தயாரிப்பாளர் கருப்பையா முருகன் தயாரித்து இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் ‘யானை மேல் குதிரை சவாரி’.
இதில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் செம்ம ஜாலியான கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் அர்ச்சனா சிங், ‘லொள்ளு சபா’ சாமிநாதன், ‘வழக்கு எண்’ முத்துராமன், கிருஷ்ணமூர்த்தி, மிப்பு, தாரிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இசை – தாஜ்நூர், ஒளிப்பதிவு – மோகன், எடிட்டிங் – கணேஷ்குமார், நடனம் – பாபி ஆண்டனி. இணை தயாரிப்பு – ரேகா கணேஷ், ஆர்.எஸ்.பிரேமலதா. எழுத்து, பாடல்கள், தயாரிப்பு, இயக்கம் – கருப்பையா முருகன்.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் கருப்பையா முருகன், “ஒரு காரியத்தை முயற்சி செய்யாமலேயே செய்ய முடியாதுன்னு முடிவு பண்றதுதான் உலகத்துலேயே நம்பர் ஒன் முட்டாள்தனம்ங்கிறத மனசுல வச்சிக்கிட்டு ஒரு டீம் தங்களால முடியாத காரியத்தை முடிக்க முயற்சி பண்றாங்க. இதை காமெடி, சென்ட்டிமெண்ட் கலந்த திரைக்கதையில் அமைத்திருக்கிறோம்…” என்றார்.
இந்தப் படத்தின் டைட்டிலில் ‘யானை மேல் குதிரை சவாரி, போயி பாரு தெரியும் உன் சேதி’ என்று ஒரு பாடல் துவங்குகிறது. இந்தப் பாடலின் இடையில் ‘ஈழத் தமிழனை காக்கப் போறிங்களா..?’ என்ற ஒரு வரி வருகிறது.
இதில் ‘ஈழம்’ என்ற வார்த்தையை எடுத்தே ஆக வேண்டும் என்று சென்சார் போர்டு அதிகாரி சொல்ல, பாடலாசிரியரும், இயக்கநருமான கருப்பையா முருகன் எவ்வளவோ போராடியும் அந்த வார்த்தையை பாடலில் வைக்க அனுமதி தர மறுத்து விட்டார்களாம். வேறு வழியின்றி, வேதனையோடு அந்த வார்த்தையை நீக்கியிருக்கிறார் இயக்குநர்.
இதுதான் சென்சார் அதிகாரிகளின் கேலிக்கூத்தான நிர்வாக அமைப்பு. சமீபத்தில் வெளிவந்த ராம்கோபால்வர்மாவின் ‘வீரப்பன்’ பற்றிய படத்தில் ‘ஈழம்’ மட்டுமில்லாமல் ‘பிரபாகரன்’, ‘இலங்கை’ என்றெல்லாம் வார்த்தைகள் பல முறை வந்திருக்கின்றன. அதையெல்லாம் எப்படி விட்டார்கள்..?
ஒருவேளை மாநிலத்திற்கு மாநிலம் சென்சாரின் விதிமுறைகள் மாறுமோ என்னமோ..?









