இந்தியாவில் முதன்முதலாக கொரோனா வைரஸ் இருப்பதாகக் கண்டறியப்பட்டது கேரளாவில்தான். அதேபோல் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதிலும் முதன்மை மாநிலமாகத் திகழ்வதும் கேரளா மாநிலம்தான்.
மாநிலத்தில் வைரஸ் பரவல் சமூகப் பரவலாகப் போகும் நிலைக்கு முன்பாகவே தடுக்கப்பட்டுவிட்டதால் இப்போது நாளை முதல் பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அதில் முக்கியமானதாக சினிமா துறையினருக்கு சலுகை கிடைத்திருக்கிறது என்பதும் ஒன்று.
இது தொடர்பாக நேற்றைக்கு பத்திரிகையாளர்களிடத்தில் பேசிய கேரளாவின் செய்தி, கலாச்சாரத் துறையின் அமைச்சரான ஏ.கே.பாலன், “மலையாள சினிமா துறையினர் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் தயாரிப்பாளர்கள் தங்களது படங்கள் மற்றும் சீரியல்களின் போஸ்ட் புரொடெக்ஸன் பணிகளை வரும் திங்கள்கிழமை முதல்(மே 4-ம் தேதி முதல்) மேற்கொள்ளலாம்..” என்று அறிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், “ஆனால், அந்தப் பணிகளை மேற்கொள்ளும் இடத்தில் 5 நபர்கள் மட்டுமே இடைவெளிவிட்டு பணியாற்ற வேண்டும். அந்த ஸ்டூடியோ முழுவதும் வைரஸை தடுக்கும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு சுகாதாரமாக இருக்க வேண்டும்…” என்றும் சொல்லியிருக்கிறார்.
இது பற்றி பேசிய மலையாளத் திரையுலகத்தின் மூத்த தயாரிப்பாளரான சுரேஷ் குமார், “மாநில அரசின் இந்தத் தளர்வு பெரிய அளவுக்கு எங்களுக்கு நன்மை கொடுக்காது. ஏனெனில் டப்பிங், ஒலி வடிவமைப்பு மற்றும் படத் தொகுப்பு ஆகிய பணிகளை ஒரே ஸ்டூடியோவில் 5 பேர் மட்டுமே செய்ய முடியாது.
மேலும், வேலையே இல்லாமல் இருக்கும் இந்த நேரத்தில் பல தொழில் நுட்பக் கலைஞர்களும் பல்வேறு இடங்களில் வசித்து வருகிறார்கள். அனைவரையும் ஒரே இடத்திற்கு வரவழைப்பது சாத்தியமா என்றும் தெரியவில்லை. இருந்தாலும் இந்தத் தளர்வினால் ஒவ்வொரு வேலையாக எங்களால் தொடர்ந்து செய்ய முடியும் என்று நம்புகிறோம்…” என்று கூறியிருக்கிறார்.
இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவினால் மலையாள சினிமாவில் 12-க்கும் மேற்பட்ட பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக முடியாமல் மாட்டிக் கொண்டுள்ளன. மேலும் 26 திரைப்படங்களின் படப்பிடிப்புகள், போஸ்ட் புரொடெக்சன்ஸ் பணிகள் அனைத்தும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.









