‘பாவகி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் சார்பில், தயாரிப்பாளர்கள் ஜெயச்சந்தர் பின்னம்நேனி, பாலாஜி மாதவன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் இது.
இந்த ‘இடி மின்னல் காதல்’ படத்தில், சிபி மற்றும் பவ்யா த்ரிகா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்க, இவர்களுடன் ராதாரவி, பாலாஜி சக்திவேல், ஜெய் ஆதித்யா, ஜெகன், வின்சென்ட் நகுல், மனோஜ் முல்லத், மோனா பெத்ரே, அனுஷா, ஸ்ரீ ராம், சோமு, சிவராஜ், ருத்ரு மற்றும் ‘ஆரண்ய காண்டம்’ படத்தில் நடித்த யாஸ்மின் பொன்னப்பா ஆகியோர் நடித்துள்ளனர்.
சிபி, பவ்யா த்ரிகா இருவரும் காதலர்கள். இன்னும் 5 நாட்களில் வேலைக்காக அமெரிக்கா செல்லவிருக்கிறார் சிபி. அதற்கு முன்பாக காதலர்கள் இருவரும் அவுட்டிங்க என்று ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த நள்ளிரவில் அவர்கள் காரில் சில்மிஷம் செய்தபடியே வரும்போது இவர்களது காரில் ஒருவர் அடிபட்டு இறந்துவிடுகிறார். இது போலீஸ் கேஸானால் சிபி வெளிநாடு செல்வது தடைபடுமே என்று நினைத்து காதலர்கள் போலீசிடம் நடந்ததை முழுமையாகச் சொல்லாமல் மறைக்கிறார்கள்.
இதற்கிடையே அதே விபத்தில் சிக்கி இறந்தவரின் மகனான சிறுவன் ஆதித்யா தன் தந்தையைத் தேடுகிறான். கடைசியாக தந்தை இறந்து போனதை அறிந்து துடிக்கிறான். இவனது வீட்டுக்கு அருகே வசிக்கும் பாலியல் தொழிலாளியான யாஸ்மின் பொன்னப்பா அவனுக்கு ஆதரவு கொடுக்கிறார்.
சிறுவன் ஆதித்யாவின் அப்பா வாங்கிய கடனைக் கேட்டு கடன் கொடுத்த தாதாவான வின்செண்ட் நகுல் சென்னைக்கு வருகிறான். வந்த இடத்தில் அப்பா இறந்துவிட்டதையும், மகன் மட்டும் இருப்பதையும் அறிந்து அந்தச் சிறுவனை தன்னுடன் அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார்.
அந்த நேரத்தில் ஆதித்யா யாரென்று தெரியாத நிலையில் வின்சென்ட் நகுலிடமிருந்து சிறுவன் ஆதித்யாவை சிபி காப்பாற்றுகிறார். கடைசியில் தனது அப்பாவின் சாவுக்கு சிபிதான் காரணம் சிபி உணரும் சிறுவன் ஆதித்யா சிபியை பழி தீர்க்க விரும்புகிறான்.
அதே நேரம் வில்லன் வின்சென்ட் நகலும் சிபி அண்ட் கோ–வை தேடி வந்து ஆதித்யாவை மீட்க வருகிறது. சிபி ஆதித்யாவைக் காப்பாற்றினாரா.. ஆதித்யா சிபியை பழி தீர்த்தானா.. சிபி வெளிநாடு சென்றாரா.. போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்வதுதான் இந்த இடி மின்னல் காதல் படத்தின் கதை.
ஹீரோக்களுக்கு பெரும் பஞ்சமுள்ள தமிழ் சினிமாவில் புதுமுக ஹீரோவாக தேறுகிறார் சிபி. காதல் காட்சிகளிலும், ஆக்சன் காட்சிகளிலும் ஹீரோயிஸம் தெரிகிறது. ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கான முழு தகுதியும் சிபிக்கு இருப்பது சிறப்பு! சிறந்த இயக்குநர்கள் கைகளில் சிக்கி.. நல்ல கதைகள்.. கேரக்டர்களில் நடித்தால் நிச்சயமாக ஒரு நல்ல எதிர்காலம் சிபிக்கு உண்டு.
நாயகி பவ்யா த்ரிகா அழகாக இருக்கிறார். அனைத்து வகையான உணர்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். லிப் டூ லிப் கிஸ் கொடுக்கவும் தயங்கவில்லை. ரொமான்ஸ் காட்சிகளிலும் தயக்கமில்லாமல் நடித்திருக்கிறார். படங்கள் கூடுவதற்கு வாய்ப்புக்கள் உண்டுதான்.
தாதவாக நடித்திருக்கும் வின்செண்ட் நகுல் லாஜிக் எல்லை மீறலில் உச்சக்கட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த வில்லன் கூட்டணியில் ஒரு பாதிரியாரையும் இணைத்திருப்பது மகா கொடுமை. இன்னமும் ஏன் இந்தப் படத்திற்கு கிறிஸ்தவர் தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வரவில்லை என்பது தெரியவில்லை.
சற்று மனம் பிறழ்ந்த கதாப்பாத்திரத்தில் பாசத்திற்கு ஏங்கும் பிள்ளையாக நடித்திருக்கும் சிறுவன் ஆதித்யா நடிப்பில் நம் கவனத்தைப் பெற்றுள்ளான். க்ளைமாக்ஸில் சிபியிடம் ஆசிட்டை குடிக்கச் சொல்லி சிபியை வற்புறுத்தும் காட்சியிலும், சிபி வில்லனிடம் அடி வாங்கும் காட்சியை ரசித்துப் பார்க்கும்போதும் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார்.
ஆதித்யாவை பாதுகாக்கும் பெண்ணாக நடித்திருக்கும் யாஷ்மின் பொன்னப்பாவின் நடிப்பு ஓகே என்றாலும் ஆரண்ய காண்டம் போலவே இதிலும் இதே கதாப்பாத்திரம்தானா.. என்ற கேள்வியும் எழுகிறது.
மேலும் குணச்சித்திர நடிப்பைக் கொட்டியிருக்கும் போலீஸ் ஏட்டு பாலாஜி சக்திவேல், சிபியின் நண்பராக நடித்திருக்கும் ஜெகன், சிறுவன் ஆதித்யாவின் தந்தையாக நடித்திருக்கும் மனோஜ் முல்லத் போன்றோரின் நடிப்பும் சிறப்பாக உள்ளது.
தொழில் நுட்பத்தில் சின்ன பட்ஜெட் படங்களுக்கே உரித்தான ஜெயச்சந்தர் பின்னம்நேனியின் ஒளிப்பதிவு சூப்பர். சாமின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் ரசிக்க வைத்துள்ளது.
நான் லீனியர் திரைக்கதையில் முன் பின்னாக திரைக்கதையில் காட்சிகளை நகர்த்திக் கொண்டே வந்து கடைசியில் மொத்தமாய் கதையை சொல்கிறார் இயக்குநர். இந்த சஸ்பென்ஸ் நன்றாகவே இருந்தாலும், வில்லன் கோஷ்டியின் கேரக்டர் ஸ்கெட்ச் வலுவாக இல்லாததால் “போதும்டா சாமி” என்றுதான் நாம் சொல்ல வேண்டியிருக்கிறது.
இப்படி பப்ளிக்காக ஷோ காட்டும் பிராத்தல் வீடுகள் சென்னையில் எங்கேயிருக்கிறது என்பதை இயக்குநர் சொன்னால் நாம் தெரிந்து கொள்ளலாம். யாஷ்மினின் பாலியல் தொழில் கதாப்பாத்திரம் இந்தப் படத்திற்கு எந்தவிதத்தில் உதவி செய்தது..? எதற்காக இந்தக் கேரக்டர் ஸ்கெட்ச் என்பதும் புரியவில்லை.
இயக்குநர் பாலாஜி மாதவன் இதன் கதை, திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், படத்திற்கும் கூடுதல் கவனம் கிடைத்திருக்கும்.!
RATING : 3 / 5