full screen background image

அருள்வான் – சினிமா விமர்சனம்

அருள்வான் – சினிமா விமர்சனம்

கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை 90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஜி சரவணன் தயாரித்திருக்கிறார்.

இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ‘அருள்வான்’ திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், வி.டி.வி. கணேஷ், ஜான் விஜய், பேபி கிருத்திகா, ‘பருத்தி வீரன்’ சரவணன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். லால்குடி இளையராஜா கலை இயக்கத்தை கவனிக்க.. லாரன்ஸ் கிஷோர் படத் தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.

இப்படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் சக்திவேலன் வழங்குகிறார்.

அரசுக்கும், அதிகார வர்க்கத்திற்கும், அதிகாரிகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாத ஒரு மலைவாழ் மக்களின் கதை இது.

படிப்பறிவு இல்லாததால் அவர்கள் அனைவரும் பரம்பரை பரம்பரையாக சுரண்டப்பட்டு அடிமைகளாகவே வாழ்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லி இருப்பதோடு அந்தப் பகுதி மக்களுக்கு கல்வியை பூட்ட வேண்டிய அவசியமும், அவசரமும், அரசுக்கு இருக்கிறது என்பதை இந்தப் படத்தின் மூலமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குநர் கணேஷ் விநாயகம்.

கொடைக்கானல் மலையில் இருக்கும் ‘அகமலை’ என்கின்ற ஒரு கிராமம்தான் இந்தப் படத்தின் களம்.

போக்குவரத்து வசதிகூட இல்லாத அந்த இடத்தில் பள்ளிக்கூடத்திற்கு போக வேண்டுமெனில் எட்டு கிலோமீட்டர் நடந்து தான் போக வேண்டும் என்கின்ற சூழலில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமலேயே வளர்த்து இருக்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

இப்போது அந்த ஊரின் தலைவரின் மகளான ரம்யா பாண்டியன் அதே ஊரைச் சேர்ந்த ஆரவ்வை திருமணம் செய்து கொண்டு கிருத்திகா என்ற 10 வயது பெண்ணுக்குத் தாயாகவும் இருக்கிறார்.

ஒரு பக்கம் வனத்துறை அதிகாரிகள்.. இன்னொரு பக்கம் கண்டு கொள்ளாத அரசுகள் இவர்கள் இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

படிப்பறிவு இல்லாததால்தான் இப்படி நாம் கேட்பாரே இல்லாமல் இருக்கிறோம் என்ற தனது தாத்தாவின் வார்த்தைகளை கேட்டு தானும் படிக்க வேண்டும் என்று ஆசை கொள்கிறாள் ரம்யாவின் மகளான சிறுமி கிருத்திகா.

இந்த நேரத்தில் மோசமான ரேஞ்சரான ஜான் விஜய் கிருத்திகாவின் தாத்தாவை ஏமாற்றி கை நாட்டு வாங்கி அந்தப் பகுதி முழுவதையும் தனியார் நிறுவனத்திற்கு விற்பனையானதாகச் சொல்லி அந்தப் பகுதி மக்களை நிலத்தில் இருந்து வெளியேறும்படி சொல்கிறார்.

தனது ஊருக்கு பள்ளிக்கூடம் வேண்டும். தான் படிக்க வேண்டும் என்று நினைக்கும் கிருத்திகா இதற்காக மலையில் இருந்து கீழே இறங்கி தேனி மாவட்ட ஆட்சித் தலைவரை தேடியலைகிறாள்.

கிருத்திகா பேசுகின்ற அந்த காடர் மொழி தேனியில் யாருக்கும் தெரியாமல் போக பல வித சிக்கல்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள்.

இதற்கு பின்பு என்ன நடந்தது? மாவட்ட ஆட்சித் தலைவரை கிருத்திகா சந்தித்தாரா?.. இல்லையா?.. ஜான் விஜய் என்ன ஆனார்?.. கிருத்திகாவின் அம்மாவும், அப்பாவும் என்ன ஆனார்கள்? என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.

படத்தில் ஹீரோ அருள்நிதிதான் என்றாலும் இடைவேளைக்கு பின்புதான் அவர் முகம் காட்டுகிறார். ஆனாலும் இந்தப் படத்தின் கதையை கேட்டு இதில் ஆர்வத்துடன் நடிக்க வந்து படத்திற்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் செய்ய உதவியிருக்கும் ஹீரோ அருள்நிதிக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

மக்களால் எளிதாக அணுகக் கூடிய ஒரு கலெக்டராக நடித்திருக்கும் அருள்நிதி கடைசியில் நாம் நினைத்து பார்க்காத ஒரு முடிவை எடுக்கிறார். அந்த வகையில் இந்தப் படம் ஒரு சிறந்த கதையாடலை நமக்கு கொடுத்திருக்கிறது.

இந்தப் படத்தில் அருள்நிதியின் பாட்டனாரான முத்துவேலின் பெயர்தான் அவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுவும் ஒரு வகையில் சிறப்புதான். தன்னுடைய இயல்பான நடிப்பினால் மாவட்ட கலெக்டர் என்ற பந்தா எதுவும் இல்லாமல் பக்கத்து வீட்டுக்காரரை போல பேசி அனைவரிடமும் வேலை வாங்கி உத்தரவிடும் ஒரு நல்ல, திறமையான மனிதர் என்கின்ற கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார் அருள்நிதி.

அரசு அதிகாரிகளை விரட்டி வேலை வாங்குவது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பதை தன் நடிப்பின் மூலமாகக் காட்டி இருக்கிறார் அருள்நிதி. அனைத்து கலெக்டர்களும் இவரைப் போலவே இருந்து விட்டால் நிச்சயம் தமிழ்நாட்டில் பிரச்சனைகள் அதிகம் இருக்காது. மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்பதை சொல்லும் அளவுக்கு ரொம்ப, ரொம்ப நல்லவராக கடைசிவரையிலும் நடித்திருக்கிறார் அருள்நிதி. அவருக்கு நமது பாராட்டுக்கள்.

கதைப்படி இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ கிருத்திகாதான். அழகாக நடித்திருக்கிறார். அதிலும் முதன்முதலாக அருள்நிதியைப் பார்க்கும்போது தான் தேடிக் கொண்டிருந்த கலெக்டர் அவர்தான் என்பது தெரிந்தவுடன் கிருத்திகா காட்டுகின்ற அந்த சந்தோசம், திகைப்பு, ஆச்சரியம்.. அத்தனையும் மிக மிக அழகு. தான் பேசுகின்ற மொழி அவர்களுக்கு புரியவில்லை என்றாலும் தன்னுடைய இயலாமையை அவர் எடுத்துச் சொல்லும்போது அந்த நடிப்பில் நம்மை கவர்ந்துவிட்டார் கிருத்திகா. மனமார்ந்த வாழ்த்துக்கள் கிருத்திகா.

கிருத்திகாவின் அம்மாவாக நடித்திருக்கும் ரம்யா பாண்டியன் எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கிறார். இந்தப் படத்தில் அந்த ஊர் மக்களிடையே வாழும் ஒரு பெண்ணாக சிம்பிள் மேக்கப்பில்  எளிமையாக அந்தப் பகுதி பெண்ணாகவே வாழ்ந்து நடித்திருக்கிறார்.

இவருடைய கணவராக நடித்திருக்கும் ஆரவ்வும் தன்னால் முடிந்த அளவுக்கான ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். சண்டைக் காட்சியில் ஹீரோவாக அவர் நடித்திருப்பது மட்டுமே நமக்கு உறுத்தலாக இருக்கிறது. அந்த சண்டை காட்சியை ஹீரோயிஸ சண்டையாக இல்லாமல் சாதாரணமாக ஒரு ஏழை குடிமகன் தன்னுடைய உரிமையை நிலை நாட்டுவதற்காக என்ன செய்திருப்பானோ அது போன்ற ஒரு சண்டைக் காட்சியை வடிவமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மேலும் கலெக்டரின் பி.ஏ.வாக நடித்திருக்கும் வி.டி.வி.கணேஷ் அரசு அதிகாரிகள் எப்படியிருப்பார்கள் என்பதைக் காட்டியிருக்கிறார். கிருத்திகாவின் தாத்தாவாக நடித்தவர், நாட்டாமையாக தன் கணீர் குரலில் தன்னை காண்பித்திருக்கும் அருள்தாஸ் மற்றும் அந்தப் பகுதி மக்கள் என்று அனைவருமே இந்தப் படத்தில் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்தப் பகுதியிலேயே வசிக்கும் பத்திரிகையாளர் காளி வெங்கட் தனது மென்மையான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். திருட்டுப் பயல் ரேஞ்சரான ஜான் விஜய்யும் அவருடைய வில்லத்தனத்தையும் காட்டியிருக்கிறார்.

இந்தப் படத்தின் மிகப் பெரிய ஹைலைட்டே ஒளிப்பதிவுதான். மலைகளின் காதலனான ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் படம் முழுவதும் தன்னுடைய பெயரை ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

இந்த மலைகளின் அழகை அப்படியே கேமராவில் படம் பிடித்து காட்டியிருப்பதைப் பார்க்கும்போது என்றாவது ஒரு நாள் இந்த இடத்திற்குப் போய் வாழ வேண்டும் என்ற ஆசையை நமக்குக் கொடுத்திருக்கிறார். கடைசிவரையிலும் ஒளிப்பதிவில் எந்த சமரசமும் செய்யாமல் படத்தின் தரத்தை மிகவும் உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார் சுகுமார்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகம்தான் அதேபோல் கொஞ்சம் வேகமாக இசையில் ஒரு கொண்டாட்ட பாடலை இசைத்து நம்மைக் கவர்ந்திருக்கிறார். பின்னணி இசையில் நம் மனதை தொடும் வகையில் எமோஷன்ஸை தூண்டும்வகையில் இசைத்திருக்கிறார்.

படத் தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர் இந்தப் படத்தை சாதாரண கமர்சியல் படமாக யாரும் நினைத்துவிடக்கூடாது என்பதாகவே தனது படத் தொகுப்பு பணியை செய்திருக்கிறார்.

லைப் பகுதியில் சினிமா ஷூட்டிங் நடத்துவது எவ்வளவு கஷ்டம் என்பதை நேரில் சென்று பார்த்தால்தான் தெரியும். வெறும் வார்த்தைகளினால் நிச்சயமாக அந்தக் கஷ்டம் நமக்குப் புரிய வாய்ப்பில்லை. அவ்வளவு பெரிய மலை உச்சியில் எந்தவிதமான வசதியும் இல்லாத சூழலில் இப்படி ஒரு நல்லதொரு படத்தை எடுத்துக் கொடுத்திருக்கும் இயக்குநர் கணேஷ் விநாயகருக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

தன்னுடைய முதல் படமாக ‘தேன்’ என்ற விலை மதிப்பில்லாத ஒரு படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் கணேஷ் விநாயகம் தன்னுடைய இரண்டாவது படமாக இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார்.

அரசியல்வாதிகளின் கண் பார்வை படாத நிலையில், அதிகாரிகளின் கால் பாதமும் படாத இடங்களில் வாழும் இந்தப் பழங்குடியின மக்களுக்கு தன்னுடைய மிகப் பெரிய சேவையாக இந்தப் படத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

கல்விதான் முக்கியம். அந்த கல்வியை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டுபோய் சேர்க்க வேண்டியது அரசுகளின் கடமை என்பதை கலெக்டர் முத்துவேலின் மூலமாக நமக்கு சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

உண்மையில் அந்த பழங்குடியின மக்கள் அரசுகளின் பாரா முகத்தினாலும், கண்டுகொள்ளாத தன்மையினாலும் நிறைய இழப்புகளை சந்தித்திருக்கிறார்கள் என்பதையும் படத்தின் முடிவில் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

பல உண்மைச் சம்பவங்களை அவர்களது பேட்டிகளின் வாயிலாக நாம் கேட்கின்றபொழுது என்ன மாதிரியான உலகத்தில் நாம் வாழ்கிறோம்… அரசுகள் என்னதான் செய்கின்றன என்ற கோபமும் நமக்குள் எழுகிறது.

அப்படி ஒரு கோபத்தை சில, பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ‘அருள்வான்’ என்ற திரைப்படம் நமக்கு உணர்த்துகிறது.

இந்த ‘அருள்வான்’ இனி வரும் காலங்களில் அருள் பாலித்து, இதுவரையிலும் வெளிச்சம் படாத அந்த ஏழை, எளிய மலைவாழ் மக்களுக்கு நல்லது செய்யட்டும்.

RATING : 4 / 5

 

Our Score