full screen background image

விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை..!

விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை..!

நடிகர் விஜய்க்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த வருமான வரித் துறையின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.

நடிகர் விஜய் நடித்த புலி’ திரைப்படம் 2015-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி வெளியானது. இதற்கு முதல் நாள் நடிகர் விஜய் மற்றும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான பி.டி.செல்வக்குமார், சிபு தமீம்ஸ் ஆகியோரின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமான வரித் துறையின் அதிரடி ரெய்டு நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

இந்த நிலையில் கடந்த 2016-2017-ம் நிதி ஆண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்தார். அதில் தன் வருமானத்தை ரூ.35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால், 2015-ம் ஆண்டு நடிகர் விஜய்யின் வீட்டில் நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், ‘புலி’ படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய் 15 கோடி ரூபாயை ரொக்கமாக பெற்றதாகவும், அதை வருமான வரி கணக்கில் காட்டவில்லை என்றும் தெரிய வந்தது.

இதையடுத்து “புலி’ படத்துக்காக நீங்கள் சம்பளமாக பெற்ற 15 கோடிக்கு வரி செலுத்தவில்லை. வருமான கணக்கிலும் குறிப்பிடவில்லை. அதனால் உங்களுக்கு ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது” என்று நடிகர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பியது வருமான வரித் துறை.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார், அந்த மனுவில், “அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால் 2019-ம் ஆண்டே இந்த அபராதத்தை விதித்து உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால், 3 ஆண்டுகளுக்கு பின்னர் அபராதம் விதித்துள்ளதால், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்..” என்று கூறியிருந்தார் விஜய்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த மனுவுக்கு வருமான வரித்துறை பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற செப்டம்பர் 16-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Our Score