மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வின் நிர்வாகக் குழுவினர் அனைவரும் ராஜினாமா செய்துவிட்டனர்.
கடந்த திங்கள்கிழமையன்று கேரளா அரசால் வெளியிடப்பட்ட ஹேமா அறிக்கையின் தொடர்ச்சியாக ’அம்மா’ அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நடிகர்கள், மற்றும் மலையாள இயக்குநர்கள் சிலர் மீது மலையாள நடிகைகள் சிலர் பாலியல் வன்கொடுமை மற்றும் தவறான நடத்தை குற்றச்சாட்டுகளன் எதிரொலியாய் இந்த மொத்த ராஜினாமாவும் நடந்துள்ளது.
மலையாள நடிகர் சங்கமான ’அம்மா’ அமைப்பின் பொதுச்செயலாளர் சித்திக், துணைத் தலைவர் பாபுராஜ், முன்னாள் செயலாளர் எடவலா பாபு, முன்னாள் நிர்வாகி முகேஷ், முன்னாள் துணைத் தலைவர் மணியன் பிள்ளை ராஜூ ஆகியோர் மீது தற்போது பாலியல் புகார் எழுந்துள்ளது.
இதையொட்டி ‘அம்மா’ அமைப்பின் தலைவரான நடிகர் மோகன்லால் தலைமையில் இன்று காலையில் அம்மா அமைப்பின் நிர்வாகக் குழுக் கூட்டம் வீடியோ கான்பிரன்ஸ் முறையில் நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் தவறான நடத்தை குற்றச்சாட்டுகள் சங்க உறுப்பினர்களுக்கு எதிராக எழுப்பப்பட்டதால், இந்த நிர்வாகக் குழுவை கலைக்க வேண்டும் என்று அனைவரும் ஏகோபித்து முடிவு செய்துள்ளனர். இதன்படி, அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த நிர்வாகக் குழு கடந்த ஜூன் மாதம்தான் பதவியேற்றது. இவர்களுக்கு 2027-ம் ஆண்டுவரையிலும் பதவிக் காலம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியை ராஜினாமா செய்தாலும் சங்கம் தொடர்ந்து நடப்பதற்காக இடைக்காலக் கமிட்டியாக இது செயல்படும் என்றும், அடுத்த 2 மாதங்களுக்குள் சங்கத்தின் பொதுக் குழு கூட்டப்பட்டு அதில் புதிய நிர்வாகத்திற்கான தேர்தல் நடைபெறும் என்று அம்மா அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோகன்லாலைத் தவிர, ராஜினாமா செய்தவர்களில் ஜெகதீஷ், ஆர்.ஜெயன் (துணைத் தலைவர்கள்), நடிகர்கள் உன்னி முகுந்தன் மற்றும் பாபுராஜ் முறையே பொருளாளர் மற்றும் இணைச் செயலாளராக இருந்தனர்.
மேலும் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் நடிகர்கள் கலாபவன் ஷாஜோன், சூரஜ் வென்ஜராமுடு, ஜாய் மேத்யூ, சுரேஷ் கிருஷ்ணா, டினி டாம், அனன்யா, வினு மோகன், டோவினோ தாமஸ், சரயு மோகன் மற்றும் அன்சீபா ஆகியோரும் அடங்குவர்.