full screen background image

வன பத்ரகாளி அம்மனின் அருளால் ருத்ர தாண்டவம் ஆடிய நடிகை..!

வன பத்ரகாளி அம்மனின் அருளால் ருத்ர தாண்டவம் ஆடிய நடிகை..!

ஸ்ரீகலைவாணி மூவிஸ் மற்றும் ஜே.எம்.பி. இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘மேச்சேரி வன பத்ரகாளி’.  இந்தப் படத்தை டாக்டர் கே.எம். ஆனந்தன் தயாரித்து, இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை  ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடந்தது. இயக்குநர் ஆர்.அரவிந்தராஜ் பாடல்களை வெளியிட்டார்.

Vana bhathrakaali Audio Launch -11

விழாவில் படத்தின் இயக்குநர் கே.எம்.ஆனந்தன் பேசும்போது, “தமிழ் சினிமாவில் சாமி படங்கள் வந்து, பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ராமநாராயணனுக்குப் பிறகு கிராபிக்ஸ் செலவுக்குப் பயந்து, இப்போதெல்லாம் யாரும் சாமி படங்களை எடுப்பதில்லை.

என்னுடைய இந்தப் படத்தை காசு கொடுத்துப் பார்க்கும்போது பொழுது போக்குடன் கூடுதலாக காளியின் அருளும் கிடைக்கும். சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடமாடிவரும் எல்லாப் பேய்களையும் இந்த ‘மேச்சேரி வன பத்ரகாளி’ விரட்டி அனைவருக்கும் அருள் தருவாள்…” என்றார்.

Vana bhathrakaali Audio Launch -27

நாயகன் மணீஷ் பேசும்போது  “நான் சினிமாவில் நடிக்க என் மனைவியிடம் அனுமதி கேட்டேன். முதலில் முடியாது என்றார்கள்.   பின்பு சாமி படம் என்றதும் ஒப்புக் கொண்டார்கள்..” என்றார்.

கவிஞர் சொற்கோ பேசும்போது, “ரொம்ப நாளாக தமிழ் சினிமாவில் பிசாசுகளாகவே பார்த்துக் கொண்டு இருந்தோம். அந்தக் கெட்ட பிசாசுகளின் ஆட்டத்தின் மத்தியில் இந்த ‘வன பத்ரகாளி’ அம்மனின் ஆட்டம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

இயக்குநர் ஆர். அரவிந்தராஜ் பேசும்போது, “ஊமை விழிகள்’ படம் எனக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத் தந்த படம். அதே போல ‘சூலம்’ பக்தி தொடரும் எனக்கு பரவலான பெயரையும் புகழையும் பெற்றுத் தந்த தொடர். ‘சூலம்’தான் என்னை தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு  போய்ச் சேர்த்திருக்கிறது.

‘சூல’த்துக்கு குற்றாலத்தில் ஒரு கோவிலில் படப்பிடிப்பு நடந்தது. தொடரை எப்படி விரிவாக்கி இழுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தோம். ஒருவர் தினமும் அந்தக் கோயிலை சுற்றிச் சுற்றிப் பார்த்து விட்டு போய் விடுவார். அவரை விசாரித்தால் விரிவாக்கி இழுப்பதற்கு ஏதாவது கிடைக்கும் என்று விசாரித்தோம்.

அவர் மிகப் பெரிய கோடீஸ்வரராம். எல்லாவற்றையும் விட்டுவிட்டு கோவில் வாசலில் உட்கார்ந்து இருக்கிறார். அவரிடம் பேசியபோது, ‘நீங்கள் பிழைப்புக்காக தொடர் எடுக்கிறீர்கள். ஆனால் அம்மன் பற்றி படமெடுப்பது பூர்வஜென்ம புண்ணியம்..’ என்றார். அதுபோல்தான் ‘மேச்சேரி வன பத்ரகாளி’ எடுத்திருப்பது இயக்குநர் ஆனந்தனின் பூர்வ ஜென்ம புண்ணியம்…” என்றார்.

Vana bhathrakaali Audio Launch -14

படத்தின் நாயகியான  நடிகை சந்தியா பேசும்போது. “இந்தப் படம் எடுக்கும்போது இயக்குநர் பல சோதனைகளைச் சந்தித்தார். படம் முடிந்ததும் எல்லாம் கஷ்டமும் தீர்ந்து போன உணர்வு. முதலில் அவர் என்னிடம் சொன்ன கதை புரியவில்லை. சின்னத்திரையில் அழுது கொண்டே நடித்திருக்கிறேன். எனக்கு இதுவொரு மாறுபட்ட அனுபவம்.

வெளிப்புறப் படப்பிடிப்பில் நடிப்பதுதான் கஷ்டமாக இருந்தது. எனக்கு நடனமே தெரியாது. முன்னூறு பேர் மத்தியில் அப்படி ஆடும்போது கூச்சமாக இருந்தது. வெட்கமாகவும் இருந்தது. 200 பேர், 300 பேர் மத்தியில் அப்படி நடனம் ஆடுவது எவ்வளவு சிரமம்..?  ஆனால் நான் ருத்ர தாண்டவமே ஆடினேன். ஆடியபோது என்னால் அம்மனின் அதிர்வை உணர முடிந்தது. இதற்கு அந்த அம்மனின் அருள்தான் காரணம்…” என்றார்.

விழாவில் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ், நடிகர்கள் முருகேசன், ராமநாதன், கவிஞர்கள் சொற்கோ, சிற்பி, மேச்சேரி ராமசாமி, நடிகர்   ‘கலைஞர்  டிவி’ பெரேரா, பி.ஆர்.ஓ. சங்கத்தின் பொருளாளர் விஜயமுரளி, இசையமைப்பாளர் ஆதீஷ் உத்ரியன். ஒளிப்பதிவாளர் விஜய் திருமூலம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Our Score