full screen background image

ரசவாதி – திரைப்பட விமர்சனம்

ரசவாதி – திரைப்பட விமர்சனம்

திரைப்பட ஆர்வலர்களைக் கவரும் வகையில் தீவிர உணர்ச்சிகளையும், யதார்த்தங்களையும் தன்னுடைய திரை மொழியில் திறமையாகக் கையாள்பவர் இயக்குநர் சாந்தகுமார்.

அவர் இயக்கத்தில் வெளியான ‘மௌன குரு’ மற்றும் ‘மகாமுனி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் தமிழ் ரசிகர்களைத் தாண்டி பல மொழிப் பார்வையாளர்களையும் ஈர்த்தது.

அவர் இயக்குநராக அறிமுகமான ‘மௌன குரு’ படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது. மற்றும் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் ஆனது.

அவரது இரண்டாவது வெளியீடான ‘மகாமுனி’ 30 சர்வதேச விருதுகளுடன் 24 விருதுகளை ‘சிறந்த இயக்குநரு’க்காக வென்றது. இந்தப் படத்தில் இருந்து பல வசனங்கள் சமூக வலைதளங்களிலும் வைரலானது. 

தற்போது இவரது அடுத்தப் படைப்பாக உருவாகியிருக்கும் ‘ரசவாதி – தி அல்கெமிஸ்ட்’, ஒரு காதல் ஆக்‌ஷன்-க்ரைம் த்ரில்லர் கலந்த படமாகும்.

சாந்தகுமாரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான டி.என்.ஏ. மெக்கானிக் கம்பெனி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

இப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் மற்றும் பல பரிச்சயமான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை – எஸ்.எஸ்.தமன், ஒளிப்பதிவு – சரவணன், இளவரசு, சிவகுமார், படத் தொகுப்பு –  வி.ஜே.சாபு ஜோசப், நடன இயக்கம் – சதீஷ் கிருஷ்ணன், கலை இயக்கம் – சிவராஜ், ஒலிப்பதிவு – சேது, நிர்வாகத் தயாரிப்பாளர் – எஸ்.பிரேம், பாடல்கள் – யுகபாரதி, ஒலிக் கலவை – தபஸ் நாயக், உரையாடல் பதிவாளர் எம்.எஸ்.ஜெயசுதா, சண்டை இயக்கம் – ஆக்சன் பிரகாஷ், பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா, புகைப்படங்கள் – ஆனந்த், பெருமாள் செல்வம், உடைகள் – மினு சித்ராங்கனி.ஜே.

இந்த ரசவாதம் படத்தை ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனத்தின் சார்பில் பி.சக்திவேலன் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

‘ரசவாதி’ என்பது கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் கண் முன்னே கொண்டு வரக் கூடிய விஷயம். உறவுகளை மையமாக வைத்து காதல், கோபம், பழி வாங்கல், இழப்பு என்ற பல்வேறு உணர்வுகளையும் இத்திரைப்படம் கடந்து செல்கிறது.

கொடைக்கானலில் 30 வயதான ஒரு சித்த மருத்துவர் அமைதியான வாழ்க்கை நடத்தி வருகிறார். ஆனால், அவரது கடந்த கால விஷயம் ஒன்று அவரது ஆன்மாவை துளைத்துக் கொண்டிருக்கிறது.

அந்த சமயத்தில் தனது ஐடி வேலையை விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கைக்காக இந்த மலைப் பகுதியில் வந்திறங்கும் புதிய பெண் ஒருத்தியை சந்திக்கிறார். அவளுடைய நட்பினால் சித்த மருத்துவருக்குக் கடந்த கால கஷ்டங்கள் தீரும் நேரத்தில், அங்கிருக்கும் உள்ளூர் இன்ஸ்பெக்டரால் சில பிரச்சினைகளை சந்திக்கிறார். அது என்ன என்பதும், அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும்தான் இந்தப் படத்தின் கதை.

நாயகன் ‘சித்த மருத்துவர்’ என்பதால், இது சித்த மருத்துவம் தொடர்பான படம் அல்ல. இது ஒரு ஆக்‌ஷன், த்ரில்லர் கலந்த காதல் கதைதான்.

நாயகனான அர்ஜூன் தாஸ், கொடைக்கானலில் சித்த மருத்துவராக பணியாற்றி வருகிறார். போகன் வைத்திய சாலை என்ற பெயரில் தனது கிளினிக்கை வைத்திருக்கிறார்.

இயற்கையைக் காப்பாற்ற வேண்டும்.. விலங்குகளிடத்தில் அன்பும், இரக்கமும் செலுத்த வேண்டும் என்ற ஒரு மருத்துவருக்கான உண்மையான உயரிய குணங்களைக் கொண்டவர்.

அதே கொடைக்கானலில் இருக்கும் ஒரு ரெஸ்ட்டாரெண்ட்டுக்கு மேனேஜராக பெங்களூரில் இருந்து வருகிறார் தான்யா. கொடைக்கானலுக்குள் நுழையும்போதே ஒரு சந்தர்ப்பத்தில் அர்ஜூன் தாஸூம், தான்யாவும் சந்திக்கின்றனர். இந்தச் சந்திப்பு அந்த ரெஸ்ட்டாரெண்ட்டுக்கு அர்ஜூன் தாஸ் சாப்பிட வரும்போதும் தொடர்கிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது.

இந்தச் சூழலில், கொடைக்கானலுக்கு இன்ஸ்பெக்டராக வருகிறார் சுஜித் சங்கர். சிறு வயதிலேயே தனது குடும்பச் சூழலால் ஒருவிதமான இறுக்கமான மன நிலையில் வளர்ந்திருக்கும் சுஜித் சற்று மன நலம் பாதிக்கப்பட்டு கிரிமினல்தனமாகவும் இருக்கிறார்.

இன்ஸ்பெக்டர் சுஜித் அர்ஜூன் தாஸை நேரில் பார்த்ததிலிருந்து அவர் மீது ஒருவித கோபத்தில் இருக்கிறார். அர்ஜூன்தாஸூடன் தான்யா பழகுவதைப் பார்த்து தான்யாவை எச்சரிக்கிறார்.

அது முடியாமல்போக தான்யா-அர்ஜூன்தாஸ் இருவர் மீதும் கோபத்தில் இருக்கும் சுஜித், அர்ஜூன் தாஸ் கொலை வெறியோடு திரிகிறார். இதற்கான காரணம் என்னவென்று இரண்டாம் பாதியில் நமக்கு சொல்லப்படுகிறது.

இந்தக் கொலை வெறியினால் காதலர்களுக்கு என்ன நடந்த்து.. இன்ஸ்பெக்டரிடமிருந்து காதலர்கள் தப்பித்தார்களா இல்லையா.. இன்ஸ்பெக்டருக்கும், அர்ஜூன்தாஸூக்கும் இடையில் என்ன பகை.. இதுதான் இந்தப் படத்தின் உண்மையான சஸ்பென்ஸ், திரில்லர் கலந்த படத்தின் திரைக்கதை.

சதாசிவபாண்டி என்ற சித்த வைத்தியர் கேரக்டரில் நடித்திருக்கும் அர்ஜூன்தாஸ் வழக்கம்போல தனது நடிப்பில் மிரட்டியிருக்கிறார். அவர் முதன்முதலில் திரையுலகத்துக்கு வந்த கைதி முதல் இந்தப் படம் வரையிலும் அர்ஜூனின் நடிப்பு மேன்மேலும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. இதற்கு அவருடைய கனமான குரலும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

தன் குரலால் மட்டுமில்லாமல் கண்களாலும் மிரட்டலான நடிப்பலைக் காண்பித்திருக்கிறார் அர்ஜூன் தாஸ். இந்தக் கேரக்டருக்கு அர்ஜூனை விட்டால் வேறு ஆளில்லை என்று சொல்லும் அளவிற்கு நடிப்பில் குறைவில்லாமல் செய்திருக்கிறார்.

மேலும் இயற்கையை நேசிப்பவராக, சுற்றுச் சூழலை காப்பவராக சில காட்சிகளில் அர்ஜூன்தாஸ் பேசும் சில வசனங்கள் இப்போதைய காலக்கட்டத்துக்கு மிகவும் தேவையானது.

இதுதான் தனது முதல் படம் என்பதுபோல படம் நெடுகிலும் தனது அழகையும், அழகான நடிப்பையும் ஒரு சேரக் கொடுத்திருக்கிறார் தன்யா ரவிச்சந்திரன். அவரது சிற்சில ஷாட்டுகளைப் பார்க்கும்போது இவரை வைத்துப் படம் இயக்கிய இயக்குநர்கள் இவரைச் சரியாகப் பயன்படுத்தவில்லையோ என்றே நினைக்கத் தோன்றுகிறது. இந்தக் கதாப்பாத்திரத்தில் தைரியமாக சிகரெட், கஞ்சா புகைக்கும் காட்சியில் நடித்த தைரியத்துக்காகவே இன்னொரு பாராடுக்கள்.

மற்றொரு கதாநாயகியான ரேஷ்மா வெங்கடேஷ் தனது முதல் படமான இதிலேயே தனது துள்ளலான நடிப்பையும், நடனத்தையும் காட்டி முத்திரைப் பதித்திருக்கிறார்.

கல்லூரியில் இவர் ஆடும் அந்த பரத நாட்டிய நடனம் சிம்ப்ளி சூப்பர்ப்..! அர்ஜூன் தாஸுடனான காதல் போர்ஷன், அம்மாவுடன் சண்டை, கொடுமைக்கார கணவனை சகித்துக் கொண்டு வாழ்வது.. கடைசியில் தன் முடிவைத் தானே தேடிக் கொள்வது என்று படத்தின் ஹைலைட்டான திரைக்கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார் ரேஷ்மா.

பிரமம் சாய் பல்லவி, பிரேமலு ம்மிதா பைஜூவைப் போல இந்த ரேஷ்மாவும் நிச்சயமாக ஒரு ரவுண்டு வருவார் என்று நம்பலாம். அந்த அளவுக்கு தனது நடிப்பையும் காண்பித்திருக்கிறார்.

வில்லனாக மிரட்டியிருக்கிறார் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சுஜித் சங்கர்.  வித்தியாசமான முகத்துடன், அவரது பார்வையும், உடல் மொழியும் ரசிகர்களைப் பயமுறுத்தும் அளவிற்கு நடித்திருக்கிறார் சுஜித்.

மேலும் மன நல மருத்துவரான ரம்யாவின் கேரக்டர் ஸ்கெட்ச் ருசிகரமானது. அவரை இன்ஸ்பெக்டர் தன் வீட்டில் வேலை செய்ய வைக்கும் காட்சிகள் ரசனையானது. அடங்கிப் போகாமல், அவனை கொலை செய்யணும்ன்னு நினைச்ச பாரு.. இங்கதான் உன்னை எனக்கு ரொம்ப்ப் புடிச்சுப் போச்சு என்று சுஜித், ரம்யாவிடம் சொல்லும் காட்சியில் ஒட்டு மொத்த்த் தியேட்டரும் கை தட்டி ஓய்கிறது.

மேலும் ரிஷிகாந்த், ஜி.எம்.சுந்தர், ரம்யாவின் அம்மா, அப்பா என்று படத்தில் நடித்திருக்கும் மற்றவர்களும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொடைக்கானலை இதற்கு முன்னும் பல படங்களில் பார்த்திருக்கும் நமக்கு இதுவரையிலும் பார்த்திராத புதிய கொடைக்கானலை காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சரவணன் இளவரசு.

முதல் காட்சியில் துவங்கி, இறுதிவரையிலும் ஒளிப்பதிவின் தரம் குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர். படத்தில் நடித்திருக்கும் அனைவரையும் மிக அழகாகக் காட்டியிருக்கிறார். இதற்காகவே ஒளிப்பதிவாளருக்கு இன்னுமொரு பாராட்டு..!

தமனின் பாடல் இசையைவிடவும், பின்னணி இசை அபாரம். படம் நெடுகிலும் ஒரு தனி ராஜாங்கமே நடத்தியிருக்கிறார் தமன். அதிலும் சுஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அவர் வடிவமைத்திருக்கும் இசை நம் வயிற்றைக் கலக்கும் அளவுக்கு பயமுறுத்துகிறது.

படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவுவரையிலும் இதுவொரு சஸ்பென்ஸ், திரில்லர் படம் என்பதைக் காட்டும்விதமாக படம் மொத்தமும் இறுக்குமான சூழலிலேயே நகரும் அளவுக்கு படத்தொகுப்பு செய்திருக்கும் தொகுப்பாளருக்கும் நமது பாராட்டுக்கள்..!

தனது முந்தைய இரண்டு படங்களைப் போலவே இப்படத்திலும் தனது பெயருக்கான முத்திரையை ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார்.

அவருடைய சிறப்பான இயக்க ஆற்றலால் படத்தில் ஒரு நொடிகூட, ஒரு காட்சிகூட தேவையில்லாது எதுவுமில்லாமல் அனைவரும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

ரேஷ்மாவின் அந்த நடனக் காட்சியில் பாடலே இல்லாமல் வெறுமனே இசையை வைத்தே காண்பித்திருப்பது வித்தியாசமாகவும், ரசிக்கக் கூடியதாகவும் இருந்த்து. பாடல் ஒலித்திருந்தால்கூட இந்த அளவுக்கு ரசனையாக இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான்..!

படத்தின் பேசப்பட்டிருக்கும் வசனங்களும் படத்திற்கு மிகப் பெரிய பலம் அமைந்திருக்கிறது. வெறுமனே காதல், பழி வாங்குதல் என்பதை மட்டுமே கொண்டு போகாமல், இயற்கையைக் காப்பாற்ற வேண்டும். சித்த வைத்தியத்தின் பெருமை, குடியின் கொடூரம், இந்த மண்ணின் வளம், மரம், செடி, கொடிகளின் வாழ்க்கை என்று பலதரப்பட்ட விஷயங்களையும் படத்தில் பேசியிருக்கிறார் இயக்குநர்.

மலைகளின் மகத்துவம், மரத்தோடு பேசுவது நம் மூதாதையரிடம் பேசுவதுபோல என்று சொல்லியிருப்பது, நாம் பள்ளிக் காலத்தில் படித்திருந்த பாதரசத்தின் அருமை, பெருமைகள், குடிகாரர்களின் நான்கு வகைகள், மன நோயை தீர்க்கும் மருந்தாக பூண்டுவை சொல்வது.. என்று இந்தப் படத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய பல பொது அறிவு விஷயங்களை ஒரு ஆசிரியராக நமக்குள் புகுத்தியிருக்கிறார் இயக்குநர்.

ஆனால், இவையெல்லாம் இருந்தும் தான்யாவின் சிகரெட் பழக்கம், கஞ்சா புகைப்பதை தவறு என்று அர்ஜூன்தாஸ் சொல்லித் திருத்தியிருக்க வேண்டும். குடியைவிட வேண்டும் என்று தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அறிவுறுத்தும் அர்ஜூன் தாஸூக்கு, தான்யாவின் இந்தப் பழக்கம் தவறாகத் தெரியவில்லையாக்கும்..! இதை செய்யாத குற்றத்திற்காக இயக்குநர் சாந்தகுமாருக்கு ஒரு கொட்டு..! 

திரையுலகத்திற்குள் இன்றைக்கு புதிதாக கால் பதிக்க வரும் இயக்குநர்கள் அனைவரும் இந்தப் படத்தைப் பார்த்து இயக்கம் என்றால் என்ன..? கதையாடல் எப்படி.? உரையாடல் எழுதுவது எப்படி..? திரைக்கதை அமைப்பது எப்படி..? காட்சிக் கோணங்களை எப்படி வைப்பது..? தொழில் நுட்பக் கலைஞர்களை கையாள்வது எப்படி..? என்று அனைத்தையும் கற்றுக் கொள்வது அவர்களுக்கு நல்லது..!

இந்த ‘ரசவாதி’ ரசிகர்களை மெய் மறக்கச் செய்யும் வித்தையைக் காண்பிக்கிறார். அவசியம் பார்த்து மகிழுங்கள்..!

RATING : 4.5 / 5

Our Score