full screen background image

பரிமளா அண்ட் கோ – சினிமா விமர்சனம்

பரிமளா அண்ட் கோ – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன், தமிழ்குமரன் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜிகேஎம் தமிழ்குமரன், பசங்க புரொடக்ஷன்ஸ் சார்பில் பாண்டிராஜ்  மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

ந்தப் படத்தில் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார், ஜிகேஎம் தமிழ்குமரன், பூர்ணிமா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு : ஜார்ஜ் சி. வில்லியம்ஸ், இசை: ஃபாக்ஸ்ன், படத்தொகுப்பு : பிரதீப் இ.ராகவ், கலை இயக்குநர் : டி.ராமலிங்கம், ஸ்டண்ட் மாஸ்டர்: கலை கிங்சன், நடனம்: சாண்டி, பாபா பாஸ்கர், இசை மேற்பார்வையாளர்: சந்தோஷ் குமார், ஆடை வடிவமைப்பாளர்: பூர்ணிமா ராமசாமி, ஆடை: கே.நடராஜ், ஒலிப்பதிவு: எம்.ஆர்.ராஜகிருஷ்ணன், விஎஃப்எக்ஸ் தயாரிப்பாளர் :  பி.ஆர். வெங்கடேஷ், டிஐ: நாக் ஸ்டுடியோஸ், வண்ணம்: பிரசாத் சோமசேகர், ஸ்டில்ஸ் : தேனி ​முருகன், ஒலி தொகுப்பு : ஷ்ரேயாஸ் பட், அருண்பிரசாத், தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: ராமதாஸ், பத்திரிக்கை தொடர்பு : சதீஷ் (ஏஐஎம்).

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ்.

காசை அள்ளி வீசாமல் வரவுக்குள் செலவு செய்ய வேண்டும் என்று நினைக்கும் குடும்பத் தலைவனான பரிமளா என்ற ஜெயராம் மகள் கணவருடன் தினமும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கும் மனைவி ஊர்வசி.. அக்கா, தங்கை இருவரும் எப்போது பார்த்தாலும் பாம்பு, கீரிபோல சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் ஹீரோயின்கள் சஞ்சனா மற்றும் அனந்திகா.. இவர்களின் குடும்பக் கதைதான் இந்தப் படம்.

சொற்ப வருமானத்தில் வேலை செய்து வரும் ஜெயராம் காசை எண்ணி எண்ணி செலவு செய்கிறார். இவருடைய இரண்டாவது மகளான அனந்திகாவை தீவிரமாக காதலித்து வருகிறார் லோக்கல் ரௌடியான சாண்டி. எல்லாவிதமான கடத்தல் தொழில்களையும் செய்து வரும் சாண்டி யாருக்கும் பயப்படாதவர்.

அப்பாவி குடும்பமா இருக்கே.. இங்க பொண்ணை ஆட்டையை போடுவோம் என்று நினைத்து அனந்திகாவை விடாமல் விரட்டி சாண்டி. போலீஸ் வரைக்கும் புகார் செய்தும் எதுவும் நடக்கவில்லை. இப்போது இன்னும் தைரியமாக வீடு தேடி வந்து கலாட்டாவும் செய்கிறார் சாண்டி. சாண்டியின் அட்டூழியங்கள் எல்லை மீறி கொண்டே போக “இவனை போட்டு தள்ளிட்டா என்ன?” என்று அந்தக் குடும்பத்தில் இருக்கும் நான்கு பேரும் யோசிக்கிறார்கள்.

இப்படி வீட்டில் இருக்கும் நாலு பேருமே ஆளுக்கு ஒரு பக்கம்.. ஒரு திட்டத்தை தீட்டி சாண்டியை போட்டு தள்ள முடிவெடுத்த நிலையில் சாண்டி நிஜமாகவே படுகொலை செய்யப்படுகிறார். அவரை கொலை செய்தவர்கள் யார் என்று இதுவரையிலும் தெரியவில்லை.

லோக்கல் அமைச்சர் போலீசுக்கு பிரஷர் கொடுக்கிறார். இதை அடுத்து களத்தில் இறங்கும் லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரான மிஷ்கின் இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்குகிறார்.

இறுதியில் என்ன ஆனது? சாண்டியை யார் கொலை செய்தது? கொலை வழக்கில் இந்தக் குடும்பத்தினர் யாராவது ஒருவர் மாட்டினார்களா? இல்லையா?.. என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

மலையாள சினிமாவில் ன்றைக்கும் அதிகம் ரசிக்கப்பட்ட ஜோடி என்றால் அது ஜெயராமும், ஊர்வசியும்தான். இவர்கள் நடித்த பல மலையாள திரைப்படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றன. அதோடு ஒவ்வொரு கனவனும் ஜெயராம்போல் இருக்க வேண்டும். ஒவ்வொரு மனைவியும் ஊர்வசிபோல் இருக்க வேண்டும் என்றெல்லாம் மலையாள மக்கள் நினைக்கும் அளவுக்கு இவர்கள் இருவரும் வெள்ளித்திரையில் ஒரு சிறந்த ஜோடி என்று பாராட்டப்பட்டவர்கள்.

இந்த இருவருடைய நடிப்பில்தான் இந்த பரிமளா அண்ட் கோ படமும் வெளிவந்திருக்கிறது. உண்மையில் இவர்கள் இருவரின் நடிப்பினால்தான் இந்த படமும் இப்போது சிறந்த வகையில் பார்க்கும்படியாகவும் வெளிவந்துள்ளது.

ஜெயராமின் நடிப்பு ஒரு மிடில் கிளாஸ் அப்பாவின் வேதனையை சொல்கிறது. தன்னுடைய மனைவிக்கு ஈடுகொடுக்கும் வகையில் தன்னால் முடிந்த அளவுக்கான நகைச்சுவை நடிப்பையும் அப்பாவி கேரக்டரையும் மிக கச்சிதமாக செய்திருக்கிறார் ஜெயராம்.

சாண்டியிடம் “சமாதானமாக போகலாம். விட்டிருப்பா என்று அமைதியாக சொல்லும், ஜெயராம் எல்லை மீறியதால் சாண்டிக்கு பிராக்கெட் போட துவங்கும்பொழுது தன்னுடைய வில்லத்தனத்தையும் வெளிக்காட்டி இருக்கிறார். மகள்கள் மீது அவர் வைத்திருக்கும் பாசமும், மனைவி மீது இருக்கும் அன்பும் சில காட்சிகளில் வெளிவந்து நம்மை நெகிழ வைக்கிறது.

பாபநாசம் படம் போல் போலீஸிடம் சிக்காமல் எப்படி தப்பிக்கலாம் என்று ஐடியாவை ஜெயராம் கொடுக்கும் பொழுதெல்லாம் தியேட்டரில் சிரிப்பலை எழுந்தது. அவ்வப்பொழுது பல்லை கடித்து தன் மனைவியை எச்சரிக்கின்ற இடங்களில் எல்லாம் பெரும் சிரிப்பை உதிர வைத்திருக்கிறார் ஜெயராம்.

இவருக்கு ஈடு கொடுத்து பேசுகின்ற ஒவ்வொரு வசனத்திற்கும் கவுண்ட்டர் அட்டாக் கொடுக்கும் ஊர்வசியின் நடிப்பும் பிரமாதம். இந்த படத்தை ஊர்வசி தாங்கியிருக்கிறார் என்றுகூட சொல்லலாம்.

அழகு பதுமையான சஞ்சனா மிக, மிக அழகாக நடித்திருக்கிறார். அவரை நடிக்க வைத்திருக்கும் இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள். எந்த பக்கம் பார்த்தாலும் ஒரு அழகான வடிவமாக இருக்கும் சஞ்சனா அவருடைய நடிப்பையும் அழகாக கொடுத்திருக்கிறார்.

இவருடைய தங்கையாக நடித்திருக்கும் அனந்திகா கொஞ்சம் கொஞ்சமாக சாண்டியுடனான தன்னுடைய அனுபவங்களை வெளியிடும் போதெல்லாம் தியேட்டரில் சிரிப்பலை ஒலிக்கிறது. உண்மையில் இந்த அக்கா தங்கை சண்டைதான் இந்தப் படத்தில் பெரும் சுவாரசியமாக இருந்தது.

லோக்கல் தாதாவாக நடித்திருக்கும் சாண்டி அந்தக் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் ஒரு கானா பாட்டு பாடிவிட்டு தன்னுடைய வில்லத்தனத்தை காதலியிடம் காட்டுகின்ற காட்சிகள் எல்லாம் நிஜமாகவே ஒரு வில்லனாக தன்னுடைய நடிப்பை அழகாக செய்து இருக்கிறார்.

இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் மிஷ்கின்தான் இந்த படத்தின் மைய கதாபாத்திரம். இவர்தான் இந்தப் படத்தின் திரைக்கதை நகர்த்தியிருக்கிறார், இவருக்கு பின்னால் இருக்கும் ஒரு சோகமும், அது கிளைமாக்ஸில் உடைக்கப்படும்பொழுது சபாஷ் என்று இயக்குநரை பாராட்ட வைக்கிறது. மிக, மிக அலட்சியமாக ஒவ்வொரு டயலாக்கையும் அள்ளி வீசுகிறார். ஒரு சில இடங்களில் மிகப் பெரிய அளவுக்கு கைதட்டலையும் பெற்றுவிட்டார்.

ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் நினைத்தால் எவ்வளவு பெரிய வழக்கையும் ஒன்றும் இல்லாமல் ஊதிவிட முடியும் என்பதை மிஷ்கின் கதாபாத்திரம் மூலமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

ஜெயராமின் தம்பி மற்றும் மைத்துனராக நடித்திருக்கும் சிங்கம் புலி, பக்ஸ் இருவரும் இடையிடையே அவ்வப்பொழுது வந்து கிச்சு கிச்சு மூட்டி இருக்கிறார்கள். அக்காவின் இறுதிச் சடங்கில் நடக்கும் களேபரங்கள் செம காமெடிதான்.

பூர்ணிமா பார்வையாளர்களின் பச்சாபாதம் தன் மீது விழுகும்படியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஒரு நடிகராக அறிமுகமாகி இருக்கும் தயாரிப்பாளர் தமிழ் குமரனும் தன்னால் முடிந்த அளவுக்கான நடிப்பை செய்திருக்கிறார். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

வீட்டின் உரிமையாளரான யோகி பாபுவுக்கும் ஜெயராமின் குடும்பத்திற்கும் இடையில் நடக்கும் சிறு சில சண்டைகளும், போலீசாரை லெஃப்ட் கேண்டில் பேஸ் செய்வதுபோல யோகி பாபு பேசுகின்ற சில காட்சிகளும் நன்று.

ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் அழகான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார். வெளிப்புற காட்சிகளையும் வீட்டுக்குள் நடக்கின்ற காட்சிகளையும்கூட சிறப்பாகவே படமாக்கி இருக்கிறார்.

இசையமைப்பாளர் பாக்ஸின் இசையில் பாடல்கள் கேட்கும் வண்ணம் இருக்கிறது. பாடல் வரிகள் நம்முடைய காதுகளில் நுழைவதற்கு இசையை கொஞ்சம் மட்டுப்படுத்தி வைத்திருக்கிறார். மேலும் ஒரு காமெடி சீன் என்றாலும் அந்த உணர்வை நமக்குள் தூண்டிவிடுவது போல இசை அமைத்து நல்ல பெயர் எடுத்திருக்கிறார்.

அந்த வீட்டை மிக அழகாக வடிவமைத்து அலங்காரப் பொருட்களை வைத்து ரசிக்க வைத்திருக்கும் கலை இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள். அதே சமயம் படத்தொகுப்பாளர் இன்னமும் கொஞ்சம் மனம் வைத்து சில காட்சிகளை கட் செய்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை பேசிக் கொண்டே இருக்கின்ற காட்சிகள் நமக்கு ரொம்பவே போரடிக்க வைக்கிறது. அதை சரி செய்திருக்கலாம்.

இப்போது நாட்டிலும் சினிமா துறையிலும் மிகப் பெரிய விஷயமாக பேசப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்தான் இந்தப் படத்தின் மைய கரு.

இதுவரையிலான வந்த படங்கள் அனைத்துமே இந்த விஷயத்தை சிறியதாக சொல்லி இருக்கும் நிலையில் இயக்குநர் பாண்டிராஜ் தன்னுடைய பாணியில் கொஞ்சம் சீரியசும், நிறைய காமெடியும் கலந்து இந்தப் படத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார். அவருடைய கதை திரைக்கதை வசனம் இயக்கம் அனைத்துமே இந்த படத்திலும் சிறப்பாகத்தான் இருக்கிறது.

இடைவேளைக்கு பின்பு டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்டாக அந்தக் குடும்பத்தினர் தங்களுக்குள்ளேயே ஒருவர் மாற்றி ஒருவர் சந்தேகித்துக் கொள்ளும்விதமாக பேசுகின்ற காட்சிகள் மிக ரசனையானவை. உண்மையாகவே இவர்களில் யாரோ ஒருவர்தான் கொலை செய்திருக்கிறார் என்று நம்மையும் நினைக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

பாபநாசம் படத்தின் ரெஃபரன்ஸ் இரண்டு மூன்று இடங்களில் வருவதைகூட ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.

ஆனாலும் ஒரு கொலையாளியை சட்டப்படி திமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கி தரக் கூடிய பொறுப்பில் இருக்கும் இன்ஸ்பெக்டர் அதை செய்யாமல் தவிர்த்து தானே தண்டனை தருவதும், அதற்கு உடந்தையாகவும் இருப்பது போலவும் படத்தின் திரைக்கதை அமைந்திருப்பது நிச்சயம் கண்டிக்கத்தக்கது.

எந்த ஒரு கொலையாக இருந்தாலும் சரி.. சமூகத்திலிருந்து அவன் வெளியேற்றப்பட வேண்டியவன் என்பதாக இருந்தாலும் சரி.. ஒரு கொலையைச் செய்துவிட்டு ஜாலியாக தப்பித்துப் போவதுமாக சினிமாவில் காட்டுவது வளரக் கூடிய நமது இன்றைய ஜெனரேஷனை நிச்சயமாக பாதிக்கும். அந்த வகையில் இது மாதிரி படங்களை கொடுக்கும்போது கிளைமாக்ஸில் கொலையாளிக்குரிய தண்டனையை அவன் பெற்றதாகவே காட்டுவதுதான் நாட்டுக்கு நல்லது.

இயக்குநர் பாண்டிராஜ் எப்போதும் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய திரைப்படங்களை மட்டுமே எடுத்து வருகிறார். அந்த வகையில் இந்தப் படமும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு நல்ல திரைப்படம்தான். கொஞ்சம் சஸ்பென்ஸ், திரில்லர், மர்டர் என்று இருந்தாலும் நகைச்சுவை ததும்ப கொடுத்திருக்கிறார் என்பதால் நிச்சயமாக இயக்குநரை நாம் மனதாரப் பாராட்டுவோம்.

RATING : 3.5 / 5

Our Score