full screen background image

“மானத்தை வாங்காதீர்கள்..” – நடிகர் சங்கத்திற்கு இயக்குநர் ஆர். கே. செல்வமணி வேண்டுகோள்..!

“மானத்தை வாங்காதீர்கள்..” – நடிகர் சங்கத்திற்கு இயக்குநர் ஆர். கே. செல்வமணி வேண்டுகோள்..!

நடிகர்களில் கிரிக்கெட் ஆடத் தெரிந்தவர்களையே ஸ்டார்ஸ் கிரிக்கெட் போட்டிக்கு அனுப்பி வைக்கும்படி தென்னிந்திய நடிகர் சங்கத்தினருக்கு இயக்குநர்  ஆர். கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சினிமாவில் ஒரே நேரத்தில் 14 தொழில் நுட்ப வேலைகளைச் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளவர் பாபு கணேஷ். அவர் இப்போது தன் மகன் ரிஷிகாந்த்தை கதாநாயகனாக அறிமுகம் செய்துள்ள படம் ‘காட்டுப் புறா’. இது தமிழ் சினிமாவின் முதல் குழந்தைகள் வாசனைப் படமாக உருவாகியுள்ளது.

kaattupura audiolaunch (12)

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை தி.நகரில் உள்ள தி,நகர் சோஷியல் க்ளப்பில் நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு கலந்து கொண்டு ‘காட்டுப்புறா’ படத்தின் இசையை வெளியிட்டார்.

இந்த விழாவில்  தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது,  “பாபு கணேஷ் என் நெருங்கிய நண்பர். குடும்பத்துடன் பழகும் அளவுக்கு குடும்ப நண்பராகவும் இருக்கிறார். நான் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படிக்கின்ற காலத்தில் அவரும் அங்கே படித்துக் கொண்டிருந்தார்.

நான் 30 ஆண்டுகளுக்கு முன் ‘செம்பருத்தி’ எடுத்தபோது அவர் ‘கடல் புறா’ எடுத்தார். இப்போது ‘காட்டுப் புறா’ எடுத்திருக்கிறார். அவர் மகன் அன்று கைக்குழந்தை, இன்று கதாநாயகனாகி இருக்கிறான். 8 பேக் வைத்திருக்கிறான் .

ஒரு நாள் பாபு கணேஷ் என்னை தொலைபேசியில் கூப்பிட்டுப் பேசினார். ‘என் மகனை சிசிஎல்லில் சேர்க்காமல் தவிர்த்து விட்டார்கள். ஏதாவது செய்ய முடியுமா..?’  என்றார். ‘அது நடிகர் சங்கம் சம்பந்தப்பட்டது. நான் ஒன்றும் செய்ய முடியாதுப்பா..’ என்றேன். 

என் மனைவியான ரோஜாவின் அண்ணன் மகள் ஒரு நாள் என்னிடம், “என்ன மாமா… உங்க ஆளுங்க ஊத்திக்கிட்டு வந்துட்டாங்க போல..” என்று கிண்டல் செய்தாள். சமீபத்தில் நடைபெற்ற செலிபிரிட்டி கிரிக்கெட்டில் நம் தமிழ் நடிகர்கள் சரியாக விளையாடாமல் தோற்றதைத்தான் அவள் அப்படிச் சொல்லிக் காட்டினாள்.

யாரோ  சில நடிகர்கள் செலிபிரிட்டி கிரிக்கெட்டில் விளையாடுகிறார்கள். ஆனால் வெளியில் இருப்பவர்கள் தமிழ்நாடே ஆடுவதாக நினைக்கிறார்கள்.. தமிழர்களே ஆடுவதாக நினைக்கிறார்கள். நம் மானம் போகிறது.

இப்போது இந்த மேடையில் இருந்து நடிகர் சங்கத்துக்கு நான் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். இனிமேல், இது மாதிரியான செலிபிரிட்டி கிரிக்கெட்டுக்கு நன்கு விளையாட தெரிந்த நடிகர்களை அனுப்புங்கள். அவர்களுக்கு விளையாடத் தெரியவில்லை என்றால் சில மாதங்கள் பயிற்சி கொடுத்து அனுப்புங்கள். இப்படி மானத்தை வாங்காதீர்கள்.

IMG_0514

ரிஷிகாந்துக்கு தாணு சார் வாய்ப்பு தருவதாக கூறியிருக்கிறார். அவருக்கு எனது நன்றிகள். இன்றைக்கு சினிமா முற்றிலும் மாறியிருக்கிறது. இன்றுள்ள சூழலில்  ‘காட்டுப் புறா’வை  வெளியிட முடியுமா..?  இன்றைக்குள்ள சினிமா பழையபடி வருமா.. என்று தெரியவில்லை.

இன்று படம் ஓடவில்லை ஓடவில்லை  என்கிறோம். எந்த தியேட்டரில் எந்தப் படம் ஓடுகிறது என்று நமக்கே தெரிவதில்லை ரசிகன் எப்படி வருவான்..? பழையபடி குறிப்பிட்ட திரையரங்குகளில் தினசரி 3 காட்சிகள் முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். எந்த தியேட்டரில் எந்தப் படம் ஓடுகிறது என்று ரசிகர்கள் மனதில் பதியச் செய்ய வேண்டும்.

சினிமா சூழல் மாறி விட்டது. முதலில் எங்களை விரட்டினார்கள். இனி உங்களையும் (தயாரிப்பாளர்களை) விரட்டப் போகிறார்கள். இப்போது சினிமா புரோக்கர்கள் கையில் போய்விட்டது. புரோக்கர்கள்தான் நம்மை ஆண்டு வருகிறார்கள். உற்பத்தி செய்பவர்கள் வாழ முடியவில்லை, விற்கிறவர்களும் வாழ முடியவில்லை. இது விவசாயத்தில் மட்டுமல்ல சினிமாவிலும் வந்து விட்டது. இது என்று மாறும்..?’ என்றார் காட்டமாக..

விழாவில் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் சுப்ரமணியன், மிஸ்டர் வேர்ல்டு ராஜேந்திர மணி, சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன், விநியோகஸ்தர் சங்கத் தலைவர் அருள்பதி, பாடகர் கானா பாலா, பாடகி வாணி ஜெயராம், இயல் இசை நாடக மன்ற செயலாளர் சச்சு. தயாரிப்பாளர்கள் ‘பிலிம் சேம்பர்’ காட்ர கட்ட பிரசாத், ஜெயந்தி சண்ணப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

Our Score