full screen background image

‘லெவன்’ படத்திற்காக டி.இமான் இசையில் முதல்முறையாக பாடிய மனோ..!

‘லெவன்’ படத்திற்காக டி.இமான் இசையில் முதல்முறையாக பாடிய மனோ..!

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘செம்பி’ ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தங்களது மூன்றாவது திரைப்படமாக ஏ.ஆர்.என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கும் புதிய திரைப்படம் லெவன்.ச

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக உள்ள இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார். ‘சரபம்’, ‘சிவப்பு’ மற்றும் ‘பிரம்மன்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சமீபத்தில் வெளியாகி பெரிதும் பாராட்டப்பட்ட வெப் சீரிஸான ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’யிலும்  நடித்துள்ள இவர், இயக்குநர் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ உள்ளிட்ட பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ‘விருமாண்டி’ புகழ் அபிராமி, ஆடுகளம் நரேன், ‘வத்திக்குச்சி’ புகழ் திலீபன்,  ‘மெட்ராஸ்’ புகழ் ரித்விகா, அர்ஜை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசையை டி. இமான் அமைக்க, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவமுள்ள கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். படத்தொகுப்புக்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் என்.பி. பொறுப்பேற்றுள்ளார்.

இயக்குநர் சுந்தர் சி இடம் ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன், மற்றும் ‘ஆக்ஷன்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ், இந்தப் புதிய திரைப்படத்தை இயக்குகிறார்.

பல ஆண்டுகளாக திரையுலகில் தொடர்ந்து பயணித்து வரும் நிலையிலும் இதுவரை இணைந்து பணிபுரியாத இசையமைப்பாளர் டி.இமானும், பிரபல பாடகர் மனோவும் முதல்முறையாக இந்தப் படத்தில் கை கோர்த்துள்ளனர். விரைவில் வெளியாக உள்ள இந்த ‘லெவன்’ திரைப்படத்திற்காக இமான் இசையில் மனோ பாடியுள்ளார். இப்பாடலின் வரிகளை கபிலன் எழுதியுள்ளார்.

உணர்ச்சிப்பூர்வமான இந்தப் பாடல் குறித்து பேசிய மனோ, “இமான் இசையை தொடர்ந்து ரசித்து வருகிறேன். அவர் இசையமைத்துள்ள பாடல் ஒன்றுக்கு முதல்முறையாக பாடுவதில் மிக்க மகிழ்ச்சி. உயிரோட்டமிக்க இந்த பாடல் பெரிதும் வரவேற்கப்படும் என்று நம்புகிறேன்..” என்றார்.

இது குறித்துப் பேசிய இசையமைப்பாளர் டிஇமான், “மனோ அவர்களுடன் இணைந்து பணியாற்றவில்லை என்ற ஏக்கம் பல காலமாக இருந்தது, இன்று அது பூர்த்தியாகி உள்ளது அவரது குரலுக்கு மிகவும் உகந்த பாடலை உணர்ச்சிப்பூர்வமாக அவர் பாடியுள்ளார்…” என்று தெரிவித்தார்.

‘லெவன்’ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் பேசும்போது, “இத்திரைப்படத்தின் முக்கியமான கட்டத்தில் இந்தப் பாடல் இடம் பெறுகிறது. இமான் இசையில் மனோ அவர்கள் முதல் முறையாக பாடியது ‘லெவன்’ திரைப்படத்திற்காக என்பது மிகுந்த பெருமை, ஆரம்பம் முதல் இறுதிவரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக இந்த ‘லெவன்’ திரைப்படம் அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள். அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன்..” என்று கூறினார்.
 
தற்போது இந்த ‘லெவன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Our Score