full screen background image

செல்ஃபி – சினிமா விமர்சனம்

செல்ஃபி – சினிமா விமர்சனம்

அசுரன்’, ‘கர்ணன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டுள்ள திரைப்படம் இந்த ‘செல்ஃபி’. இந்தப் படத்தை டிஜி கம்பெனியின் சார்பில் டி.சபரீஷ் தயாரித்துள்ளார்.

படத்தில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத் தொகுப்பையும் செய்துள்ளனர். கலை இயக்கம் – ஏ.ஆர்.மோகன், சண்டை இயக்கம் – ராம்போ விமல், பாடல்கள் – அறிவு, ஜெய் மதிமாறன், மக்கள் தொடர்பு – TEAM AIM.

இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநரான மதிமாறன் இயக்கி இருக்கிறார்.

பல்லாண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்த கல்விக் கொள்ளையை ஒரேயொரு செல்பி வீடியோ மூலமாக நிர்மூலமாக்கும் கதைதான் இந்தப் படம். அதனால்தான் இதற்கு செல்பி என்று பெயர் வைத்துள்ளார்கள்.

நாயகன் ஜி.வி.பிரகாஷ் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வந்து ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இந்தப் படிப்பு படிக்க அவருக்கு விருப்பமில்லாமல் இருந்தாலும் அப்பாவான வாகை சந்திரசேகரின் வற்புறுத்தலினால் படித்து வருகிறார்.

இதே கல்லூரியில் தன் தந்தை உட்பட பலருமே தங்களது பிள்ளைகளுக்கு பணம் கொடுத்துதான் சீட் பிடித்துள்ளார்கள் என்பது ஜி.வி.க்கு தெரிய வருகிறது. இதனால் தன் தந்தை மீது கோபம் கொள்கிறார் ஜி.வி.

அதோடு இதற்குப் பிறகு நிறைய முறை பல பொய்களை சொல்லி தனது தந்தையிடம் வேண்டுமென்றே பணம் பிடுங்குகிறார் ஜி.வி. ஒரு கட்டத்தில் வாகை சந்திரேசகர் இனிமேல் என்னிடம் பணம் கேட்காதே என்று சொல்லிவிட.. கல்லூரியில் சீட் பிடித்துக் கொடுக்கும் வேலையை நாம் பார்த்தால் என்ன என்று யோசித்து அந்த வேலையில் தனது சக மாணவர்களோடு சேர்ந்து இறங்குகிறார் ஜி.வி.

சக மாணவன் ஒருவனின் ஊரில் இருந்து வந்திருக்கும் ஒரு கந்து வட்டிக்காரரின் மகனுக்கு மெடிக்கல் காலேஜில் சீட் வாங்கித் தரும் முயற்சியில் இறங்குகிறார் ஜி.வி. அதே கல்லூரியில் ஏற்கெனவே கவுதம் வாசுதேவ் மேனன் இதே வேலையைச் செய்து வருகிறார். அந்த மருத்துவக் கல்லூரியின் உரிமையாளரான சங்கிலி முருகனின் சொந்த மருமகன் அந்தக் கல்லூரியை நிர்வாகம் செய்து வருகிறார். ஆனால் மருமகனுக்கும், கவுதம் மேனனுக்கும் ஆகாது.

இந்த நேரத்தில் ஜி.வி. அதே கல்லூரியில் சேர்வதற்காக பணத்தை வாங்கிக் கொடுத்துவிடுகிறார். ஆனால் சில நாட்களில் பணம் கொடுத்தவர் பணத்தைத் திருப்பிக் கேட்க. ஜி.வி.யால் திருப்பிக் கொடுக்க முடியாமல் போகிறது.

இது போலீஸ் கேஸாக.. தங்களது பெயர் சிக்கிவிடக் கூடாதே என்பதற்காக பணம் செலவழித்து கேஸை மூடி மறைக்கிறார் கவுதம் மேனன். அதே நேரம் ஜி.வி.யிடம் அந்தப் பணத்தைக் கேட்டு கொடுத்தவர் மிரட்ட.. உடன் இருந்த நண்பன் தற்கொலை செய்து கொள்ள.. பிரச்சினைகள் ஜி.வி.யைச் சூழ்கின்றன.

இந்தச் சூழலில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார். பணத்தைத் திருப்பி வாங்கிக் கொடுத்தாரா.. என்ன நடந்தது என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.

ஜி.வி.க்கு அளவெடுத்து தைத்த சட்டை போன்ற கேரக்டர். கல்லூரி மாணவன் கனலாக, கனல் தெறிக்கும் வகையில், அனல் பறக்கும் வசனங்களைப் பேசி நடித்திருக்கிறார்.

தனது  அப்பாவான வாகை சந்திரசேகரிடம் உண்மை தெரியாமல் கொண்டு பின்பு உண்மை தெரிந்து அவரிடத்தில் மன்னிப்புக் கேட்கும் காட்சியில் நம்மையும் கண் கலங்க வைத்திருக்கிறார்.

கோபம், நட்பு, காதல், வீரம் என்று அந்த வயதுக்கேற்ற பேச்சு சுபாவங்களையும், நடிப்பையும் கலந்து கட்டிக் கொடுத்திருக்கிறார். இறந்து போன நண்பனின் அம்மாவிடம் கலங்கிப் போய் நின்று மன்னிப்பு கேட்கும்போதும், கவுதம் மேனனிடம் தைரியமாக பேசும்போதும் சபாஷ் என்று சொல்லவும் வைத்திருக்கிறார். ஜீ.வி. தொடர்ந்து இது போன்று தனக்குப் பொருத்தமான கதாபாத்திரத்தில் நடிப்பதுதான் நல்லது.

வில்லன் ரவி வர்மா கதாபாத்திரத்தில் கவுதம் மேனன் தனது ஸ்டைலிஷான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். கண்ணை உருட்டிப் புரட்டிக் காட்டி, வீர ஆவேசம் பேசி.. கத்திக் கூப்பாடு போட்டெல்லாம் வில்லன் நடிப்பைக் காட்டாமல் அலட்சியமாக தனது உடல் மொழியாலேயே தனது வில்லத்தனத்தைக் காட்டியிருக்கிறார் கவுதம்.

நாயகி வர்ஷா பொல்லம்மா ஜி.வி.பிரகாஷுக்கு ஒரு மாரல் சப்போர்ட்டுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறார் போலும். எங்கே டூயட் காட்சி வந்துவிடுமோ என்று பதைபதைத்த நேரத்தில் அதை வைக்காமல் நம்மைக் காப்பாற்றியிருக்கிறார் இயக்குநர்.

ஜி.வி.பிரகாஷின் நண்பராக வரும் டி.ஜி.குணாநிதியின் அறிமுக நடிப்பே அழகு. கல்லூரியின் அதிபர் ஈஸ்வரமூர்த்தி கதாபாத்திரத்தில் சங்கிலி முருகன் சிறந்த தேர்வு. நல்லவரா.. கெட்டவரா என்பதையே கடைசிவரையிலும் காட்டாமல் நடித்திருக்கிறார்.

ஜீ.வி.யின் தந்தையாக வரும் வாகை சந்திரசேகர் தனது அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். குணாநிதியின் தாயாக நடித்திருக்கும் ஸ்ரீஜா தனது யதார்த்த நடிப்பை கொடுத்து நம் மனதில் பதிந்திருக்கிறார். மருமகன் சாம்பாலும் தனது நடிப்பினால் ஒரு கவன ஈர்ப்பைக் கொடுத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு நெருடல் இல்லாமல் கடைசிவரையிலும் ஒரே பார்மட்டில் சென்றிருக்கிறது. கவுதம் வாசுதேவ் மேனனின் வீடு, சங்கிலி முருகனின் வீடு, ஜி.வி.யின் வீடு மூன்று இடங்களுக்கும் மூன்று விதமான லைட்டிங்குகளை செய்து நம்மை மறைமுகமாக கவர்ந்திழுத்திருக்கிறார். பாராட்டுக்கள்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் பெரிய அளவுக்கு இல்லை என்றாலும் போஸ்மேன்’ என்ற பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. ஆனால், பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்புக்கு கடைசிவரையிலும் கை கொடுத்திருக்கிறது. ஆக்‌ஷன் இயக்குநருக்கு ஒரு பாராட்டு. சண்டை காட்சிகளை மிகவும் நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

தெளிவான திரைக்கதையில் அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத அளவுக்கான காட்சிகளோடு நம்மை கடைசிவரையிலும் திரையைப் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் மதி. அதிலும் அந்தப் போலியான பெற்றோர்கள் காட்சி செம டிவிஸ்ட் என்றே சொல்ல வேண்டும்.

அதே நேரம் படத்தின் நாயகனான ஜி.வி. குடித்துவிட்டு அப்பாவிடம் பொய் சொல்லி பணம் வாங்குவதும்.. மது குடித்துக் கொண்டேயிருப்பதுமாக காட்சிகளை வைத்துவிட்டு அவர் நீதி, நேர்மை, நியாயமெல்லாம் பேசுவது பார்க்க சிரிப்பாக இருக்கிறது.

இந்தக் கேரக்டர் ஸ்கெட்ச்சை இயக்குநர் நீக்கியிருக்க வேண்டும். அல்லது குடிப்பது தவறு என்று வர்ஷா மூலமாகவாவது சொல்லியிருக்க வேண்டும். அப்படி எதுவும் சொல்லாமல் இந்த குடிகார ஹீரோ மூலமாக நாட்டுக்கு அறிவுரை சொல்வதெல்லாம் பொருந்தாதது என்றுதான் சொல்ல வேண்டும்.

மற்றபடி மொத்தமாகப் பார்க்கப் போனால்… தனியார் கல்லூரிகளில் சீட் பெறுவதற்குத் தரகர்கள் மூலம் நடக்கும் விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது இந்த செல்ஃபி’ படம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக “SRM மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக மாணவர்களிடம் வாங்கிய பணத்தை கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்துவிட்டேன். ஆனால் அவர்கள் சீட் கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள். அதற்கு நான் பொறுப்பில்லை” என்று பகிரங்கமாக அறிவித்தார் வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான மதன்.

இதன் விளைவாக SRM மருத்துவக் கல்லூரியின் வேந்தரான பாரிவேந்தர் ஜெயிலுக்கே போக வேண்டிய கட்டாயம் வந்தது. மேலும் அவர் மீது அமலாக்கப் பிரிவும் வழக்கு தொடர்ந்து பல பிரச்சினைகள் அந்தக் கல்வி நிலையத்திற்கு எதிராக எழுந்தன. இந்தச் சம்பவத்தை மையமாக வைத்தே இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

இப்போது நீட் தேர்வினை ஆதரிப்பவர்கள் சொல்கின்ற ஒரே வாதம் “இது போன்ற கேப்பிடேஷன் பீஸை ஒழித்துக் கட்டத்தான் நீட் தேர்வினை கொணர்ந்தோம்..” என்பது. ஒருவகையில் இதுவும் உண்மைதான்.

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் இது போன்ற கேப்பிடேஷன் பீஸாக கொள்ளை லாபம் அடித்துக் கொண்டிருந்தனர் கல்லூரி முதலாளிகள். மருத்துவக் கல்லூரி சாதாரண மக்களுக்கு எட்டாக் கனியாக ஆனது இது போன்ற முறைகேடான செயல்களால்தான். இதைத்தான் இந்தப் படத்திலும் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்த முறைகேடுகளை தைரியமாக தனது முதல் படத்திலேயே சொல்லியிருக்கும் இயக்குநர் மதிமாறனுக்கு நமது பாராட்டுகள்.

மொத்தத்தில் இந்த ‘செல்ஃபி’ படம் கல்வித் துறையில் இருக்கும் மாஃபியா கும்பலை அடையாளம் காட்டியிருக்கிறது.

RATING : 4 / 5

Our Score