களவுத் தொழிற்சாலை – சினிமா விமர்சனம்

களவுத் தொழிற்சாலை – சினிமா விமர்சனம்

MGK மூவி மேக்கர் சார்பாக S.ரவிசங்கர் தயாரித்துள்ள திரைப்படம் ‘களவுத் தொழிற்சாலை’.

இந்தப் படத்தில் கதிர், வம்சி கிருஷ்ணா, மு.களஞ்சியம், குஷி, ரேணுகா. செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – V.தியாகராஜன், இசை – ஷியாம் பெஞ்சமின், படத் தொகுப்பு – யோக பாஸ்கர், கலை – முரளி ராம், நடனம் – சங்கர், பாடல்கள் – அண்ணாமலை, நந்தலாலா, டிசைன்ஸ் – சசி & சசி, அஞ்சலை முருகன், மக்கள் தொடர்பு – நிகில், எழுத்து, இயக்கம் -T.கிருஷ்ண ஷாமி.

இந்தப் படத்தை வெங்கி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் வெங்கடேஷ் ராஜாவுடன் S-2 என்ற நிறுவனமும் இணைந்து வெளியிடுகிறது.

உலகில் போதை மருத்து கடத்தல் மற்றும் வைரக் கடத்தலுக்கு அடுத்தபடியாக அதிகப் பணம் புரளும் தொழிலாக கருதப்படுவது சிலை கடத்தல் தொழில்தான். இத்தொழிலில் ஆண்டு வருமானம் நாற்பது ஆயிரம் கோடிகள் என்று சொல்லப்படுகிறது. இந்தக் ‘களவுத் தொழிற்சாலை’ திரைப்படமும் இந்த சர்வதேச சிலை கடத்தல் பின்னணியில்தான் உருவாகியுள்ளது.

வயலன்சை விரும்பாத ஒரு சர்வதேச கடத்தல்காரன். அவனுக்கு துணை போகும் அப்பாவி திருடன். அந்தத் திருடனின் திருட்டுத் தொழிலை கண்டித்தாலும் அவன் மீது காதலாய் இருக்கும் அவனது காதலி.. திரைக்கதையில் அதிரடியாக நுழையும் ஒரு இஸ்லாமிய காவல் துறை அதிகாரி என்று இதன் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

சிலை கடத்தல் என்றாலும் ஏதோ சாதாரணமான சிலை என்பதில்லாமல் மரகத லிங்கம் என்ற விலை மதிப்பில்லாத சிவலிங்கத்தை கடத்தும் கதையைச் சொல்லியிருக்கிறது இத்திரைப்படம்.

இந்த மரகத லிங்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.  மரகதம் என்பதே ஒரு கனிமம்தான். இதில் சிலிக்கன், அலுமினியம், மக்னீசியம் போன்ற இரசாயனக் கலவைகளும் அடங்கியுள்ளன. பச்சை நிறமுடையது. ‘வனேடியம்’ என்ற மூலப் பொருள்தான் மரகதத்திற்கு பச்சை நிறத்தைத் தருகிறது.

இந்த பச்சை நிறம் கொண்ட மரகதம் ஒளிரும் தன்மையுடையது. இந்தக் கனிமத்தால் உருவான கற்கள் மிக மென்மையானவை; எளிதில் நொறுங்கும் தன்மை உடையவை.

கண்ணாடிப் பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றி அதில் மரகதத்தைப் போட்டால் பால் முழுவதும் பச்சை நிறமாகத் தோன்றும். நீர் நிறைந்த பாத்திரத்தில் போட்டால் நீர் முழுவதும் பச்சையாகத் தோன்றும். இப்படிப்பட்ட குணமுடைய இந்த மரகதக் கல் இப்போது உலகத்தின் கடத்தல் பிஸினஸில் டாப் ஸிஸ்ட்டில் இருக்கிறது.

இந்த மரகதக் கல் ஒன்பது நவரத்தினங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. நவக்கிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவது சிறந்தது என்று இந்து புராணங்கள் கூறுகின்றன.

தெய்வத்தின் சிலைகள் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக நம்முடைய முன்னோர்களான சில மன்னர்கள் மரகதக் கல்லில் லிங்கத்தை வடிவமைத்துள்ளனர். மன்னர்கள் இந்த வகை லிங்கங்களை கோவிலில் வைத்து வழிபடுவதையே சிறப்பு என்று கருதியிருக்கிறார்கள்.

மரகத லிங்கத்தை வணங்குவதன் மூலம் சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும் என்பது ஆன்மீக நம்பிக்கை. கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகத லிங்கம் தரக் கூடிய வல்லமை படைத்தது என்கிறார்கள். வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும் மரகத லிங்கம்  துணை செய்கிறதாம்.

இந்த மரகத லிங்கங்கள் புராண காலத்திலேயே தமிழகத்திற்கு வந்தடைந்ததாக ஒரு கதை உண்டு. புராண காலத்தில் நடந்த கதை இது என்கிறது தமிழ் சமய இலக்கிய வரலாறு.

தேவலோகத்தின் அரசனான இந்திரன் ஒரு மரகத லிங்கத்தை தன் வசம் வைத்திருந்து பூஜித்து வந்தான்.  இதையறிந்த அப்போதைய சோழச் சக்கரவர்த்தியான முசுகுந்த ராஜா அந்த மரகத லிங்கத்தை இந்திரனிடம் யாசகமாக கேட்டிருக்கிறார். முசுகுந்த ராஜாவின் சிவ பக்தியை சோதிக்க நினைத்த இந்திரன் தன்னிடமிருக்கும் மரகத லிங்கத்தை போலவே மேலும் ஆறு லிங்கங்களை செய்து அனைத்தையும் முசுகுந்த ராஜாவிடம் காட்டியிருக்கிறார்.

இதில் தான் வணங்கும் மரகத லிங்கத்தை முசுகுந்த ராஜா கண்டுபிடித்தால் அதனை அவருக்கே தருவதாகச் சொல்லியிருக்கிறார் இந்திரன். தன்னுடைய சிவ பக்தியினால் உண்மையான மரகத லிங்கத்தைக் கண்டறிந்த முசுகுந்த ராஜா அதனை அடையாளம் காட்ட.. அகமகிழ்ந்துபோன இந்திரன் தான் வணங்கி வந்த மரகத லிங்கத்தை முசுகுந்த ராஜாவிடம் கொடுத்த்தோடு இல்லாமல், உடன் செய்து வைத்திருந்த 6 மரகத லிங்கங்களையும் முருசுகுந்த ராஜாவிடமே கொடுத்தனுப்பியுள்ளார்.

அப்படி இந்திரனிடம் இருந்து வாங்கி வரப்பட்ட இந்த மரகத லிங்கங்கள் அனைத்தும் அப்போதைய முசுகுந்த ராஜாவின் ஆளுகைக்குட்பட்டிருந்த பகுதிகளில் இருந்த சிவாலயங்களில் வைக்கப்பட்டன. வேதாரண்யம்திருக்குவளைதிருக்கரவாசல்திருவாரூர், திருநள்ளாறுநாகப்பட்டினம்திருவாயுமூர்  ஆகிய ஏழு ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் வைக்கப்பட்டன. இதனால் இந்த ஏழு கோவில்களும் இப்போதும் ‘சப்த விடங்க தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

இந்தக் கோவில்களில் மரகத லிங்கங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச் சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டதாம். இரவில் மரகத லிங்கங்களின் மேல் சாற்றி வைக்கப்பட்டு காலையில் வழங்கப்படும் சந்தனமும் மிகச் சிறந்த மருத்துவ சக்தி வாய்ந்ததாக இன்னமும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

இந்த ‘சப்த விடங்க தலங்களில்’ ஒன்றான திருவாரூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்த விலை மதிப்பில்லாத மரகத லிங்கம் கடந்த 2016-ம் ஆண்டு திடீரென்று கொள்ளை போனது. இதையடுத்து இந்தாண்டு ஜனவரி மாதம் வேட்டவலம் மனோன்மணி அம்மாள் கோவிலில் இருந்த மரகத லிங்கமும் கொள்ளையடிக்கப்பட்டது.

இப்படி கொள்ளையடிக்கப்பட்ட இந்த மரகத லிங்கத்தின் விலை சுமாராக 25 கோடி ரூபாய் என்பதால்தான் மற்ற தெய்வச் சிலைகளைவிடவும் மரகத லிங்கத்தைக் கொள்ளையடிக்க பெரும்பாடுபடுகிறது சிலை திருட்டுக் கும்பல்.

அப்படியொரு கும்பல் இப்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் மருந்தீஸ்வரர் கோவிலில் இருக்கும் மரகத லிங்கத்தை திருட திட்டம் தீட்டுகிறது.

இதற்காக கும்பகோணத்திற்கு வந்து முகாமிடுகிறார் சர்வதேச கடத்தல் திருடனான வம்சி கிருஷ்ணா. மலேசியாவில் இருக்கும் ஒரு டிவி சேனலின் ரிப்போர்ட்டர் என்று பொய்யான ஐடியை காட்டி மருந்தீஸ்வரர் கோவிலின் தர்மகர்த்தாவை மடக்கும் கிருஷ்ணா, அவருடைய உதவியுடன் கோவில் முழுவதையும் வீடியோவில் படமெடுக்கிறார்.

கோவிலுக்குள் மரகத லிங்கம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் வம்சி கிருஷ்ணா, அதனை சப்தமேயில்லாமல் திருடிவிட்டு தப்பிப்பதற்காக அந்தக் கோவிலில் ஏதாவது ரகசிய வழியிருக்கிறதா என்று ஆராய்கிறார்.

லோக்கல் லைப்ரரியில் கிடைத்த சோழர்கள் காலத்து கோயில்கள் புத்தகத்தைப் பார்த்து கோவிலின் வடிவமைப்பைத் தெரிந்து கொள்கிறார். கூடவே நிச்சயமாக ஏதோவொரு ரகசிய பாதை கோவிலில் இருந்து வெளியில் வருவதற்கு இருக்கும் என்று தேடுகிறார். தேடுதல் வேட்டையில் கஷ்டமே படாமல் அந்த வழியையும் கண்டறிகிறார்.

இருந்தாலும் இந்த லிங்கம் கடத்தல் ஆபரேஷனில் தனக்குத் துணைக்கு ஆள் வேண்டுமே என்று ஒருவரை தேடுகிறார். அதே ஊரில் அவ்வப்போது பிள்ளையார் சிலைகளை மட்டும் கடத்தல் அதாவது அவரது பாஷையில் ஷிப்டிங் செய்யும் ‘ஷிப்டிங்’ ரவி என்பவனைத் தேடிப் பிடிக்கிறார் வம்சி.

ரவி தனது காதலியைத் திருமணம் செய்யக் காத்திருக்கிறார். கல்யாண செலவுக்கு தான் பணம் தருவதாகச் சொல்லி ஆசை காட்டி அவனையும் இந்த ஆபரேஷனுக்குள் இழுக்கிறார் வம்சி. இருவரும் மரகத லிங்கத்தைக் கடத்தும் பணியில் இறங்கி, அதனை வெற்றிகரமாக செய்தும் முடிக்கிறார்கள்.

இதன் பின்பு வழக்கம்போல் போலீஸ் இதனை விசாரிக்கத் துவங்குகிறது. வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்படுகிறது. சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. பிரிவு போலீஸின் உயரதிகாரியான இர்பான் இந்த வழக்கைத் துப்பு துலக்க வருகிறார். இவரால் களவு போன லிங்கத்தை மீட்க முடிந்ததா..? வம்சி, ரவி இருவரின் கதி என்ன ஆனது.. என்பதெல்லாம் படத்தின் மீதிக் கதை.

வம்சி கிருஷ்ணாவுக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பே இல்லை. ச்சும்மா உட்கார்வதும், எழுவதும், காரில் பறப்பதுமாகவே இருக்கிறார். கடைசியாக சண்டை காட்சிகளில் ஆக்ட்டிவ்வாக நடித்துவிட்டு ஓய்ந்திருக்கிறார்.

ரவியாக நடித்திருக்கும் கதிருக்கு ஓரளவுக்கு ஸ்கோப் இருந்தாலும் இயக்குதலின் குறைவு காரணமாய் ஒரு அளவாகவே நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். சிலை கடத்தல் சம்பவங்களைவிடவும் ரவியின் காதல் கதை கொஞ்சம் பார்க்கும்படியிருந்தது.

ஹீரோயின் குஷியின் நடிப்பை முழுமையாக ரசிக்க முடியாத அளவுக்குத்தான் இயக்குநர் தனது வேலையை செய்திருக்கிறார். டப்பிங் சொதப்பல்.. ஒளிப்பதிவு சொதப்பல்.. இயக்கம் சொதப்பல் என்று எல்லாமே இந்தப் படத்திற்கு எதிரியாகிவிட்டது. பாதி வசனங்கள் கேட்கவே இல்லை. உதடுகள் பிரிகின்றன. ஆனால் வசனங்கள் ஒலிக்கவில்லை. என்ன படத் தொகுப்பு செய்தார்கள் என்று தெரியவில்லை.

12-ம் நூற்றாண்டு கோவிலின் வரைபடத்தை பார்த்து ரகசிய வழியை உடனடியாகக் கண்டறிவதும்.. 9 நூற்றாண்டுகளாக இறுகிப் போயிருக்கும் கதவை பட்டென்று கையால் உடைத்துவிட்டு உள்ளே போவதும்.. பூட்டுக்கேற்ற சாவிகளை மின்னல் வேகத்தில் தயார் செய்து கொண்டு வந்திருப்பதும் படுவேகமான திராபையான திரைக்கதை.

இதைவிட கொடுமை படத்தின் இடைவேளைக்கு பின்பு வரும் திரைக்கதைதான். இவர்களை கண்டறிய வரும் அஸிஸ்டெண்ட் கமிஷனர் களஞ்சியத்தின் செயல்பாடுகள் எல்லாம் ஜேம்ஸ்பாண்டு மாதிரி ஒன் மேன் ஆர்மியாக இருப்பது நகைப்புக்குரியது.

இயக்குநர் இதுவரையிலும் போலீஸ் சம்பந்தப்பட்ட படங்களையே பார்த்ததில்லை போலும்.. குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஏற்காட்டிற்கு தனியே சென்று வம்சி கிருஷ்ணாவை பட்டென்று பார்த்து டக்கென்று கதையை முடித்து மரகத லிங்கத்தைக் கைப்பற்றும் இந்தத் திரைக்கதைக்கு எத்தனை மதிப்பெண் போடுவது என்று தெரியவில்லை.

தியாகராஜனின் ஒளிப்பதிவு அவ்வப்போது மின்னலாய் இருப்பதும் பல நேரங்களில் டல்லடிப்பதுமாக இருக்கிறது. ஷியாம் பெஞ்சமினின் இசையில் பாடல்களும், அதனை படமாக்கியவிதமும் மட்டுமே கொஞ்சம் ஆறுதலான விஷயம். தஞ்சாவூரு பாடலை பாடமாக்கியவிதம் அருமை. நிஜமாகவே நடைபெற்ற கோவில் திருவிவிழாவுக்குள் மிகக் கடுமையாக உழைத்துதான் இந்தப் பாடலை படமாக்கியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதற்காக பாராட்டுக்கள்.

படத்தின் துவக்கத்தில் வரும் 12-ம் நூற்றாண்டில் நடைபெற்ற இந்திரன்-முசுகுந்த ராஜா கதையும், அதனைச் சொல்லியவிதமும், குரல் வளமும், காட்சியமைப்பும் பாராட்ட வேண்டிய விஷயம்.

ஒரு தேடுதல் வேட்டையை உள்ளடக்கிய பரபரப்பான திரைக்கதை இருக்க வேண்டிய இடத்தில் சவ சவ என்றிருக்கும் அளவுக்கான மந்தமான திரைக்கதையையும், நிறைவில்லாத இயக்கத்தையும் கொண்டிருப்பதால் படம் ஒட்டு மொத்தமாய் திருப்தியை தரவில்லை என்பது வருத்தமான விஷயம்தான்.

Our Score