மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் தலைவராக நடிகை ஸ்வேதா மேன்னும், செயலாளராக குக்கூ பரமேஸ்வரனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அம்மா அமைப்புக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 2025-2028-ம் ஆண்டுக்குரிய புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான புதிய தேர்தல் இன்று, ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று கொச்சியில் உள்ள மாரியட் ஹோட்டலில் நடைபெற்றது.
இதுவரையிலும் ‘அம்மா’ அமைப்பின் தலைவராக இருந்து வந்த மோகன்லால் இந்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்ததை அடுத்து இந்த முறை அணிகளே இல்லாமல் தனித்தனியாக பலரும் பல பதவிகளுக்கும் போட்டியிட்டார்கள்.
தலைவர் பதவிக்கு நடிகை ஸ்வேதா மேனனும், நடிகர் தேவனும் போட்டியிட்டார்கள்.
பொதுச்செயலாளர் பதவிக்கு நடிகை குக்கூ பரமேஸ்வரனும், நடிகர் ரவீந்தரும் போட்டியிட்டனர்.
துணைத் தலைவர் பதவிக்கு ஜெயன் சேர்தலா, நடிகை லட்சுமி பிரியா
பொருளாளர் பதவிக்கு நடிகர்கள் அனூப் சந்திரனும், உன்னி சிவபாலும் போட்டியில் இருந்தனர்.
இணைச் செயலாளர் பதவிக்கு நடிகை அன்சிபா ஹாஸன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு நடிகைகள் அஞ்சலி நாயர், ஆஷா அரவிந்த், நீனா குரூப், சஜிதா பேடி, சரயூ மோகன், நடிகர்கள் ஜாய் மேத்யூ, கைலாஷ். நந்து பொடுவல், டாக்டர் ரோனி டேவிட்ராஜ், சந்தோஷ் கீழாத்தூர், சுஜய் வர்கீஸ், டினி டாம் உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்டனர்.
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து பல்வேறு நடிகர்கள், இயக்குநர்கள் மீது நடிகைகள் கொடுத்த பாலியல் புகார்களினால் ‘அம்மா’ அமைப்பில் பெரும் சலசலப்பு எழுந்தது.
இதையொட்டி நடந்த சர்ச்சையில் அவ்வாறு புகாரை சந்தித்த கடந்த நிர்வாகத்தில் அம்மா அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்த நடிகர் சித்திக்கும், துணைத் தலைவர்களில் ஒருவராக இருந்த நடிகர் பாபுராஜ் இந்த முறை தேர்தலில் நிற்கவில்லை.
மேலும் இதுவரையிலும் அம்மா அமைப்புக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்ததே இல்லை. இப்போதுதான் முதல்முறையாக தேர்தல் நடைபெற்றது.
இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மலையாள சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகள் திரண்டு வந்து வாக்களித்தனர்.
அம்மா அமைப்பின் மொத்த உறுப்பினர்களான 504 பேரில் 298 பேர் வந்திருந்து வாக்களித்தனர்.
மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கி மாலை 6 மணியளவிலேயே முடிவுகள் வெளிவரத் துவங்கின. இரவு 7 மணிக்கு அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதன்படி தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகை ஸ்வேதா மேனன் 159 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகர் தேவன் 132 வாக்குகளையே பெற்று தோல்வியடைந்தார்.
பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகை குக்கூ பரமேஸவரன் 172 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகர் ஒரு தலை ராகம் ரவீந்தர் 115 வாக்குளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
துணைத் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் ஜெயன் சேர்தலா 267 வாக்குகளும், நடிகை லட்சுமி பிரியா 139 வாக்குகளும் பெற்று வெற்றியடைந்தனர்.
பொருளாளர் பதவிக்கு நடிகர் உன்னி சிவபால் 167 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அனூப் சந்திரன் 108 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.
இணைச் செயலாளர் பதவிக்கு நடிகை அன்சிபா ஹாசன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
11 செயற்குழு உறுப்பினர்களில் 4 இடங்கள் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த இடங்களுக்குப் போட்டியிட்ட 5 பெண்களில் அஞ்சலி நாயர்(219), நீனா குரூப்(218), சரயூ மோகன்(224), ஆஷா அரவிந்த்(221) ஆகிய நால்வரும் வெற்றி பெற்றனர். சஜிதா பேடி தோல்வியடைந்தார்.
மீதமிருந்த 7 இடங்களுக்குப் போட்டியிட்ட நடிகர்கள் சந்தோஷ் கீழாத்தூர்(243), வினுமோகன்(220), டினி டாம்(234), ஜாய் மேத்யூ(225), ரோனி டேவிட்ராஜ்(213), சுஜய் வர்கீஸ்(189), கைலாஷ்(257) ஆகியோர்களும் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். நடிகர் நந்து பொடுவில் தோல்வியடைந்தார்.
உடனேயே பதவியேற்பு வைபவமும் நடைபெற்றது. தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வியடைந்த நடிகர் தேவன் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.










