சென்னையைச் சேர்ந்த மிகப் பெரிய தொழில் அதிபரின் மகன் ஹரி விஜய். ரொம்பவும் கெட்டவன். பெண் பித்தன். இவன் ஒரு ராத்திரியில் காரில் வரும்போது சிலரால் கொடூரமாக தாக்கப்படுகிறான் அவனுடைய சொந்த மருத்துவமனையிலேயே அவனும் சேர்க்கப்படுகிறான்.
அதே மருத்துவமனையில் மருத்துவராக இருக்கும் ஜனனி என்னும் சரண்யா, அதே ஹரி விஜய்யை அந்த மருத்துவமனையிலேயே கொலை செய்ய முயற்சிக்கிறார்.
அடுத்தடுத்த நாட்களில் இந்த ஹரி விஜயனின் நண்பர்கள் இரண்டு பேரும் இதேபோல் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்களையும் டாக்டர் ரம்யா கொலை செய்ய முயல்கிறார். முடியாமல் போகவே அவர்கள் அதிக நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வில்லங்கமான மருந்துகளை அவர்களுக்குச் செலுத்துகிறார் சரண்யா.
ஹரி விஜய்யின் அம்மா போலீஸ் உயர் அதிகாரிகளை கையில் வைத்துக் கொண்டு இந்த வழக்கை துப்பு துலக்க சொல்கிறார். காவல்துறை இன்ஸ்பெக்டரான விசாகன், இந்த வழக்கினை விசாரிக்க ஆரம்பிக்கிறார். இவர் டாக்டர் சரண்யாவின் காதலரும்கூட!
அப்பொழுது போலீசார் மற்றும் ஹரி விஜய்யின் அம்மா இருவரின் விசாரணையிலும் டாக்டர் சரண்யாவை சந்தேகப்படும் அளவுக்கு சம்பவங்கள் நடக்கின்றன.
ஜனனி ஏன் இவர்களை கொலை செய்ய முயற்சிக்க வேண்டும்? அதற்கான காரணம் என்ன? ஜனனி தப்பித்தாரா? அல்லது அந்த மூன்று பேரும் உயிருடன் எழுந்தார்களா.. இல்லையா?.. என்பதுதான் இந்த படத்தின் கிரைம், சஸ்பென்ஸ், மர்டர், திரில்லர் கலந்த திரைக்கதை.
பிக் பாஸ் ஜனனி இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். ரம்யாவாக ஒரு கதாபாத்திரமும் சரண்யா என்று ஒரு கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்திருக்கிறார். இரண்டுக்கும் என்ன ஒரு வித்தியாசம் என்றால் எதுவும் இல்லை. நீங்களே கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் உண்மை. திரையில் அந்த வித்தியாசம் எதையும் இயக்குநர் காட்டவில்லை என்பதுதான் உண்மை.
இரண்டு கதாபாத்திரங்களிலும் ஜனனி நன்கு நடித்திருக்கிறார். சில காட்சிகளில் ஆக்சன் ஹீரோயினாகவும் மாறி இருக்கிறார். ரம்யாவுக்கு நேர்ந்த கொடுமையை தெரிந்து கொண்டு அவளை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்களை தேடி தேடி கொலை செய்யும் அந்த முயற்சியின்போது ஜனனி தனது நடிப்பை வலுவாகவே காட்டியிருக்கிறார்.
நிஜமாகவே ஜனனியின் நடிப்பை ரசிக்க முடிகிறது. இந்தப் பெண்ணிற்கு ஏன் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதும் நமக்கும் புரியாத புதிராக இருக்கிறது. அவ்வளவு அழகாக இருக்கிறார். அவ்வளவு அழகாகவும் நடித்திருக்கிறார். வேறு என்ன வேண்டுமாம் கோடம்பாக்கத்து இயக்குநர்களுக்கு!?
ஜனனியின் காதலனாக நடித்த இன்ஸ்பெக்டர் விசாகன் மேல் அதிகாரிகளின் ஆர்டருக்கு பணியாமல் கடைசி நேரத்தில் தன்னுடைய இன்ஸ்பெக்டர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் கோபமான நடிப்பை காண்பித்து இருக்கிறார்.
வில்லன்கள் மூன்று பேருமே அசல் வில்லன்கள் போலவே இருக்கிறார்கள். பாலியல் பலாத்கார சீன்கள் இந்த படத்தில் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
இரண்டாவது கதாநாயகனாக அழகு தம்பி கௌஷிக் நடித்திருக்கிறார். காதலிப்பதற்கு எந்த காரணமும் இல்லாமல் இன்னொரு ஜன்னியை காதலிக்கும் கதாப்பாத்திரத்தில் வந்து அந்தக் குடும்பத்திற்கு உதவி செய்யும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு போயிருக்கிறார்.
மேலும் ஜனனியின் தந்தையாக நடித்திருக்கும் ரமேஷ் கண்ணா, அவருடைய அம்மாவாக நடித்தவர்.. வழக்கறிஞராக நடித்த அபிஷேக் சங்கர் அந்தந்த கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
தன்னுடைய மகள் இறந்த செய்தி கேட்டு கதறி அழும் சபிதா ஆனந்த் மனதை உருக்கும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று அந்த ஒரு காட்சியிலேயே நம்மை கண்கலங்க வைக்கிறார்.
மேலும் படத்தில் நடித்திருக்கும் திவ்யா கிருஷ்ணன், சிவன் சீனிவாசன், ஹரி விஜய், ரமேஷ் கண்ணா, திலீபன், வாய்ஸ் ராஜன், சண்முகம், தீபிகா என்று இருக்கும் நட்சத்திரங்களும் ஓரளவு நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மோகன் குமார் தன்னுடைய ஒளிப்பதிவை இரவு, பகல் பாராமல் இரண்டுவித காலக்கட்டத்திலும் சிறப்பாக படத்தினை பதிவு செய்திருக்கிறார். ஜனனியின் ஆக்சன் காட்சிகளை சொதப்பாமல் படமாக்கியிருக்கும் ஒரு வித்தைக்காகவே இவரை நாம் பாராட்டுகிறோம்.
இசையமைப்பாளர் அபுபக்கர் இசையில் பாடல்களைவிடவும் பின்னணி இசை கொஞ்சம் கவர்கிறது. பாடலுக்கான இசையை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தி கொடுத்திருக்கலாம்.
படத் தொகுப்பாளர் தினேஷ் முதல் பாதியில் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்ற ஒரு சந்தேகத்தை நம்மிடம் விதைத்துவிட்டு இரண்டாம் பாதியில் காட்சிகளாக ஏத்த குழப்பமும் இல்லாமல் நீட்டாக திரைக்கதையை தொகுத்தளித்து இருக்கிறார்.
இந்த படத்தின் இயக்குநர் ஏ.கே.குமார் வழக்கமான பழிவாங்கும் கதைதான் இந்தப் படத்தின் கரு என்றாலும் எப்படி பழி வாங்கப்படுகிறார்கள்? ஏன் பழிவாங்கப்பட்டார்கள் என்பதற்கான கதை திரைக்கதையை நச்சென்று மிக எளிமையாக நம் மனதில் பதியும் அளவுக்கு கொடுத்திருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ் பேக் திரைக்கதைக்காக நிச்சயமாக இயக்குநரை பாராட்டலாம்.
ஆனால் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணை மிக, மிக காமெடியாக இருக்கிறது. சினிமாவில் லாஜிக் பார்க்க வேண்டாம் என்று நினைத்தாலும், இதுபோன்ற நீதிமன்ற நடவடிக்கைகளில் சொதப்பக் கூடாது என்பது நமது கருத்து. வழக்கறிஞர்களிடம் நீதிமன்ற நடைமுறைகளைக் கேட்டாவது அந்தக் காட்சிகளை தப்பில்லாமல் வடிவமைத்து இருக்கலாம்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுப்பது காவல்துறை மட்டுமே என்றெல்லாம் பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல் பொது மக்களும் இதில் இறங்கி செய்ய வேண்டும்.
அதோடு நீதிமன்ற விசாரணைகளை உடனுக்குடன் நடத்தி மிக விரைவாக குற்றவாளிகளுக்கு தண்டனகளை பெற்றுத் தர வேண்டும் என்பதையும் இயக்குநர் தன்னுடைய கருத்தாக சொல்லி இருக்கிறார்.
எப்படியோ ஒரு சின்ன பட்ஜெட்டில் சிறிய நடிகர், நடிகைகளை வைத்து ஒரு அளவான மர்டர், கிரைம், சஸ்பென்ஸ், திரில்லராக இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
இருந்தும் இந்த நிழல், நிழலாக நம்மைத் தொடரவில்லை என்பது வருத்தமான செய்தி…!
RATING : 2.5 / 5









