full screen background image

பாயும் ஒளி நீ எனக்கு – சினிமா விமர்சனம்

பாயும் ஒளி நீ எனக்கு – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை கார்த்திக் மூவி ஹவுஸ் என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் அத்வைத் தயாரித்து, படத்தையும் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் விக்ரம் பிரபு, வாணி போஜன், தல்லி தனஞ்செயா, ஆனந்த், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

எழுத்து, தயாரிப்பு, இயக்கம் – கார்த்திக் அத்வைத், வெளியீடு – எஸ்.பி.சினிமாஸ், ஒளிப்பதிவு – தர், இசை – சாகர், படத் தொகுப்பு – பிரேம்குமார், கலை இயக்கம் – சுபேந்தர், பாடல்கள் – கார்த்திக் நேத்தா, நடன இயக்கம் – தாதிதா, சண்டை இயக்கம் – தினேஷ் காசி, பத்திரிக்கை தொடர்பு – சதீஷ் (எய்ம்).

பார்வை குறைபாடுடைய ஒருவன் தனக்கு நேர்ந்த இழப்புக்காக எப்படி பழி தீர்க்கிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

ஐ.டி.யில் சாப்ட்வேர் வடிவமைப்பாளராக இருக்கும் விக்ரம் பிரபுவுக்கு பார்வையில் குறைபாடு உண்டு. அதிகமான வெளிச்சம் இருந்தால் மட்டுமே அவரால் சரி வர பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும். இரவு வெளிச்சத்தில் பாதியளவு மட்டுமே அவர் கண்களுக்குத் தெரியும்.

சிறு வயதிலேயே இவரை வளர்த்து வரும் சித்தப்பா ஆனந்த், விக்ரம் பிரபுவுக்கு அவருடைய குறைபாட்டை பற்றி நினைக்காமல் “உன்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்…” என்று சொல்லி சொல்லி வளர்த்திருப்பதால் இப்போது தன்னுடைய பார்வை குறைபாடு பற்றி எந்தவொரு கவலையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.

ஒரு நாள் இரவு டாஸ்மாக் கடைக்கு அருகேயிருக்கும் சந்தில் ஒரு பைத்தியக்கார, பிச்சைக்கார பெண்ணுக்கு இரண்டு நபர்கள் பாலியல் தொந்தரவு கொடுக்க, அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார் விக்ரம் பிரபு. இந்த விவகாரம் சங்கிலி தொடர்போல பல பிரச்சினைகளுக்குள் விக்ரம் பிரபுவை இழுத்து விடுகிறது.

தன்னுடைய தங்கை திருமணத்திற்கான டெக்ரேஷனுக்காக அந்த வேலையை செய்து வரும் வாணி போஜனை சந்திக்கிறார் விக்ரம் பிரபு. வழக்கம்போல பார்த்தவுடன் லவ்வாகி இருவரும் அடுத்து தங்களுடைய திருமணத்திற்காகக் காத்திருக்கின்றனர்.

இந்த நேரத்தில் திடீரென்று விக்ரம் பிரபுவின் சித்தப்பா கொல்லப்படுகிறார். இந்தக் கொலைக்கும் தனக்கும் ஏதோவொரு தொடர்பு இருப்பதாக விக்ரம் பிரபு சந்தேகிக்கிறார்.

இன்னொரு பக்கம், ஆளும் கட்சியின் தலைவரான வேல ராமமூர்த்தியின் வளர்ப்பு மகன் தனஞ்செயா. அப்பாவுக்குப் பிறகு தான்தான் அரசியல் வாரிசாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். கொலைகளுக்கு அஞ்சாதவர். இவரும் ஒரு கட்டத்தில் விக்ரம் பிரபுவின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். தன்னுடைய சித்தப்பாவின் கொலை சம்பவத்தில் தனஞ்செயாவுக்கும் தொடர்பு இருப்பதாக விக்ரம் பிரபுவுக்கு சந்தேகம் வருகிறது.

இந்த சந்தேகத்தைத் தொடர்ந்து பயணிக்கும் விக்ரம் பிரபுவுக்கு யார் எதிரிகள் என்பதே தெரியாத வகையில் எதிர்ப்புகள் ஏற்படுகிறது. இந்த எதிர்ப்புகளையெல்லாம் விக்ரம் பிரபு தாண்டினாரா..? அவருடைய சித்தப்பா கொலைக்கு என்ன காரணம்..? என்கிற கேள்விகளுக்கெல்லாம் விடைதான் இந்தப் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படம்..!

விக்ரம் பிரபுவை மற்றப் படங்களில் எப்படி பார்த்தீர்களோ.. அதேதான் இதிலும்.! எந்த மாற்றமும் இல்லை. காதல் விவகாரத்திலாவது ஏதாவது யூத்துகளுக்குப் பிடித்தாற்போல் செய்வார் என்று எதிர்பார்த்தால் அதுவும் இல்லை. ஆனால் யதார்த்தமான, அமைதியான நடிப்பிலும், ஆக்ரோஷமான சண்டை காட்சிகளிலும் தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

வாணி போஜனின் அறிமுகக் காட்சி சுவாரஸ்யமானது. பின்பு வழக்கம்போல விக்ரம் பிரபுவுடனான காதல்.. டூயட் என்று நாயகி டெம்ப்ளேட்டில் மாட்டிக் கொண்டிருக்கிறார். எப்போதும் அழகு ராணியாக ஜொலிக்கும் வாணி போஜன் இந்தப் படத்தில் மட்டும் ஒளிப்பதிவாளரின் டல்லடிக்கும் வெளிச்சத்தில் அழகு கம்மியாய் இருக்கிறார். அதிலும் மேக்கப்மேன் ஸ்டிரைக்கோ என்று கேட்கும் அளவுக்குத் தூங்கி எழுந்து அப்படியே ஷாட்டுக்கு வந்துவிட்டாரோ என்று நினைக்கும் அளவுக்கும் தோற்றமளிக்கிறார். என்ன காரணமோ..?!

விக்ரம் பிரபுவின் நண்பனாக விவேக் பிரசன்னா மிகச் சரியான இடங்களில் விக்ரம் பிரபுவுக்கு டப் கொடுத்து காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ஆனந்த், விக்ரம் பிரபுவை வளர்க்கும் சித்தப்பாவாக நடித்திருக்கிறார். “உனக்கு ஒண்ணுன்னா என்னால எப்படி சும்மா இருக்க முடியும்..?” என்று பாசத்தைப் பொழிகிறார் சித்தப்பா ஆனந்த்.  

வழக்கமான அரசியல்வாதி கதாப்பாத்திரத்தில் வேல ராமமூர்த்தி. அடிதடிக்கு அஞ்சாதவராகவும், தன்னை எதிர்ப்பவன் கொலை செய்யப்பட்டாலும் கவலையில்லை என்பவர், தனது மகனை மட்டும் அரசியலுக்குள் வர வேண்டாம். மக்கள் பணி செய்து நல்ல பெயர் என்று சொல்லி அநியாயமாய் செத்துப் போகிறார். முரண்பாடான கேரக்டர் ஸ்கெட்ச்.

வேல ராமமூர்த்தியின் வளர்ப்பு மகனாக கன்னட நடிகர் தனஞ்செயா.. கண்களை உருட்டி, மிரட்டும் வில்லன் கதாப்பாத்திரத்தை கச்சிதமாகச் செய்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரின் ஒளிப்பதிவு படம் முழுவதும் டல்லடிக்கிறது. விக்ரம் பிரபுவின் பார்வை கோளாறை காட்டுவதற்காக அடிக்கடி வெளிச்சத்திலேயே இருட்டினையும் காட்டி நம்மை சோதனைக்குள்ளாக்கியிருக்கிறார்.

அதேபோல் வாணி போஜனின் அழகை இரட்டடிப்பு செய்திருக்கும் ஒளிப்பதிவாளரை வன்மையாகக்  கண்டிக்கிறோம். இதனாலேயே பாடல் காட்சிகள் நம்மை அதிகம் கவரவில்லை. பாடல்களும் கேட்கும் ரகமாகவும் இல்லை.

சுவாரஸ்யமே இல்லாத திரைக்கதைக்கு சாகரின் பின்னணி இசை மட்டும் கொஞ்சம் முட்டுக் கொடுத்து நிற்கிறது. சண்டைக் காட்சிகள் மட்டுமே குறிப்பிட்டு சொல்லும்படியாக இருக்கிறது. கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் இயக்குநரின் புத்திசாலித்தனம் தெரிகிறது. இருந்தாலும், அந்த செட்டப்பெல்லாம் அரதப் பழசான கதை இயக்குநரே..!

மகாகவி பாரதியாரின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ கவிதையை நாயகனின் பார்வை குறைபாட்டோடு தொடர்புபடுத்தி படத்தின் டைட்டிலுக்கு நியாயம் சேர்க்க நினைத்திருக்கிறார் இயக்குநர். இதற்காக அந்த ‘ஒளி’யான வாணி போஜனை இருட்டடிப்பு செய்தது நியாயமா இயக்குநரே..?

அட்லீஸ்ட் அந்தப் பாடலையாவது அந்த சிச்சுவேஷனுக்கேற்றாற்போல் படத்தில் பயன்படுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

நாயகனின் கேரக்டர் ஸ்கெட்ச்சில் காட்டிய புதுமையை, கதை, திரைக்கதையிலும் இயக்குநர் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வசனம்கூட பழமை மாறாமல் இருப்பதினால் சில இடங்களில் வசனத்தைக் கேட்டு சிரிப்புதான் வந்தது..!

இது மாதிரியான த்ரில்லர் படங்களின் மிகப் பெரிய பலமே திரைக்கதைதான். ஆனால், மிகப் பெரிய டிராஜிடியாக இந்தப் படத்தின் திரைக்கதையை படம் பார்க்கும் ரசிகர்களால் வெகு இயல்பாக ஊகிக்க முடியும் என்பது சோகமான செய்தி..!

விக்ரம் பிரபுவுக்கு இன்னொரு படம். அவ்வளவுதான்..!

RATING : 3 / 5

Our Score