டிசம்பர் 12 நெருங்க, நெருங்க சமூக வலைத்தளங்களிலும், சினிமா வட்டாரத்திலும் ‘லிங்கா’ பீவர் அடங்காத காய்ச்சலாக தகித்துக் கொண்டிருக்க.. கதைக்கு உரிமை கோரியவர்களும் இ்ன்னொரு பக்கம் அடங்காதவர்களாகவே இருக்கிறார்கள்.
சென்ற வாரம் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இயக்குநர் ரவிரத்தினத்தின் ‘லிங்கா’ படத்தின் கதை தொடர்பான வழக்கு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
இப்போது இயக்குநர் ரவிரத்தினம் இந்த தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் முன்பு மேல் முறையீடு செய்துள்ளாராம்..!
ரவிரத்தினம் தனது ‘அப்பீல்‘ மனுவில் “லிங்கா‘ படத்துக்கு தடை கோரி நான் தாக்கல் செய்த மனு தனி நீதிபதியிடம் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் ரஜினிகாந்த் பதில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
அதில், ‘லிங்கா‘ படத்தின் கதை மற்றும் திரைக்கதையை பொன் குமரன் எழுதி இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. ஆனால், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘லிங்கா’ படத்தின் கதையை பொன் குமரன் எழுதி உள்ளார் என்றும், படத்தின் திரைக்கதையை மட்டுமே தான் எழுதி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த 2 பேரின் பதில் மனுவில் உள்ள முரண்பாடுகளை தனி நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யவேண்டும். அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்…” என்று கேட்டுள்ளார்.
இந்த மனு நாளை டிசம்பர் 8–ம் தேதி விசாரணைக்கு வருகிறதாம்.
இதேபோல சென்னை வடபழனியைச் சேர்ந்த சக்திவேல் என்ற இயக்குநரும் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் லிங்கா படத்தின் கதை தன்னுடையது என்றும், ‘லிங்கா’ படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்றும் கோரி வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கு நாளை மறுநாள் டிசம்பர் 9-ம் தேதியன்று விசாரணைக்கு வருகிறது..!
ஆக மொத்தம்.. இனிமேல் படம் தயாரிப்பதாக இருந்தால் முதலில் ஒரு சிறந்த வழக்கறிஞரை கம்பெனிக்காக நியமித்துவிட்டுத்தான் தயாரிப்பில் இறங்க வேண்டும் போலிருக்கிறது..!