full screen background image

‘தி கோட் லைஃப் – ஆடு ஜீவிதம்’ – சினிமா விமர்சனம்

‘தி கோட் லைஃப் – ஆடு ஜீவிதம்’ – சினிமா விமர்சனம்

ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு சர்வைவல் அட்வென்ச்சராக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான ‘ஆடு ஜீவிதம்’ கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.

புகழ் பெற்ற எழுத்தாளர் பென்யாமின் எழுதிய இந்த நாவல் வெளிநாட்டு மொழிகள் உட்பட 12 வெவ்வேறு மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

1990-களின் முற்பகுதியில் கேரளாவின் பசுமையான கடற்கரையிலிருந்து வெளிநாட்டில் அதிர்ஷ்டத்தைத் தேடி இடம் பெயர்ந்த  இளைஞன் நஜீப்பின் வாழ்க்கையின் உண்மைக் கதையைதான் இந்த நாவல் விளக்குகிறது.

தேசிய விருது பெற்ற இயக்குநர் பிளெஸ்ஸியின் இயக்கத்தில் விஷுவல் ரொமான்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

இந்த ’தி கோட் லைஃப் – ஆடுஜீவிதம்’ படத்தில், பிருத்விராஜ் சுகுமாரன், ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், அமலா பால் மற்றும் கே.ஆர்.கோகுல், பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக் அபி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை இயக்கம் மற்றும் ஒலி வடிவமைப்பை அகாடமி விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகியோர் செய்துள்ளனர். படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை சுனில் கே.எஸ்.ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத மிகப் பெரிய முயற்சியாகும். இதன் தயாரிப்பு தரம், கதை சொல்லல் மற்றும் நடிப்புத் திறன் ஆகியவற்றில் புதிய வரையறைகளை அமைத்துள்ளது. சிறந்த திரையரங்க அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும்.

வெறும் 5-ம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் நாயகன் நஜீப் என்னும் பிருத்விராஜ் ஊரிலேயே சின்னச் சின்ன வேலைகளை செய்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறார். திருமணமாகி மனைவியான அமலாபால் கர்ப்பமாக இருக்கிறார்.

இந்த நிரந்தரமில்லாத வேலையில் நீண்ட நாட்கள் இருக்க முடியாது.. பிழைக்க முடியாது என்பதை உணரும் பிருத்வி கேரளாவின் பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கும் “வளைகுடா நாடுகளுக்குப் போய் பிழைக்கலாம்” என்ற எண்ணத்தைக் கையில் எடுக்கிறார்.

இதற்காக தன்னுடைய சின்ன வீட்டையும் விற்றுவிட்டு கிடைத்தத் தொகையில் விசா எடுத்து சவூதிக்குக் கிளம்புகிறார் பிருத்வி. இவருடன் இவருடைய பக்கத்து ஊரில் வசிக்கும் கோகுலும் செல்கிறார்.

ரியாத் விமான நிலையத்தில் இறங்கியதும் இவர்களை அழைத்துச் செல்ல வேண்டிய ஆள் வராத்தாலும், அவர் யாரென்று தெரியாத்தாலும் காத்துக் கிடக்கிறார்கள் இருவரும்.

இந்த நேரத்தில் இவர்களைப் போன்று கூலியாட்களைத் தேடி வரும் உள்ளூர்க்காரரான தலிப் அல் பலுஷி இவர்கள்தான் தான் தேடி வந்த கூலியாட்கள் என்று நினைத்து இவர்களது பாஸ்போர்ட்டையும், விசாவையும் பறித்துக் கொண்டு இவர்களை தன்னுடைய வண்டியில் அழைத்துச் செல்கிறார்.

அந்த நள்ளிரவில் பாலைவனத்துக்குள் போகும் வண்டியிலிருந்து முதலில் கோகுல் இறக்கவிடப்படுகிறான். அடுத்து பிருத்விராஜூம் வேறொரு இடத்தில் விடப்படுகிறார்.

மொழி தெரியாமல் அங்கே வந்து மாட்டிக் கொள்ளும் பிருத்விராஜ் தனக்குத் தெரிந்த அனைத்து வகையிலும் அங்கேயிருப்பவர்களிடம் சொல்லித் தப்பிக்க பார்க்கிறார். ஆனால் முடியவில்லை.

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரும் துன்புறுத்தப்பட்டு, அந்தக் கொடுமையாந பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் வேலையில் திணிக்கப்படுகிறார் பிருத்விராஜ்.

ஹெல்ப்பர் வேலைக்கு வந்து இப்படி ஆடு, ஒட்டகம் மேய்க்கும்படியாக தான் ஒரு அடிமையாக இருப்பதை உணரும் பிரித்விராஜ் அங்கிருந்து ஒரு முறை தப்பிச் செல்லும்போது மாட்டிக் கொள்கிறார். உடனேயே அவரது கணுக்கால் ஒடிக்கப்படுகிறது. அதன் பிறகு, தப்பிச் செல்ல எண்ணமே இல்லாத நிலையில், அந்தக் கொடிய வாழ்க்கைக்குள் தன்னையும் பழக்கிக் கொள்கிறார் பிருத்விராஜ்.

கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் அந்தப் பாலைவனத்தில் ஒரு நாள் கோகுலை சந்தித்துவிடும் பிருத்விராஜ், கோகுலுடன் வேலை செய்யும் ஜிம்மி ஜீன் லூயிஸின் உதவியோடு அங்கேயிருந்து தப்பிச் செல்ல திட்டமிடுகிறார்.

இந்த மூவரும் அங்கிருந்து தப்பினார்களா.. இல்லையா?.. என்பதை நாம் நினைத்துப் பார்க்க முடியாத திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பிளெஸ்ஸி.

நாயகனாக நஜீப் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பிரித்விராஜின் நடிப்புதான் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். தனது இத்தனையாண்டு கால நடிப்புலக வாழ்க்கையில் இப்படியொரு கடுமையான உழைப்பினை பிருத்விராஜ் எந்தப் படத்திலும் கொடுத்ததில்லை.

அவருடைய கடின உழைப்பு படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. பாலைவன வாழ்க்கையில் மூன்று வருட காலத்திலும் அவ்வப்போது மாறுபட்ட தோற்றத்தில் நம்மை பயமுறுத்தும் அளவுக்கான உடல் அமைப்புகளோடு அந்த நேரத்திய வாழ்க்கையை அப்படியே நிஜம் என்பதைப்போல காட்டியிருக்கிறார் பிருத்விராஜ்.

பல மாதங்கள் வளர்ந்திருக்கும் முடி, கரை சேர்ந்த பற்கள்.. தண்ணீர் பார்க்காத முகம், கிழிந்த ஆடைகள்.. ஒடிசலான தேகம்.. அழுக்கு படர்ந்த கை, கால்கள், ஒட்டிய வயிறுடன் பாலைவன பிச்சைக்காரன் கோலத்தில் அவர் தோன்றும்  காட்சிகள், நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. அவருடைய நடிப்பு கேரியரிலேயே சிறந்த நடிப்பை இந்தப் படத்தில்தான் காண்பித்திருக்கிறார் பிரித்விராஜ்.

இவரைப் போலவே இன்னொரு பிச்சைக்காரன் கோலத்தில் நடித்திருக்கும் கோகுலும் நமது பரிதாபத்தைப் பெற்றுக் கொள்கிறார். பாலைவனத்தில் தப்பிச் செல்லும்போது அவருக்கு ஏற்படும் சோகம் தாங்க முடியாதது.

இதேபோல் இவர்களுக்குத் தைரியம் கொடுத்து, தன்னை வருத்திக் கொண்டும், அல்லாவை வணங்கிக் கொண்டும் இவர்களை வழி நடத்தும் ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸூம் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

நஜீப்பின் மனைவியாக நடித்திருக்கும் அமலாபால் சினிமாவுக்காக அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் தனது  வசீகரமான முகம், உடல் கவர்ச்சியின் மூலம் ரசிகர்ளைக் கவர்ந்திழுக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சுனிலின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது. பாலைவனத்தின் கொடூரமான வெயிலையும், இருளையும் சரி நிகராகப் பதிவு செய்திருக்கிறார். கேரளாவில் படமாக்கப்பட்டிருக்கும் பாடல் காட்சிகளும் சிறப்பு.

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம்தான். முதல் 2 பாடல்கள் காதலையும், பூர்வீகத்தையும் சொல்ல… அடுத்தடுத்த சோகப் பாடல்கள் அந்த நேரத்திய நமது மன பாரத்தை வெளிப்படுத்தும்விதமாய் அமைந்து சோகத்தைக் கூட்டியிருக்கின்றன. படத் தொகுப்பாளர் படத்தின் நீளத்தினை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

வெளிநாட்டிற்குப் போய் லட்சம், லட்சமாய் சம்பாதித்து பணத்தை ஊருக்கு அனுப்பி, குடும்பத்தைக் காப்பாற்ற நினைக்கும் அப்பாவி இளைஞர்களுக்கு இந்தப் படம் நிச்சயமாய் ஒரு பாடமாக இருக்கும்.

சவூதி நாட்டின் சட்டத் திட்டங்கள் இன்றைக்கும் அந்த நாட்டின் குடிமக்களைக் காப்பாற்றுவதுதான் முதல் வேலையாக இருக்கிறது என்பதை இந்தப் படத்தில் அழுத்தமாகச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் வளைகுடா நாடுகளில் படம் வெளியாக வேண்டுமே என்பதால் இயக்குநர் இதை முற்றிலுமாக தவிர்த்திருக்கிறார்.

நஜீப்பை பாலைவனத்தில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் ஒரு அரபு நாட்டுக் குடிமகனைக் காட்டும்போது, பிச்சைக்காரன் கோலத்தில் இருக்கும் அதே நஜீப்பை தனது விலையுயர்ந்த ரோல்ஸ்ராய்ஸ் காரில் ஏற்றிக் கொண்டு வந்து ஊருக்குள் இறக்கிவிட்டுப் போகும் இன்னொரு அரபி குடிமகனையும் நல்லவராகக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

இறுதியில் சிறைச்சாலையில் நடக்கும் அடையாள அணிவகுப்பு, ஸ்பான்ஸர் என்றால் என்ன.. அந்த அரபு முதலாளி நஜீப்பைப் பார்த்தும் அழைத்துச் செல்லாமல் விட்டது ஏன் என்பதை இன்னமும் புரிவதுபோல சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இந்தப் படத்தின் கதையை அறியாத மலையாளத்து ரசிகர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவர்களை ஆக்கிரமித்திருக்கும் இந்தக் கதையில் சோகமே நெடும் பயணம் செய்திருப்பதோடு அதை பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் ஏனோ முடியாமல்போய்விட்டது என்பது உண்மைதான்.

பிளெஸ்ஸியின் ஒவ்வொரு திரைப்படமும் அடிப்படையில் ஒரு சோகக் காவியத்தை ஒட்டித்தான் இருக்கும். ஆனால், அதையெல்லாம் மிக எளிதாக பார்வையாளர்களால் நுகர முடிந்தது. துரதிருஷ்டவசமாக இத்திரைப்படம் அந்த மெஸ்மரிஸத்தைக் கொடுக்கவில்லை என்பதும் உண்மைதான்.

எப்படியிருந்தாலும் மலையாள திரையுலக வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக இத்திரைப்படம் இடம் பிடித்திருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை..!

RATING : 4.5 / 5

Our Score