full screen background image

தலைநகரம்-2 – சினிமா விமர்சனம்

தலைநகரம்-2 – சினிமா விமர்சனம்

V.Z.துரை – சுந்தர்.C கூட்டணியில் வெளியான இருட்டு’ படத்திற்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்திருக்கும் படம் இந்த ‘தலைநகரம்-2.’

இந்தப் படத்தை ரைட் ஐ தியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக V.Z.துரை, S.M.பிரபாகரன் இருவரும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர்.  இயக்குநர் V.Z.துரை தயாரிக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் சுந்தர்.சி., பாலக் லால்வானி, தம்பி ராமையா, பாகுபலி பிரபாகர், ஆயிரா, ஜெய்ஸி ஜோஸ், விஷால் ராஜன். சேரன் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, இயக்கம் – வி.இஸட்.துரை, தயாரிப்பு நிறுவனம் – ரைட் ஐ தியேட்டர்ஸ், தயாரிப்பு – எஸ்.எம்.பிரபாகரன், வி.இஸட்.துரை, இணை தயாரிப்பு – மதுராஜ், ஒளிப்பதிவு – இ.கிருஷ்ணசாமி, இசை – ஜிப்ரான், படத் தொகுப்பு – ஆர்.சுதர்சன், கலை இயக்கம் – ஏ.கே.முத்து, சண்டை இயக்கம் – டான் அசோக், வசனம் – மணிஜி, ஒலி வடிவமைப்பு – விஜய் ரத்தினம், ஒலிக்கலவை – ஏ.எம்.ரஹமத்துல்லா, ஒலி பொறியாளர் – கே.ஜெகன், பத்திரிக்கை தொடர்பு – சதீஷ் (எய்ம்).

சென்னையை மூன்றாகப் பிரித்து வட சென்னையில் மாறன், தென் சென்னையில் நஞ்சுண்டா, மத்திய சென்னையில் வம்சி என்ற ரவுடிகள் ஆளுமை செலுத்தி வருகின்றனர். இவர்கள் மூவருமே தான் மட்டுமே சென்னைக்கு ஒரே தலைவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருவரையொருவரை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள்.

இந்த நிலையில், வம்சியுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகையான சித்தாராவை(பாலக் லால்வானி) நஞ்சுண்டாவின் ஆட்கள் கடத்துகிறார்கள். மயக்க நிலையில் இருக்கும்போதே சித்தாரா, நஞ்சுண்டாவால் சிதைக்கப்படுகிறார்.

இந்தக் கொடுமையைச் செய்தது யார் என்று தெரியாமல் வம்சியும், சித்தாராவும் குழப்பத்தில் இருக்கும்போது நஞ்சுண்டாவால் திட்டமிட்டு இவர்தான் அந்தக் கொடூரன் என்று மறைமுகமாகக் காட்டப்படுகிறார் முன்னாள் தாதாவான ரைட்‘ என்ற சுந்தர்.சி.

ஒரு காலத்தில் சென்னையை கலக்கிய ‘ரைட்’, தனது மனைவியின் பிரிவுக்குப் பிறகு எல்லாவற்றையும் விட்டுவிட்டார். தற்போது ‘மாலிக் பாய்’ என்ற தம்பி ராமையாவுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்து வருகிறார்.

இந்த நேரத்தில் நஞ்சுண்டாவின் அடியாட்கள் ‘ரைட்’டின் நாய்க்குட்டியை கடத்திக் கொண்டு போக.. வெகுண்டெழுந்த ‘ரைட்’ வெறும் 17 நொடிகளில் அனைவரையும் சுளுக்கெடுத்துவிடுகிறார். இந்தத் தகவல் வம்சியின் காதுகளுக்குப் போகிறது. ‘ரைட்’ மீது கண் வைக்கிறார் வம்சி.

இன்னொரு பக்கம் தம்பி ராமையா தன் மகளான டாக்டர் பர்வீனூக்காக ஒரு மருத்துவமனை கட்ட இடம் பார்க்கிறார். அதற்காக நில உரிமையாளரிடம் கொடுத்த முன் பணத்தில் 5 லட்சம் ரூபாய் அளவுக்குக் கள்ள நோட்டு இருப்பது தெரிய வருகிறது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தம்பி ராமையாவை கைது செய்கின்றனர்.

அந்தப் பணத்தை வட சென்னை தாதாவான மாறனின் வலது கையான மெய்யப்பனின் பைனான்ஸ் கம்பெனியில் இருந்து தம்பி ராமையா பெற்றதாகச் சொல்ல.. ரைட்’ மெய்யப்பனை போட்டுத் தாக்கி உண்மையை ஒத்துக் கொள்ள வைத்து மெய்யப்பனை ஜெயிலுக்கு அனுப்புகிறார். இதனால் மாறன், ‘ரைட்’ மீது கோப வெறியோடு இருக்கிறார்.

தன் ஆட்களை அடித்து மருத்துவமனையில் படுக்க வைத்ததில் ஆத்திரப்பட்ட நஞ்சுண்டா.. தன் ஆசை காதலியை கடத்தியதற்காக வம்சியின் கொலை வெறி,  கள்ள நோட்டு விவகாரத்தில் மெய்யப்பனை ஜெயிலுக்கு அனுப்பியதால் மாறனின் கோபம்.. இப்படி மூன்று தாதாக்களையும் ஒரே நேரத்தில் பகைத்துக் கொண்ட ‘ரைட்’டுக்கு அடுத்தடுத்து நடப்பது என்ன..? இவர்களிடமிருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா..? என்பதுதான் இந்த ‘தலைநகரம்-2’ படத்தின் திரைக்கதை.

‘தலைநகரம்’ முதல் பாகத்தில் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மற்றையவைகளை தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் போல் வைத்திருந்தார்கள். ஆனால் இந்த 2-ம் பாகத்தில் ஊறுகாய் அளவுக்குக்கூட நகைச்சுவை இல்லாமல், முழுக்க, முழுக்க அடிதடி, வெட்டுக்குத்து, கொலை என்று அநியாயத்துக்கு புல் நான் வெஜ் மீல்ஸை பரிமாறியிருக்கிறார் இயக்குநர் துரை.

சுந்தர்.சி தனி நாயகனாக பல படங்களில் நடித்திருந்தாலும் ‘தலைநகரம்’ அளவுக்கு வேறு எந்தப் படமும் குறிப்பிடத்தக்க வெற்றியடையவில்லை. கடைசியாக நடித்திருந்த ‘பட்டாம்பூச்சி’கூட தோல்வியைத்தான் தழுவியிருந்தது. இந்த நிலையில், மீண்டும் இந்தப் படத்தில்  நாயகனாக நடித்துள்ளார் சுந்தர்.சி.

படத்தின் தன்மை போலவே இதில் மிக சீரியசான ‘ரைட்’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடைய உடல் வாகுவும், முகத் தோற்றமும் டான் கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துவதால் இந்தக் கதாப்பாத்திரத்தை மிஸ் செய்யாமல் நடித்திருக்கிறார் போலும்..!

பெரிய அளவுக்கு நடிப்பைக் காண்பிக்கும் சென்டிமெண்ட் காட்சிகள் இல்லையென்பதால் அதில் தப்பித்தவர், அடிதடி, கொலை காட்சிகளில் சர்வசாதாரணமாக ‘அசால்ட்டு சேது’வாக நடித்துள்ளார். ஆனாலும் சண்டை காட்சிகளில் சுந்தர் சி.யின் ஆக்சன்களில் ஸ்பீடு குறைவு என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்..!

நடிகையாகவே நடித்திருக்கும் நாயகி பாலக் லால்வானிக்கு கவர்ச்சியை காட்ட கொடுத்த 2 காட்சிகளிலும் அதை மட்டும் கச்சிதமாக செய்திருக்கிறார். அவருடை.ய முகமே குழந்தைத்தனமாக இருப்பதோடு, கஷ்டப்பட்டு வசனம் பேசுவது போலவும் இருப்பதால் ரசிக்கத்தான் முடியவில்லை.

தம்பி ராமையா வழக்கமான தன்னுடைய பாணியில் வசனம் பேசி கொஞ்சம்ச சிரிக்க வைத்து.. கொஞ்சம் மனதைத் தொட்டிருக்கிறார். இவருடைய மகளாக நடித்திருக்கும் ஆயிரா, தம்பி ராமையா இறந்துவிட்டதை உணர்ந்து கதறும்போது படத்தின் பாரத்தை தானே சுமந்துவிட்டார்.

‘நஞ்சுண்டா’வாக வரும் பாகுபலி பிரபாகர், ‘மாறனாக’ நடித்திருக்கும் ஜெய்ஸ் ஜோஸ், ‘வம்சி’யாக நடித்துள்ள விஷால் ராஜன் மூவருமே தங்களுடைய வில்லத்தனத்தில் குறைவில்லாமல் நடித்துள்ளனர். மாறனுடன் இருக்கும் மூன்று பெண்கள் செய்யும் அட்டூழியம்கூட மிரட்டலாக இருக்கிறது.

இவர்களையும் தவிர்த்து இயக்குநர் துரையே அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஒரு டர்னிங் பாயிண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் போலீஸார், ரவுடிகள், வில்லன்களில் அடியாட்கள் என்று ஒரு பெருங்கூட்டமே அவ்வப்போது திரையில் வந்து, வந்து நடித்துவிட்டுப் போயிருக்கிறது.

படம் நெடுகிலும் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமியின் கை வண்ணத்தில் ஒளிப்பதிவு காட்சிகளை அழகுபட பதிவு செய்திருக்கிறது. பாலக் லால்வாணியின் தொடையழகைக் காட்டும் வகையில் படம் பிடித்திருக்கும் கேமிராவுக்கு ஒரு ஷொட்டு.

கலை இயக்குநர் ஏ.கே.முத்துவின் கலை வேலைப்பாடுகள் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைத்திருக்கிறது.

ஜிப்ரானின் இசையில் ’அசத்துறா அசத்துறா’ பாடல் மட்டுமே படம் முடிந்து வெளியில் வந்தபோதும் மனதில் நிற்கிறது. ஆனாலும், பின்னணி இசையில் அடித்து ஆடியிருக்கிறார் ஜிப்ரான். திரைக்கதையின் வேகத்திற்கு ஏற்றவாறு பின்னணி இசையைக் கூட்டி காட்சிகளை பரபரப்பாக்கி இருக்கிறார் ஜிப்ரான்.

இந்தப் படத்துக்கு எப்படி சென்சாரில் பிரச்சினையில்லாமல் சான்றிதழ் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஒரு அரசுத் தரப்பு வழக்கறிஞர் தனது அலுவலகத்தில் வைத்தே அடியாட்களை வைத்து கொலை செய்வது போலவும், நீதிபதிகள்வரைக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என்று வெளிப்படையாக வசனத்தையும் பேசியிருப்பது ஆச்சரியமாக உள்ளது. இயக்குநர் துரையின் இந்தத் தைரியத்திற்கு நமது பாராட்டுக்கள்..!

இடைவேளைக்கு முன்பு படம் பரபரப்பாகவும், வேகமாகவும் நகர்ந்துள்ளது. இடைவேளைக்குப் பின்புதான் கொஞ்சம் வேகம் குறைவாகி போயிருக்கிறது. படத் தொகுப்பாளர் மனம் வைத்து இன்னமும் கொஞ்சம் கத்தரியைப் போட்டிருந்தால் நலமாக இருந்திருக்கும்.

படத்தில் இருக்கும் ஒரேயொரு பிரச்சினை.. அளவுக்கதிகமான வயலன்ஸ்தான். வன்முறை காட்சிகளை காட்டலாம்தான். ஆனால் அதற்காக உடலை கிழித்து குடலை உருவி போடுவது.. உடல் முழுக்க தாரைக் கொட்டி தீ வைப்பது என்றெல்லாம் காட்சிகளை வைத்து, தியேட்டருக்கு வரும் இளகிய மனம் கொண்டோரை வதைப்பது எந்த வகையில் நியாயம் இயக்குநரே..!?

இருந்தாலும் ஒட்டு மொத்தமாய் பார்க்கப் போனால் படம் சுவாரஸ்யமாகத்தான் அமைந்துள்ளது. குடும்பத்தோடு பார்க்க முடியாததுதான்.. ஆனால் டான் கதையில் அமைந்த குறிப்பிடத்தக்க கமர்ஷியல் படங்களில் இதுவும் ஒன்றாக இடம் பிடித்துவிட்டது..!

RATING : 3 / 5

Our Score