full screen background image

சாருகேசி – சினிமா விமர்சனம்

சாருகேசி – சினிமா விமர்சனம்

நடிகர், நடிகைகள் மனம் வைத்தால் ஒரு சின்ன பட்ஜெட் படத்தில், மிக சிறப்பான கதை, திரைக்கதையாக்கத்தில், விருதுகளுக்கு தகுதியான படத்தினை உருவாக்கலாம் என்பதற்கு இந்த ‘சாருகேசி’ என்ற திரைப்படம் ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

கர்நாடக சங்கீத பாடகரான சாருகேசி என்ற ஒய்.ஜி.மகேந்திரன் சங்கீத உலகில் மிகப் பெரிய வித்தகர். சங்கீத சாம்ராஜ் விருதை எல்லாம் பெற்றிருக்கிறார். சங்கீத உலகத்திற்கு என்னென்ன விருதுகள் இருக்கிறதோ அது அத்தனையும் வாங்கி இருக்கிறார். அவருடைய மனைவி பத்மா என்ற சுகாசினி. மகன் ராஜ ஐயப்பன்.

சங்கீத உலகத்திலும், வெளியிடங்களிலும் சமூகத்திலும் மிகப் பெரிய கலைஞனாக இருக்கும் சாருகேசிக்கு சொந்த வாழ்க்கையில் மிகப் பெரிய தோல்வி.

அவருடைய மகன் ராஜ் ஐயப்பன் சாருகேசியை வெறுக்கிறான். மதிக்க மறுக்கிறான். அவரிடத்தில் மரியாதை இல்லாமல் நடந்து கொள்கிறான். அவனுக்கு என்ன பிரச்சனை என்று அவனுக்கே தெரியவில்லை. இதில் குடிகாரன் என்ற பெயரையும் எடுத்திருக்கிறான். அவனுடைய குடிப் பழக்கத்தினால் வருகின்ற பல பிரச்சனைகளினால் சாருகேசி மனம் நொந்து கொள்கிறார். மிகப் பெரிய அவமானத்தையெல்லாம் சந்திக்கிறார். ஆனால், மகனை திருத்த அவரால் முடியவில்லை.

இந்த நேரத்தில் மகன் தன்னுடைய இசை நிகழ்ச்சியில் பாட வந்த ரம்யா பாண்டியனை திடீரென்று பதிவுத் திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிறான்.

ஒரே மகனின் திருமணத்தில்கூட தங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்கிற வருத்தத்தில் இருக்கும் சாருகேசி தம்பதியினரை வீட்டுக்கு வந்த மருமகளும் இன்னொரு பக்கம் வாட்டி வதைக்கிறார்.

சாருகேசி தம்பதியரின் வாழ்க்கையில் ஒழிந்திருக்கும் சில ரகசியங்களை ரம்யா பாண்டியன் வெளிப்படையாகச் சொல்லி அவர்களை கார்னர்  செய்ய இந்த பிரச்சனையால் சாருகேசிக்கு மன அழுத்தம் உண்டாகி அவருடைய உடல் பலவீனம் அடைய நோய்களும் தொற்றுகிறது.

இதற்கு மேல் என்ன ஆனது? அந்த குடும்பத்தில் அமைதி திரும்பியதா? மகன் மனம் மாறினானா? மருமகள் அமைதியானாளா..? என்பதுதான் இந்த சாருகேசி படத்தின் திரைக்கதை.

யார் சொன்னது ஒய்.ஜி.யமகேந்திரனை காமெடி நடிகர் என்று!? 1970-களில் திரைப்படங்களில் நடிக்க துவங்கிய ஒய்.ஜி.மகேந்திரன் அப்போது தன்னுடைய திரைப்பட தொடர் வாய்ப்புக்காக ஒல்லியாக இருந்த தன்னுடைய உருவத்தை வைத்து காமெடி நடிகராக அடையாளப்படுத்தப்பட்டார்.

ஆனால், உண்மையில் அவர் ஒரு மிகச் சிறந்த நடிகர், குணச்சித்திர வேடமாக இருந்தாலும் சரி, நகைச்சுவை வேடமாக இருந்தாலும் சரி, இரண்டையும் ஒன்றுபோல பாவிப்பவர். இப்போதும் மேடை நாடக உலகில் 50 வருடங்களை கடந்தும் தன்னுடைய எண்பதாவது வயதிலும் என்றும் மாதத்திற்கு 10 நாட்கள் நாடகத்தில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். மேடை நாடகம் உலகின் சிவாஜி கணேசன் என்கின்ற பெயரையும் பெற்றிருக்கிறார். இவருடைய தொடர் நாடகங்களை பார்த்தவர்கள் யாரும் இதை மறுக்க மாட்டார்கள்.

இந்தப் படத்தில் இவருடைய நடிப்பை பார்க்கும்பொழுது இதே எண்ணம்தான் நமக்கும் தோன்றுகிறது. அறிமுகக் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் அப்படி ஒரு நடிப்பை காண்பித்திருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரா.

ஒய்.ஜி.மகேந்திரன் தன்னுடைய நடிப்பில் முழு அளவிலான அர்ப்பணிப்பு தன்மையை இந்தப் படத்தில் காட்டி இருக்கிறார். மகனுக்காக போலீஸ் இன்ஸ்பெக்டரின் காலில் விழும் அளவுக்கு அவருடைய பாசம் இருக்கும் பொழுது நமக்கே அவர் மீது ஒரு பரிதாப உணர்வு வருகிறது.

வீட்டில் தன் மகன் தன்னை எதிர்த்துப் பேசும்போதும், அலட்சியப்படுத்தும்போதும், மரியாதை இல்லாமல் திட்டும்போதும். என்ன பேசுவது.. என்ன ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் தவிக்கும் ஒரு தகப்பனின் நடிப்பை காண்பித்திருக்கிறார்.

சாப்பிடுவதைக்கூட மறக்கும் அளவுக்கான பின்பு தன் மனைவியிடம் திரும்பத் திரும்ப நான் சாப்பிட்டேனா என்று அவர் கேட்கின்ற அந்த தருணத்தில், உண்மையில் இவர் மாதிரியான சாதனையாளர்களுக்கு இது மாதிரியான நோய்கள் வரவே கூடாது என்ற எண்ணத்தை நமக்கு தோற்றுவித்தது.

தலைவாசல் விஜய்யை ராஜ ஐயப்பன் அவதூறாக பேசும்பொழுது மகனை கண்டித்து “அவரிடம் மன்னிப்பு கேள்” என்று சீறுகின்ற இடத்தில் சபாஷ் போட வைக்கிறார்.

வெறும் வசன உச்சரிப்பிலும் முகத்திலும் காட்டும் நடிப்பையும் மீறி அவருடைய உடல் மொழியிலும் வயதான ஒரு மனிதரின் இயல்பான நடிப்பை சந்தித்திருக்கிறார். ஒய்.ஜி.மகேந்திரன் இந்தப் படத்தின் மூலமாக நிறைய விருதுகளை வாங்கப் போகிறார் என்பது மட்டும் உண்மை.

புரிந்து கொள்ளாத மகன், பாவமாகி போன கணவன் என்று இருவருக்கும் இடையில் அல்லாடும் ஒரு சாதாரண எளிய குடும்ப தலைவியாக சுஹாசினி தன்னுடைய யதார்த்தமான நடிப்பை காண்த்திருக்கிறார்.

மகனை கண்டிக்கவும் முடியவில்லை. கணவனுக்கான மரியாதையும் பெற்றுத் தர முடியவில்லை… என்ற சூழலில் தன் குடும்பத்தை நினைத்து வருந்தும் அளவுக்கு இருக்கும் அவரது நடிப்பைப் பார்க்கும்போது, எந்த ஜாதியாக இருந்தால் என்ன? எந்த மதமாக இருந்தால் என்ன? இப்படியொரு சூழலில் வீட்டில் மனைவி என்ற பெண் எவ்வளவு கஷ்டப்படுவார்? எவ்வளவு மன வேதனைப்படுவார்? என்பதை பல காட்சிகளில் தன்னுடைய நடிப்பால் காட்டியிருக்கிறார் சுகாசினி. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

சாருகேசியின் மகனாக நடித்திருக்கும் ராஜா ஐயப்பன் சில காட்சிகளில் ஏன் இந்த பையனுக்கு அப்பா மீது இவ்வளவு வெறுப்பு என்று கேட்கும் வகையில் நடித்திருக்கிறார். அதோடு சாருகேசி என்ற ஒரு பிராண்ட் நேம் அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த அளவுக்கு தாக்கத்தை கொடுத்திருக்கிறது? எதனால் சாருகேசியை அவன் வெறுக்கிறேன் என்பதுதான் நமக்கு கொஞ்சம் புரியாத புதிராக இருக்கிறது. ஆனால், அதற்கான நடிப்பினை நடிகர் ராஜ் ஐயப்பன் காண்பித்து இருக்கும் இடங்களில் இயக்குநரின் இயக்கத் திறமை பளிச்சிடுகிறது.

வீட்டில் ஒரு உறுப்பினராகவும் சாருகேசிக்கு உடன் பிறந்த தம்பி போலவும் இருக்கும் தலைவாசல் விஜயின் கேரக்டர் அழகு. அவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். ராஜ் ஐயப்பன் தன்னை தரக்குறைவாக பேசினாலும் அவனும் தான் தூக்கி வளர்த்த மகன்தான் என்பதை உணர்த்தும் வகையில் அதை டேக் இட் ஈஸியாக எடுத்துக் கொள்ளும் அவருடைய நடிப்பு சிறப்புதான். படத்தின் பல காட்சிகளை இணைக்கும்விதமாகவும் இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் இருப்பது பாராட்டுக்குரியது.

கால தேவனாக நடித்திருக்கும் சத்யராஜின் கதாபாத்திரம் முற்றிலும் புதுமையானது. மகேந்திரனை பீச்சில் சந்திக்கும் காலதேவன் என்ற சத்யராஜ் பேசுகின்ற பல வசனங்களும், அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கும்விதமாக அவர் சொல்லுகின்ற தத்துவ விசாரங்களும் அழகோ அழகு. கேட்பதற்கு இனிமையாக இருந்தது. இடையிடையே அவ்வப்பொழுது தன் வருகைக்கான காரணத்தை நீயே கண்டறிந்து கொள் என்று சொல்லி சாருகேசிக்கு வழிகாட்டும் கதாபாத்திரத்தில் சத்யராஜ் அழகாக நடித்திருக்கிறார்.

பல வசனங்களை அவர் அழுத்தந்திருத்தமாக உச்சரித்து நம்மை கவர்ந்திருக்கிறார். இவருடைய கதாபாத்திரம்போல் இன்றைய உலகத்தில் பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் எளிய மனிதர்களும் நிச்சயம் இருப்பார்கள். யோசித்துப் பார்த்தால் அனைவருக்குமே இது புரியும். அந்த வகையில் இந்தக் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கும் கதாசிரியர் வெங்கட்டுக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

மருமகளாக வரும் ரம்யா பாண்டியன் சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்து தான் யார் என்பதை காட்டமலேயே… சாருகேசியின் குடும்ப ரகசியங்களை வெளியில் செல்லும் பொழுது நமக்கும் ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. ஆனால் அதற்கடுத்த காட்சிகளிலேயே உண்மை தெரிய வரும்போது ரம்யா பாண்டியன் மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆவது நம்மையும் நெகிழ வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் சஞ்சய் ஒரு சின்ன பட்ஜெட் படத்திற்கு ஏற்ற ஒரு ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவு தரம். முதலிலிருந்து கடைசிவரையில் கொஞ்சமும் பிசகாமல் ஒரே மாதிரியான ஒளியை கொடுத்திருக்கிறார். சில, பல காட்சிகளில் ஒளிப்பதிவு கோணம்தான் இந்த படத்தின் மிகப் பெரிய பலமாகவும் அமைந்திருக்கிறது. குறிப்பாக சொல்லப் போனால் சத்யராஜ் தத்துவ வசனங்களை பேசும் காட்சிகளில் அவைகள் மிக சரியாக நம் மனதில் விழும் அளவுக்குக் காட்சிக் கோணங்களை வைத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

கானா தேவா இந்தப் படத்தில் கர்நாடக இசையை அட்டகாசமாக கொடுத்திருக்கிறார். அதிலும் சாருகேசியின் அறிமுகப் பாடலான அவள் தந்த வரம் பாடலும், இசையும்… அந்த பாடல் காட்சியை படமாக்கியவிதமும் அற்புதம் என்றே சொல்லலாம்.

ஒரு சிறிய பிழைகூட நேராத அளவுக்கு இந்தப் பாடல் வரிகளை அவ்வளவு அழகாக உச்சரித்து இருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன். மேலும் வா என்றதும் என்ற பாடலிலும் அவர் காட்டியிருக்கும் முகபாவனைகள் ஒரு கர்நாடக இசை கலைஞர் மேடையில் எப்படி உண்மையில் பாடியிருப்பாரோ அதில் 100% அல்ல 200 சதவிகிதத்தை செய்திருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன்.

படத் தொகுப்பாளரான ரிச்சர்ட் செய்திருக்iகும் அருமையான படத் தொகுப்பில் இந்தப் படம் அந்தந்த சிச்சுவேஷனுக்கு ஏற்ற மூடினை நமக்கு கொடுத்தபடியே இருக்கிறது.

பா.விஜய்யின் பாடல்களும்ஸ வசனமும் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய தூண் என்றே சொல்லலாம். இரண்டு பாடல்களுமே அது சொல்லும் கதைகளும், வரிகளும் அட்டகாசம்.. அவ்வளவு எளிமையான வரிகளை வைத்து மிக எளிதாக நம் காதில் நுழையும் வண்ணம் பா.விஜய்யின் வரிகள் நம் காதில் விழுகின்றன.

இப்போதைய இசையமைப்பாளர்கள் காதை கிழிக்கும்விதமாக பாடல்கள் ஒலிக்கிறதா இல்லையா என்பதே நமக்கு தெரியாத அளவுக்கான இசையை போட்டு காட்டடி அடித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் தேவாவின் இசையை அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சாருகேசி என்ற ஒரு இசை கலைஞரின் வாழ்க்கையில் நடக்கும் திடீர் திருப்பங்களையும், அவருக்கு ஏற்படும் சோதனைகளையும் மையமாக வைத்து இப்போதைய இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு பாடமாகவும் இந்தப் படத்தின் கதையை வடிவமைத்திருக்கும் நாடக ஆசிரியர் வெங்கட்டிற்கு நமது பாராட்டுக்கள்.

படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் மெகா இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா சமீப காலமாக திரைப்படங்களை இயக்காத சூழ்நிலையில் இந்த படத்தை ஒரு அருமையான படமாக கொடுத்து தனது இயக்கத்தையும் அழகாக செய்து இப்பவும் நான் மிகச் சிறந்த இயக்குநர்தான் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

மேடை நாடகங்களை திரைக்கு கொண்டு வரும்போது அதில் பல சமரசங்களை செய்து கொள்ளத்தான் வேண்டும். அப்படி செய்த சமரசங்களைக்கூட நாம் தெரிந்து கொள்ளாத வகையில் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.

இப்போதைய யூத்துகளும் இந்த படத்தை பார்த்து ரசிக்கும் அளவுக்கு திரைக்கதை இயக்கத்தை செய்திருக்கிறார். ஆகவே,  இந்த படத்தின் வெற்றிக்கான முழு கியாரண்டியும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவையே சேரும்.

இந்த சாருகேசி’ திரைப்படம் உண்மையான சாருகேசி’ ராகம் போலவே ரசிக்க வைத்திருக்கிறது..!

RATING : 4.5 / 5

Our Score