மலையாள திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘தட்டத்தின் மறையத்து’. இப்படம் தமிழில் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என ரீமேக் செய்யப்படுகிறது.
S.V.D. ஜெயச்சந்திரன் வழங்கும் இப்படத்தினை மித்ரன் R.ஜவஹர் இயக்குகிறார். அறிமுக நாயகன் ‘வால்டர் பிலிப்ஸ்’ கதாநாயகனாகவும், மலையாளத்தில் இந்த படத்தின் நாயகியாக நடித்த ‘இஷா தல்வார்’ இதிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 51-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது இசையில் பாடலாசிரியர் அருண் காமராஜ் எழுதிய “மை போட்டு மை போட்டு” எனும் பாடல், ஏப்ரல்-1-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் பாடல் திருமணச் சடங்கின்போது பாடப்படுவதாக அமைந்திருக்கிறது. இப்பாடலை நிறைய பாடகர்கள் பாடியிருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார்.
‘ஆடுகளம்’ படத்தின் ‘ஒத்த சொல்லால’ பாடலைப் பாடிய, வேல்முருகன் இந்தப் பாடலை பாடியிருக்கிறார். இது அவரது முதல் மெலோடி பாடல். இந்தப் பாடல் காட்சியின் நடனத்தை பிருந்தா மாஸ்டர் அமைத்திருக்கிறார்.
“படத்தின் நாயகன் வால்டர், தனது சகோதரியின் நடனப் பள்ளியில் படித்து வரும்போதிலிருந்தே எனக்கு தெரியும்.. கேரளாவில் படப்பிடிப்பு செய்யப்பட்ட இந்தப் பாடல் காட்சி மிக அருமையாக வந்திருப்பதாக”வும் கூறினார் நடன அமைப்பாளர் பிருந்தா மாஸ்டர்.
கலைப்புலி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் இந்தப் படத்தினை உலகமெங்கும் வெளியிடுகின்றது.









