full screen background image

வல்லதேசம் – சினிமா விமர்சனம்

வல்லதேசம் – சினிமா விமர்சனம்

லஷ்மணா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும், பவர் டூல்ஸ் மீடியா நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.

இந்தப் படத்தில் அனுஹாசன், நாசர், டேவிட் யுவராஜன், அமிட், பில்லி முரளி, ஜெயபாலன், பாலாசிங், சிறுமி அகார்சனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – என்.டி.நந்தா, இசை – எல்.வி.முத்துக்குமாரசாமி, படத் தொகுப்பு – தீபக் எஸ்.துவாரகநாத், கலை இயக்கம் – ஆரோக்கியராஜ், சண்டை பயிற்சி – கத்தி நரேன், ஜிம் ஸ்டார்க், பாடல்கள் – சமரன், முத்து விஜயன், முல்லை நிஷாந்தன், ஸ்டில்ஸ் – சந்தான குமார், பி.ஆர்.ஓ. – நிகில், தயாரிப்பாளர் – கே.ரவீந்திரன், எஸ்.இம்மானுவேல், இணை தயாரிப்பு – எம்.நேகி அவ்டார் பின்னிங், பி.நிதின், எழுத்து, இயக்கம் – என்.டி.நந்தன்.

சர்வதேச ஆயுதக் கடத்தல் தொழிலை அம்பலப்படுத்தும் படம் இது.

டேவிட். பல நாடுகளில் தேடப்படும் ஆயுத பேர வியாபாரி. சில நாடுகளின் ஆயுத விற்பனைக்கு பெருமளவில் உதவி செய்வதால் அந்த நாடுகளின் உதவியோடு தப்பித்து வாழ்ந்து வருபவர்.

புதிய, புதிய ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் தயாரித்து பல நாடுகளுக்கும், தீவிரவாத குழுக்களுக்கும் விற்பனை செய்து வருகிறார். இப்போது புதிதாக ஒரு வெடிகுண்டை தயார் செய்திருக்கிறார். இதனை பரிசோதித்து பார்ப்பதற்காக இந்தியாவை அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டை தேர்வு செய்திருக்கிறார் டேவிட்.

ஆனால் குண்டு வைக்க வந்த இடத்தில் ஏற்பட்ட ஒரு சின்ன தவறினால் டேவிட்டின் ஆட்களை ஒட்டு மொத்தமாக இந்திய ராணுவம் சுட்டுத் தள்ளுகிறது. இந்த ஆபரேஷனை செய்திருக்கும் ராணுவத்தின் விசாரணை பிரிவு, இந்த வழக்கையும் தனித்து விசாரிக்கத் துவங்குகிறது.

இந்த தீவிரவாதக் குழுவின் தலைவன் டேவிட் லண்டனில் இருப்பதை அறியும் ராணுவப் பிரிவின் மேஜர் ஜெனரலான நாசர், தனது டீமில் ஒரு வீராங்கனையாக இருக்கும் அனுஹாசனை லண்டனுக்கு குடும்பத்துடன் அனுப்பி வைக்கிறார்.

ஆனால் இதனை உளவு ஆள் மூலமாக கண்டுபிடிக்கும் டேவிட் தனது ஆள் பலத்தை வைத்து அனுஹாசனின் கணவரை கொலை செய்துவிட்டு அனுஹாசனின் ஆறு வயது மகளை கடத்திச் செல்கிறார்.

தான் இந்திய ராணுவத்தின் ஆள் என்பதை லண்டன் போலீஸாரிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் அனுஹாசன், தனது மகளை தானே கண்டுபிடிக்க முனைகிறார். அதே நேரம் அனுஹாசனுக்கு உதவிகள் செய்ய, இந்தியாவின் உளவுத் துறை அதிகாரிகளும் அங்கே வருகிறார்கள்.

தனியே தன்னந்தனியே தனது மகளைத் தேடுகிறார் அனுஹாசன். இந்தத் தேடுதல் வேட்டை கடைசியில் என்ன ஆனது என்பதுதான் படத்தின் திரைக்கதை.

முழுக்க, முழுக்க அனுஹாசனை சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கிறது. அனுஹாசனுக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் சண்டைகள் தெரியும் என்பதால் இது தெரிந்த ஒருவரால்தான் இந்தக் கேரக்டரில் நடிக்க முடியும் என்பதற்காகவே அனுஹாசனை நடிக்க வைத்திருக்கிறார்கள். தேர்வுக்காக பாராட்டுக்கள்.

முதல் பாதியில் கொஞ்சம், கொஞ்சமாக டிவிஸ்ட்டுகளை வெளியிட்டு புருவத்தை உயர்த்த வைத்தவர்கள், படத்தின் பிற்பாதியில் இறங்கி அடித்திருக்கிறார்கள். பரபரப்பான திரைக்கதையில், இந்தியாவில் நடக்கும் துப்பாக்கி சண்டை, அனுஹாசன் லண்டன் கிளம்புவது.. டேவிட் அனுஹாசனை கொல்ல முயல்வது.. அனுஹாசன் துப்பாக்கி வாங்க நினைப்பது.. கடைசியில் அதுவும் சண்டையாவது.. என்று திடீர் பரபரப்பில் நனைய வைத்திருக்கிறார் இயக்குநர்.

அனுஹாசன் மிக நீண்ட இடைவெளிக்கு பின்பு நடித்திருக்கும் படம் என்பதால் புதிதாகத் தெரிகிறார். ராணுவ அதிகாரிக்கான மிடுக்குடனும், போர்க் கலைத் திறன் தெரிந்த வீராங்கனையாகவும், குழந்தையைத் தேடும் தாயாகவும் நன்கு நடித்திருக்கிறார். இயக்குநரின் இன்னும் கொஞ்சம் திறமையாக இயக்கியிருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்.

நாசர் கண்டிப்பான மேஜராக நடித்திருக்கிறார். ராணுவம், தேச பக்தி, குடும்பம் இந்த மூன்றுக்குமான தொடர்பை சொல்லும் காட்சியில் அவரது கோப ஆவேச நடிப்பு படத்தில் ஒன்ற வைத்துள்ளது எனலாம்.

லண்டனை மையப்படுத்திய கதை என்பதால் ஈழத் தமிழர்கள் பலரும் நடித்திருக்கிறார்கள். டேவிட்டாக நடித்திருப்பவர் வெறுமனே வாய்ச்சவடால் வில்லனாகவே கடைசிவரையிலும் இருக்கிறார்.

லண்டன் ஹைவேஸில் நடைபெறும் கார் சேஸிங்கையும், தமிழகத்தில் நடைபெறும் துப்பாக்கி சண்டையையும் பரபரப்பாக படமாக்கியிருக்கிறார்கள்.

அமைச்சர் பாலாசிங் எந்தத் துறைக்கு அமைச்சர் என்பது தெரியாததும், நாசர் அவரைச் சந்தித்து அனுஹாசனை பற்றிப் பேசுவதெல்லாம் கொஞ்சம் லாஜிக் இடைஞ்சலாகவே இருக்கிறது.

அதேபோல் இது போன்ற வெளிநாடு சென்று தேச விரோதிகளை வேட்டையாடுவதற்கு ராணுவத்தில் இருந்து ஆட்களை அனுப்பவே மாட்டார்கள். அதற்குத்தான் தேசிய பாதுகாப்பு படைக் குழு, மற்றும் ரா உளவுத் துறை ஆட்கள் இருக்கிறார்களே..? இவர்கள் இருக்க ராணுவத்தில் இருந்து ஆட்கள் செல்வது என்பது படத்தின் ஒட்டு மொத்த கதை, திரைக்கதைக்கு ஸ்பாயிலான விஷயம்.

ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கியிருப்பவர் ஈழத் தமிழரான என்.டி.நந்தா. லண்டன் காட்சிகளின் ஒளிப்பதிவு அழகுதான் என்றாலும் இதைவிட பெட்டராக படமாக்க பல்வேறு லென்ஸ்கள் இருக்கும் நிலையில் இப்படி டிரையாக படமாக்கியிருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை.

பாடல்களில் ஒன்று சோகத்தைத் தூண்டியது என்றாலும், பின்னணி இசையில் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் சாதாரணமாக இசைத்து நம்மைக் காப்பாற்றியிருக்கிறார் இசையமைப்பாளர் எல்.வி.முத்துக்குமாரசாமி.

சில, பல காட்சிகளில் இயக்கம் தள்ளாடுவது தெரிந்தாலும் வெளிநாட்டில் இருக்கும் ஈழத் தமிழர் ஒருவர் உலக ஆயுத விற்பனை தொழிலைத் தளமாகக் கொண்டு தனக்குத் தெரிந்தவகையில் ஒரு திரைப்படத்தை இப்படி கொஞ்சமேனும் பார்க்கும்படி எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. வாழ்த்துகள்..!

Our Score