டெனிஸ், மாஸ்டர் அஜய் கிருஷ்ணா, இவியா தரணி, அர்விந்த் ஜானகிராமன், பரத் நெல்லையப்பன், மணி சந்திரா, பார்த்தசாரதி, மனோகர் என்று நாம் முன்னர் பார்த்திராத பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – மெய்யேந்திரன், இசை – தனுஜ் மேனன், படத் தொகுப்பு – என்.ஆர்.சிபு நீல், கலை இயக்கம் – சுரேஷ் விஸ்வா, எழுத்து – குமார், சண்டை காட்சி – பயர் கார்த்திக், நடன இயக்கம் – அமீர், உடைகள் வடிவமைப்பு – பிரியா கரண், பிரியதர்ஷிணி, உடைகள் – எம்.கார்த்திகேயன், ஒப்பனை – ஜி.ராகவன், பத்திரிகை தொடர்பு – ஏ.ஜான்.

நாளைய இயக்குநர் சீஸன்-6’-ல் ரன்னராக வந்த என்.பிரகாஷ் இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார். இது இவரது முதல் படமாகும்.

சாதாரண மிடில் கிளாஸ் வாழ்க்கையை நடத்தும் நாயகன் விஜய் சிவன் மாதம் 15,000 சம்பளத்தில் ஒரு வங்கியின் ஏடிஎம் மிஷினில் பணம் வைக்கும் வேலையைச் செய்து வருகிறார்.

இவரது மனைவி சாந்தினி. இவருக்கு பள்ளிக்கு செல்லும் மகனும், மகளும் உண்டு. மேலும் இவரது  குடிகார தந்தையான சுரேஷ் சக்ரவர்த்தியும் இவருடன்தான் இருக்கிறார்.

கடைகளில் எண்ணெய்யில் பொரிக்கப்பட்டு விற்பனையாகும் வடை, பஜ்ஜி போன்றவற்றை அதிகம் சாப்பிடும் பழக்கமுள்ள விஜய் சிவனுக்கு இதனாலேயே அடிக்கடி வயிற்று வலி வருகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில் திடீரென்று மது அருந்தாமலேயே போதையாகி தான் என்ன செய்கிறோம்.. என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் நடந்து கொள்கிறார் விஜய் சிவன். முதலில் ஆஸ்பத்திரி.. அடுத்தது மேல் வீட்டுக்காரரின் மகளின் பிறந்த நாள் விழா என்று திடீரென்று போகின்ற இடங்களில் சாதாரணமான ஜூஸ் குடித்தாலே சரக்கடித்ததைவிடவும் அதிகமாக ஆட்டம் போடுகிறார் விஜய் சிவன்.

இந்தச் சூழலில் ஒரு நாள் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பப் போன இடத்தில் இந்தப் போதைக்குள் ஆட்படும் விஜய் சிவன், ஏ.டி.எம். மிஷினில் 100 ரூபாய் வைக்கும் இடத்தில் 500 ரூபாய்களை வைத்துவிடுகிறார்.

இதனால் இந்தக் குறிப்பிட்ட ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பவர்களுக்கு மட்டும் கேட்ட தொகையைவிடவும் ஐந்து மடங்கு அதிகமான பணம் கிடைக்க கூட்டம் அள்ளுகிறது. கடைசியில் மொத்தப் பணத்தையும் ஒரு கூட்டம் அள்ளிக்க கொண்டு போக.. 7 லட்சம் ரூபாய் காலியாகிறது. இதனால் விஜய் சிவனின் வேலையும் பறி போகிறது.

குடும்பத்தின் சூழலுக்காக இழந்த வேலையை மீட்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது விஜய் சிவனுக்கு. கூட்டம் அள்ளிச் சென்ற 7 லட்சம் ரூபாயை மீட்டுத் தந்தால் வேலை கிடைக்கும் என்று வங்கி வாக்குறுதி கொடுக்க.. அன்றைக்கு யார், யார் ஏ.டி.எம்.மில் பணத்தை அள்ளிச் சென்றார்களோ, அவர்களிடம் சென்று பணத்தை மீட்கத் துணிகிறார் நாயகன்.

இதற்கு அகில இந்திய குடிகாரர்கள் சங்கத்தின் தலைவரான நமோ நாராயணனும், அவரது கைத்தடிகளான 2 பேரும் உதவிக்கு வருகிறார்கள். இதை செய்து முடித்தார்களா..? அவரது போதை நோய் என்னாச்சு..? ஏன் இவருக்கு மட்டும் இது ஏற்படுகிறது…? என்ற கேள்விகளுக்கான விடையை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

படத்தில் 4 பேரை தவிர மற்ற அனைவருமே புதுமுகங்கள்தான். ஆனால், அவர்களை வைத்தே முழு நீள காமெடி படமாக இதை இயக்கியிருக்கிறார் இயக்குநர் பிரகாஷ். இயல்பான கதைக் களத்தில், அதிகம் லாஜிக் பார்க்க முடியாத அளவுக்கு ஒரு நிறைவான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பிரகாஷ்.

அறிமுக நாயகனான விஜய் சிவன் மிக இயல்பாக நடித்துள்ளார். போதையில் அவர் செய்யும் அலப்பறைகள் ரசிக்கும்வகையில் உள்ளது. அந்த நடிப்பை நிஜமான குடிகாரர்கூட செய்ய முடியாதுதான்.

இந்த போதை விஷயத்தை மனைவி சாந்தினி நம்பாமல் திட்டும்போதும், தான் வருத்தப்படும்போதும் சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார் விஜய் சிவன். அதேபோல் அப்பாவுக்கும், அவருக்கும் இடையில் நடக்கும் மோதலிலும், மேல்வீட்டுக்காரனை சமாளிக்கும்போதும், கிளைமாக்ஸில் உணவுப் பொருள் விற்பவனிடம் பணத்தைத் திரும்பப் பெற அவர் செய்யும் சாகசங்களும் ருசிகரமானவை.

இவரது மனைவியாக நடித்திருக்கும் சாந்தினி குடும்பத் தலைவி கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். கணவரிடம் சீறிக் கொண்டேயிருப்பதும், மாமனாரை மட்டும் லைட்டாக திட்டுவதுமாக இயல்பான மனைவியாகவே வலம் வருகிறார்.

அப்பாவாக நடித்திருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தியும் அடித்து ஆடியிருக்கிறார். குடித்துவிட்டு வந்து செய்யும் அலம்பலும், மிக முக்கியமான காட்சியின்போது கல்யாணம் செய்து கொண்டு புது மனைவியுடன் வந்து நிற்பதும், மகனை குடிகாரன் என்று திட்டி சீன் போடும்போதும் ரசிக்க வைத்திருக்கிறார். மேலும் மேல்வீட்டுக்காரனிடம் சண்டையிடும் காட்சியிலும் சிரிப்போ சிரிப்பென்று சிரிக்க வைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் இன்னொரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் மணமகனாக நடித்திருப்பவரின் நடிப்பும் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட். 40 வயதாகியும் திருமணம் நடக்காமல் இருந்து இந்தத் திருமணத்தை நடத்தியே தீருவது என்று வெறியுடன் இருக்கும் அவரது திருமணத்தில் விஜய் சிவனின் கோஷ்டி புகுந்து விளையாடும் காட்சிகள் முழுவதுமே சிரிப்பலை..!

நமோ நாராயணனும், அவரது சிஷ்யர்களும் இன்னொரு பக்கம் லைட்டான காமெடியை இடைவேளைக்கு பின்பு அவ்வப்போது வந்து தூவிக் கொண்டே இருக்கிறார்கள். இவர்களாலும்தான் படத்தை சிரிப்போடு பார்க்க முடிந்திருக்கிறது.

படத்தில் எந்தவொரு கேரக்டரும் தேவையில்லாதது என்று சொல்ல முடியாத அளவுக்குக் கதாப்பாத்திரங்களையும், அவர்களுக்கான கேரக்டர் ஸ்கெட்ச்சையும் வடிவமைத்திருக்கிறார் இயக்குநர்.

மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு டாஸ்மாக் பார் காட்சிகளிலும், கிளைமாக்ஸ் சண்டை காட்சியிலும் சிறப்பு என்றே சொல்லலாம். படத்தின் இயல்பு தன்மைக்கு பொருத்தமான கலர் டோன்களை வடிவமைத்திருக்கிறார்கள். தனுஜ் மேனனின் இசையில் டாஸ்மாக் பாடல் மட்டும் சிறப்பு.

ஒரு சின்ன கருதான் படத்தின் கதை என்பதால் முதல் பாதியில் கதாப்பாத்திரங்களின் கேரக்டர் ஸ்கெட்ச்சை நிறையவே விஸ்தாரமாக பேசியிருக்கிறார். மேலும் இதுவொரு நகைச்சுவை படம் என்பது இடைவேளைக்கு பின்பே நமக்குத் தெரிய வருவதும் படத்திற்கான மைனஸ் பாயிண்ட்.

இரண்டாம் பாதியில் குடிகாரர்களின் சங்கத் தலைவர் நமோ நாராயணன் கதைக்குள் வந்த பிறகுதான் படமே சூடு பிடித்து, படம் முடியும்போது இதுவொரு நல்ல நகைச்சுவை படம் என்று சொல்ல வைத்துள்ளது.

இரண்டாம் பாதியை போலவே முதல் பாதியிலும் காமெடியை தூக்கலாக திரைக்கதையில் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதோடு படத்தின் தலைப்பையும் கொஞ்சம் மாற்றியமைத்திருந்தால் தியேட்டருக்கு குடும்பத்தினரை அழைப்பதற்கு வசதியாக இருந்திருக்கும்.

எப்படியிருந்தாலும் இந்தக் குடிமகான்’, சாதாரண குடிமகன்களின் அலப்பறையையும் தாண்டி ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.

RATING : 3.5 / 5

Our Score