எஸ் கியூப் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஈ.மோகன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
படத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் பிரேம்குமார், அறிமுக நடிகை ஈனாக்ஷி கங்குலி இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ், விஜே ஆஷிக், நோபல், மைம் கோபி, சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ், அனு, பிரியதர்ஷினி, முதுன்ய, நிஷார், ஸ்வப்னா, கிருத்திகா, சாம்ஸ் என்று பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
சேத்தன் கிருஷ்ணா இசையமைக்க, சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.ஆர்.பிரகாஷ் படத் தொகுப்பு செய்ய, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் ஆர்.கே.வித்யாதரன்.
காதல் தோல்வியால் மன நலம் பாதிக்கப்படும் ஒரு இளைஞன், காதல் தோல்விகளைத் தவிர்ப்பதற்காக இதுவரையிலும் யாருமே யோசித்திருக்காத வகையில் ஒரு புதிய வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கிறான். அந்த வாழ்க்கை முறையை அனைவரும் பின்பற்றினால் நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்கிறான். அதை மற்றவர்களிடத்திலும் புகுத்த முயலும் அந்த இளைஞனின் முயற்சி விபரீதமாகிறது. இதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.
இதுவரையிலும் தமிழ்ச் சினிமாவில் யாரும் யோசிக்காத ஒரு கதைக் கருவை இந்தப் படத்தில் கையாண்டிருக்கிறார் இயக்குநர் ஆர்.கே.வித்யாதரன். அதற்காக பாராட்டைப் பெறும் அதேவேளையில் இந்தக் கதைக் கருவுக்காக இவர் எழுதியிருக்கும் திரைக்கதை, வசனங்கள்தான் அந்தப் பாராட்டைத் திரும்பப் பெறவும் வைக்கிறது.
நாயகன் ஆகாஷ் பிரேம்குமாரும், நாயகி ஈனாக்ஸி கங்குலியும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். கல்யாணத்துக்கு முன்புவரையிலும் தன்னை ‘டச்’ செய்யக் கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார் கங்குலி.
ஆனால் தனது நண்பர்கள் பேச்சைக் கேட்டு அந்த நிபந்தனையை மறந்து கங்குலியிடம் அத்துமீறி நடந்து கொள்கிறார் நாயகன். இதனால் கோபமாகும் நாயகி, நாயகனுடனான காதலுக்கு குட்பை சொல்லிவிட்டு வேறொருவருடன் திருமணத்திற்கும் தயாராகவிடுகிறார்.
இந்தக் காதல் தோல்வியால் மன ரீதியாக பெரிதும் பாதிக்கப்படும் ஆகாஷ் மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அங்கே இவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் சில புத்தகங்களை கொடுத்து அவரை படிக்க சொல்கிறார்.
அந்தப் புத்தகங்களை படிக்கும் ஆகாஷ் பிரேம்குமார், “இனி காதல் தோல்வியால் யாருமே பாதிக்கப்பட கூடாது என்றால் காதல் என்ற உணர்வே முதலில் மனிதர்களுக்கு வரவே கூடாது. அதற்கு ஒரே வழி, உலகில் ஆதி மனிதன் வாழ்ந்ததைபோல ஆண், பெண் இருவருமே உடைகளைத் துறந்து அம்மணமாக வாழ வேண்டும்” என்ற கிறுக்குத்தனமான ஒரு வாழ்க்கை முறையை முன் மொழிகிறார்.
இந்த முறை இதுவரையிலும் யாரும் யோசிக்காத அளவுக்கு வித்தியாசமாக இருந்தாலும், விபரீதமானதாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட வாழ்க்கையை ஆதி மனிதன் தமிழகத்தில் வாழ்ந்த இடமான ‘குடியம்’ என்ற இடத்திற்கு சென்று சந்தோஷமாக அனைவரும் வாழலாம் என்று நினைக்கிறார்.
இதற்காக தனது நண்பர்களை ஓரிடத்திற்கு வரவழைத்து அவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி அம்மணமாக்கி அடைத்து வைக்கிறார். தொடர்ந்து அந்த நண்பர்களைத் தேடி வரும் அவர்களது காதலிகளையும் கடத்தி வைக்கிறார். அனைவருமே இந்த முடிவு “பைத்தியக்காரத்தனமானது” என்கிறார்கள்.
நாயகன் தனது இந்தப் புதிய வாழ்க்கை முறையைப் பற்றி வீடியோ எடுத்து வெளியில் விட அது இணையத்தில் வைரலாகிறது. பலதரப்பட்டவர்களும் அது குறித்து பேசத் துவங்க நாயகனிடம் சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்ற போலீஸும் களத்தில் குதிக்கிறது.
இறுதியில் அனைவரும் அம்மணமாக குடியம் சென்றார்களா..? அல்லது நாயகன் மீண்டும் மன நல மருத்துவமனைக்கே சென்றாரா…? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
அறிமுக நடிகரான ஆகாஷ் பிரேம்குமார் நாயகனுக்கேற்ற இளமை தோற்றத்தில் இருக்கிறார். தன்னைத் தொடவே கூடாது என்ற காதலியின் நிபந்தனையை மீறத் துடிக்கும் அவரது நடிப்பும், காதல் தோல்வியால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு புலம்பும் காட்சிகளிலும் தேர்ந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.
மேலும் நண்பர்களை கடத்தி வைக்கும் காட்சிகளில் அவர் சீரியஸாக செய்யும் அனைத்து செயல்களும், பேசும் வசனங்களும் நமக்கு சிரிப்பை வரவழைக்கிறது. உடல் மொழி, வசன உச்சரிப்பு, காதல் காட்சிகள் என அனைத்திலும் சம அளவில் நடிப்பைக் காண்பித்திருக்கும் ஆகாஷுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
அறிமுக நடிகையான ஈனாக்ஷி கங்குலி சுமாரான முகம் என்றாலும் நடிப்பில் குறைவில்லாமல் செய்திருக்கிறார். தொடாமல் செய்யும் காதல்தான் உண்மையானது என்று சொல்லி நாயகனை ‘காய’ வைக்கும் காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.
நாயகனின் நண்பர்களாக நடித்திருக்ரும் ‘குக் வித் கோமாளி’ புகழ், விஜே ஆஷிக், நோபல் ஆகியோர் முதல் பாதியிலும், இரண்டாம் பாதியிலும் பேசும் வசனங்கள் முழுவதும் இரட்டை அர்த்த ஆபாச வசனங்களாகவே இருக்கிறது. ஆனால் நடிப்பில் அடக்க முடியாத சிரிப்பை வரவழைத்துள்ளனர்.
நாயகனின் அண்ணனாக நடித்திருக்கும் சாம்ஸூம் காமெடி என்று நினைத்து மொக்கை காட்சிகளில் நடித்திருக்கிறார். சீரியஸான ஒரு விஷயத்தை பேசுகின்ற படத்தில் கொஞ்சமும் லாஜிக்கே இல்லாத காமெடி காட்சிகளை வைத்தால் எப்படி இயக்குநரே..? சாம்ஸ் போன்ற காமெடி இன்ஸ்பெக்டர்களை எங்கேயாவது பார்த்ததுண்டா..? ஆனால் மற்றபடி அவர் பேசும் ஆபாச வசனங்களும், கொடுக்கும் எக்ஸ்பிரஷன்களும் சிரிக்கத்தான் வைக்கிறது.
போலீஸ் அதிகாரியாக வரும் ‘மைம்’ கோபிதான் படத்தின் தன்மை புரிந்து நடித்திருக்கிறார். அவர் சீரியஸாக இருந்தாலும், அவரை சுற்றி நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் காமெடி கலாட்டாவாக இருப்பதுதான் வினோதமானது.
மன நல மருத்துவர் வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் ஆர்.கே.வி-யின் சிகரெட் பழக்கத்தை விடுவதற்கான கண்டு பிடிப்பு கேவலமானது. இந்தக் கேவலத்தை அவர் கடைசிவரையிலும் கொண்டு வந்திருப்பது ம்ஹூம்.. திட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை..!
நண்பர்களின் காதலிகளாக நடித்திருக்கும் பிரியங்கா வெங்கடேஷ், அனு பிரியதர்ஷினி, மிதுன்யா ஆகியோரும் புதியவர்களாக இருந்தாலும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். என்னதென்றே தெரியாமல் இவர்கள் பேசியிருக்கும் வசனங்களை இவர்களுடைய வயதான காலத்தில் பார்த்தால் என்ன நினைப்பார்களோ..?
சிவசுந்தரின் ஒளிப்பதிவு சிறப்புதான். குறையில்லை.. ஒரே இடத்தை சுற்றிச் சுற்றி வந்தாலும் போராடிக்காத வகையில் கேமிரா கோணங்களை மாற்றியமைத்து படமாக்கியிருக்கிறார். காதல் காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் இளைஞர்கள் ரசிக்கும்வகையில் கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார்.
சேத்தன் கிருஷ்ணாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். குறிப்பாக ‘லட்டு… லட்டு…’ பாட்டு திரும்பத் திரும்பக் கேட்கும் அளவுக்கு மெலடியானது. பின்னணி இசையிலும் குறையில்லாமல் இசைத்திருக்கிறார்.
படத் தொகுப்பாளரான பி.ஆர்.பிரகாஷ், வசனங்கள்தான் இந்தப் படத்தின் பலம் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் காட்சிகளை தொகுத்திருக்கிறார். பாராட்டுக்கள்..!
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் ஆர்.கே.வித்யாதரன். இது வயது வந்தோருக்கான படம் என்று முடிவு செய்துவிட்டுதான் படத்தைத் துவக்கியிருக்கிறார்போலும். படத்தின் துவக்கத்தில் இருந்து முடிவு வரையிலும் இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள் சலிக்காமல் பலராலும் பேசப்பட்டிருக்கிறது.
‘ஏ’ படம்தான் என்றாலும் அதற்கு ஒரு அளவு இல்லையா இயக்குநரே..? “அம்மணமாக ஆகலாம். வாங்க போகலாம்…” என்று கூப்பிடுவதுவரையிலும்கூட சரிதான். ஆனால் அதன் பிறகு “அவன் உடம்பை இவள் பார்த்தாளா.. உன் காதலி என்னை முழுசா பார்த்துட்டா..” போன்ற வசனங்களெல்லாம் இந்தக் கதைக்குத் தேவையில்லாதது.
நாயகி விதிக்கும் தொடாமல் காதல் என்ற நிபந்தனை காதலன்களுக்கு ஏற்பில்லாததாக இருந்தாலும், காதலிகளுக்கு நிச்சயம் பாதுகாப்பானதுதான். இதைத்தான் இயக்குநர் முன் வைத்துப் பேசியிருக்க வேண்டும். இதை முன் மொழிந்து பேசியிருந்தால் நிச்சயமாக குடும்ப சமேதமாக இயக்குநரைப் பாராட்டியிருப்பார்கள்.
இளசுகளைக் கவர்வதற்காக இயக்குநர் அமைத்திருந்த இந்த பிட்டு பட உணர்ச்சிகரமான வசனங்கள்தான் கடைசியில் படத்துக்கே ஆப்பு அடித்திருக்கிறது.
இது மாதிரியான காதல் சிக்கலுக்கு இதுதான் தீர்வு என்று முதலில் சொல்லிவிட்டு கடைசியில் மனிதர்களின் ஈகோதான் எல்லாச் சிக்கல்களுக்கும் காரணம் என்று சொல்லி கதையை வேறு பக்கமாக திசை திருப்பியிருக்கிறார் இயக்குநர்.
நாயகன் இந்தத் திட்டத்தைத் துவக்கியதே காதல் தோல்விக்காக..! அதன் விரிவாக்கமாக அனைத்துப் பிரச்சினைகளுக்குமே காரணம் நம்முடைய ஆடைதான் என்று நாயகன் சொல்வதாக முதலில் திசை திருப்பப்பட்டு கடைசியில் படம் ஒட்டு மொத்தமாய் தற்போதைய உலகத்தின் போக்குக்கு இதுதான் காரணம் என்பதாக முடிந்திருக்கிறது. நகைச்சுவை என்பதை மையமாக வைத்து படமாக்கி அனைவரையும் சிரிக்க வைத்திருப்பதாலேயே அனைத்தும் சரியாகிவிடாது.
“ஈகோவை கைவிடல் உலகிற்கும், மனிதர்களுக்கும் நல்லது” என்ற நல்ல சப்ஜெக்ட்டை நல்லவிதமாகக் கொடுப்பதைவிட்டுவிட்டு, சேற்றில் முக்கியெடுத்து நமக்குக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். இதுதான் படம் பற்றிய தன்மையை முற்றிலுமாய் கெடுத்திருக்கிறது.
கடைசி காதல் கதை – பிட்டு பட தியேட்டர் கேண்டீனில் இருக்கும் சுவையான முறுக்கு..!
RATING : 2 / 5









