பிரபல மலையாள சினிமா இயக்குநரும், நடிகருமான பாலச்சந்திர மேனன் தன்னை பலாத்காரம் செய்தார் என்றும், குரூப் செக்சில் ஈடுபட கட்டாயப்படுத்தினார் என்றும் கூறி ஒரு நடிகை கேரள போலீசில் புகார் அளித்துள்ளார்.
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பாலச்சந்திர மேனன். இவர் நடிப்பு, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என அனைத்தையும் கையாளுவதில் மிகவும் திறமையானவர். மிக அதிகமாக குடும்பக் கதைகளைத்தான் படமாக்கியிருக்கிறார். இதனாலேயே இவரை மலையாளத் திரையுலகத்தின் பாக்யராஜ் என்றும் அழைப்பார்கள்.
அதிக படங்களில் திரைக்கதை, வசனம் எழுதி நடித்ததற்காக இவரது பெயர் லிம்கா உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றது. பிரபல நடிகைகளான ஷோபனா, கார்த்திகா, ஆனி உள்பட பலரையும் இவர்தான் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிலையில் இயக்குநர் பாலச்சந்திர மேனன் மீது எர்ணாகுளம் ஆலுவாவை சேர்ந்த ஒரு நடிகை பலாத்கார புகார் கூறியுள்ளார். ஏற்கனவே இவர்தான் நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்பட 7 பேர் மீது பலாத்கார புகார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு விசாரணைக் குழுவிடம் அவர் நேற்று அளித்துள்ள புகாரில், “கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரியில் பாலச்சந்திர மேனன் இயக்கி நடித்த ‘தே இங்கோட்டு நோக்கியே’ என்ற படத்தின் படப்பிடிப்பின்போது ஓட்டல் அறைக்கு வரவழைத்து அவர் என்னை பலாத்காரம் செய்தார்.
அவர் இருந்த அறைக்கு சென்றபோது அவர் 3 இளம் பெண்களுடன் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது குரூப் செக்சுக்கு என்னை அவர் கட்டாயப்படுத்தினார். வெளியே சொன்னால் படத்தில் நடித்துள்ள காட்சிகளை நீக்கி விடுவேன் என்று மிரட்டினார். ஆனாலும் நான் முடியாது என்று மறுத்து வெளியில் ஓடி வந்துவிட்டேன். அதுதான் எனக்கு முதல் படம் என்பதாலும், எனக்கு வாய்ப்பு தந்தவர் என்பதாலும் நான் பயந்து இதுவரை யாரிடமும் சொல்லவில்லை…” என்று கூறியுள்ளார்.
இதையடுத்து திருவனந்தபுரம் கண்டோன்மெண்ட் போலீஸ் ஸ்டேஷனில் இயக்குநர் பாலச்சந்திர மேனன் மீது இபிகோ 354, 509, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.
இதேபோல் பிரபல மலையாள நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான ஜாபர் இடுக்கி மீதும் இந்த நடிகை பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் ஓட்டல் அறையில் வைத்து நடிகர் ஜாபர் இடுக்கி தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக இந்த நடிகை சிறப்பு விசாரணைக் குழுவுக்கு இமெயில் மூலம் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த 2012-ல் லண்டனில் ஒரு கலை நிகழ்ச்சிக்காக சென்றபோது அந்த நிகழ்ச்சியின் ஒரு ஸ்பான்சருடனும், நடிகர் கலாபவன் மணியுடனும் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் ஜாபர் இடுக்கி தன்னை கட்டாயப்படுத்தியதாகவும் அந்தப் புகாரில் இவர் குறிப்பிட்டுள்ளார்.