full screen background image

நாங்கெல்லாம் ஏடாகூடம் – சினிமா விமர்சனம்

நாங்கெல்லாம் ஏடாகூடம் – சினிமா விமர்சனம்

குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. இதன் களம் வடசென்னைதான்..

படத்தின் ஹீரோவான மனோஜ் தேவதாஸ் சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்து அனாதையானவர். இவருக்கு அடைக்கலம் கொடுத்தவர் ஜார்ஜ். இவர் குத்துச் சண்டை மாஸ்டர். அந்தப் பகுதியில் ரவுடிகளுக்கும், நல்லவர்களுக்கும் நன்கு தெரிந்த, மரியாதையானவர்.. இவர் மனோஜை வளர்த்து, அவனுக்கும் குத்துச் சண்டை பயிற்சியெல்லாம் கொடுத்து வீரனாகத்தான் வளர்த்திருக்கிறார்.

படத்தின் ஹீரோயின் இன்னொரு பக்கம்.. ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் சிறு வயதிலேயே தன்னுடைய அப்பாவை இழந்தவர். இவருடைய அப்பாவிடம் இருந்த ஒரு வைரத்திற்காக வில்லன் தன் கண்ணெதிரிலேயே கொலை செய்ததை இப்போதும் மறக்க முடியாமல் தவிக்கிறார்.

வில்லன் ராஜேஷ்.. அதே வடசென்னை பகுதியில் ஒரு தாதாவாக வலம் வருபவர். பெட்டிங் வைத்து காசு சம்பாதிக்கிறார். நிறைய பேருக்கு வட்டிக்குப் பணம் கொடுத்து கடைசியில் வீட்டைப் பறிக்கும் சமூக சேவையையும் செய்பவர். இவரிடத்தில் ஜார்ஜ் மாஸ்டரும் வட்டிக்குப் பணம் வாங்கியிருக்கிறார்.

ஹீரோவும், அவனது நண்பனும் வெட்டியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஹோட்டலிலும் பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டு எஸ்கேப்பாகி வருகிறார்கள். இந்த நேரத்தில் ராஜேஷ் ஒரு பெட்டிங் குத்துச் சண்டை போட்டியை தயார் செய்கிறார். அதில் மோதி தோற்பதற்காக ஜார்ஜிடம் ஒரு வீரனை கேட்கிறார். ஜார்ஜ் இதற்கு மறுக்க.. பிரதிபலனாக ஜார்ஜ் கொடுக்க வேண்டிய கடன் தொகையை தான் தள்ளுபடி செய்வதாகச் சொல்லி ஆசை காட்டுகிறார் ராஜேஷ்.

ஜார்ஜ் வேண்டாவெறுப்பாக ஹீரோவை அனுப்பி வைக்கிறார். ஆனால் ஹீரோ அந்தப் பந்தயத்தில் ஜெயித்துவிடுகிறார். ஹீரோ தோற்றுவிடுவார் என்று பெரும் அளவுக்கு பந்தயம் கட்டியிருந்த ராஜேஷுக்கு இதில் பெரும் நஷ்டம். லட்சக்கணக்கில் பணத்தை இழக்கிறார்.

விட்ட பணத்தை எடுக்க மீண்டும் ஒரு குத்துச் சண்டை பந்தயத்தை ஏற்பாடு செய்கிறார் ராஜேஷ். இந்தப் போட்டியில் ஜார்ஜ் ஆள் அனுப்ப வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார் ராஜேஷ். ஜார்ஜ் அனுப்பும் ஆள் வெற்றி பெற்றுவிட்டால், இனி நான் பெட்டிங் மேட்ச்சுகளை இங்கே நடத்தவேமாட்டேன் என்றும், அதற்கு மாறாக ஜார்ஜின் ஆள் தோற்றுவிட்டால் ஜார்ஜ் இனிமேல் வடசென்னை பகுதியில் குத்துச்சண்டை சம்பந்தமாக எதிலும் ஈடுபடக்கூடாது நிபந்தனை விதிக்கிறார்.

 ஜார்ஜும் இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டு தனக்கு அடுத்த நிலையில் இருக்கும் பாலாஜியை போட்டிக்குத் தயார் செய்கிறார். ஆனால் பாலாஜி பணத்திற்காக மயங்கி ராஜேஷுக்கு உடந்தையாகிவிடுகிறார். ஆனால் இது ஹீரோவுக்குத் தெரிய வந்துவிட.. பயந்து போய் தான் போட்டியிட விரும்பவில்லை என்கிறார். இதனால் ஜார்ஜ் ஹீரோவையே களத்தில் குதிக்கச் சொல்கிறார். ஹீரோவும் தயாராக.. கடைசியில் என்னவானது என்பதை தியேட்டருக்குச் சென்று பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்..!

ஹீரோ மனோஜ், ரேணுகுண்டா ஹீரோ ஜானியை அச்சில்வார்த்தாற்போல் இருக்கிறார். நடிப்பில் இன்னும் நாலைஞ்சு படங்களில் நடித்த பின்புதான் தேற முடியும்போல தெரிகிறது.. ஹீரோயின் வீணா நாயரும் அப்படியே.. பிச்சைக்காரிக்கு காசு கொடுப்பதற்கு பதிலாக பிஸ்கட் பாக்கை நீட்டி பசியை ஆற்றும் செயலை வெளிப்படுத்தியமைக்கு மட்டும் இயக்குநருக்கு நன்றி சொல்லுவோம்..!

வில்லன் ராஜேஷ் புதுமுகம் என்றார்கள். பார்த்தால் பழைய முகம் போலவே தெரிகிறது.. கொஞ்சம் மிரட்டியிருக்கிறார். தமிழ்ச் சினிமாவில் இனி தொடர்ந்து வில்லனாக வலம் வர வாய்ப்புண்டு. ஜார்ஜ் வேடத்தில் நடித்திருக்கும் விஜய்க்கு மிக அழுத்தமான வேடம். பார்ட்டிக்கு வந்த இடத்தில் குடிப்பவர்களைப் பார்த்து குமுறிவிட்டுப் போவதும், வில்லனிடம் பேசும்போது கோபத்தை அடக்கிக் கொண்டு பேசுவதுமாக ஒரு மாஸ்டரை வெளிக்காட்டியிருக்கிறார்.

சார்லஸ் மெல்வினின் இசையில் பாடல்கள் சுமார்ம்தான். சரவணன் பிள்ளையின் ஒளிப்பதிவில் வட சென்னையின் இன்னொரு பக்கம் தெரிகிறது.

குத்துச் சண்டையை மையமாக வைத்திருந்தாலும் சின்ன பட்ஜெட் படமென்பதால் எந்த மெனக்கெடலும் இல்லாமல் அனைத்து காட்சிகளையும் படமாக்கியிருக்கிறார்கள். காட்சிகள் அனைத்தும் திடீரென்று சம்பந்தமில்லாமல் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. 2014-ல் படம் செய்கிறோம் என்கிற நினைப்பே இல்லாமல் இயக்குநர் எடுத்துவிட்டாரோ என்ற சந்தேகம் வருகிறது..!

வில்லனும், இன்னொரு வில்லனும் ஆளுக்கொரு பெண்ணுடன் வருகிறார்கள். அந்தப் பெண்ணுக்கு என்ன வேலை என்றே தெரியவில்லை. வில்லன் வீட்டிலும் குடித்துக் கொண்டிருக்கிறார். இந்தக் காலத்திலும் இப்படியா..? ம்ஹூம்..

ஹீரோயின்-ஹீரோ அறிமுகமாகும் காட்சியும், பிற்பாதியில் ஹீரோயின் ஹீரோவின் பின்னாலேயே வரும் காட்சிகளும், வில்லனை அடையாளம் காணும் காட்சியிலும் இயக்குநர் கஷ்டமேபடாமல், மூளையைக் கசக்கிக் கொள்ளாமல் அப்படியே வந்திருங்க என்று சொல்லி இருவரையும் அழைத்து வந்துவிட்டார். ஒண்ணுமே புரியலை..

கிளைமாக்ஸ் சண்டை காட்சியையாவது நன்றாக எடுத்திருக்கலாம்.. சண்டை காட்சிகளும் கொஞ்சமாகத்தான் மிரட்டியிருக்கின்றன. பாடல் காட்சிகள் பரவாயில்லை ரகம்..  நல்ல கதைக் களம்.. குத்துச் சண்டை.. பெட்டிங்.. வடசென்னை தாதா கும்பல்.. கமர்ஷியலாக கலக்கியிருக்கலாம். எல்லாத்தையும் கோட்டைவிட்டுவிட்டார்கள்..

‘ஏடாகூடம்’ என்ற டைட்டிலை வைத்து படத்தையும் அதுபோலவே எடுத்தவிட்டார்கள் என்கிற வருத்தம்தான் மிஞ்சுகிறது..!

Our Score