full screen background image

கடமையை செய் – சினிமா விமர்சனம்

கடமையை செய் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை கணேஷ் எண்ட்டெர்டெயின்மெண்ட் மற்றும் நகர் பிலிம்ஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் T.R.ரமேஷ், S.ஜாஹிர் ஹுசைன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், வின்சென்ட் அசோகன், சார்லஸ் வினோத், சேசு, ராஜசிம்மன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு –  T.R.  ரமேஷ் & S.ஜாஹிர் ஹுசைன், இயக்குநர் – வெங்கட்ராகவன், ஒளிப்பதிவு –  வினோத் ரத்தினசாமி, படத் தொகுப்பு  – ஸ்ரீகாந்த்.N.B., இசை  – அருண்ராஜ், பாடல்கள் –  அருண் பாரதி, சண்டை பயிற்சி இயக்கம் – பிரதீப் தினேஷ், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – தனகோடி, ஆர்.பி.வெங்கட், மாதவன், சிவக்குமார், குணா, பத்திரிகை தொடர்பு – மணவை புவன், ஆடைகள் – குமார், VFX&Di – ஸ்ரீ கலசா ஸ்டுடியோ, ஒலி கலவை – நாக் ஸ்டுடியோஸ் உதய்குமார்.

புதிய கதைக் களனில் படமெடு்க்க வேண்டும் என்று பல புதிய இயக்குநர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அதை திரை வடிவத்தில் கொடுக்கும்போது மட்டும் சற்று தடுமாறிவிடுகிறார்கள். அந்த வரிசையில் இந்தப் படமும் இடம் பிடித்துள்ளது.

சிவில் என்ஜீனியரான எஸ்.ஜே.சூர்யாவின் மனைவி யாஷிகா ஆனந்த். இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. மாமனாரான சேஷூவும் இவர்களுடனேயே இருக்கிறார்.

திடீரென்று ஏற்படும் பொருளாதார மந்த நிலை காரணமாக சூர்யா வேலை பார்த்து வந்த கட்டுமான நிறுவனம் தனது பணியை நிறுத்திக் கொள்ள வேலையை இழக்கிறார் சூர்யா.

தான் வேலை இழந்ததை மனைவிக்குத் தெரிவிக்காமல் மறைக்கிறார் சூர்யா. வேறு இடங்களில் வேலை தேடுகிறார். கிடைக்கவில்லை. கடைசியாக கார் ஓட்டுனர் வேலைக்குக்கூட போகிறார். அதுவும் செட்டாகாமல் கடைசியாக ஒரு மிகப் பெரிய அபார்ட்மெண்ட்டில் செக்யூரிட்டி வேலைக்கு சேர்கிறார்.

அந்த அபார்ட்மெண்ட்டின் சுவர்கள் விரிசல் கண்டுள்ளன. பல இடங்களில் பிளவுகளும் இருக்கின்றன. இப்படியே போனால் இன்னும் ஒரு வாரத்திற்குள் கட்டிடம் தானாகவே இடிந்து விழுந்துவிடும் என்பதை அறியும் சூர்யா அந்தக் கட்டிடத்தைக் கட்டிய பில்டரை தேடிப் பிடித்து விஷயத்தைச் சொல்கிறார்.

பில்டரோ, “நீ உயிருடன் இருந்தால் எனக்கு ஆபத்து” என்று சொல்லி சூர்யாவை கொலை செய்ய ஆளை அனுப்புகிறார். லாரியை வைத்து சூர்யா மீது தாக்குதல் நடத்த… கோமா நிலைக்குள் தள்ளப்படுகிறார் சூர்யா. ஆனாலும், இதிலும் வித்தியாசமாக அவரால் சுற்றியிருப்பவர்களை பார்க்க முடியும். அவர்கள் பேசுவதைக் கேட்க முடியும். ஆனால் பேச முடியாது.

இப்படியொரு இக்கட்டான சூழலில் சூர்யாவின் குடும்பம் பரிதவிக்க.. மருத்துவமனையிலும் சூர்யாவை கொல்ல ஆட்களை அனுப்புகிறார் பில்டர். அவர்களிடமிருந்து தப்பிக்கும் சூர்யா அபார்ட்மெண்ட்டை காப்பாற்ற தானே நேரில் செல்கிறார்.

ஒரு பக்கம் போலீஸ் அவரைத் தேட.. மருத்துவமனையில் இருந்து ஓடிவிட்டதாக நினைத்து குடும்பத்தினர் தேட.. பில்டரும் இன்னொரு பக்கம் தேடத் துவங்க.. கடைசியில் அந்த அபார்ட்மெண்ட் என்னவாகிறது என்பதுதான் இந்தப் படத்தின் மீதமுள்ள திரைக்கதை.

சூர்யாவுக்கு மிக, மிக வித்தியாசமான வேடம். அன்பு கணவராக, பாசமிக்க தந்தையாக.. அப்பாவி மருமகனாக.. சிநேகமான சூப்பர்வைஸராக என்று பல்வேறு காட்சிகளில் வேறு, வேறு நடிப்பைக் காட்டியிருந்தாலும் மருத்துவமனையில் படு்த்த பின்பு வேறு சூர்யாவாகிவிட்டார்.

வெறித்த பார்வையுடன் படுத்தே இருந்த நிலையிலும், வில்லன் கோஷ்டியில் தாக்குதலினால் திடீர், திடீரென்று அவருக்குள் பொங்கும் கோபத்தை சண்டையில் காட்டுவதும்.. அபார்ட்மெண்ட்டுக்கு வந்து பேச முடியாமல் தவித்து, மனதிற்குள்ளேயே குமைந்து கொண்டு தவிக்கும் கேரக்டரிலும் சிறப்பாக சம்பவம் செய்திருக்கிறார் சூர்யா.

சூர்யா, கார் டிரைவர் வேலை பார்க்கும்போது தனது மாமனாரிடம் இருந்து தப்பிக்க வேண்டி பிச்சைக்காரர்களின் அருகில் படுத்து அதை மனைவி பார்க்க அங்கிருந்து தப்பிக்க அவர் படும் பாடு பெரும் நகைச்சுவைதான்.

யாஷிகா ஆனந்த் சில காட்சிகளில் உடைகளில் தாராள மனப்பான்மையோடு வலம் வந்து தனது இருப்பை நிரூபித்திருக்கிறார். சூர்யாவிடம் குடும்பச் சூழலை சொல்லி பொங்கும் காட்சியில் சிறிதளவாவது நடித்து நம்மை அதிர்ச்சியாக்கியிருக்கிறார்.

வின்சென்ட் அசோகன் வில்லனாம். ஆனால் கடைசியில் அவரது தம்பி வில்லனாகி நமக்கே காதில் பூச்சுற்றியிருக்கிறார்கள். மற்றைய கேரக்டர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவில் குறையில்லை. அபார்ட்மெண்ட் காட்சிகளையும், கிளைமாக்ஸ் காட்சியையும் பிரம்மாண்டமாய்தான் படம் பிடித்திருக்கிறார். அதேபோல் படத் தொகுப்பாளரும் அந்தக் கிளைமாக்ஸ் காட்சியில் கொஞ்சம் திக் திக் உணர்வைக் கூட்டிக் கொடுத்திருக்கிறார்.

இசையில் ‘கடமையை செய்’ மற்றும் ‘பெஸ்ட் பிரண்டு’ பாடல்கள் கேட்கும் ரகம். பாட்டை யார் கேட்டது… எல்லாரும் யாஷிகாவைல்ல பார்த்துக்கிட்டிருந்தாங்க.? அபார்ட்மெண்ட் பாடலின் மாண்டேஜ் ஷாட்களின் தொகுப்பு சிறப்பு. பின்னணி இசைதான் காதைக் குடைந்துவிட்டது.

முதலில் கதையின் அடிப்படையிலேயே மிகப் பெரிய லாஜிக் ஓட்டை. சிவில் என்ஜீனியர் முடித்தவருக்கு அவர் படிப்பு தொடர்பான வேலையே கிடைக்கவில்லை என்று சொல்லியிருப்பது பூச்சுற்றல். அவர் வேறு வழியில்லாமல் செக்யூரிட்டி வேலைக்குச் செல்கிறார் என்பது அதைவிட பூச்சுற்றல்.

சூர்யா, வின்சென்ட் அசோகனிடமே வேலைக்கு சேர்ந்து அந்த அபார்ட்மெண்ட்டின் பராமரிப்பு வேலைக்காக வந்து நடந்த தவறுகளைக் கண்டறிவதுபோல திரைக்கதையை அமைத்திருந்தால்கூட ஏற்றுக் கொள்ளாம். இப்படி முழம், முழமாக பூச்சுற்றினால் எப்படிங்கோ இயக்குநரே..!?

கிளைமாக்ஸில் தத்தித் தத்தி நடக்கும் சூர்யா அபார்ட்மெண்ட்டுக்கு வருவதும், தப்பியோடுவதும், பின்பு மீண்டும் வருவதெல்லாம் நம்ப முடியாத கதையாகிவிட்டது. இன்னும் கொஞ்சம் நம்பகத்தன்மையோடு திரைக்கதையை அமைத்திருந்தால் படம் நன்று என்று சொல்லியிருக்கலாம்..!

RATING : 2.5 / 5

Our Score