full screen background image

நீளிரா – சினிமா விமர்சனம்

நீளிரா – சினிமா விமர்சனம்

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ சார்பில் கார்த்திகேயன் எஸ் – கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கும் இந்த ‘நீளிரா’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சோமீதரன்.

இதில் நவீன் சந்திரா, சனந்த், கபில வேணு, ரூபா கொடுவாயூர், வித்து, சித்து குமரேசன், நவயுகம், சுவாதி கிருஷ்ணன், நமசிவாயம் தம்பிப்பிள்ளை, கயல் வின்சென்ட், ரோஹித் கோகடே மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு: செல்வரத்தினம் பிரதீபன், எடிட்டர்: ராதா ஸ்ரீதர், இசை: கே, கலை: மார்ட்டின், ஒலி வடிவமைப்பு மற்றும் கலவை: தபஸ் நாயக், சண்டை பயிற்சி இயக்கம் : தினேஷ் சுப்பராயன், இணை இயக்குநர்: விக்கி, ஆடைகள்: சுபைர் – தரங்கேணி, இணைத் தயாரிப்பாளர் : பவன் நரேந்திரா – அருள்மொழித்தேவன் காளிமுத்து, இணை தயாரிப்பு – ராணா டக்குபதி – கல்யாண் சுப்ரமணியன், பத்திரிக்கை தொடர்பு: நிகில் முருகன்.​

எத்தனையோ ஈழப் போர் பற்றிய திரைப்படங்கள் சமீப காலமாக வந்திருந்தாலும் அதிலிருந்து எல்லாம் மிக மிக வித்தியாசமாக வந்திருக்கிறது இத்திரைப்படம்.

தமிழ் ஈழத்தில் ஒரு ஊரில், ஒரு வீட்டில், விடிந்தால் திருமணம் என்ற நிலைமையில் அன்றைய இரவில் நடக்கும் ஒரு நாடகம்தான் இந்த நீளிரா’ என்ற படம்.

1988-ஆம் ஆண்டு இலங்கையில் இந்திய அமைதிப்படை நிலைகொண்டிருந்த காலக்கட்டத்தில்தான் கதை தொடங்குகிறது. இந்திய அமைதி காப்புப் படைக்கும், விடுதலைப் புலிகளுக்குமான மோதல் உச்சகட்டத்தில் இருந்த நேரம்.

நாயகி சித்து குமரேசனுக்கு நாளை காலையில் திருமணம். இதற்காக ஊரில் பாதுகாப்புக்காக முகாமிட்டிருந்த இந்திய அமைதி காப்புப் படை மற்றும் இலங்கை படையினரிடம் ஒப்புதல் ரசீதும் பெற்றுவிட்டார்கள்.

திருமணத்தையொட்டி அந்த வீட்டில் உறவினர்கள், நண்பர்கள் என்று ஒரு கூட்டமே இருக்கிறது. சித்துவின் அப்பா ஏற்கனவே ஈழப் போரில் இறந்திருக்கிறார். அவருடைய அம்மாவும் பாட்டி, தாத்தா, அவருடைய உறவினர்கள் என்று நாளைய திருமணத்தை கொண்டாடுவதற்காக பலரும் கலர் கலர் கனவுகளில் இருக்கிறார்கள்.

அன்றைய இரவில் புலிகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக அமைதி காப்புப் படையின் ஒரு பிரிவு அந்த ஊருக்கு வருகிறது. தங்கள் கையில் இருந்த மேப்பை பார்த்தபடியே வந்தவர்கள் தவறுதலாக அந்த வீட்டின் முன்பாக டென்ட் போடுகிறார்கள்.

ஆனால் அது தவறான இடம் என்பதே அறிந்த அமைதிப் படையினர் ஒரு சந்தேகத்தில் அந்த வீட்டுக்குள் நுழைந்து சோதனை இடுகிறார்கள். அமைதிப் படை அந்த வீட்டுக்குள் இருக்கும் அதே நேரத்தில் அந்த வீட்டை சுற்றிலும் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை உணரும் புலிகள் அமைப்பினர் அந்த வீட்டைச் சுற்றி வளைக்கிறார்கள்.

வெளியில் புலிகள் தங்களை கொள்வதற்காக வந்திருப்பதை அறியும் அமைதி காப்புப் படையினர் அந்த வீட்டிலிருந்து தப்பிப்பதற்கு பிளான் செய்கிறார்கள். இன்னொரு பக்கம் அந்தக் குடும்பத்தினர் நாளை கல்யாணத்தை சிறப்பாக நடத்த வேண்டுமே என்கின்ற வருத்தத்தில் இருக்கிறார்கள்.

இதன் முடிவுதான் என்ன?மைதி காப்புப் படையினர் அமைதியாக வெளியேறினார்களா? அல்லது புலிகளுடன் சண்டையிட்டார்களா? அந்த வீட்டில் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்ததா?.. இதுதான் இந்த ஒன்றரை மணி நேர மனதை கொள்ளை கொள்ளும் ‘நீளிரா’ திரைப்படத்தின் திரைக்கதை.

இந்திய அமைதி காப்பு படையின் கேப்டனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா அந்தக் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். ராணுவமே அனுப்பியிருந்தாலும் தவறுதலாகவோ அல்லது தேவையில்லாமலோ பொதுமக்கள் மீது கை வைக்க கூடாது. அவர்களிடம் நட்புணர்வை வளர்க்க வேண்டும் என்ற ஒரு பொதுவான சிந்தனையில் அவருடைய நடிப்பை கடைசிவரையில் நம்மால் ரசிக்க முடிந்திருக்கிறது.

இவருக்குக் கீழ் பணியாற்றும்  வட இந்திய ராணுவ வீரர்கள் வழக்கம்போல் மக்களை மக்களாக பார்க்காமல் அடிமைகளாக பார்க்கின்ற வகையில் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் நமக்கே பகிர் என்று ஒரு கோபத்தை ஏற்படுத்துகிறது.

ஆனாலும் இந்திய அமைதி காப்பு படை ஈழத்தில் இப்படித்தான் இருந்தது என்பது பல நூல்களிலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலத்திலும் வெளிவந்திருக்கிறது. அந்த வகையில் இந்த படம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறது என்பதை நம்புகிறோம்.

கல்யாண பெண்ணாக நடித்திருக்கும் சித்து குமரேசன், அதே வீட்டில் சிறிது மனநலம் குன்றி மறைந்து வாழும் மருத்துவர் ரூபா கொடுவையூரும் தங்களுடைய அழகான நடிப்பை காண்பித்திருக்கிறார்கள். அதேபோல் சித்துவின் அம்மாவாக நடித்தவரும் ஈழத்து தமிழில் பேசினாலும் அவருடைய உணர்வுகளை வெளிக்காட்டும் போது “ஒரு தாய் இதற்கு மேல் என்ன செய்ய முடியும்?” என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்.

சித்துவின் தாத்தாவாக நடித்திருப்பவர் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் படைகளுக்காக ஆதரவாக நான் துப்பாக்கி ஏந்தியவன் என்று கதை சொல்லும்பொழுது அந்தக் காட்சி நம் மனதை தொட்டுவிட்டது,

காலங்கள்தான் எவ்வளவு வேகமாக சுழன்று ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போடுகிறது என்பதற்கு அந்த தாத்தாவின் வாழ்க்கையும் ஒரு உதாரணம்.

அந்த வீட்டுக்குள் இருந்த மற்றைய நடிகர், நடிகைகள் அனைவருமே மிகச் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள் எந்த ஒரு கேரக்டரும் சோடை போகவில்லை என்பது உண்மை.

ஓர் இரவில் நடக்கின்ற கதை என்பதால் படத்தின் 90 சதவீதமும் இரவு காட்சிகள்தான் என்றாலும் அப்போதைய அந்த இடத்தில் இருக்கின்ற சிறிய வெளிச்சத்தை வைத்து படம் முழுவதையும் எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வரத்தினம் பிரதீபன்.

மிக அழகான ஒளிப்பதிவோடு, கேமரா கோணங்களிலும் அழகினை பதிய வைத்து ரசிக்க வைத்திருக்கிறார். நடிகர்களின் நடிப்பை வெளிக்கொண்டு வகையில் அவர்களுடைய மனப்போராட்டங்கள், கோபம், எரிச்சல் என்று அத்தனையையும் அழகாக பதிவாக்கம் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

படத்தில் இருக்கும் ஒரே ஒரு பாடல் கட்சியும் மிக அழகான இசையுடன் ஒலிக்கிறது. இந்தப் படத்துக்கான மிகப் பெரிய அடையாளமாக இந்தப் பாடல் இருக்கும் என்றும் சொல்லலாம்.

பின்னணி இசையிலும் மற்றைய சஸ்பென்ஸ், திரில்லர் படங்களை போல இல்லாமல் தேவையான இடத்தில் மட்டும் மெல்லியதாக ஒரு இசையை இசைத்துவிட்டு பெரும்பாலான காட்சிகளில் அந்த வீட்டில் நடக்கும் சின்ன சின்ன நகர்வுகள் மட்டுமே பின்னணி இசையாக ஒலித்திருக்கிறது.

ஒரு பாராவில் எழுதிவிட முடிந்த இந்த சின்னக் கதை ஒரு தேசத்தின் தலையெழுத்தை மாற்றுகின்ற வகையில் அமைந்ததுபோல் ஒரு ராணுவத்துக்கும் விடுதலை போராளிகளுக்கும் இடையில் ஒரு குடும்பத்தினர் மாட்டிக் கொண்டால் என்ன நடக்கும் என்பதை நமக்கு சொல்லும்விதமாக அமைந்திருக்கிறது.

முதல் கட்சியிலிருந்து கடைசிவரையிலும் நாம் பார்ப்பது ஒரு போர்க்களம் என்கின்ற ஒரு உணர்வை நமக்கு கொடுக்கும் வழியில் இயக்குநர் சோமீதரன் தன்னுடைய மிக அழகான கதை, திரைக்கதை மூலமாகவும், வசனங்கள் மூலமாகவும், திரைக்கதை ஆக்கத்திலும், அழகான இயக்கத்தின் மூலமும் சொல்லி இருக்கிறார்.

ஈழத்தில் அமைதியை நிலை நாட்டுவதற்காக சென்ற இந்திய அமைதி காப்புப் படை அங்கே என்னென்ன அட்டூழியங்கள் செய்தது? அப்பாவி மக்களை கொலை செய்தனர்.. ஈழத்து தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர்.. என்றெல்லாம் வெளியான உண்மைகளை இந்தப் படத்தில் அப்படியே சொல்லாமல் தேவைப்பட்ட இடத்தில் மட்டுமே அதை அழுத்தந்திருத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் சோமீதரன்.

சமாதானம் செய்ய வந்தவர்கள் எப்படி இன்னொரு எதிரியாக மாறினார்கள் என்பதையும் உதவி செய்ய வந்து கடைசியில் மிகப் பெரிய உபத்திரவத்தை செய்து விட்டுப்போன இந்திய அமைதி காப்புப் படை இன்னமும் நிறைய சொல்லி இருக்கலாம்.

ஆனால் கதைக் களம் ஒரு வீடு மட்டும்தான் என்பதால் அளவோடு சொல்லியிருக்கிறார் இயக்குநர். வெறும் ஒன்றரை மணி நேரமே இருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் நினைத்து இருந்தால் இன்னும் ஒரு மணி நேர கதையாக மாற்றி இருக்கலாம். ஆனால், அவர் சொல்ல வந்தது அதுவல்ல என்பதால் கச்சிதமாக இந்தப் படத்தின் துவக்கத்தையும், முடிவையும் நிர்ணயித்திருக்கிறார்.

ஈழத் தமிழர்களின் வாழ்வியல் முறை எப்படி இருக்கிறது? ஒரு திருமணம் எப்படி நடக்கும்? திருமணத்தில் என்னென்ன செய்வார்கள்? அந்த ஊர் மக்களின் இயல்பு தன்மை.. திருமண கொண்டாட்டங்கள் எப்படி இருக்கும்? என்பதையெல்லாம் சின்ன சின்ன விஷயங்கள் மூலமாகவே இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

ஈழப் போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இயக்கங்களில் சேராத இளைஞர்கள் எல்லாம், அவர்களின் பெற்றோரால் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். அப்படி வெளிநாடுகளுக்கு சென்ற தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு தங்கள் ஊரிலேயே பெண் பார்த்தும் அந்த பெண்ணை திருமணம் செய்து வைப்பார்கள்.

ஆனால் திருமண நாளில் மாப்பிள்ளை இங்கே வர மாட்டார். மாப்பிள்ளைக்கு பதிலாக மாப்பிள்ளையின் அம்மா அதாவது அந்த பெண்ணின் மாமியாரே, மருமகளுக்கு தாலி கட்டி தங்களுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று வைத்துக் கொள்வார்கள்.

அதன் பின்பு சிறிது காலத்தில் அந்தப் பெண்ணையும் மாப்பிள்ளை இருக்கும் நாட்டுக்கே அனுப்பி வைப்பார்கள். இதுதான் ஈழத்தில் அந்தக் காலக்கட்டத்தில் தொடர்ந்து நடந்து வந்த திருமணச் சம்பவங்கள்.

இது எவ்வளவு பெரிய சோகமான நிகழ்வு என்பதை நினைத்துப் பார்த்தால் இந்த மக்களின் வேதனை நமக்குத் தெரியும். ஆனால் இவ்வளவையும் தாங்கிக் கொண்டுதான் ஈழத்து மக்கள் தங்களது சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவளித்தார்கள். ஆனால் எப்பொழுதும் கூடவே இருக்கும் துரோகமும், சூழ்ச்சியும், அளவுக்கு அதிகமாக நல்லவர்கள் என்று பெயர் எடுத்த நம்முடைய இனமும் அதற்கு பலியாகிவிட்டது.

ஒரு திரைப்படமாக பார்க்கப் போனால் இந்தப் படம் நிச்சயமாக ஆஸ்கார் விருதை வெல்லும் தகுதியுள்ள திரைப்படம்தான். இந்தப் படத்தில் பணியாற்றிய அத்தனை தொழில் நுட்பக் கலைஞர்களையும், நடிகர், நடிகைகளையும் நாம் மனதார வாழ்த்துகிறோம். இயக்குநர் சோமீதரனுக்கு மிகப் பெரிய விருதுகளை இந்தப் படம் நிச்சயம் பெற்றுத் தரும்.

RATING : 4.5 / 5

 

Our Score