full screen background image

அனல் பறக்கும் பிரகாஷ்ராஜ் – நிவின்பாலி மோதல்..!

அனல் பறக்கும் பிரகாஷ்ராஜ் – நிவின்பாலி மோதல்..!

கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், கேரளத்து நடிகரான நிவின் பாலி நடித்து வரும் பெயர் சூட்டப்படாத திரைப்படம், தமிழக ரசிகர்கள் மத்தியில்  உற்சாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

மலையாளத்தில் இப்போது இளைஞிகளின் கனவுக் கண்ணனாக இருக்கும் நிவின் பாலி நடிக்கும் முதல் நேரடி தமிழ்ப் படம் இதுதான். ஏற்கெனவே அவர் நடித்த ‘நேரம்’ திரைப்படமும் தமிழில் வெளியாகி சக்கைப் போடு போட்டது நினைவிருக்கலாம்.

நிவின் பாலியில் ஆரம்பித்து, நட்ராஜ் சுப்ரமணியம் (நட்டி), கன்னட திரைப்படமான ‘யு – டர்ன்’ புகழ்  ஷ்ரதா ஸ்ரீனிவாஸ், ‘சுட்டக் கதை’ புகழ் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி என பல வலுவான நடிகர் – நடிகைகளை உள்ளடக்கிய இந்த பெயர் சூட்டப்படாத திரைப்படத்தில், தற்போது நடிகர் பிரகாஷ் ராஜூம் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பிரகாஷ் ராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகளை  மணப்பாடு மற்றும் குற்றாலம் பகுதிகளில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் கவுதம் ராமச்சந்திரன். தற்போது இந்த பெயர் சூட்டப்படாத திரைப்படமானது மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது.

prakash raj

“சிறந்த தந்தை, உண்மையான தோழன், மிரட்டலான வில்லன் என பிரகாஷ் ராஜ் சாரை பற்றி சொல்லி கொண்டே போகலாம். ‘உணர்ச்சி’ என்ற சொல்லுக்கு அகராதியாக செயல்படுபவர்  அவர்தான். அப்படிப்பட்ட உன்னதமான கலைஞர் எங்கள் படத்தில் நடிப்பது, எங்கள் ஒட்டு மொத்த படக் குழுவினருக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

ஏ.கே.சகாயம் என்னும் பெயர் கொண்ட பாதிரியார் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் பிரகாஷ்ராஜ் சார். அவரின் மகனாக நிவின் பாலி நடித்து வருகிறார். கதைப்படி இவர்கள் இருவருக்கும் ஒத்துப் போகாது. என்னதான் தந்தை – மகனாக இருந்தாலும் அவர்கள் ஆலய வழிபாட்டின்போதுதான் அதிகமாக   சந்தித்து கொள்வார்கள்.

பிரகாஷ் ராஜ் சாரை பற்றி நமக்கு எல்லோருக்கும் நன்றாக  தெரியும். ஒரு  படத்தின் கதை அவரது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால் மட்டும்தான் அந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொள்வார். அந்த வகையில், எங்களின் கதையை கேட்ட அடுத்த கணமே அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது, எங்கள் அனைவருக்கும் உண்மையாகவே பெருமையாக இருக்கிறது…” என்று மகிழ்ச்சியாக கூறுகிறார் இயக்குநர் கவுதம் ராமச்சந்திரன்.

Our Score