full screen background image

‘பம்பர்’ படத்திற்கு பிரபலங்களிடமிருந்து கிடைத்த ‘பம்பர்’ பரிசான வாழ்த்துகள்..!

‘பம்பர்’ படத்திற்கு பிரபலங்களிடமிருந்து கிடைத்த ‘பம்பர்’ பரிசான வாழ்த்துகள்..!

வேதா பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சு.தியாகராஜா தயாரித்திருக்கும் படம் பம்பர்’.

இந்த ‘பம்பர்’ படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ படங்களில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்.  இவருக்கு ஜோடியாக ஷிவானி நடித்துள்ளார்.

படத்தின் ஒளிப்பதிவை நெடுநல்வாடை’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘ஆலம்பனா’ மற்றும் ‘கடமையை செய்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வினோத் ரத்தினசாமி கையாள்கிறார். படத் தொகுப்புக்கு மு.காசிவிஸ்வநாதன் பொறுப்பேற்றுள்ளார்.

கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதியுள்ளார். இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் ‘கொம்பன்’ முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள இயக்குநர் எம்.செல்வக்குமார் இயக்கியிருக்கிறார்.

சமூக அக்கறை மிக்க படைப்பாக, கேரள மாநில பம்பர்’ லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் ஜூலை 7-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இதையொட்டி இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக் குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று காலை கமலா தியேட்டரில் நடைபெற்றது.

இவ்விழாவினில் இயக்குநர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சங்கத்தின் பொருளாளரான திரு.இராதாகிருஷ்ணன், இயக்குநர் முத்தையா, இயக்குநர் கோபிநாத், இயக்குநர் மந்திரமூர்த்தி, இயக்குநர் கணேஷ் கே பாபு, இயக்குநர் அனீஷ், இயக்குநர் ரஃபீக் ஆகியோர் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்திப் பேசினார்கள்.  

தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளர் இராதாகிருஷ்ணன் பேசும்போது, “இந்த ‘பம்பர்’ படம் வெற்றி பெற அனைவரும் வாழ்த்து சொல்லியுள்ளார்கள். தயாரிப்பாளர்கள் காக்கப்பட வேண்டும். தயாரிப்பாளர்கள் ஜெயித்தால் அவர்கள் மீண்டும், மீண்டும் படமெடுப்பார்கள். தயாரிப்பாளர்கள் முதலீட்டை எந்த வகையிலும் இழந்து விடக்கூடாது. இதற்காகத்தான் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இப்படத்தின் டிரெய்லர், பாடல்கள் நன்றாக உள்ளன. இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்…” என்றார்.

நடிகர் கவிதா பாரதி பேசும்போது, “இந்த விழாவின் மூலம் தயாரிப்பாளர் தியாகராஜா அவர்களை அறிமுகம் செய்து கொள்வதில் மகிழ்ச்சி, இது போன்ற புது தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவுக்கு வருவது மிகவும் ஆரோக்கியமானது, இந்தப் படம் அறத்தைப் பேசும், இப்படம் மதம் மற்றும் மனிதத்தையும் பேசும் அழுத்தமான படைப்பு. படம் வெற்றி பெற வாழ்த்துகள்…” என்றார்.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது, “இந்தப் படத்தில் நான் ஆறு பாடல்களை எழுதியுள்ளேன், ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகை, எல்லா பாடல்களும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டு இருக்கும், அனைத்துமே நன்றாக இருக்கும். தயாரிப்பாளர் தியாகராஜன் அண்ணாவிற்கு வாழ்த்துகள், இந்தப் படம் அறத்தை அடிப்படையாகக் கொண்ட படம், கண்டிப்பாகப் படம் வெற்றி பெறும்..” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இயக்குநர் கணேஷ் K.பாபு பேசும்போது, “படத்தின் டிரெய்லரை பார்க்கும்போது படம் டெக்னிக்கலாக வெற்றி பெற்றுள்ளது என்பது தெரிகிறது, நடிகர்கள் தேர்வும் கச்சிதமாக உள்ளது, நடிகர் வெற்றி அவருக்கென ஒரு தனி வெற்றிப் பாதையை வைத்துள்ளார். கண்டிப்பாக நாங்கள் இணைந்து ஒரு படம் செய்வோம், படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள். படம் வெற்றி பெற வாழ்த்துகள்…” என்றார்.

இயக்குநர் மந்திரமூர்த்தி பேசும்போது, “இந்த பம்பர் படத்தின் பாடல் மற்றும் டிரெயிலரை பார்த்தேன். படம் நம்பிக்கை அளிக்கிறது. வெற்றி சாரை எனக்கு நீண்ட நாட்களாகத் தெரியும், அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர். நான் அயோத்தி படம் எடுத்த போதுதான் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றது, படம் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வரும். இது ஒரு நல்ல முயற்சி, கண்டிப்பாகப் படம் வெற்றி பெறும். அனைவருக்கும் என் வாழ்த்துகள்.” என்றார்.

இயக்குநர் முத்தையா பேசும்போது, “இயக்குநர் செல்வம் பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். அனைவருடனும் சுலபமாக இணைந்து பணியாற்றுவார். செல்வத்திடம் ஒரு நல்ல கிராமத்துச் சாயல் உள்ளது. என்னிடம் வந்து கதையைச் சொன்னார். நான்தான் தயாரிப்பதாக இருந்தது. நடிகர் வெற்றியிடம் கதை சொன்னதும் உடனே ஒத்துக் கொண்டு நடித்தார். அவருக்கு நன்றி. தயாரிப்பாளர் தியாகராஜா அவர்களுக்கு வாழ்த்துகள். இது போன்ற புது இயக்குநருக்கு வாய்ப்பு அளித்துள்ளார், படத்தின் டிரெய்லரைப் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. வெற்றி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். அவருக்கும் வாழ்த்துகள். படம் கண்டிப்பாக வெற்றியடையும்..” என்றார்.

இயக்குநர் மீரா கதிரவன் பேசும்போது, “ஒரு இயக்குநர் வெற்றிப் படம் கொடுப்பதை மட்டும் வெற்றியாக நினைக்க மாட்டார்கள். தன் உதவியாளர்களும் படம் செய்வதைத்தான் வெற்றியாக பார்ப்பார்கள். அந்த வகையில் என் உதவியாளர் படம் செய்திருப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளருக்கு என் நன்றிகள்.

நடிகர் வெற்றியை தொடர்ந்து கவனித்து வருகிறேன், மிகச் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவருக்கு என் வாழ்த்துகள். இயக்குநர் செல்வகுமார் என்னிடம் தொடர்ந்து தொடர்பில் இருப்பவர். மிக நல்ல மனதுக்காரர். இந்தக் கதையைப் பற்றி சொல்லியிருக்கிறார். சிறந்த குழுவினர் இதில் வேலை பார்த்துள்ளனர். அனைவருக்கும் என் வாழ்த்துகள்..” என்றார்.

தயாரிப்பாளர் திருமலை பேசும்போது, “நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு விழாவில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு வந்துள்ள அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் கொடுத்துள்ளனர். அதிலிருந்தே தெரிகிறது இந்தப்படம் அறத்தை பற்றி பேசும் என்று..!

இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து அதை தயாரிக்க ஒரு தைரியம் வேண்டும். தயாரிப்பாளர் தியாகராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். வெற்றி பெயரிலேயே வெற்றியை கொண்டவர். அதனால் இப்படமும் மிகப் பெரிய வெற்றியை பெறும்.

சிறு முதலீட்டு படங்கள் வெற்றி பெறும்போதுதான் சினிமாத் துறை ஆரோக்கியமாக இருக்கும். இங்கு சில இளம் இயக்குநர்கள் வந்துள்ளனர், அவர்கள் இதற்கு சாட்சி. இந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றி படங்களின் வரிசையில் இந்த பம்பர் படம் கண்டிப்பாக இடம் பெறும்…” என்றார்.

நடிகை ஷிவானி பேசும்போது, “தயாரிப்பாளர் தியாகராஜா சார் படத்திற்குத் தேவையான அனைத்தையும் கொடுத்துள்ளார். இயக்குநர் செல்வம் மிகுந்த உழைப்பை இந்த படத்திற்குக் கொடுத்துள்ளார். படம் பார்த்தால் உங்களுக்குக் கண்டிப்பாகப் புரியும். நடிகர் வெற்றி, மற்ற படங்களைவிட இந்தப் படத்தில் கொஞ்சம் மாறுபட்டு நடித்துள்ளார். அனைவருக்கும் கண்டிப்பாக இப்படம் பிடிக்கும். படக் குழு அனைவருக்கும் நன்றி..” என்றார்.

நடிகர் வெற்றி பேசும்போது, “முதன்முறையாக நான் நடனம் ஆட முயற்சி செய்துள்ளேன். தொடர்ந்து திரில்லர் படம் மட்டும்தான் செய்கிறேன் என்று என் மீது ஒரு விமர்சனம் இருக்கிறது. இந்த படத்தில் அது மாறும் என்று நம்புகிறேன்,

இயக்குநர் கதையின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அவர் நினைத்தது போல இந்தப் படம் வந்துள்ளது. இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் அனைத்து பாடல்களும் நன்றாக வந்துள்ளது, கண்டிப்பாக இந்த படம் உங்களுக்குப் பிடிக்கும், படத்திற்கு ஆதரவு தாருங்கள்..” என்று கேட்டுக் கொண்டார்.

இயக்குநர் செல்வகுமார் பேசும்போது, “இந்த இடத்திற்கு நான் வந்ததற்குக் காரணமான பலர் இங்குள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. என்னை நம்பி எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் தியாகராஜா அண்ணனுக்கு நன்றி.

படம் நன்றாக வந்துள்ளது. இதற்கு உதவியாக இருந்த படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் இருவருக்கும் மிகப் பெரிய நன்றி. இது ஒரு குழு முயற்சி. இந்தப் படம் அழுத்தமான ஒரு கருத்தைப் பேசும். கண்டிப்பாக இந்த படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்..” என்றார்.

k.bhagyaraj

இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “அறிமுக இயக்குநர் செல்வகுமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். அவர் வேலை பார்த்த இயக்குநர்கள் இங்கு வந்துள்ளதை பார்க்க பெருமிதமாக இருக்கிறது. டிரெய்லர் நன்றாக உள்ளது. புரியாத பாடல்கள்தான் தற்போது நிறைய வந்து கொண்டிருக்கிறன. ஆனால் இந்தப் படத்தில் பாடல்கள் கேட்க நன்றாக உள்ளன.

நடிகர் வெற்றி முதல் படத்தில் தன் சொந்த பணத்தில் நடித்தார். அதிலும் நல்ல கதையாகத் தேர்ந்தெடுத்து நடித்தார். ஒவ்வொரு படத்திலும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள்.

படத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் பாடல் பாடுபவர்கள் முதல் உரிமை இருக்கிறது. ஆனால் எழுத்தாளர்களுக்கு மட்டும் உரிமை இல்லாமல் இருக்கிறது. இதற்குக் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எனப் போட்டுக் கொண்ட நானும் ஒரு காரணம். இது மாற வேண்டும். புதுத் தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துகள். படத்திற்கு ஆதரவு தாருங்கள்..” என்று கேட்டுக் கொண்டார்.

Our Score