full screen background image

நடிகர் விஷால் மீது ஜாதிய குற்றச்சாட்டினை வீசும் தயாரிப்பாளர்..!

நடிகர் விஷால் மீது ஜாதிய குற்றச்சாட்டினை வீசும் தயாரிப்பாளர்..!

தமிழகத்தின் இப்போதைய டிரெண்ட், யார் எந்தக் கருத்தைச் சொன்னாலும் அதனை கருத்தாக அணுகாமல் அவர்களது ஜாதியின் நோக்கில் அந்தப் பிரச்சினையை பேசுவது என்பதாக இருக்கிறது.

இது அரசியல்வியாதிகளிடமிருந்து மெல்ல மெல்ல வைரஸாக பரவி, இப்போது கலையுலகத்திற்குள்ளும் கால் பதித்துவிட்டது.

“இயக்குநர் சேரன், ‘ஈழத் தமிழர்கள் திருட்டு டிவிடி தொழிலில் ஈடுபடுகிறார்கள்’ என்று சொன்னது தேவையில்லாதது..” என்று நடிகர் விஷால் நேற்றைக்கு தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து ‘இவர் யார் அதைக் கேட்க..? இவருக்கு ஈழம், ஈழம் மக்கள் பற்றி என்ன தெரியும்..?’ என்றெல்லாம் கூக்குரல் எழுந்தன.

இந்தக் குரல்களின் நீட்சி படிப்படியாக உயர்ந்து இப்போது ஒரு தெலுங்கரான விஷால், தமிழரான சேரனை பற்றிப் பேசலாமா..? அவருக்குத் தகுதியிருக்கிறதா என்கிற லெவலுக்கு போயிருக்கிறது.

cheran-1

கூடுதலாக அடுத்த வருடம் நடைபெறவுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலில் புதிய, இளைய தயாரிப்பாளர் ஒன்றிணைந்து போட்டியிடப் போகிறோம் என்று விஷால் அறிவித்ததும் இந்த ஜாதி ரீதியிலான தாக்குதல் இன்னமும் அதிகரித்துவிட்டது.

இதன் முதல் எடுத்துக்காட்டாக ‘அமைதிப்படை 2-ம் பாகம்’ மற்றும் ‘கங்காரு’ ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “ஒரு தெலுங்கரான விஷால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை பற்றிக் கவலைப்பட வேண்டாம். அதனை கவனித்துக் கொள்ள தமிழாய்ந்த தமிழர்கள் இருக்கிறார்கள்..” என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நடிகர் விஷாலை கண்டித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள கண்டன அறிக்கை இது :

‘ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து’ என்ற பழமொழி அப்படியே இந்த விஷாலுக்கும் பொருந்தும்.

செலிபிரிட்டி கிரிக்கெட்டில் ஆரம்பித்தது வினை. இந்த அப்பாஸ் ஒழுங்கா இருந்திருந்தா, இந்த ‘புரட்சித் தளபதி’ கேப்டனாயிருக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும்.

அங்கேதான் இந்த ‘ஆட்டைக் கடிக்கும் வேலை’ ஆரம்பித்தது. கேப்டனானதும் தெலுங்கில் மட்டுமே மாட்லாடும் ரமணா, விஷ்ணு விஷால் போன்ற இன்னும் சிலரையும் சேர்த்துக் கொண்டு வலம் வர ஆரம்பித்தார் விஷால்.

vishal-1

கிரிக்கெட்டில் கேப்டனானதும், நடிகர் சங்கத்துக்கும் கேப்டனாக ஆசைப்பட்டு நாடகங்கள் நடத்தி பதவிக்கும் வந்தாச்சு. மாட்டையும் கடிச்சாச்சு.

இப்போ குறிக்கோள் தயாரிப்பாளர் சங்கம். வாங்க வேணாங்கல. ஆனா, தயாரிப்பாளர் சங்கத்தையும் தெலுங்கு பேச வச்சிரலாம்னு கனவுலகூட நினைக்காதீங்க ராசா. அதை சிறப்பான தமிழர்களே வழி நடத்துவார்கள்.

நீங்க கொஞ்சம் திரும்பிப் பார்த்து இந்த நடிகர் சங்கத்துக்கு என்னவெல்லாம் சொல்லிப்புட்டு பதவிக்கு வந்தீங்களோ அதை நிறைவேத்தப் பாருங்க.

சும்மா ‘அங்கே கூழ் ஊத்தினேன்’. ‘இங்கே பாடப் புத்தகம் கொடுத்தேன்’னு நடிகர் சங்கத்துக்கு வெளியில வேலை செய்றது போறாதுன்னு, கூடவே ‘அவர் ஒண்ணுக்குப் போனார்..’, ‘அவர் ரெண்டுக்குப் போனார்’னு பேனர் வைக்க.. செய்தியனுப்ப.. ஒரு கும்பல் வேற. எதுக்கு இந்த வீண் விளம்பரம்..?

நடிகர் சங்கத்துல ஒண்ணும் கிழிக்க முடியாத நீங்க, ஏன் தயாரிப்பாளர் சங்க நாற்காலியை நோக்கி இந்த ஓட்டம் ஓடணும்..???

செய்தித் தாள்களில் பணி செய்வதல்ல பதவி. வாங்கிய காசில் இப்பவே ஊழல் புகார். அட்லீஸ்ட் மக்களிடமிருந்து வசூலித்த அந்த இரத்தக் காசில் கட்டிடத்தையாவது கட்டி முடியுங்கள். நடிகர் சங்க தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளில் பாதியையாவது நிறைவேற்றுங்கள். அரசியல் ஆசையில் அறிக்கைகளை தந்து வெறும் வாய்ச் சொல் வீரனாகத் தெரிவித்துக் கொள்ளாதீர்கள்.

எத்தனை நடிகர் சங்க உறுப்பினர்கள் எவ்வளவு மனக் குமுறலோடு உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா..? போய் அவர்களுக்கு உதவுங்கள். அவர்களை ரட்சியுங்கள். தயாரிப்பாளர்கள் சங்கத்தை தமிழர்கள் நாங்கள் ரட்சகனைத் தேடிக் கொள்கிறோம்.

அதுவும் காவிரி, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நடிகர் சங்கம் போராடாது என அறிவிப்பு செய்த விஷாலுக்கு இப்போது இலங்கைத் தமிழர்கள் மீது ஏன் அக்கறை பொத்துக்கொண்டு வருகிறது..?

ஆந்திராவில் தமிழர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டபோது வாய் மூடி மவுனித்திருந்த விஷால், வாய் திறந்தது கேரளாவில் நாய்களைக் கொன்றபோதுதானே..? நாய்களுக்கு உயிர் அற்புதமெனக் கருதும் உங்களுக்கு தமிழர்களின் உயிர் என்னவாகப்பட்டது..?

நடிகர் சங்கத்தை தெலுங்கு பேசற சங்கமாக மாற்றி வைத்திருக்கும், நட்சத்திர கிரிக்கெட்டில் தெலுங்கு, கன்னட நடிகர்களுக்கு மட்டும் பாசத்தோடு விமான டிக்கெட் தந்துவிட்டு மற்ற நம் தமிழ் நடிகர்களை புறக்கணித்த உமக்கு எம் தமிழர்களின் இரத்தப் புழுதி பற்றி என்ன தெரியும்..?

அதை விடுங்கள். சேரனைப் பற்றி பேச விசாலுக்கு என்ன தகுதியிருக்கிறது..?

சேரன் யார் தெரியுமா..? இந்த மண்ணின் பதிவாளன். தன் படைப்புகளால் தமிழ் பேசும் உலகெங்கும் தன் காட்சி மொழியை வீசியவன். நிகழ்காலத்தில் நிற்கும் களப் போராளி. அன்று இருந்த அரசியல் சூழலில் ஈழம் என்று வாயெடுக்கத் துணியாத பல இன்றைய பேஸ்புக் போராளிகளுக்கு நடுவே அன்றே ஈழ மக்களுக்காக ஓங்கி ஒலித்த குரல்களில் சேரனின் குரலும் ஒன்று.

அவன் கோபக்கார பேச்சாளன். மனதில் பட்டதைப் பேசுபவன். அவன் தன் தாய் தமிழ் உறவுகளுடன் என்ன வேண்டுமென்றாலும் பகிர்ந்து கொள்வான். மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுக் கொள்வான். அவன் ஈழத் தமிழர்களைத் தன் தொப்புள் கொடி உறவாக எண்ணி போராடியவன். அவன் பேசுவது தவறு, சரி என்பதை தாயா பிள்ளைகளா பேசித் தீர்த்துக் கொள்வார்கள். நீங்கள் யார் விஷால் இதில் கருத்து சொல்ல…?

ஈழ இரத்தம் சிந்தப்படும்போது ‘செல்லமே’ன்னு கொஞ்சிக்கிட்டும் ‘மதுரைக்காரன்டா’ன்னு பொய் வசனமும் பேசிக் கொண்டிருந்த, உங்களுக்கெங்கே ஈழத் தமிழர் வரலாறும், சேரனின் பங்களிப்பும் தெரியும்..?

சேரன் தன் அண்ணன்களிடமும், தம்பிகளிடம், அக்காக்காக்களிடம், தங்கைகளிடமும் அப்பாக்களிடமும், அம்மாக்களிடமும், அடித்துக் கொள்ளவும் திருத்திக் கொள்ளவும் கை கோர்த்துக் கொள்ளவும் எல்லா உரிமையும் கொண்டவர். அவர் சொன்னதை சரி தவறு என எண்ணெய் விட்டு எரிய வைக்க முயற்சிக்கும் துண்டாடும் சக்தியான நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானான நீங்கள் யார் விஷால்..?

இனியேனும் நிம்மதியாக இருக்கட்டும் என்றிருக்கிறீர்களே..? அது என்ன அர்த்தத்தில் சொல்லப்பட்டது..?

சுதந்திரமற்று மொழி சிதைய சொந்த பந்தங்களை இழந்து நிற்கும் அவர்கள் சிங்கள ஆட்சியில் சீரும் சிறப்புமாக இருக்கிறார்கள் என்ற அர்த்தத்திலா..?

இல்லை.. தன் மக்களின் இன விடுதலைக்காகப் போராடினானே எம் அண்ணன் பிரபாகரன்… அவன் வழி நடத்துதலில் துன்பப்பட்டுக் கொண்டிருந்தார்கள் எம் மக்கள் என சொல்ல வருகிறீர்களா..?

இன்னும் விடியலற்ற சுதந்திரக் கனவுகளில் எப்போதாவது சொந்த நிலத்தில் நின்று வான் பார்க்க மாட்டோமா என்ற மனப் பிசைதலில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மக்களின் உள்மனம் தெரியாத உங்களுக்கு ஏன் இந்த வீண் தலையீடு..?

இத்தகைய பதிவே உங்களுக்கு அரசியல் முதிர்ச்சியோ, அனுபவமோ கிடையாது. சிறுபிள்ளைத்தனமான போக்கில் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற அணுகுமுறையில் பக்குவமற்று பயணிப்பவர் என்பதை காட்டிக் கொடுத்துவிட்டது.

முடிந்தால் சேரனிடம் வருத்தம் தெரிவியுங்கள். அதுதான் உங்கள் வரலாற்றிலே கிடையாதே. அதோடு இனியாவது நிம்மதியாக வாழட்டும் என்ற அர்த்தமற்ற உங்கள் இரக்கப் பதிவை சமூக வலைத் தளத்திலிருந்து நீக்கி குப்பையில் போடுங்கள்.

எதுவாக இருந்தாலும் நடிகர் சங்கத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். எங்கள் தமிழ் உறவுகளுக்குள் சிண்டு முடியும் வேலையைச் செய்யாதீர்கள்.

நன்றி

சுரேஷ் காமாட்சி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்

suresh kamatchi stills

சேரனின் பேச்சில் அனைவருக்குமே கருத்து வேறுபாடு உண்டு. “வெளிநாடுகளில் வசிக்கும் சில ஈழத் தமிழர்கள் திருட்டு விசிடி தொழிலில் சம்பந்தப்பட்டிருப்பதாக அறிந்தேன். இதைக் கேள்விப்படும்போது அவர்களுக்காக தமிழ்த் திரையுலகத்தினர் நடத்திய போராட்டங்கள் என் கண் முன்னே வந்து மனதுக்கு வருத்தமாக இருந்தது..” என்றுதான் சேரன் சொல்ல வந்தார்.

ஆனால், அவருடைய இயல்பான குணத்தின் காரணமாக கோபத்தில் வார்த்தைகளை கொட்டிவிட்டார். அது வேறு மாதிரியாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. கோபம் இருக்குமிடத்தில்தான் குணம் இருக்கும். சேரனும் உண்மையறிந்து இதற்காக மன்னிப்பும் கேட்டுவிட்டார். அதோடு அந்தப் பிரச்சினை முடிந்ததாக நினையுங்கள்.

விஷால் எழுதியது அவரது கருத்து. அது சேரனுக்கும், அவருக்குமான பிரச்சினை. மற்ற எத்தனையோ பிரபலங்கள் கருத்து சொன்னதுபோல அவரும் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான்.

இந்த விஷயத்தில் கருத்து சொன்ன மற்ற பிரபலங்கள் மீதெல்லாம் வராத கோபமும், தாபமும் விஷால் மீது மட்டும் வன்மமாக படர்ந்து, அது அவரது ஜாதியை தோண்டி பார்க்கும் வேலையையும் செய்கிறது என்றால், அது வேறொரு காரணத்தினால்தான் என்று சொல்லத் தோன்றுகிறது.

விஷால் தான் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்கப் போகிறேன் என்கிற அறிவிப்புக்கு எதிர்வினையாகத்தான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் இந்த எதிர் கட்டுரை பார்க்கப்படுகிறது.

தமிழ்த் திரையுலகம் மட்டுமே ஜாதி பார்க்காமல் தொழிலாளர் வர்க்கம் எ்னகிற ஒரு கூரையின் கீழ் வேலை பார்க்கும் துறை. இப்போது அதற்குள்ளும் இப்படி ‘அவன் அந்த ஜாதி’, ‘இவன் இந்த ஜாதி’ என்றெல்லாம் ஜாதி சாயம் பூசுவதெல்லாம் சரிதானா..?

எந்த ஜாதி என்று பார்க்காமல் அவரை சக உறுப்பினராக மட்டுமே பார்த்து ஒருவரை சங்கத்தில் இணைக்க முடிகிறது என்றால், அந்தச் சங்கத்திற்கு எந்த ஜாதிக்காரர் தலைவராக வந்தால் என்ன..? இதை யார் தடுக்க முடியும்..?

கேலிக்கூத்தாக அல்லவா இருக்கிறது..? விஷால் தெலுங்கர் என்று தெரிந்தும் ஏன் தயாரிப்பாளர் சங்கத்தில் சேர்த்தார்கள்..? தயாரிப்பாளர் சங்கத்தில் தமிழர்களைத் தவிர வேற்று இனத்தவர்கள் யாருமே இல்லையா..? விஷால் மட்டும்தான் தெலுங்கரா..?

இப்போது விஷால் ‘தெலுங்கர்’ என்று பார்த்தால் சூப்பர் ஸ்டார் ரஜினி யார்..? ஏன் இப்போது தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் ‘புரட்சித் தலைவி’ எந்த இனத்துக்காரர்..? இதையெல்லாம் கேட்க மாட்டார்கள்..!? ‘புரட்சித் தலைவி எந்த ஊர்..?’ என்கிற வார்த்தையைகூடஉச்சரிக்க தயங்கும் குரல்தான்… ‘புரட்சித் தளபதி’யின் குரல் வளையைப் பிடிக்கிறது.

இதுதான், ஆள், அம்பு, சேனை இல்லாதவனை மிதிக்கலாம்.. யானை பலம் கொண்டவனின் கண்ணிலேயே படாமல் பதுங்கலாம் என்கிற குயுக்தி புத்தியுடன் செயல்படுவது.

விஷால் மீது விமர்சனம் வைப்பதற்கு உண்மையாகவே வேறு விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அவைகளைப் பயன்படுத்த யாருக்கும் இங்கே தடையில்லை. ஆனால் ஜாதி, இனம் என்கிற ரீதியில் திரையுலகத்திற்குள்ளேயே ஒருவர் மீது ஒருவர் கல்லெறிந்து கொண்டால் எப்படி..? 

யாராவது ஏதாவது எடுத்துக் கொடுத்தால், சட்டென்று ‘இதோ நான் இருக்கிறேன் இங்கே’ என்கிற ரீதியில் சட்டென்று பேசிவிடுகிறார்கள் பலரும்.

பாவம்.. அரிதாரம் பூசியே பழக்கப்பட்டுப் போன, இந்த தமிழ்த் திரையுலகத்தில் அரிதாரம் பூசாமலேயே நடிக்கக் கூடியவர்கள்தான் அதிகம்.

இது போன்று அவர்களிடத்தில் மாட்டிக் கொள்ளாமல் தயாரிப்பாளர் பணியை மட்டுமே மேற்கொண்டு வீறு நடையில் செல்வது அண்ணன் சுரேஷ் காமாட்சிக்கு நல்லது..!

அவ்வளவுதான் சொல்லுவோம்..!

Our Score