2013-ல் வெளியான ‘பிரேம கதா சித்ரம்’ என்கிற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்தப் படம்.
இப்போதைய பேய்ப் பட சீசனை பார்த்து துணிச்சலுடன் படமாக்கியுள்ளார்கள். இதுவும் ஒரு பேய்ப் படம்தான். ஆனால் கொஞ்சம் வித்தியாசமானது..!
சிவகாசியில் கல்லூரியில் படிக்கும் கிருஷ்ணாவும், நாயகி ஹாசிகா த்த்தும் காதலித்து வருகிறார்கள். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் வீடு திரும்பிய ஹாசிகாவுக்கு உடனடியாக அவரது மாமன் சென்றாயனுடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்து விடுகிறார்கள். இதனால் பயந்து போன ஹீரோயின் ஹாசிகா ஹீரோவுக்கு போன் செய்து தான் கோயிலுக்கு வரும்போது தன்னை கூட்டிச் செல்லும்படி சொல்கிறாள். ஹீரோவும் இதேபோல ஹீரோயினை சாட்சாத் சிவபெருமான் முன்னிலையிலேயே இழுத்துக் கொண்டு ஓடுகிறார். பின்னாலேயே மாமா சென்றாயன் விரட்டி வந்தும் காதலர்களை பிடிக்க முடியவில்லை..
ஹீரோ தனது நண்பன் சென்னையில் வசித்து வரும் ஒரு மாளிகைக்கு ஹீரோயினை அழைத்துக் கொண்டு வருகிறான். “அங்கே 2 நாட்கள் இருந்த பின்பு திங்கட்கிழமையன்று பதிவாளர் அலுவலகத்தில் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம்..” என்கிறான் பிரெண்ட். கல்யாணத்தை நினைத்து காதலர்கள் குஷியுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
கிடைத்த நேரத்தில் பொழுது போகாமல் கிரிக்கெட் விளையாட துவங்குகிறார்கள். 1 பந்து மீதமிருக்கும் நிலையில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில்.. பந்து வீசுகிறாள் ஹீரோயின். ஹீரோ அடிக்கிறார்.. பந்து எக்குத்தப்பாக எங்கெங்கோ சென்று மோதி, பறந்து மீண்டும் மோதி பீல்டராக இருந்த அந்த வீட்டு வேலைக்காரனை அடித்து வீழ்த்துகிறது..
அன்றைய இரவிலேயே அந்த வீட்டு பெட்ரூமில் இருந்த அந்த பேய் ஹீரோயினின் உடம்பில் ஒட்டிக் கொள்கிறது.. பின்பு அது செய்யும் அட்டூழியங்கள்தான் படமே..!
முற்பாதியில் பேயை எப்போது காட்டுவார்கள் என்கிற பீலிங்கையும், பிற்பாதியில் பேயின் அடுத்த ஆட்டம் என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பையும் வெகுவாகத் தூண்டிவிட்டு ரசிக்க வைக்கிறது இயக்குநரின் அசத்தலான இயக்கம்..!
படத்தின் முற்பாதியை பிற்பாதியில் வரும் நகைச்சுவை காட்சிகளே காப்பாற்றுகின்றன. கடைசியாக ‘யாமிருக்க பயமே’ படத்தில்தான் பேயின் சேட்டைகளை கண்டு சிரித்தோம். இப்போது இந்தப் படத்தில்..
ஹீரோ, நண்பன், வேலைக்காரன் மூவரையும் ஹாலில் வைத்து புரட்டியெடுக்கும் காட்சியில் கேமிராவும், இசையும் பின்னிப் பிணைந்திருக்கிறார்கள். இந்த ஒரு காட்சியே படத்தின் மீதான பார்வை அழுத்தத்திற்கு காரணமாக இருக்கிறது. அடுத்து அவர்களைத் தேடி வரும் சென்றாயன் அண்ட் கோ செய்யும் காமெடியும்.. இவர்களைத் தேடி வரும் போலீஸ்காரர்கள் படும்பாடும் அரங்கத்தில் தொடர்கின்றன சிரிப்பலைகள்.. இந்த மூன்று அணியினருமே பேயிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட நிலையில் மூன்று புறமும் அமைதியாக அமர்ந்திருக்கும் அந்த சின்ன ஷாட்டிற்கே அரங்கம் அதிர்கிறது. சிறப்பான இயக்கம்..!
ஹீரோ தமிழுக்கு புதுமுகம் என்றாலும் ஸ்கிரீனுக்கு பழைய முகம் போலவே நடித்திருக்கிறார். பய உணர்ச்சியை முகத்தில் நன்கு காட்டியிருக்கிறார். வொயிட் என்ற பெயரில் நடித்திருக்கும் முனீஸ்ராஜா பாதி இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார். இவருடைய ஒவ்வொரு அசைவும்கூட நகைச்சுவையைத் தருகின்றன.
ஹீரோயின் பாடல் காட்சிகளில் காதலியாகவும், பேயாக தோன்றியிருக்கும் காட்சிகளில் பேயாகவும் நிஜமாகவே நடித்திருக்கிறார். பேய் மேக்கப் முதலில் பயமுறுத்தாமல் இருந்தாலும் போகப் போக பிக்கப்பாகிறது இந்தப் பேய்.. டோண்ட் டச் மீ என்ற குரலுக்கு கொடுத்திருக்கும் அதிகப்படியான உணர்ச்சிகரமான நடிப்பை பாராட்ட வேண்டும்.
நண்பனாக வரும் ஜீவா அவ்வப்போது அள்ளி வீசும் கமெண்ட்டுகளும், பேயைக் கண்டு பயப்பட்ட நிலையில் போலீஸுக்கு தூபம் போடும் வசனங்களும் சைடாக கை தட்டலை அள்ளுகின்றன. சில பன்ச் டயலாக்குகளும் ரசிக்க வைத்திருக்கின்றன. இவருக்குப் போட்டியாக சென்றாயனும் தன் பங்குக்கு கலங்கடிக்கிறார். நிச்சயத்தார்த்த விழாவில் ஹீரோயினை பார்த்து லுக்குவிடும் அழகோ அழகு.. அந்த வீட்டைக் கண்டுபிடித்து வந்துவிட்டு ஹீரோயினை மடக்கப் போகிறேன் என்கிற கெத்தில் அவர் பேசும் பேச்சும்.. பாடி லாங்குவேஜூம்.. இன்னுமொரு வடிவேலு, சூரி வரிசையில் இவரையும் நல்லதொரு காமெடி நடிகர் வரிசையில் சேர்க்க வைக்கிறது..! சென்றாயன் இதையே தொடர்ந்தால் அவருக்கும் நல்லது..!
இசையமைப்பாளர் உமேஷிற்கு ஒரு சபாஷ். 2 இடங்களில் பின்னணி இசையால் உடம்பு தூக்கிப் போடுகிறது.. நிச்சயம் தியேட்டரில் அந்த காட்சிகளுக்கு அமோக வரவேற்பு இருக்கும்.. இதேபோல இயக்குநர் வீராவின் அதீத உழைப்பிற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்துவும் கை கொடுத்திருக்கிறார். பேய் படங்களுக்கே உரித்தான முன்பே பயமுறுத்தும் ஷாட்டுகளில்கூட நிஜமாகவே பயமுறுத்தியிருக்கிறார்கள். சி.ஜி. மற்றும் சவுண்ட் எபெக்ட்ஸ் அமைத்தவர்களுக்கு ஒரு சிறப்பு பாராட்டுக்கள்..!
பேய் இருந்ததற்கான காரணத்தையும் ஒரு அழகான சின்னஞ்சிறிய கதை போன்ற வடிவத்தில் சொல்லியிருக்கிறார்கள். இந்த மேக்கிங்கும் பிரமாதம்தான்.. உதவியிருக்கிறார்கள் கணவன் மனைவியாக நடித்த நடிகர் ஸ்ரீமனும், நடிகை மதுமிதாவும்..!
படத்தின் முடிவில் ‘தொடரும்’ என்று போட்டு முடித்திருக்கும் இடம்தான் ஆச்சரியமானது. பொதுவாக எந்தவொரு தமிழ்ப் படத்திலும் இப்படியொரு சூழ்நிலையில் படத்தை முடிக்க மாட்டார்கள். இந்த இயக்குநருக்கு ரொம்பத்தான் தில்லு..!
படம் மொத்தமே 106 நிமிடங்கள்தான் என்பதால் கூடுதலாக 20 நிமிட காட்சிகளை வைத்திருக்கலாம்.. தெலுங்கு ஒரிஜினலில் இருந்த காட்சிகளைக்கூட சேர்த்திருக்கலாம்.. ஏன் அவசரமாக முடித்தார்கள் என்று தெரியவில்லை..?!
லாஜிக் மீறல்களையெல்லாம் பார்த்தால் இது போன்ற படங்களை ரசிக்கவே முடியாது என்பதால் விட்டுவிடுவோம். இதுவொரு நடக்க வாய்ப்பே இல்லாத கதை.. நினைத்துப் பார்க்கவே முடியாத திரைக்கதை.. ஆனால் நகைச்சுவை கலந்த சிறப்பான இயக்கம் என்பதால் பேய்ப் பட ரசிகர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படமாகிறது..!
வருடத்தின் கடைசியில் ஒரு காமெடி பேய் படம்.. மிஸ் பண்ணிராதீங்க..!