full screen background image

உடன்பால் – சினிமா விமர்சனம்

உடன்பால் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை Aha ஓடிடி தளத்திற்காக தயாரிப்பாளர் கே.வி.துரை தயாரித்துள்ளார்.

படத்தில் லிங்கா, விவேக் பிரசன்னா, அபர்ணதி, காயத்ரி சங்கர், சார்லி, மயில்சாமி, தனம், தீனா, மாஸ்டர் தர்ஷித் சந்தோஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – கார்த்திக் சீனிவாசன், ஒளிப்பதிவு – மதன் கிறிஸ்டோபர், இசை – சக்தி பாலாஜி, படத் தொகுப்பு – ஜி.மதன், கலை இயக்கம் – எம்.எஸ்.பி.மாதவன், கதை – ஏ.ஆர்.ராகவேந்திரன், கார்த்திக் சீனிவாசன், உடைகள் வடிவமைப்பு – வைசாலி ரவி செல்வம், உடைகள் – ஜெ.நந்தா, ஒப்பனை – சண்முகம், ஒலிப்பதிவு – சவுண்டேபிள் ஸ்டூடியோஸ், புகைப்படங்கள் – ஆகாஷ் பாலாஜி, பத்திரிகை தொடர்பு – டீம் எய்ம், இணை தயாரிப்பு – சரத் நிவாஸ், கே.வி.மோதி, தயாரிப்பு – கே.வி.துரை.

இந்த உலகத்தை ஆட்டிப் படைப்பது பணம்தான். இந்தப் பணத்திற்காக குடும்பம், பெற்றோர்கள், பிள்ளைகள் என்ற சமூக அமைப்பியலின் அடித்தளம்கூட அசைக்கப்படும் என்பதை சொல்ல வந்திருக்கும் படம் இது.

ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு சில சூட்சுமங்கள் இருக்கின்றன. அதைக் கச்சிதமாகத் தெரிந்து கொண்டு அதன் வடிவமைப்பில் உருவாகி ஓடிடியில் வெளியாகியிருக்கும் படம் இது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மிருகம் எப்போது முழிக்கும் என்பது தெரியாது என்பார்களே..?! அப்பேர்பட்ட மிருகம் எழுந்து ரவுண்டு கட்டி விளையாடினால் ஒரு குடும்பம் என்னவாகும் என்பதை இந்த 2 மணி நேர திரைப்படம் நமக்குக் காட்டுகிறது.

குடும்பத் தலைவரான சார்லி, சென்னையில் ஒரு ஒதுக்குப்புறமான பகுதியில் பழைய வீட்டில் வசிக்கிறார். உடன் இவரது மூத்த மகனான லிங்கா தனது மனைவி, மகனுடன் இருக்கிறார். கடைசி மகன் வெளியில் தங்கிக் கொள்கிறார். ஒரே மகளான காயத்ரியும் திருமணமாகி வெளியூரில் வசிக்கிறார்.

லிங்கா வீடியோ சிடி விற்பனை கடை வைத்திருக்கிறார். பிஸினஸ் ஊத்திக் கொண்டதால் வேறு தொழில் செய்ய நினைக்கிறார். ஏற்கெனவே ஊர் முழுவதும் கடன் வாங்கி வைத்திருக்கிறார் லிங்கா. வீட்டுக்கான மின் கட்டணம் கட்டக்கூட காசில்லாமல் இருக்கிறார்.

இதனால் தற்போது தான் குடியிருக்கும் இந்தப் பாழடைந்த வீட்டை விற்றுவிட்டு அதில் தனக்குக் கிடைக்கும் பங்கில் ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார் லிங்கா. இதற்காக வீட்டு உரிமையாளரான தன் அப்பாவிடம் தன் சார்பில் பேசுவதற்காக தங்கையை வரவழைக்கிறார்.

அம்மாவின் திதி நாளான அன்றைக்கு தங்கையும், தனது கணவர், பிள்ளையுடன் வந்துவிட.. பேச்சுவார்த்தை துவங்குகிறது. அப்பாவான சார்லி வீ்ட்டை விற்க முடியாது என்கிறார். இது தொடர்பாக அப்பாவுக்கும், மகனுக்கும் இடையில் சண்டை மூண்டு அது முடிவுறாத தர்க்கத்தில் முடிகிறது.

“வெளியே போய்விட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு சார்லி வெளியேற.. சிறிது நேரம் கழித்து அவர் “போய்விட்டு வருகிறேன்” என்று சொன்ன அந்த பில்டிங் இடிந்து விழுந்துவிட்டதாக, தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸ் ஓடுகிறது.

குடும்பமே பதறுகிறது. லிங்கா பதட்டத்துடன் அப்பாவை தேடிப் பார்க்க கிளம்பும் வேளையில், விபத்தில் இறந்தவர்களுக்கு மாநில அரசு இழப்பீட்டுத் தொகையாக 20 லட்சம் ரூபாய் கொடுப்பதாக அறிவிப்பும் வெளியாக.. லிங்காவின் மனதில் இருக்கும் மிருகம் வெளியே வருகிறது.

அப்பாவைத் தேடுவதைவிடவும் கிடைக்கவிருக்கும் 20 லட்சம் ரூபாயில் என்னவெல்லாம் செய்யலாம் என்று பட்டியல் போடுகிறான். இந்த 20 லட்சம் ரூபாயில் தனக்கான பங்கு எவ்வளவு என்பதில் தங்கை காயத்ரியும் சேர்ந்து கொண்டு பல்லாங்குழி ஆடுகிறாள்.

ஆனாலும் இவர்களின் இத்திட்டம் அல்பாயுசில் கரைகிறது. சில நிமிட இடைவெளியில் அப்பா நிஜமாகவே வீட்டு வாசலில் வந்து நிற்க.. குடும்பமே பேயறைந்தது போலாகிறது.

20 லட்சம் போச்சே என்ற கவலையில் லிங்கா இருக்க.. அடுத்தக் கட்ட பிரச்சினையாக என்ன செய்யலாம் என்று யோசிக்கும் நேரத்தில் வீட்டிலேயே சார்லி நிஜமாகவே இறந்து போகிறார். இப்போது அடுத்தக் கட்ட நகர்வை யோசிக்கும் நேரத்தில் லிங்காவுக்குள் இருக்கும் மிருகக் குணம் தீவிரமாய் செயல்படுகிறது.

சார்லியின் பிணத்தை அந்த பில்டிங்கிற்குள் கொண்டு போய்வைத்துவிட்டு அரசிடம் நஷ்ட ஈடு கேட்டுப் பெறலாம் என்று லிங்காவின் ஐடியாபடி மொத்தக் குடும்பமும் திட்டமிடுகிறது. இது எதையும் அறியாத அந்த வீட்டு வாரிசுகள் இருவரும் விளையாடிக் கொண்டிருக்க..

இவர்களது திட்டம் பலித்ததா..? நினைத்ததை செய்தார்களா..? அரசின் இழப்பீட்டுத் தொகை கிடைத்ததா…? இல்லையா..? என்பதுதான் இந்த ‘உடன்பால்’ படத்தின் சுவையான நகைச்சுவை அவலம் கலந்த திரைக்கதை.

சார்லி தனது நடிப்பின் உச்சத்தை இந்தப் படத்தில் தொட்டிருக்கிறார். வீட்டை விற்க முடியாது என்ற மறுப்பைக்கூட உரிமையோடு, பாசத்தோடு மறுக்கும் அந்தப் பாங்கு யாருக்கும் வராதுதான். மகனுடனான வாக்குவாதத்தில்கூட அன்போடு, பாசத்தோடு மறுதலித்துவிட்டுப் போகும்போது நமது அப்பாவை பார்ப்பதுபோலவே இருக்கிறது.

பேரன், பேத்தியுடன் கொஞ்சுவதிலும், பேரனையை செல்லாமாக ‘தாத்தா’ என்று அழைப்பதிலும், தனது தாத்தா பாசத்தை நிறைவாகக் காட்டியிருக்கிறார் சார்லி.

மகளிர் மட்டும்’ படத்தில் நாகேஷுக்கு கிடைத்த செத்த பிணம் கதாபாத்திரம் மிக நீண்ட இடைவெளைக்குப் பிறகு இந்தப் படத்தில் சார்லிக்குக் கிடைத்திருக்கிறது. அந்தக் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என்று சொல்ல முடியவில்லை. செத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்குத் தத்ரூபமாக பிணமாகவே நடித்திருக்கிறார் சார்லி. அட்டகாசம் ஸார்..!

சார்லின் மூத்த மகனாக லிங்கா… தாங்க முடியாத குடும்பச் சுமைகளை சுமந்து கொண்டு எப்போது, எப்படி, அதை இறக்கி வைப்பது என்பது புரியாமல் தவிக்கும் ஒரு கணவனாக, அப்பாவாக தனது நடிப்பில் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

போதாக்குறைக்கு வீட்டுக்கு வந்திருக்கும் தங்கையும், மனைவியும் ஈகோவால் அடிக்கடி முட்டிக் கொண்டு திரிய.. அதையும் சமாளிக்கும் அந்த நடிப்பில் நமது பரிதாபத்தையும் பெறுகிறார் லிங்கா.

மைத்துனர் விவேக் பிரசன்னாவின் குசும்புத்தனமான செயல்களாலும், பேச்சுக்களாலும்கூட அடிபடும் லிங்கா மும்முனை தாக்குதலாக இவர்களை சமாளிக்கும்விதம் நமது கண்ணில் நீர் வரும் அளவுக்கான காமெடியைத் தந்திருக்கிறது.

இவரது மனைவியாக நடித்திருக்கும் அபர்நதி கழுத்தில் வெற்று தாலிக் கயிறுடன் படம் முழுவதும் வலம் வந்து தனது இயலாமையையும், நாத்தனாரின் குத்தல் பேச்சுக்குப் பதில் சொல்லும் அண்ணியாகவும், மாமனார் மீது பாசமுள்ள மருமகளாகவும் தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

சார்லியின் மகளாக நடித்திருக்கும் காயத்ரியிடம் இருந்து இப்படியொரு நடிப்பை எதிர்பார்க்கவில்லை. அதிலும் நகைச்சுவையான வசனங்களை பேசி நடித்திருக்கும் இவரது நடிப்பு அசத்தல்.

பெர்சண்டேஜ் பற்றி பேசும்போது கொஞ்சம், கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வந்து பேசும்போது முடியல.. சிரிப்புக்குக் கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்கம்மா என்று நாமளே கேட்க வேண்டியுள்ளது. தன்னுடைய பங்கு சரியா தனக்கு வந்திரணும் என்று நினைத்து இவர் நடத்தும் காமெடி நாடகமெல்லாம் தனிக் கதை.

காயத்ரியின் கணவனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா படத்துக்குப் படம் தனது திறமையில் உயர்ந்து கொண்டே போகிறார். இப்போதுதான் வதந்தி’ வெப் சீரீஸில் அசத்தியவர், இதில் இன்னும் ஒருபடி மேலே போயிருக்கிறார்.

எதற்கும் பிரயோசனமில்லாத மாப்பிள்ளையாக இருக்கும் இவர் வீட்டில் செய்யும் ரகளையும், மைத்துனருக்குக் கொடுக்கும் குடைச்சலும்.. அவ்வப்போது அடிக்கும் டைமிங்கான விட்டுகளும்தான் படத்தின் மிகப் பெரிய எண்ட்டெர்டெயின்மெண்ட்.

லிங்காவின் அத்தையாக நடித்திருக்கும் தனம் இன்னொரு பக்கம் தனது சுவையான கேரக்டர் ஸ்கெட்ச்சில் ரசிக்க வைத்திருக்கிறார்.

மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு படத்திற்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய பலம். மொத்தக் கதையும் ஒரே வீட்டுக்குள் என்றாலும், காட்சி கோணங்களை மாற்றி, மாற்றி வைத்து நமக்குப் போரடிக்காத அளவுக்குப் படமாக்கியிருக்கிறார்.

சக்தி பாலாஜியின் பின்னணி இசை திரைக்கதைக்குப் பொருத்தமாக இருக்கிறது. ஏற்கெனவே திரைக்கதையே நகைச்சுவையாக இருக்க, பின்னணி இசையிலும் காமெடி டிராக்குகளை போட்டு நம்மை நைச்சியமாகத் தூண்டிவிட்டிருக்கிறார்.

ஒரு லோ மிடில் கிளாஸ் வாழ்க்கையை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார்கள்.  படத்தின் 95 சதவிகிதமும் அந்த ஒரே வீட்டிற்குள்தான் நிகழ்கிறது. ஆனால் மிகவும் பரபரப்பாக பறக்கிறது. திரைக்கதையின் ஓட்டம் எங்கேயும் நிற்கவில்லை. அதிலும் இடைவேளை பிளாக்கில் அப்படியொரு கை தட்டலுடன் கூடிய ரசிப்பினை வரவழைத்திருக்கிறார் இயக்குநர்.

நடிகர், நடிகைகள் அத்தனை பேரும் அதிகப்பட்சம் ஒரேயொரு காஸ்ட்யூமில்தான் தென்படுகிறார்கள். அந்தக் குறைபாடுகூட நமக்குத் தோன்றாத அளவுக்குத் திரைக்கதை நம்மை கட்டிப் போட்டிருக்கிறது. கிளைமாக்ஸில் அவ்வளவு நேரம் நாம் சிரித்த சிரிப்பையெல்லாம் மறக்கடித்து நம்மை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

“நீ உன் அப்பாவை பார்த்துக்கிட்ட மாதிரிதான் நானும் உன்னை பார்த்துப்பேன்” என்று லிங்காவின் மகன் லிங்காவிடம் சொல்வதும், கிளைமாக்ஸில் தனது தாத்தாவுக்கு என்ன நடந்தது என்பதை யூகித்து தனது அப்பாவை வெறுப்பாகப் பார்க்கும் அந்த சிறுவனின் ரியாக்சன்தான் லிங்காவின் மிருகக் குணத்தை அடக்கியிருக்கும் என்று நினைக்கிறோம்..!

இந்தப் படம் தியேட்டருக்கு வந்திருந்தால் நிச்சயமாக பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும். துரதிருஷ்டம் என்பது நல்ல படங்களுக்கும் சில நேரங்களில் அமைந்துவிடும். இந்தப் படமும் அப்படியாகிவிட்டது..!

ஓடிடியில் தவறவிடக் கூடாத படம்…!

RATING : 4 / 5

Our Score