full screen background image

டியர் டெத் – சினிமா விமர்சனம்

டியர் டெத் – சினிமா விமர்சனம்

SNR பிலிம்ஸ் சார்பில் சதீஷ் நாகராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியர் டெத்’.

படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் வெங்கடேசன், ஜெய், பி.ஸ்முருதி, ஜெயலட்சுமி, முத்தமிழ், ஜூவி ஆர்த்தி, மணி போஸ், சாய் ஜீவிதா, சதீஷ் நாகராஜன், ராகேஷ் கார்த்திக், மிதுன் ருத்ரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு நிறுவனம் – S.N.R.பிலிம்ஸ், தயாரிப்பாளர் – சதீஷ் நாகராஜன், இயக்கம் – பிரேம்குமார், கதை, திரைக்கதை, வசனம் – ஸ்ரீதர் வெங்கடேசன், ஒளிப்பதிவு – அசோக் சுவாமிநாதன், இசை – நவீன் அண்ணாமலை, படத் தொகுப்பு – ஸ்ரீதர் வெங்கடேசன், சவுன்ட் டிசைன் – சோனி ஜேம்ஸ்.

பொதுவாக இறப்பு என்றாலே நிகழ்வுலகத்தில் நெகட்டிவ்வாகத்தான் பார்க்கப்படுகிறது. பயப்படுத்தக் கூடியதாக இருந்தாலும் மரணம் என்பது கம்பீரமானது.

இறப்பு ஒரு மனிதனாக நம்மிடம் பேசினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த படத்தின் கதை. அன்றாடம் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி அதேசமயம் நிஜத்தில் நடந்த நிகழ்வுகளையும், அதில் கொஞ்சம் கற்பனையையும் கலந்து இந்த படம் உருவாகி உள்ளது.

இதுவரை இங்கே இறப்பு என்கிற விஷயத்தைப் பற்றி பேசும்போது எமன் என்கிற ஒரு கதாபாத்திரம் மூலமாகவே பேசியிருக்கிறார்கள். முதன்முறையாக இறப்பே ஒரு கதாபாத்திரமாக மனித உருவில் மாறி பேசினால், எப்படி இருக்கும் என்கிற புதிய கான்செப்டில்தான் இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் படத்திலுள்ள கதாபாத்திரங்களுடன் ஏதோ ஒருவிதத்தில் தங்களை பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும்.

“அனைத்து உயிரினங்களும் மரணத்தை ஏற்றுக் கொண்டாலும், மனிதன் மட்டுமே மரணத்தை ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறான்” என்று படத்தில் ஓரிடத்தில் வசனம் பேசப்படுகிறது. ஆனால், மனிதர்கள் அனைவருக்கும் பிறப்பு என்ற ஒன்று இருந்தால் இறப்பு என்பதும் நிச்சயம்தான். இதனை நான்கு கதைகளின் மூலமாக நமக்குச் சொல்கிறார்கள்.

படத்தின் துவக்கத்திலேயே “நான்தான் மரணம்” என்று சொல்லும் சந்தோஷ் பிரதாப், மரணம் பற்றி மனிதர்களுக்குப் பாடம் எடுக்கிறார். படத்தின் இடையிடையே ஒவ்வொரு கதைகளின் துவக்கத்திலும், முடிவிலும் மரணம் பற்றிய செய்திகளை சொல்கிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக நமக்குத்தான் எதுவுமே புரியவில்லை.

ஆனால் நான்கு கதைகளின் திரைக்கதையும், சொல்ல வந்த விஷயமும் மட்டும் நமக்கு நன்கு புரிவது ஆச்சரியமான விஷயந்தான். இந்த நான்கு கதைகளும் காதல், அம்மா, குழந்தை, நட்பு என்ற வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு கதைகளில் இருக்கும் இறப்பு என்ற சம்பவம் எப்படி அனைவருடனும் தொடர்பாகிறது என்பதை சங்கிலித் தொடர் முறையில் திரைக்கதையில் கூறியுள்ளார்கள். 

நான்கு கதைகளிலும் யாரோ ஒருவர் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறார். இதுதான் இந்த நான்கு கதைகளுக்குமான பொதுவான தொடர்பு.

முதல் கதையில் பெற்றோர்களை எதிர்த்து காதலித்து திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் வாழ்க்கையில் கொரோனா விளையாடுகிறது. காதலியான மனைவி கொரோனாவில் திடீரென்று பலியாக ஏன் இந்த மரணம்.. எதற்கு இந்த வாழ்க்கை என்று கணவன் ஜெய் நொந்து போகிறார்.

இந்தக் கதையில் புதுமணத் தம்பதிகளாக நடித்திருக்கும் ஸ்முருதி, ஜெய் ஆகியோரின் நடிப்பு கச்சிதம் என்றாலும் படமாக்கலில் கொஞ்சம் நாடகத்தன்மை தென்படுகிறது.

அடுத்தக் கதையில் படுத்த படுக்கையாக இருக்கும் தனது அம்மாவுக்கு பணிவிடை செய்து அவரை பார்த்துக் கொள்கிறார் ஒரு முதியவர். இவருக்கே வயது 60-வதை தாண்டிவிட்டது. உடன் பிறந்தவர்கள் கைவிட.. படிக்க வைத்த பாட்டியை நானும் கவனிக்க முடியாது என்று மகனும் சொல்லிவிட.. இவர் ஒருவரே அம்மாவை பார்த்துக் கொண்டு என்ன பாடுபடுகிறார் என்பதுதான் கதை.

தன் அம்மாவை மகன் தூக்கிக் கொண்டு போய் ரோட்டில் போட்டுவிட்டான் என்பதையறியும் அந்தக் கணம் பதறிப் போய் தேடு, தேடென்று தேடி அம்மாவை மீண்டும் வீட்டுக்குத் தூக்கி வரும் காட்சியில் அந்தப் பெரியவரும் மனிதத்தை நமக்குக் காட்டுகிறார்.

அடுத்தக் கதையில் வாழ்க்கையில் சில ஏன் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவே கிடைக்காது என்பதை புரிய வைக்கிறது.

திருமணமாகி நீண்ட வருடங்களாகியும் குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதிகளான முத்தமிழுக்கும், அவரது மனைவி ஜூவி ஆர்த்திக்கும் திடீரென்று குழந்தை உண்டாகிறது. குழந்தையைப் பெற்றெடுத்து கண்ணும், கருத்துமாய் வளர்க்கிறார்கள்.

ஆனால் துரதிருஷ்டவசமாக அந்தக் குழந்தை தனது 7-வது வயதில் ஐஸ் கிரீம் சாப்பிட்டுக் கொண்டே வருபவள் சாலையிலேயே மயங்கி விழுந்து சாகிறாள். பெற்றோர்கள் விக்கித்துப் போய் நிற்கிறார்கள்.

நான்காவது கதை, ஜாலியான நான்கு நண்பர்களின் வாழ்க்கையை சொல்கிறது. நண்பர்களாக நடித்திருக்கும் சதிஷ் நாகராஜன், மணி போஸ், ராகேஷ் கார்த்திக், மிதுன் ருத்ரன் ஆகியோர் பள்ளி, கல்லூரி என்று தொடர்ச்சியாக தங்களது இளமைப் பருவத்தில் நட்பு பேணி இப்போதுவரையிலும் நண்பர்களாகவே இருக்கிறார்கள்.

திருமணமாகி குழந்தை பெற்ற பின்பும் முன்புபோல பேச வாய்ப்பில்லையென்றாலும் வாழ்க்கையை ஓட்டி வரும் இந்த நண்பர்களில் ஒருவர் கிட்னி பெயிலியராகி இறக்கிறார். ஏன் எதற்கு என்று யாராலும் யோசிக்கக்கூட முடியவில்லை.

இப்படி இந்த நான்கு கதை மாந்தர்களின் மூலமாக சாவு என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் வரும். வந்தால் போக வேண்டியதுதான். அதைத் தடுத்து நிறுத்தவே முடியாது என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

நான்கு கதைகளிலும் நடித்திருக்கும் நடிகர்கள் இயல்பாகவும், சிறப்பாகவும் நடித்திருக்கிறார்கள்.

தொழில் நுட்பத்திலும் ஒளிப்பதிவாளர் அசோக் சுவாமிநாதனின் ஒளிப்பதிவு இன்னும் தரமாக இருந்திருக்க வேண்டும். பட்ஜெட் படம் என்பதைக் காட்டுவதை போல படத்தின் ஒளிப்பதிவு இருக்கிறது. ஆனாலும் பல வகையான காட்சி கோணங்களை வைத்து நடித்தவர்களின் நடிப்பின் மூலமாக பல இடங்களில் நம்மை நெகிழ வைத்திருக்கிறார்.

கதை, வசனம் எழுதிய ஸ்ரீதர் வெங்கடேஷனே படத் தொகுப்பையும் செய்திருப்பதால் கடைசிவரையிலும் மரண கதைகள் என்ற பீலிங் வருவதைபோல தொகுத்தளித்திருக்கிறார்.

மரணம் பற்றிய உண்மையை நமக்குப் புரிய வைப்பதற்காக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பிரேம்குமார். ஆனால் இதுதான் நம் அனைவருக்குமே தெரியுமே..?

எந்த வடிவத்திலும், எப்போது வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் சாவு வரும். தயாராய் இருங்கள் என்பதைத்தான் தினம்தோறும் பலவித உதாரணங்கள் மூலமாக நாம் நேரிலேயே கண்டு கொண்டு வருகிறோம்.

இந்தச் சோகத்தையெல்லாம் தாங்க முடியாமல்தான் பலரும் தியேட்டருக்குள் வருகிறார்கள். வந்திருக்கிறார்கள். அவர்களிடத்திலேயே மரணம்ன்னா என்னா தெரியுமா என்று மிரட்டிப் பார்ப்பது சின்னக் குழந்தைகளிடம் இதுதான் பொம்மை என்று சொல்வதுபோல இருக்கிறது.

இதை சந்தோஷ் பிரதாப் மூலமாக சொல்ல வந்த இயக்குநர் எதை, எதையோ சொல்லி ஒப்பேற்றியிருக்கிறார். மரணத்தை பட்டினத்தாரைவிட யாராவது எளிமையாக சொல்ல முடியுமா இயக்குநரே..?!

டியர் டெத் – ஆல்வேய்ஸ் வெல்கம்..!

RANKING : 3 / 5

Our Score