இந்தப் படத்தில் ஆர்யா – கௌதம், கௌதம் ராம் கார்த்திக் – அமரன், சரத் குமார் – பரமேஷ்வர், மஞ்சு வாரியர் – இந்திரா வர்மா, அனகா – கீர்த்தனா, அதுல்யா – அதிதி, ரைசா வில்சன் – நிர்மலா, காளி வெங்கட் – பொன்னுசாமி, ஜெயபிரகாஷ் – வாமனமூர்த்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
எழுத்து. இயக்கம் – மனு ஆனந்த், தயாரிப்பாளர்கள் – ஸ்ரீ வினீத் ஜெயின், எஸ் லக்ஷ்மன் குமார், இணை தயாரிப்பாளர் – ஏ வெங்கடேசன், நிர்வாக தயாரிப்பாளர் – ஷ்ரவந்தி சாய்நாத், இசை – திபு நினன் தாமஸ், புரொடக்ஷன் வடிவமைப்பு – ராஜீவன், ஒளிப்பதிவு – அருள் வின்சென்ட், படத்தொகுப்பு – பிரசன்னா ஜி.கே, ஆக்ஷன் கோரியோகிராபி – ஸ்டண்ட் சில்வா, கலை – இந்துலால் கவீத், சேகர் பி, ஆடை வடிவமைப்பு – உதார மேனன், தீபாலி நூர், கூடுதல் திரைக்கதை – திவ்யங்கா ஆனந்த் சங்கர், ராம் எச் புத்ரன், பிரவீன் கே, விஎஃப்எக்ஸ் – சரத் வினு, ஒலி வடிவமைப்பு – தபஸ் நாயக், மக்கள் தொடர்பு – ஏ.ஜான்.
இப்போது ஆசியாவின் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் போரின் கதைதான் இந்தப் படத்தின் கதை. அணு குண்டு தயாரிக்க உதவும் யுரேனியத்தை செறிவூட்டக் கூடாது. அப்படியே அதை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று டிரம்ப் ஈரானை கட்டாயப்படுத்த, ஈரான் தர முடியாது என்று சொன்னதால்தான் இப்போது போர் நடந்துகொண்டிருக்கிறது.
இதேபோல் பல ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவும் அணு குண்டு தயாரிக்கும் மூலக்கூறு வாய்ந்த யுரேனியத்தை நந்தா தேவி மலைப் பகுதியில் இருக்கும் ரகசிய அணு ஆயுதக் கிடங்குக்கு கொண்டு வந்தபோது திடீரென்று ஏற்பட்ட பனிச் சரிவில் அது தொலைந்து போனது.
உள் நாடு, வெளிநாடுகளிலும் இதைப் பகிரங்கமாக சொல்ல முடியாத நிலையில் இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான ரா, இதை கண்காணிப்பதற்காகவும், மீட்பதற்காகவும் பரமேஷ்வர் பிரதாப் (சரத்குமார்) என்ற அதிகாரியை நியமிக்கிறது.
இதற்காகவே சரத்குமார் தன் குடும்பத்தைப் பிரிந்து போலி பெயர் அடையாளத்தோடு வாழ்ந்து வருகிறார். இந்த அணு ஆயுத மூலப் பொருளை பத்திரப்படுத்துவதிலேயே தன்னுடைய வாழ்க்கையையே பணயம் வைத்துவிட்டார் சரத்குமார்.
ஆனால், ரஷ்ய ராணுவம் இந்த அணு ஆயுத மூலப் பொருளைக் கண்டுபிடித்துக் கைப்பற்றிவிட்டது. இதனை தேடிப் போன சரத்குமாரையும் ரஷ்ய ராணுவம் கைது செய்கிறது.
இந்த மூலப் பொருளை சகாய விலையில் பாகிஸ்தானுக்கு விற்கவும் திட்டமிடுகிறது ரஷ்ய நாடு. அதே சமயம், ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற மர்ம நபர் ஒருவர் ரஷ்யாவிடமிருந்து இதைக் கைப்பற்ற முயல்கிறார்.
பாகிஸ்தானுக்கு இந்த மூலப் பொருள் கிடைத்தால் அவர்கள் இதை வைத்து அணு ஆயுதம் தயாரித்து விடுவார்கள். இதனால் அதை தடுக்க வேண்டும் என்று இந்தியாவின் வெளியீட்டு உளவுத்துறை அமைப்பான ரா முடிவு எடுக்கிறது.
ரா அமைப்பின் உயர் அதிகாரியான ஜெயபிரகாசுக்கும், மற்றொரு உயர் அதிகாரியான இந்திரா வர்மா என்ற மஞ்சு வாரியாருக்கும் இடையில் கருத்து மோதல்களும் உள்ளன.
இந்த நேரத்தில் இந்த அணுப் பொருளை கைப்பற்ற மஞ்சு வாரியர் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இப்போது ரஷ்யாவில் இருக்கும் சரத்குமாரின் உதவியோடு அந்த மூலப் பொருளை கைப்பற்றி இந்தியாவுக்கு கொண்டு வந்து விடலாம் என்ற திட்டம் தீட்டுகிறார்கள்.
இதற்காக ரா அமைப்பின் ஏஜென்ட்டான ஆர்யாவையும் அவருடைய ரா ஏஜெண்ட்டுகள் கூட்டத்தையும் ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்கிறார்கள். ஆனால் அந்த மூலப் பொருள் இப்போது யார் யார் கைகளுக்கோ மாறிக் கொண்டே இருக்கிறது.
இடையில் நடந்த ஒரு குழப்பத்தினால் அந்த மூலப் பொருளை மீட்க முடியாமல் மஞ்சு வாரியார் தவிக்க “மஞ்சு வாரியரின் டீம்தான் திட்டமிட்டு ஏதோ சதி வேலை செய்து அணுப் பொருளை தப்ப விட்டு இருக்கிறார்கள்” என்று ஜெயபிரகாஷ் பிரதமரிடம் புகார் சொல்ல, பிரதமரோ மஞ்சு வாரியார் மற்றும் அவரது சக ஊழியர்களையும் கைது செய்ய சொல்கிறார்.
அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் மகாபலிபுரத்தில் ஜி 20 நாடுகளின் மாநாடு நடக்கிறது. இதற்காக 20 நாடுகளின் தலைவர்கள் மகாபலிபுரம் வந்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் அந்த மூலப் பொருளை வைத்து அவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டி இருக்கிறார்கள் என்ற தகவல் மஞ்சு வாரியாருக்கு தெரிய வருகிறது.
இதனால் மொத்த உளவுத் துறையுமே ஆளுக்கு ஒரு பக்கமாக அந்த மூலப் பொருளை கைப்பற்றும் முயற்சியில் இறங்குகிறார்கள். இதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
ஜேம்ஸ்பாண்ட் படங்களில் மட்டுமே இது போன்ற சர்வதேச பிரச்சனைகளையும் அணுகுண்டு போன்ற மிகப் பெரிய சென்சிட்டிவ் பிரச்சனைகளை வைத்து படம் எடுப்பார்கள். அதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் அப்படியொரு படத்தை நாம் எடுக்க வேண்டும் என்று இயக்குநர் மனு ஆனந்த் நினைத்துவிட்டார் போலிருக்கிறது. ர்.
ஆனால் கதை சொன்னவிதத்தில் இந்தப் படம் ஹாலிவுட் படமாகவும் இல்லாமல் இந்திய கமர்சியல் படமாகவும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானாக இந்தப் படம் உருவாகி ரொம்பவே நம்மை சோதிக்கிறது.
படத்தின் ஹீரோவான ஆர்யா சிக்ஸ் பேக் உடலை வைத்து அறிமுகமாகிறார். இத்தனை திரைப்படங்களில் நடித்தும் அவருடைய நடிப்பு மென்மேலும் வளரவில்லை என்பது ஒரு வருத்தமான விஷயம். தன்னால் முடிந்த அளவுக்கான நடிப்பை மட்டுமே இதில் செய்திருக்கிறார். சண்டை காட்சிகளில் ரொம்பவே வேகம் காட்டியிருக்கிறார். ஆனால் சண்டைக் காட்சிகள் மட்டுமே இங்கே நடிப்பாக எடுத்துக் கொள்ளப்படாதே.. இதில் ஆர்யா கொஞ்சமாகவே செய்திருப்பதால் நம்முடைய பாராட்டையும் கொஞ்சமாகவே வைத்துக் கொள்வோம்.
ஸ்டைலிஸான கேரக்டரில் சரத்குமார் நடித்திருக்கிறார். நாடா.. குடும்பமா என்று முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாடுதான் முக்கியம் என்று சொல்லி அவர் சென்றதினால் அவருடைய மகனும், மகளும் தன்னை வெறுக்கும் அளவுக்கு இருந்தாலும், நாட்டுப்பற்றைக் கட்டிக் காப்பாற்றுபவராக நடித்து நமது பரிதாபத்தை பெற்றுக் கொள்கிறார்.
கிளைமாக்ஸிலும் வந்து இவர்தான் இந்திய முழுவதும் தேடப்பட்டு வந்த ராணா என்று காட்டி இரண்டாம் பாகமும் வரும் என்று சொல்லி நம்மை மிரட்டியிருக்கிறார்கள்.
படத்தில் ஒரு இன்ப அதிர்ச்சியாக நமக்கு தெரிவது கௌதம் கார்த்திக்கின் கதாபாத்திரம்தான். அவரும் சிரித்துக் கொண்டே வில்லன் கதாப்பாத்திரத்தை அவ்வளவு அழகாக செய்து இருக்கிறார். அவருடைய தோற்றம் வில்லனாக நம்ப முடியவில்லை என்றாலும், ஒரு சாதாரண எளிமையான மனிதனாக இருந்து கொண்டு… தன்னுடைய நடிப்பின் மூலமே வில்லனாக காட்டி அவருடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் கௌதம் கார்த்திக்.
மிகப் பெரிய பட்ஜெட் படம் என்பதால் தென்னிந்திய மொழிகளிலும் இந்தப் படம் பேசப்பட வேண்டும் என்பதை மனதில் வைத்து மஞ்சு வாரியரை ரா அமைப்பின் அதிகாரியாக நடிக்க வைத்திருக்கிறார்கள். அவருடைய முகம் நடிப்பை காண்பித்தாலும் ஒரு சில இடங்களில் அவரை அதிகம் பயன்படுத்தவே இல்லை. ஆனாலும் கிளைமாக்ஸ் கட்சியில் அவரும் களத்தில் இறங்கி சண்டையிடும்பொழுது பாராட்டை பெறுகிறார்.
“கூடவே இருந்தானே செவ்வாழை… அவன்தான் ஒரிஜினல் திருடன்” என்ற சினிமா ரசிகர்களின் வார்த்தைகளுக்கு ஏற்ப காளி வெங்கட் முதலில் நல்லதொரு மனிதனாக வந்து கடைசியாக சந்தர்ப்ப சூழ்நிலையால் உளவுத் துறையிலேடயே உளவு பார்க்கும் வேலையை செய்தது தெரிய வர.. காளி வெங்கட்டின் அந்த நடிப்பு சூப்பர் என்று சொல்லலாம்.
மேலும் அதுல்யா ரவி, அனகா, ஜெயப்பிரகாஷ், ரைசா வில்சன் என்று முகம் தெரிந்தவர்களும் தங்களால் முடிந்த அளவுக்கான ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு காட்சிக்கும், அடுத்த காட்சிக்குமான இடைவெளி கொஞ்சமும் இல்லாமல் அடுத்தடுத்து காட்சியிலே கதையை நகர்த்திக் கொண்டே சென்று இருப்பதால் யாருடைய நடிப்பும் நம் மனதில் ஏறவில்லை என்பதுதான் உண்மை.
இது போன்ற திரைப்படங்களில் ஒளிப்பதிவு தரமாகத்தான் இருக்கும். அந்த வகையில் அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவு பிரமாதம் என்று சொல்லலாம். பல்வேறு நாடுகளுக்குச் சென்று படப் பதிவு செய்திருப்பதால் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு மாதிரியான கலர் டோன்களை வைத்து படமாக்கி இருக்கிறார்.
பின்னணி இசையில் இந்தப் படத்துக்கு கொஞ்சம் உயிர் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ். ஆக்சன் காட்சிகளில் இவரது இசை சண்டையின் உக்கிரத்தை வெகுவாக ரசிக்க வைத்திருக்கிறது.
சண்டை காட்சிகளை படமாக்கியவிதத்தில் ஒளிப்பதிவாளர் எப்படி இவ்வளவு கஷ்டத்தை தாங்கிக் கொண்டு படமாக்கினார் என்று தெரியவில்லை. அவ்வளவு டெக்னாலஜியை இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்காக சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் செல்வாவுக்கு நமது பாராட்டுக்கள்.
பல்வேறு நாடுகளில் நடக்கும் கதை என்பதாலும் கலை இயக்குநர் தன்னுடைய கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளரான ராஜீவனின் கடின உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது.
சண்டைக் காட்சிகளில் ஒளிப்பதிவாளருக்கு அடுத்து பட தொகுப்பாளர் ஜி.கே.பிரசன்னாவும் தன்னால் முடிந்த அளவுக்கான உழைப்பை இதில் கொடுத்திருக்கிறார். மிகச் சரியாக படத் தொகுப்பினை செய்திருப்பதால் படம் முழுவதும் கிரிப்பாகவே செல்கிறது.
சர்வதேச அளவிலான கதை என்பதால் கொஞ்சம் நாம் நம்புகின்ற வகையில் லாஜிக் குறைபாடுகளை இல்லாத வகையில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்தப் படத்தில் அத்தனையும் லாஜிக் ஓட்டைகளாகவே இருக்கின்றன. இயக்குநர் மனு ஆனந்த் சிறந்த இயக்குநர்தான். ஆனால் கதை, திரைக்கதையில் எப்படி இவ்வளவு அலட்சியமாக இருந்தார் என்று தெரியவில்லை.
முதலில் அடிப்படை கதையிலேயே பெரும் தவறு. இந்தியா சுதந்திரம் அடைந்த்திலிருந்தே நம்முடைய நட்பு நாடென்றால் அது சோவியத் ரஷ்யாதான். அந்த ரஷ்யாவே நம்மிடமிருந்து அணு ஆயுதம் தயாரிக்க உதவும் பொருட்களை திருடியிருக்கிறது என்பது ஏற்கவே முடியாத, தவறான திரைக்கதை.
ஏனெனில் இப்போதும் இந்தியா முழுவதிலும் இருக்கும் அணு ஆயுத உலைகளின் உருவாக்கத்திலும், திட்டத்திலும் பெரும் பங்கெடுத்திருப்பது ரஷ்யாதான். அப்புறம் ஏன் அவர்கள் இதை செய்யப் போகிறார்கள்..? மேலும் அந்த அணு ஆயுதப் பொருட்களை பாகிஸ்தானுக்கு ரஷ்யா விற்கப் போகிறது என்று திரைக்கதை எழுதியிருப்பது படு அபத்தம்.
அமெரிக்காவிடம் அந்தப் பொருள் சிக்கி அது பாகிஸ்தானுக்குப் போகப் போகிறது என்றால்கூட ஒத்துக் கொள்ளலாம். நாமும் மனதளவில் தேசப் பற்றோடு இந்தப் படத்தின் கதையோடு ஒன்றிப் போயிருக்கலாம். இயக்குநரின் தவறான திரைக்கதை ஆக்கத்தினால் படத்தின் துவக்கத்திலேயே நாம் பேக் டிராப்பாக வேண்டிய நிலைமை!
நான் ஒரு ‘ரா’ ஏஜென்ட் என்பதை தன்னுடைய காதலியிடம்கூட சொல்லாமல் தவிக்கும் ஆர்யா, கடைசியாக வேறு வழியில்லாமல் திருமணத்திற்காக காதலியிடமும், அவளுடைய வீட்டாரிடம் அனைத்தையும் சொல்லிவிடுகிறார். இதிலேயே லாஜிக் உடைந்துவிட்டது.
பின்பு ஒவ்வொரு தேசத்திலும் நடக்கின்ற சண்டையில் தேவாதி தேவர்களைப் போல இந்த கூட்டம் ஓடிப் போய் சண்டையிட்டு துப்பாக்கியால் சுட்டு தள்ளி அங்கிருந்து தப்பித்துக் கொண்டே வருவதெல்லாம் எந்த நாட்டிலும் நடக்காத ஒரு விஷயம்.
ஒருவரை சப்தமில்லாமல் கொலை செய்யலாம். ஆனால் நடுரோட்டில் அத்தனை பேரையுமே கொலை செய்து விட்டு தப்பித்து ஓடுவதெல்லாம் பழங்கால தமிழ் சினிமாவில்தான் வந்திருக்கும். இப்போதைய 2026 காலத்திலும் இப்படியே படம் எடுத்து இருக்கிறார் மனு ஆனந்த்.
மேலும் படத்தின் கடைசி முக்கால் மணி நேரத்தில் ஒவ்வொருவராக அம்பலப்பட்டு கொண்டே போகிறார்கள். ஏஜெண்டுகளே உளவாளிகளாக இருப்பதும் ஒவ்வொரு விஷயத்தையும் போட்டுக் கொடுக்கும் வேலையை செய்து இருப்பதும் ஒவ்வொன்றாக வெளியே வர… ஆர்யாவாவது உண்மையான ஏஜென்ட் ஆக இருப்பாரா என்ற சந்தேகத்தையே நமக்கு கொடுத்து சிரிக்க வைத்துவிட்டார் இயக்குநர் மனு ஆனந்த்.
படத்தின் பட்ஜெட் நினைத்துப் பார்க்காத அளவுக்கு கோடிகளை முழுங்கி இருக்கும் என்று தெரிகிறது. அந்த வகையில் இந்தப் படம் தொழில் நுட்பத்தில் மட்டுமே சிறப்பாக உள்ளது.
சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் முதல் வரிசையில் அமர்ந்து பார்க்கும் ரசிகனுக்கும் புரியும் வகையில் எடுத்திருந்தால் அவர்கள் கொண்டாடியிருப்பார்கள். ஆனால் அளவுக்கு அதிகமான ஆங்கில வசனங்களும், குறிப்பால் உணர்த்துவது போன்ற காட்சிகளும் சாதாரண பாமர ரசிகனுக்கு இந்தப் படத்தை எட்டாக் கனியாக கொண்டுபோய்விட்டது.
டப்பிங்கில்கூட மிஸ்டேக் என்பது ஆச்சரியமாக உள்ளது. சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லுகின்ற சில வசனங்கள்.. தாறுமாறான திரைக்கதை.. மனதில் ஒட்டாத செண்டிமெண்ட் காட்சிகள்.. இப்படி நிறையவே இந்தப் படத்தில் இருக்கின்றன.
இரண்டு வருட கால காத்திருப்புக்கு பின் இந்தப் படம் இப்படி வந்திருப்பது வருத்தத்திற்குரியது!
இந்த மிஸ்டர் எக்ஸ், நமக்கே தெரியாத எக்ஸாகவே இருந்து விட்டுப் போகட்டும்.!
RATING : 3 / 5









