full screen background image

வள்ளுவன் – சினிமா விமர்சனம்

வள்ளுவன் – சினிமா விமர்சனம்

நடிகர்கள் :-

சேத்தன் சீனு, ஆஷ்னா ஜாவேரி, மனோபாலா, தீனா, பிரேம்குமார், கராத்தே ராஜா, மீசை ராஜேந்திரன்

தொழில் நுட்பக் குழு:-​

எழுத்து – இயக்கம்: சங்கர் சாரதி
தயாரிப்பாளர்: ஷைல்குமார் ராஜேந்திரன்
இணை தயாரிப்பாளர்கள்: வி. பாலச்சந்தர், நஞ்சுண்டே கவுடா, சதீஷ் ராஜேந்திரன்
தயாரிப்பு நிறுவனம்: ஆறுபடை புரொடக்ஷன்ஸ்
இசை: அஸ்வத்
ஒளிப்பதிவு: சுரேஷ் பாலா
படத்தொகுப்பு: சான் லோகேஷ்
மக்கள் தொடர்பு: புவன் செல்வராஜ்

திருவள்ளுவரின் பெயரை தலைப்பாக வைத்து இந்தப் படம் வந்திருப்பதால் வள்ளுவனுக்கும் இந்தப் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால் திருவள்ளுவர் அருளிய மூன்று குரல்களை மையமாக வைத்துதான் இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதனால் இதற்கு வள்ளுவன் என்று பெயர் வைத்திருப்பதுகூட சாலப் பொருத்தம்தான்.

சென்னையில் உணவு பொருளை வீட்டுக்கு கொண்டு போய் கொடுக்கும் ஒரு நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார் ஹீரோ வெற்றி.

அப்படி ஒரு முறை உணவை டெலிவரி செய்ய போகப் பொழுது தற்செயலாக ஹீரோயின் ஆஷ்னா ஜாவேரியை பார்க்கிறார். ஆஷ்னாவும் அவரும் பள்ளிக்கூடத்தில் ஒன்றாக படித்தவர்கள். அந்தப் பாசத்தின் அடிப்படையில் ஆஷ்னாவை பின் தொடர்கிறார் வெற்றி.

ஆஷ்னா ஒரு முதியோர் காப்பகத்திற்கு அடிக்கடி வருகிறார். அந்தக் காப்பகத்துக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார். இந்த நேரத்தில் அந்த முதியோர் இல்லத்தில் இருக்கும் வயதானவர்களுக்கு நிறைய உதவிகளை செய்து ஆஷாவின் நட்பையும் பெறுகிறார் வெற்றி. இந்த நட்பு மிக விரைவாக காதலாகவும் மாறிவிடுகிறது.

இதே நேரம் சென்னையில் அடுத்தடுத்து பல கொலைகள் நடக்கின்றன. முதலில் இப்போதைய ஆளுங் கட்சியின் மாவட்ட செயலாளரான ராம்ஸ் என்ற சக்ரபாணி ஒரு இரவில் நெடுஞ்சாலையிலேயே கொலை செய்யப்படுகிறார்.

இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் ராஜசிம்மன் மிக தீவிரமாக விசாரித்து குற்றவாளியை கண்டறிய முனைகிறார். ஆனால் துரதிஷ்டவசமாக இன்ஸ்பெக்டர் ராஜசிம்மனும் கொலை செய்யப்படுகிறார். அதற்குப் பிறகு இவர்கள் இருவருக்கும் நன்கு தெரிந்த வழக்கறிஞரான கராத்தே ராஜாவும் படுகொலை செய்யப்படுகிறார்.

போலீஸ் டிபார்ட்மெண்ட் அரண்டு போய் கிடக்க, புதிதாக பிரேம்குமார் என்ற இன்ஸ்பெக்டரிடம் இந்த வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பை ஒப்படைக்கிறார் போலீஸ் கமிஷனர்.

பிரேம்குமாரின் விசாரணையில் கொலை செய்யப்பட்ட இந்த மூன்று பேரின் உடல்களிலும் தமிழ் எழுத்துக்கள் இடைவெளி விட்டுவிட்டு பதியப்பட்டு இருப்பது தெரிய வருகிறது. இந்த எழுத்துக்களையெல்லாம் தொகுத்தால் அது ஒரு திருக்குறளாக அமைகிறது.

கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களில்

கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் களைகட் டதனோடு நேர்’(குறள்: 550),

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு’ (குறள்: 552),

மற்றும் சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ யற்று’ (குறள்: 660) ஆகிய மூன்று திருக்குறள்களை கண்டறிகிறார் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார்.

இன்ஸ்பெக்டர் பிரேம்குமாரும் இந்தப் பிரச்சனையை அடி முதல் அந்தம்வரை விசாரிக்க தொடங்க கொஞ்சம் கொஞ்சமாக விசாரணை விரிவடைந்து இந்த மூன்று கொலைகளின் பின்னணியும், தொடர்புகளும் அவருக்கு தெரிய வருகிறது.

இந்த மூன்று பேரால் பாதிக்கப்பட்ட யாரோ ஒருவர்தான் இந்தக் கொலைகளை செய்து வருகிறார் என்பதை கண்டறியும் பிரேம்குமார் விசாரணையின் தீவிரத்தில் வெற்றியை அடையாளம் காண்கிறார். இவன்தான் கொலைகாரனாக இருக்குமோ என்று அவர் சந்தேகப்பட அடுத்தடுத்து பல டிவிஸ்டுகள் தொடர்ந்து நடக்கின்றன.

இறுதியில் பிரேம்குமார் குற்றவாளியை கைது செய்தாரா? குற்றவாளி ஏன் இந்தக் கொலைகளை செய்தார்? இந்தக் கொலைகளில் திருக்குறள் எதற்காக இணைக்கப்பட்டது? என்பதெல்லாம்தான் இந்தப் படத்தின் திரைக்கதை.

படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் சேத்தன் சீனு சத்தமே இல்லாமல் சம்காரம் செய்யும் ஒரு துடிப்பான இளைஞனாக நடித்திருக்கிறார். இந்தக் கொலைகளுக்கான பின்னணி என்ன? தான் ஏன் இப்படி ஆனேன்? என்பதை அவர் சொல்லுகின்ற பொழுது ஓரளவிற்கு அவருடைய நடிப்பு நமக்குப் பிடித்திருக்கிறது.

காதலை சொல்லும் பொழுதும், ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் இன்னும் கொஞ்சம் அவர் தேற வேண்டும். இன்னும் இரண்டு படங்கள் இதுபோன்று கிடைத்தால் நிச்சயம் அவர் ஓரளவுக்கு ஸ்டடி ஆகி விடுவார் என்று நினைக்கிறோம். மென்மேலும் வளர அவருக்கு நமது வாழ்த்துக்கள்.

ஹீரோயின் ஆஷ்தா சாவேரி எந்த ஒரு அழகும் இல்லாமல் ஹீரோயினுக்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் சந்தானத்துடன் ஹீரோயினாக நடித்த ஒரு அனுபவத்தோடு, இந்தப் படத்தில் ஹீரோயின் வாய்ப்புக் கிடைத்து தன்னால் முடிந்த அளவுக்கான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

ஆனால் டூயட்டில் பாடல் வரிகளை உச்சரிக்கும் பொழுதும், வசன காட்சிகளிலும் வாயை திறக்காமலேயே பாடியிருக்கிறார்.. பேசியிருக்கிறார்.. என்பதுதான் உண்மை.

இப்படி இருந்தால் தமிழ் சினிமாவில் எப்படியும் அடுத்த படம் கிடைக்காது என்பதுதான் உண்மை. இயக்குநர் சங்கர் சாரதி இன்னமும் கொஞ்சம் அக்கறை எடுத்து இவரை பேசி, நடிக்க வைத்திருக்கலாம்.

நேர்மையான இன்ஸ்பெக்டராக வரும் பிரேம்குமார், உதவி கமிஷனர் அவ்வப்பொழுதே கட்டையை கொடுத்து அவரது விசாரணையை மட்டுப்படுத்தும் பொழுதெல்லாம் கோபத்தில் கொந்தளிக்கிறார். எப்படியாவது உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று துடியாய் துடிக்கும் அவருடைய வேகமான நடிப்பும், ஆக்சனும் பரவாயில்லை என்றே சொல்லலாம்.

அரசியல்வாதியாக ராம்ஸ், இன்ஸ்பெக்டராக ராஜசிம்மன், வழக்கறிஞராக கராத்தே ராஜா என்று இந்த மூவருமே அந்தந்த பதவிகளுக்கு தகுதியே இல்லாத நபர்கள் என்பது ஃப்ளாஷ் பேக் கதை மூலமாகத் தெரிய வருகிறது. மூவருமே தங்களுடைய வில்லன் கதாபாத்திரத்தை தங்களால் முடிந்த அளவுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் அஸ்வத்தின் இசையில் பாடல்கள் திரையில் ஒலித்தன. அவ்வளவுதான்.. அதற்கு மேல் அதைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. பின்னணி இசையும் என்னமோ, ஏதோவென இருக்கிறது. இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம்தான்.

படத் தொகுப்பாளர் சான் லோகேஷ் தன்னால் முடிந்த அளவுக்கு இந்தப் படத்தின் காட்சிகளை நறுக்கி கொடுத்திருக்கிறார். இயக்குநர் இன்னும் சிறப்பாக தன்னுடைய இயக்கத்தை செய்திருந்தால் நிச்சயமாக இந்தப் படத்தின் தன்மை பெரிதாக மாறுபட்டிருக்கும்.

சிலருக்கு டப்பிங் வசனங்கள் ஒத்துப் போகவில்லை. உதடுகள் சின்க்காகவில்லை. நாயகியின் நடிப்பு எதுவுமே இல்லை. வில்லன்கள் மட்டுமே தங்களுடைய பணியை செய்து இறந்து போகிறார்கள்.

திருக்குறளில் இருக்கின்ற மூன்று குறள்களை வைத்து இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, காட்சிகளை அமைத்திருக்கும் ஒரே காரணத்திற்காக இந்த இயக்குநரை நாம் பாராட்டுகிறோம்.

அந்தந்தக் குற்றவாளிகள் எந்தக் காரணத்திற்காக கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை எச்சரிக்கும் வகையில் ஒரு சமூக மெசேஜ் கலந்த திரைக்கதையை வடிவமைத்துள்ளார்.

ஆக., அரதப்பழசான கதை என்றாலும் இந்தக் கொலை சம்பவங்கள் நடக்க காரணமான ஹீரோயினின் கதை கொஞ்சம் நேர்மையானது. அந்தக் கதையின் தாக்கத்தையும் படம் பார்ப்பவர்கள் மேல் திணிக்கும் அளவுக்கு இயக்குநர் பிரகாஷ் திரைக்கதையை அழுத்தமாக எழுதியிருந்தால் இந்தப் படம் பேசப்பட்டிருக்கும்.

RATING : 2.5 / 5

Our Score