full screen background image

லால் சிங் சத்தா – சினிமா விமர்சனம்

லால் சிங் சத்தா – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை அமீர்கான் புரொடக்ஷன்ஸ் மற்றும் வயாகம் 18 ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்துள்ளன.

படத்தில்  அமீர்கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் நடித்திருக்கிறார். இவர்களுடன் நாக சைதன்யா, மோனா சிங், மானவ் விஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

சத்யஜித் பாண்டே ஒளிப்பதிவு செய்ய, ப்ரீதம் பின்னணி இசையமைத்திருக்கிறார். தனுஜ் டிக் இசையமைத்துள்ளார். ஹேமந்த் சர்க்கார் படத் தொகுப்பினை செய்திருக்கிறார். முத்தமிழ் தமிழ்ப் பாடல்களை எழுதியுள்ளார்.

பாரஸ்ட் கெம்ப்’ எனும் ஆங்கில படத்தினைத் தழுவி அதுல் குல்கர்னி திரைக்கதை எழுத, அத்வைத் சந்தன் படத்தை இயக்கி இருக்கிறார். பத்திரிகை தொடர்பு – பி.ஸ்ரீ.வெங்கடேஷ்.

இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும், தமிழின் முன்னணி திரைப்பட வெளியிட்டு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் பிரம்மாண்டமாக வெளியிட்டுள்ளது.

1994-ம் வருடம் ஜூன் 23-ம் தேதி வெளியான தி பாரஸ்ட் கெம்ப் என்ற ஹாலிவுட் திரைப்படம் அதில் நாயகனாக நடித்திருந்த டாம் ஹாங்ஸின் அற்புதமான நடிப்பாலும், சிறந்த இயக்கத்தாலும் உலகம் முழுவதுமே பிளாக்பஸ்டர் ஹிட்டானது. 55 மில்லியன் டாலர் பணத்தில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 700 மில்லியன் டாலரை வசூல் செய்து உலக சாதனை படைத்திருந்தது.

அமெரிக்க மக்கள் அதிகம் விரும்பும் தேசப் பற்றை படம் நெடுகிலும் பறை சாற்றியிருந்ததால் ஆஸ்கர் விருதுகள் இந்தப் படத்திற்குக் கிடைத்தன. டாம் ஹாங்ஸும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை இந்தப் படத்திற்காக வாங்கினார்.

இத்தனை பாராட்டுக்களைப் பெற்ற இந்தப் படத்தை இத்தனையாண்டுகள் கழித்து பான் இந்திய படமாக தயாரித்தமைக்காக நடிகர் அமீர்கானுக்கு நமது பாராட்டுக்கள்.

அமீர்கான் என்னும் லால் சிங் சத்து பஞ்சாப் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து வாழ்கிறார். இவரது அப்பா, தாத்தா, பாட்டன் என்று அனைவருமே ராணுவ வீரர்கள். அப்பா பங்களாதேஷ் போரிலும், தாத்தா 2-ம் உலகப் போரிலும், பாட்டன் 3-ம் உலகப் போரிலும் ஈடுபட்டு உயிரை விட்ட தியாகிகள்.

சிறு வயதில் இருந்தே அமீர் சிண்ட்ரோம் குறைபாடு கொண்டவர். கால்களிலும் லேசான ஊனம் இருந்ததால் இவருக்காகவே ஸ்பெஷலான இரும்பாலான ஸ்டேண்ட் பொருத்தி அதன் மூலமாக நடந்து நடந்து காலப்போக்கில் மற்றவர்களைப் போல நடக்கலானார் அமீர்.

பள்ளிப் பருவத்தில் சக மாணவர்கள் இவரைக் கிண்டல் செய்து கொண்டிருக்கும்போது அன்பும், தோழமையும் காட்டுகிறாள் ரூபா. ரூபாதான் அமீர்கானின் சிண்ட்ரெல்லா. அமீர்கான் ரூபாவை தனக்கென்றே நினைத்துக் கொண்டிருக்கிறார். ரூபா தன் குடும்பச் சூழலால் ஊரைவிட்டுப் போக.. தனி மரமாகிறார் அமீர்.

பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு வரும்போது ரூபாவும் அதே கல்லூரியில் படிக்க மீண்டும் இருவருக்குள்ளும் நட்பு தொடர்கிறது. ஆனால் ரூபாவோ பெரிய பணக்காரியாக வேண்டும் என்ற கொள்கையில் இருப்பதால் வேறொரு பணக்கார மாணவனைக் காதலிக்கிறாள். இந்தக் காதல் அமீர்கானால் ஒரு நாள் உடைகிறது.

கல்லூரி படிப்பு முடிந்து அமீர்கான் ராணுவத்தில் சேர்ந்து கார்கில் போரில் கலந்து கொண்டு அடிபட்ட இந்திய ராணுவ வீரர்களைக் காப்பாற்றுகிறார். இதனால் அவருக்கு ராணுவத்தில் பெரிய பெயர் கிடைத்தாலும் மருத்துவ ரீதியாக மேலும் அவரால் ராணுவத்தில் இருக்க முடியாமல் போகிறது.

ராணுவத்தில் இருந்த சமயத்தில் உற்ற தோழனாக இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த பாலன் என்ற நாக சைதன்யா சொல்லிக் கொடுத்த பனியன், ஜட்டி பிஸினஸை தனது ஊருக்கு வந்து துவக்குகிறார்அமீர்கான். முதலில் அது தோல்வியடைந்தாலும் பின்பு அவர் காப்பாற்றிய பாகிஸ்தான் பிரஜையால் சக்ஸஸாகிறது. ரூபா இண்டஸ்ட்ரீஸ் என்று பெயர் சூட்டப்பட்ட இந்த நிறுவனம் மிகப் பெரிய நிறுவனமாகி பங்குச் சந்தையிலும் நுழைந்து வெற்றியடைகிறது. இடையில் அவரது அம்மாவும் காலமாகிறார். ஆனாலும் ரூபாவை மட்டும் மறக்க முடியாமல் தவிக்கிறார் அமீர்.

இந்த நேரத்தில் ரூபா மாடலிங் அழகியாகி, பின்பு சினிமாவில் ஹீரோயினாக ஆசைப்பட்டு.. அது நடக்காமல் போய் ஒரு தயாரிப்பாளரின் சின்ன வீடாகி.. சில சட்ட விரோத செயல்களுக்குத் துணையாக நின்றதால் சிறைக்குச் சென்று தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியில் வந்து தற்போது சண்டிகரில் அமைதியாய் ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ரூபா இடையில் ஒரேயொரு நாள் மட்டும் அமீரை சந்திக்க ஊருக்கு வந்து தன்னையும் அமீருக்குத் தந்துவிட்டு மறுநாளை விடிந்தும், விடியாத பொழுதில் தன்னை தேடி வந்த போலீஸூடன் அமைதியாய் சென்றுவிட்டார்.

இது தெரியாத அமீர் கடைசியாக சில வருடங்கள் கழித்து ரூபாவை கண்டறிய.. ரூபாவும் அவரை தன்னுடைய முகவரியைக் கொடுத்து தன்னைப் பார்க்க வரும்படி அழைக்கிறார். இப்போது ரூபாவை பார்க்க்ததான் சண்டிகருக்கு ரயிலில் செல்கிறார்.

அடுத்து என்ன நடக்கிறது.. ரூபாவை அமீர் சந்தித்தாரா.. அவரது காதல் என்னவானது.. ரூபா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் என்ன ஆனது என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.

பல இடங்களில் திசை மாறும் திரைக்கதையுடன் கூடிய இந்தக் கதையை எடுப்பதற்கே ஒரு தைரியம் வேண்டும். அமீர்கான் துணிந்து செய்திருக்கிறார். காரணம் அவர் மீது அவருக்கு இருந்த நம்பிக்கைதான்.

படம் முழுவதும் தனது நடிப்பால் வியாபித்திருக்கிறார் அமீர்கான். ரெயில் பயணத்தில் கொஞ்சம், கொஞ்சமாக தனது இன்னசென்ட் முகத்தைக் காட்டும் அமீர்கான் கொஞ்ச நேரத்திலேயே அந்த ரயிலைவிடவும் மிக வேகமாக நம் மனசுக்குள் உட்கார்ந்து கொள்கிறார்.

ரூபா மேல் கொண்ட காதலால் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா என்று அடிக்கடி கேட்கும் அமீரின் அந்த வாட்டமான முகம் இன்னமும் நம் கண் முன்னாள் நிற்கிறது.  அம்மாவுக்குத் தப்பாத பிள்ளை. காதலியின் பேச்சுக்குக் கட்டுப்படுவது.. அதே காதலிக்காக அடிதடியில் இறங்குவது.. கார்கில் போரில் பாகிஸ்தான் வீரரைக்கூட யாரென்று தெரியாமல் காப்பாற்றி கொண்டு வருவது.. எப்போதும் தனக்கென்று ஒரு உலகமாக அவர் பேசும் பேச்சுக்களும், செய்கைகளும் அப்பாவித்தனமான வசனங்களும் இந்தாண்டின் சிறந்த நடிகருக்கான விருதை அமீர்கானுக்காக இப்போதே புக் செய்து வைத்திருக்கிறது.

கரீனா கபூர்கான் நாயகி ரூபாவாக நடித்திருக்கிறார். சின்ன வயது ரூபா தனது அழுத்தமான நடிப்பால் நம்மை இழுத்துவிட.. தனது பெரிய கனவு மற்றும் லட்சியத்தோடு கரீனாவும் நம்மை கவர்ந்திழுக்கிறார். தனது கனவுகள் சிதைந்த நிலையில் தன்னை இத்தனையாண்டுகளாக அப்பாவியாய் காதலித்தவனுடன் உறவு கொள்ளும் அந்தக் காட்சியை கவிதையாய் எடுத்திருக்கிறார்கள்.

அவர்களது மகனை அமீருக்கு அறிமுகப்படுத்தும் காட்சியில் பெருமிதமும், அன்பும், கரீனாவின் கண்களிலேயே தெரிகிறது. அமீரை பார்த்துக் கொள்ள வேண்டி அவர் முன் வந்து திருமணம் செய்து கொள்வதும் அந்தக் கணம் நமக்கே திருப்தியைத் தருகிறது.

அமீரின் அம்மாவாக நடித்த சோனம் சிங்கும், பாகிஸ்தான்காரருமாக நடித்தவரும் இயக்குநரின் கை வண்ணத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். அதிலும் பாகிஸ்தாரன்காரர் என்னை ஏண்டா காப்பாத்தின என்று பொருமும் காட்சியிலும், தனது இன்றைய அவல நிலையை வீட்டுக்கு அழைத்துச் சென்று காட்டும்போதும் நடிப்பில் நம்மைக் கவர்கிறார்.

நாக சைதன்யாவும் கொஞ்சம் வித்தியாசமான தோற்றத்தில் பாலன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடைய ஜட்டி, பனியன் விற்பனை சுவாரஸ்யமானது. அவருடைய மரணம் துர்பாக்கியமானது என்றாலும் திரைக்கதைக்கு பெரிதும் உதவியிருக்கிறது.

ரயில் பயணத்தில் அமீரின் எதிரில் அமர்ந்து கேட்டுக் கொண்டு வரும் அந்தப் பெண்மணியை மறக்கவே முடியாது. பல காட்சிகளில் அப்படியொரு ரியாக்சனை கொடுத்திருக்கிறார் அவர்.

படத்தில் கடைசிவரையிலும் உடன் வரும் இன்னொரு கதாபாத்திரம் படத்தின் ஒளிப்பதிவாளர்தான். பஞ்சாப்பிய கிராமத்தின் அழகைக் காட்டிவிட்டு, புதுதில்லி, கார்கில், இமயமலைத் தொடர், தமிழ்நாடு, அமீர்கான் ஓடும் பகுதிகள் என்று அத்தனையிலும் காட்சிக்குக் காட்சி படம் பிரம்மாண்டமான படம் என்பதை சொல்ல வைத்திருக்கிறார்.

முத்தமிழின் பாடல் வரிகளை கேட்கும் அளவுக்கு இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர். பின்னணி இசை எப்போதும் துக்கம் தரும் அளவுக்கு மென்மையாகவே படத்தில் படர்ந்திருக்கிறது.

படத்தில் அமீரின் வாழ்க்கைக் கதையோடு இந்தியாவின் அரசியல் வாழ்க்கைக் கதையையும் இணைந்தே சொல்லியிருக்கிறார் இயக்குநர். பொற்கோவிலில் ராணுவம் நுழைந்தது, இந்திரா காந்தி படுகொலை, சீக்கியர்கள் படுகொலை, பாபர் மசூதி இடிப்பு, கலவரம், மும்பை குண்டு வெடிப்பு, 2000-மும்பை குண்டு வெடிப்பு – அஜ்மல் கசாப் கைதானது, கார்கில் போர் – வெற்றி, மந்தாகினி – தாவூத் இப்ராஹிம் தொடர்புகள், பாலிவுட் போதை மருந்து தொடர்புகள் என்று பலவற்றையும் கொஞ்சமும் குழப்பம் இல்லாத அளவுக்கு படத்தில் பொருத்தியிருக்கிறார் இயக்குநர்.

ஒரிஜினல் படத்தில் இருந்த சில காட்சிகளை நீக்கிவிட்டு இந்திய சினிமாவுக்காக சில காட்சிகளை சேர்த்திருக்கிறார்கள். ஆனால் முக்கியமாக நீக்க வேண்டிய காட்சிகளை வைத்ததுதான் ஏன் என்றுதான் தெரியவில்லை.

படத்தின் முதல் பாதி ஜிவ்வென்ற வேகத்தில் பறந்து போக இடைவேளைக்குப் பின்பு படம் தொய்வானது தவிர்த்திருக்க வேண்டிய செயல். அமீர்கான் தனது அம்மாவின் மரணத்திற்குப் பின்பு ஸ்டேட் விட்டு ஸ்டேட் ஓடுகின்ற காட்சிகளை அறவே நீக்கிவிட்டு இந்தியாவுக்கு ஏற்றதுபோல மாற்றியிருக்கலாம். அதுவே பார்வையாளர்களுக்கு அலுப்பைத் தந்து சோர்வடைய வைத்துவிட்டது.

அதோடு இதோ ரூபாவோடு சேர்ந்துவிட்டார் என்ற நாம் சந்தோஷப்பட்ட நேரத்தில், இயக்குநர் மீண்டும் அமீரை நிர்க்கதியில் நிற்க வைக்க… இவ்வளவு பெரிய சோகத்தை நம்மால் தாங்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

அமீர்கானின் முந்தைய வெற்றிப் படங்களான ‘டங்கல்’, ‘பிகே’, வரிசையில் இந்தப் படமும் இடம் பெறவில்லையென்றாலும் நடிப்பில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இந்திய சினிமாவில் ஆல் டைம் மிகச் சிறந்த படங்களின் பட்டியலில் இந்தப் படத்திற்கும் ஒரு இடம் உண்டு என்பதுதான் இந்த ‘லால் சிங் சத்தா’ படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பெருமை.

படக் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்..!

RATING : 4 /5

Our Score