full screen background image

’D-3’ – சினிமா விமர்சனம்

’D-3’ – சினிமா விமர்சனம்

பீமாஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மனோஜ் மற்றும் ஜே.கே.எம். புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சாமுவேல் காட்சன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் பாலாஜி இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரஜின் கதாநாயகனாக நடித்துள்ளார். வித்யா பிரதீப் கதாநாயகியாக நடிக்க, சார்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் வர்கீஸ் மேத்யூ, மோகமுள் அபிஷேக் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பு ; மனோஜ் (பீமாஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ்) மற்றும் சாமுவேல் காட்சன் (ஜே.கே.எம். புரொடக்சன்ஸ்), எழுத்து, இயக்கம் – பாலாஜி, இசை – ஸ்ரீஜித் எடவானா, ஒளிப்பதிவு – மணிகண்டன், படத் தொகுப்பு – ராஜா ஆறுமுகம், சண்டை பயிற்சி இயக்கம் – ராம்போ விமல், பத்திரிகை தொடர்பு – சக்தி சரவணன்.

ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. ஒரே நாளில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே தனி வரவேற்பு இருக்கிறது. காரணம் இது போன்ற கதைகளில் இருக்கும் வேகமும், விறுவிறுப்பும் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தும். இந்த  ’D-3’ படமும் அப்படி ஒரே நாளில் நடக்கும் கதைக் களத்தைக் கொண்டது.

குற்றாலம் டி-3 போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராக பணி மாறுதல் பெற்று வந்துள்ளார் பிரஜின். அவர் வந்த நேரம் குற்றாலத்தில் ஒரு தற்கொலை நடக்கிறது. ஒரு கொலையும் நடந்துள்ளது. தொடர்ந்து மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரின் மகன் காணாமல் போனதாகவும் புகார் வருகிறது. இந்த மூன்றுக்கும்  ஏதோ தொடர்பு இருப்பதை அறிகிறார் பிரஜின்.

இதைக் கண்டறிவதற்காக இதுவரையிலும் காணாமல் போனவர்கள் வழக்குகளைத் தோண்டத் தொடங்குகிறார் பிரஜின். சில தற்கொலைகள், விபத்துக்களில் இறந்தவர்கள் திடீரென்று ஒரு மாதிரியாக நடந்து நடுரோட்டுக்கு வந்து நிற்க.. பின்னாலோ, அல்லது முன்னாலோ வந்த லாரி மோதி அவர்கள் இறந்து போயிருப்பது தெரிய வருகிறது. இந்த ஒரு மாதிரி என்ற வார்த்தையில்தான் ஏதோ சூட்சுமம் இருப்பதை அறியும் பிரஜின் இது பற்றி விசாரிக்கத் துவங்குகிறார்.

இந்த விசாரணையை விரும்பாத ஒரு கூட்டம் பிரஜினை திட்டமிட்டுத் தாக்குகிறது. அவரது மனைவியையும் அந்த ஒரு மாதிரியைப் போலவே செய்து கொலை செய்கிறார்கள்.

கொலைகாரர்களிடமிருந்து தப்பிக்கும் பிரஜின் உண்மைக் குற்றவாளியைத் தேடி ஓடுகிறார். அவர்களைக் கண்டறிந்தாரா..? இல்லையா..? இந்தக் கொலைகளுக்கு யார் காரணம்..? ‘அந்த ஒரு மாதிரி’ என்பதற்கு என்ன விளக்கம்..? என்பதையெல்லாம் சுவையான திரில்லிங்கோடு படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக மிடுக்காக இருக்கிறார் பிரஜின். இந்தப் படத்தில்தான் அவரது தோற்றம் ஒரு நாயகனுக்கானதாக அமைந்திருக்கிறது. கட்டுக்கோப்பான அவரது உடல் அமைப்பும், இயல்பான நடிப்பும் ஹீரோயிஸத்தை முதல்முறையாக பிரஜினுக்குக் கொடுத்துள்ளது.

ஆக்ஷன் காட்சிகளிலும் அதிரடியாக நடித்துள்ளார் பிரஜின். மனைவியை சமாளித்துக் கொண்டே விசாரிக்க செல்லும் அந்த சமாளிப்பிலும் ரசிக்க வைத்திருக்கிறார். துப்பு துலக்கும் காட்சிகளில் தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கிறார். ரவுடிக் கும்பலிடம் சிக்கிவிட்டு பின்பு அவர்களிடம் தப்பித்து நடுரோட்டில் நின்றபடியே தனது கதையைச் சொல்லும் அத்தருணத்தில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கே இந்த நிலைமையா என்று நம்மை வருத்தப்படவும் வைத்திருக்கிறார் பிரஜின்.

வித்யா பிரதீப் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் கவனத்தை ஈர்த்திருக்கிறார். மருத்துவராக நடித்திருக்கும் ராகுல் மாதவன் துவக்கத்தில் அப்பாவி முகம் காட்டி கிளைமாக்சில் நம்மை அதிர வைக்கிறார். அதிலும், அவரது அமைதியான வில்லத்தன நடிப்பைப் பாராட்டலாம்.

சமீப நாட்களில் குணச்சித்திர நடிப்பில் சார்லி பின்னியெடுத்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்திலும் அப்படியே..! நாளை ரிட்டையர்டாகும் சூழலில் பிரஜினுக்கு உதவுவதற்காக வந்து பரிதாபமாக உயிரிழக்கிறார்.

கிளைமாக்ஸில் வரும் டி.ஜி.பி. அபிஷேக்கின் நடிப்பும், எஸ்.பி.யின் நடிப்பும் கதைக்கு செட் ஆகவில்லை. செயற்கையாக அமைந்துள்ளது. இத்தனை கஷ்டப்பட்டு படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் இந்த கிளைமாக்ஸில் இன்னும் அதீத கவனத்தை செலுத்தியிருக்கலாம்.

மணிகண்டனின் ஒளிப்பதிவில் குறையில்லை. ஸ்ரீஜித்தின் பின்னணி இசையும் கதையின் ஓட்டத்துக்கு பக்க பலமாக அமைந்துள்ளது.  படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல்கள் திரில்லர் படத்திற்கு ஏற்றவிதமாய் இல்லை  என்பதும் உண்மைதான்.  

முழுக்க, முழுக்க குற்றாலம் பகுதிகளிலேயே படத்தை எடுத்திருப்பதால் லொகேஷன்கள் நமது கவனத்தை ஈர்க்கின்றன.

நூற்றுக்கணக்கில் நடந்த விபத்துக்களையும், கொலைகளையும், காணாமல் போனவர்களையும் இதுவரையிலும் போலீஸ் கண்டு கொள்ளாமல் இருந்தது என்பது மிகப் பெரிய லாஜிக் ஓட்டை.

இயக்குநர் பாலாஜி ஒரு மெடிக்கல் க்ரைம் த்ரில்லரை பரபரப்பாகக் கொடுக்க முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.  படங்களில் யார் ஹீரோ என்பதைவிட, யார் வில்லன் என்ற கேள்வியை சஸ்பென்ஸாக வைத்திருந்தாலே போதும், அந்தப் படத்தை ரசிகர்கள் உட்கார்ந்து பார்ப்பார்கள். கடைசிவரையிலும் மெயின்டெயின் செய்யப்பட்டிருக்கும் அந்த சஸ்பென்ஸ்தான், இப்படத்தை ரசிக்கக் காரணமாக அமைந்திருக்கிறது.

மெடிக்கல் கிரைம் சம்பந்தப்பட்டு பல படங்கள் இதற்கு முன்பாக வந்திருந்தாலும், இத்திரைப்படமும் வேறுவிதமான ஒரு உடல் உறுப்புத் திருட்டுக் குற்றத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

மருத்துவ உலகத்தின் இன்னொரு கறுப்பு பக்கங்களைச் சொல்லியிருக்கும் இந்தப் படமும் கடைசிவரையிலும் சஸ்பென்ஸ், திரில்லருடன் சென்று ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

RATING : 3.5 / 5

Our Score