கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்து நாளையுடன் நாற்பது நாட்கள் நிறைவடைய உள்ளது.
இந்த நிலையில் மேலும், இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கினை கடைப்பிடிக்க மத்திய அரசு நேற்று மாலை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் திரைப்பட துறையில் படப்பிடிப்புகள், போஸ்ட் புரொடெக்க்ஷன், தியேட்டர்களில் புதிய படங்கள் திரையிடல் ஆகிய பணிகள் அனைத்தும் கடந்த 45 நாட்களாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழ்த் திரைப்படத் துறையின் வேலை வாய்ப்பை மட்டுமே நம்பி உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருவாய் இன்றி… தங்களது வாழ்வாதாரத்தையும் இழந்து தவியாய் தவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் புதிய படங்களை விற்பனை செய்வதற்கு தயாரிப்பாளர்கள் – விநியோகஸ்தர்கள்-திரையரங்கு உரிமையாளர்களுக்கு இடையில் இணைப்பு பாலமாக இருந்து, கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கான வியாபாரங்கள் முடிவதற்கு காரணமாக உள்ளவர்கள் மீடியேட்டர்கள்.
இவர்கள் அனைவரும் உறுப்பினர்களாக உள்ள ‘அம்மா மூவி அசோசியேசன்’ அமைப்பு… தங்கள் உறுப்பினர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, தங்களது சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு அறிவிப்புகள், மற்றும் அதனை அமுல்படுத்தும் வகையிலான கடுமையான நடவடிக்கைகளை மட்டுமே எடுத்து வருகின்றன. மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கும் அளவுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிவாரண உதவிகள் போதுமானதாக இல்லாததுடன்… அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச நிவாரணங்களும் முழுமையாக அனைத்து மக்களுக்கும் இன்றுவரையிலும் சென்றடையவில்லை.
இந்தச் சூழ்நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் வாரத்தில் தனது உறுப்பினர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும், மளிகை சாமான் மற்றும் பண உதவியை வழங்கியது ‘அம்மா மூவி அசோசியேஷன்’.
ஊரடங்கு காலம் 40 நாட்களை நிறைவு செய்யும் நிலையில், மேலும் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் தங்களது உறுப்பினர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க… நேற்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் மளிகை சாமான்களை தங்களது உறுப்பினர்களுக்கு ‘அம்மா மூவி அசோசியேஷன்’ அமைப்பு வழங்கி வருவது திரைத்துறையினர் மத்தியில் இப்போது விவாதப் பொருளாகி வருகிறது.
இது சம்பந்தமாக ‘அம்மா மூவி அசோசியேஷன்’ அமைப்பின் செயலாளர் சரவணன் பேசியபோது, “தமிழ் சினிமாவில் வருடந்தோறும் 200 திரைப்படங்கள்வரை தயாரிக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகின்றன. சுமார் 2000 கோடி மதிப்புள்ள இந்த படங்களின் தமிழக வியாபாரம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, வட இந்தியா, வெளிநாட்டு விநியோக உரிமை, ஆடியோ உரிமை, ரீமேக் உரிமை என வியாபாரம் செய்வதற்கு சரியான நபர்களை அடையாளம் காண தயாரிப்பாளர்களுக்கு பாலமாக இருப்பவர்கள் பிலிம் மீடியேட்டர்கள்தான்.
இவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாப்பது தமிழ் சினிமாவிற்கு முக்கியமானது. எங்களது இந்த முயற்சிக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், இயக்குநர்கள் என்று பல தரப்பினரும் தாராளமாக உதவி செய்து வருகின்றனர். அதனை ஒருங்கிணைக்கும் பணிகளை மட்டுமே நாங்கள் செய்து வருகிறோம்…” என்றார்.













