full screen background image

பூமர் அங்கிள் – திரைப்பட விமர்சனம்

பூமர் அங்கிள் – திரைப்பட விமர்சனம்

இந்தப் படத்தை அன்கா மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தில் யோகிபாபு, ஓவியா, தங்கத்துரை, சேஷூ, பாலா, ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.சுவாதீஸ் படத்தை எழுதி, இயக்கியுள்ளார்.

கொடைக்கானல் மலைப் பிரதேசத்தில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த யோகிபாபு ஒரு ரஷ்ய நாட்டுப் பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்ட கையோடு   அவரிடமிருந்து விவாகரத்தும் கேட்கிறார்.

விவாகரத்துக்கு ரஷ்ய நாட்டுப் பெண் ஒரேயொரு நிபந்தனையை விதிக்கிறார்.  யோகிபாபுவின் சொந்த ஊரில் இருக்கும் அவரது பூர்வீக வீட்டுக்குச் சென்று, அங்கே ஒரு நாள் தங்கியிருக்க வேண்டும். இதற்கு யோகிபாபு ஒப்புக் கொண்டால் நான் விவாகரத்துக்குத் தயார் என்கிறார்.

இதற்கு சம்மதிக்கும் யோகிபாபு தன் மனைவியை அழைத்துக் கொண்டு ஊருக்கு வருகிறார். அதே ஊரில் வசித்து வரும் யோகிபாபுவின் பழைய நண்பர்களான தங்கத்துரை, சேஷூ, பாலா மூவரும் யோகிபாபு தங்களிடம் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டதால் அவர் மீது கோபம் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் வெளியூரில் இருந்து யோகிபாபு இவர்களுக்கு அனுப்ப வைத்த சத்து மாத்திரைகளினால் இவர்களுக்கு பல உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதால் இதற்குப் பழிக்குப் பழி வாங்கவும் துடிக்கிறார்கள்.

யோகிபாபு தன் மனைவியுடன் ஊருக்கு வருகிறார். தன்னுடைய பூர்வீக வீடான அரண்மனையில் தங்குகிறார். அரண்மனையில் மாடிக்கு மட்டும் யாரும் போக்க் கூடாது என்று தடையை விதிக்கிறார்.

ஆனால் இதை அவரது மனைவியே மீறுகிறார். மேலும் தன்னுடைய அதீதமான தொழில் நுட்ப அறிவினால் ஏஐ முறையில் ஓவியாவை உருவாக்கி அவரை வைத்து யோகிபாபுவை மயக்குகிறார்.

இதற்கிடையே,  யோகிபாபுவை பழிவாங்க சேசு, தங்கதுரை, பாலாவும் அந்த அரண்மனைக்குள் வருகிறார்கள். இவர்களைத் தொடர்ந்து யோகிபாபுவின் மாத்திரையால் கண் பார்வையை இழந்த ஊர் தலைவரான ரோபோ சங்கரும் அந்த அரண்மனைக்குள் நுழைகிறார்.

இதன் பிறகு நடக்கும் குட்டிக் கலாட்டாக்களும், காமெடி என்ற பெயரில் நடக்கும் வெத்து வேட்டுக் களேபரங்களும்தான் இந்தப் படத்தின் திரைக்கதை.

தற்போதைய நிலையில் காமெடி நடிகர்களுக்கு தமிழ்த் திரையுலகத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் கிடைத்த இடைவெளியில் நன்றாகக் கல்லாக் கட்டி வரும் யோகிபாபு ஏதோ சிரிக்க வைக்க முயன்று நடித்திருக்கிறார். சில இடங்களில் மட்டுமே நமக்கு சிரிப்பு வருகிறது. பல இடங்களில் ஐயோ சாமி.. ஆளைவிடுங்கடா என்றுதான் தோன்றுகிறது.

யோகிபாபு மட்டுமில்லை. இவருடன் நடித்திருக்கும் சேசு, தங்கதுரை, பாலா, ரோபோ சங்கர் என்று இருந்த காமெடி நடிகர்கள் அனைவருமே நம்மை ஏமாற்றியிருக்கிறார்கள். இவர்களின் காமெடிக்காக Hulk, Sakthiman, Spiderman வேடத்தை பூண்டதைத்தான் நம்மால் மன்னிக்கவே முடியாது.

ஓவியா ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டுவிட்டு போகிறார். அவ்வளவுதான்! அந்த ரஷ்யப் பெண்மணி தமிழ் வசனத்தைக் கடித்துத் துப்பியிருக்கிறார். மேலும் நடித்த மற்றவர்களும் இதே பாணியில் சிம்பிளாக நடித்து முடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சுபாஷ் தண்டபாணி தன்னால் முடிந்த அளவுக்குக் காட்சிகளை சிறப்பாக படமாக்கியிருக்கிறார். சின்ன பட்ஜெட்டுக்கு ஏற்றபடி இது கிராபிக்ஸ்தான் என்பது தெளிவாகத் தெரியும்படியாகவே கிராபிக்ஸ் செய்திருக்கிறார்கள்.

சாந்தன், தர்ம பிரகாஷ் இரட்டையர்களின் இசையில் ஓவியாவின் பாடல் ஓகே ரகம்.. பின்னணி இசை நமது காதை அறுத்துத் தள்ளியிருக்கிறது.

கதைக்காக கஷ்டமே படாமல், டிஸ்கஷனே செய்யாமல் 48 பக்கங்களுக்கு திரைக்கதையை எழுதிக் கொண்டு போய் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து வசனத்தை எழுதி, ஏனோதானோவென்று இயக்கத்தையும் செய்து, போஸ்ட் புரொடெக்சனில்கூட கஷ்டப்படாமல் கொடுத்தவரைக்கும் போதும் என்று சொல்லி படத்தைப் புடுங்கிக் கொண்டு வந்து, அதைத் தைரியமாகத் தியேட்டருக்கும் கொண்டு வந்து காட்டியிருக்கும் இந்த இயக்குநரை வெகுவாகப் பாராட்டியே ஆக வேண்டும்..!

இனிமே சினிமா பார்க்க தியேட்டருக்கு வருவீங்க..” என்று சொல்லி ரசிகர்களை ஓட, ஓட விரட்டியிருக்கிறார் இந்த பூமர் அங்கிள்’..!

RATING : 2 / 5

Our Score