வசந்தம் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பி.ஜவகர் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் சந்தோஷ், ரேஷ்மி மேனன் இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். மேலும் ஜீவா, ஜெகன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பரணி, கோவை சரளா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – மகேந்திரன், இசை – சி.சத்யா, பாடல்கள் – விவேகா, லோகன், படத் தொகுப்பு – கமலக்கண்ணன், கலை இயக்கம் – ஏ.கே.முத்து, நடனம் – நோபல், பி.ஆர்.ஓ. – யுவராஜ், எழுத்து, இயக்கம் – பி.ஜவகர்.
தென்னிலங்கையின் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கடைசி ஈழப் போரின்போது நடந்த கதை இது.
தன்னுடைய மனைவியின் தாயை தேடி யாழ்ப்பாணம் செல்கிறார் ஜெய். அவருடைய மாமியார் அங்கே இறந்துவிட்டதாகத் தகவல் தெரிய.. தாயகம் திரும்ப முனைகிறார். அதே நேரம் யாழ்ப்பாணத்தில் துணி வியாபாரம் செய்ய ‘நான் கடவுள்’ ராஜேந்திரனின் அழைப்பின்பேரில் பரணியும், ஜீவாவும் உடன் செல்கிறார்கள்.
இவர்கள் ஒரு கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் சிங்கள ராணுவத்திடம் சிக்கிக் கொள்ள.. அப்போது அவர்களை ஜெய் காப்பாற்றுகிறார். நால்வரும் ஒன்றாகி விசைப் படகு மூலமாய் ராமேஸ்வரம் வந்து சேர்கிறார்கள்.
ஜெய்யின் ஊர் மார்த்தாண்டம். தனது மனைவியை கர்ப்பிணி கோலத்தில் விட்டுவிட்டு வந்ததால் நிச்சயமாக இப்போது எனக்கு குழந்தை பிறந்திருக்கும் என்கிற ஆர்வத்தில் சொந்த ஊருக்கு திரும்புகிறார் ஜெய். கூடவே தான் காப்பாற்றிய நண்பர்களையும் அழைத்து வருகிறார்.
ஊர் திரும்பும் கணவர் ஜெய்யை வரவேற்கிறார் மனைவி ரேஷ்மி மேனன். ஆனால் அந்த ஊர்க்காரர்கள் அனைவருமே ரேஷ்மி மேனன் இப்போது உயிருடன் இல்லை. அவர் பேயாக அந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார் என்கிறார்கள்.
இதையறியும் நண்பர்கள் தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டும், பல திட்டங்கள் தீட்டியும் ரேஷ்மி உயிருடன் இருக்கும் பெண் அல்ல. பேய் என்பதை நிரூபிக்க படாதபாடு படுகிறார்கள். ஆனால் இதனை ஜெய் நம்ப மறுக்கிறார். நண்பர்கள் மீது கோபமடைந்து அவர்களை திரும்பி ஊருக்குப் போகும்படி சொல்கிறார்.
ஆனால் ஊருக்குத் திரும்ப முடியாத ஒரு சூழலில் சிக்கிக் கொள்கிறார்கள் நண்பர்கள். எப்படியாவது ஜெய்யை ரேஷ்மி என்னும் பேயிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். அது நிறைவேறியதா… இல்லையா… என்பதுதான் இந்தப் படத்தின் சுமாரான திகில் கலந்த திரைக்கதை.
கொஞ்சம் புதுமையான பேய்க் கதைதான். கொஞ்சமே சுவாரஸ்யமான திரைக்கதையை வைத்தும், சுமாரான இயக்கத்தை வைத்தும் எடுக்கப்பட்டிருக்கிறது. சிற்சில இடங்களில் பயமுறுத்தியிருந்தாலும் அது இந்தப் பேய்ப் படத்திற்கு போதாமல் இருக்கிறது.
இடைவேளைக்கு பின்பு பொருட்காட்சியில் இருக்கும் பேய் வீட்டில்தான் சில, பல பேய்களை வைத்தும், திகிலூட்டும் பின்னணி இசையை வைத்தும் நம்மை திகிலூட்டுகிறார்கள்.
ஹீரோவாக நடித்திருக்கும் சந்தோஷ் கொஞ்சமேனும் நடித்திருக்கிறார். இவரைவிடவும் அதிகமாக நடித்திருப்பவர்கள் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும், பரணியும், ஜீவாவும்தான். ஒருவருக்கொருவர் பயந்து கொண்டு சாகும் காட்சியில் நிஜமாகவே திகிலுடன் கூடவே சிரிப்பையும் சேர்த்தே தந்திருக்கிறார்கள்.
‘நான் கடவுள்’ ராஜேந்திரனின் நான் ஸ்டாப் சோலோ ஆக்ட்டிங்கிற்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டை வழங்குவோம். பொருட்காட்சியின் பேய் அரங்கத்தில் மாறுவேடம் போட்டுக் கொண்டு ‘பார்க்காமல் போகாதே’ என்று பேயை திரும்பத் திரும்ப அழைக்கும் காட்சியில் ரசிகர்களின் மனதில் சிரிப்பு சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது.
இதேபோல் ஜீவா ஒவ்வொரு முறையும் பேயை அடையாளம் காண போடும் திட்டமும் அது பணாலாகும் முறையும் கலகல. ‘திகில்’ தேவிகாவாக வந்து கலக்கியிருக்கும் கோவை சரளாவின் வீட்டுக்குள் நடக்கும் அலப்பறையில் நகைச்சுவை தெறிக்கிறது.
“இந்த ஏரியாலேயே எங்கக்காதான் பேய் ஓட்டுறதுல பெஸ்ட்டு…” என்று சொல்லியே அக்காவிடம் எத்து வாங்கும் லொள்ளு சபா சேஷு, இன்னொரு பக்கம் நேரம் கெட்ட நேரத்தில் காமெடியை கிளப்பியிருக்கிறார்.
ரேஷ்மி மேனனின் அமைதியான நடிப்பை பேயாக ஒத்துக் கொள்ளவே முடியாது என்று எந்த ரசிகனும் சொல்லுவான். கடைசியாக இவரையே பேயாக்கி அதற்கு அவர் சொல்லும் சென்டிமெண்ட் காரணமும் நெகிழ வைக்கிறது. ஆனால் காட்சியமைப்பில் அதனை முழுமையாகக் கொண்டு வர தவறிவிட்டார் இயக்குநர்.
தலைகீழாக குனிந்து பார்த்தால் பேயாக இருந்தால் பேய் முகம் தெரியும் என்கிற புதிய திகில் வரலாற்று உண்மையை இந்தப் படத்தைப் பார்த்து தெரிந்து கொண்டோம். இதற்காக இயக்குநருக்கு நமது நன்றிகள்.
பேய்க் கதைகளின் அடித்தளமே திகிலும், சஸ்பென்ஸும்தான். இதில் சஸ்பென்ஸ் மிக அழகாக மெயின்டெயின் செய்யப்பட்டிருந்தாலும், கொடுத்திருக்க வேண்டிய திகில் உணர்வு தவணை முறையில் வந்திருப்பதுதான் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பின்னடைவு.
மார்த்தாண்டம் என்னும் இயற்கை எழில் கொஞ்சம் இடத்தில் அதிகம் இரவு நேரத்திலேயே படமாக்கியிருப்பதால் அந்தச் சின்ன இடத்தை அழகுற படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேந்திரன்.
கோவை சரளா பேயோட்டும் காட்சியையும், பொருட்காட்சியில் பேய் அரங்கத்தின் நடக்கும் அதகளக் காட்சிகளையும் அற்புதமாக படமாக்கியிருக்கிறார்கள். இதேபோல் இந்த இரண்டு காட்சிகளுக்காக படத் தொகுப்பாளரையும் பெரிதும் பாராட்ட வேண்டும். ஒரு சிறிய பிரேக்கூட இல்லாமல் அழகாக கட் அண்ட் பேஸ்ட் செய்திருக்கிறார் எடிட்டர் கமலக்கண்ணன்.
சி.சத்யாவின் இசையில் இரண்டு பாடல்கள் ஒலிக்கின்றன. பேய் பாடும் பாடல் போல ஒன்று குரல் வளம் இல்லாததால் மனதில் பதியவில்லை. ஆனால் பின்னணி இசையை பொருத்தமாக அடித்து ஆடியிருக்கிறார் சத்யா. இந்தப் படத்தில் இயக்குநருக்குக் கிடைத்த மிகப் பெரிய பலம் பின்னணி இசை என்றே சொல்லலாம்.
திடீரென்று ரேஷ்மி மேனன் பேய் என்ற சந்தேகம் இவர்களுக்கு எப்படி வந்தது என்பதற்கான சரியான விளக்கம் படத்தில் சொல்லப்படாதது ஒரு குழப்பம்தான்..! ஊரே வீட்டுக்குள் ஓடி கதவைச் சாத்துகிறது என்பதற்கு என்ன காரணம் என்பதை விஷுவலில் காட்டியிருக்க வேண்டும். ஊரில் இருப்பவர்கள் நீ பேய்தானே என்று ஹீரோவை பார்த்துக் கேட்பதையும் தெளிவாகக் கேட்டுச் சொல்லியிருக்க வேண்டும்.
போரின் தாக்கமே இல்லாதிருந்த யாழ்ப்பாணத்தில் சிங்களப் படையினரின் அட்டூழியம்.. மக்கள் இடம் பெயர்வது என்றெல்லாம் காட்டியது.. இலங்கையில் இருந்து தடங்கலே இல்லாமல் ராமேஸ்வரம் தீவில் வந்து இறங்குவது.. எந்த பிரச்சனையும் இல்லாமல் அங்கேயிருந்து மார்த்தாண்டத்திற்கு வருவது.. உடன் வந்த நண்பர்களின் ஊர் எது.. அவர்களின் பேக்கிரவுண்ட் எதையும் சொல்லாதது. இத்தனை மாதங்கள் கழித்து தாயகம் திரும்புபவர்கள் தங்களது சொந்த வீட்டுக்குப் போக விரும்புவார்களா அல்லது நண்பனின் வீட்டுக்கு வருவார்களா..? இது போன்ற லாஜிக் எல்லை மீறல்களையும் இயக்குநர் கவனத்தில் கொண்டிருந்தால், படத்தின் திரைக்கதை கொஞ்சம் நம்பும்படியாகவே இருந்திருக்கும்..!
கடைசியாக சொல்லப் போனால்.. இந்தப் பேய்ப் படத்தில் இன்னும் கொஞ்சம் திகிலைக் கூட்டியிருக்கலாம். பயப்படவும் வைத்திருக்கலாம்.