நடிகர் விஜய், தமிழக முதல்வர் எடப்பாடியை ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் பொங்கல் தினத்தன்று ‘மாஸ்டர்’ படத்தை திரைக்குக் கொண்டு வர அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் பெரிதும் முயன்று வருகிறார்கள். தியேட்டர் அதிபர்கள் அனைவரும் ஒருமித்தக் குரலில் ‘மாஸ்டரு’க்காக காத்துக் கொண்டிருந்தாலும் தமிழக அரசு தற்போது கொரோனா வைரஸ் தடுப்புக்காக 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்று சொல்லியிருப்பதால்தான் ‘மாஸ்டர்’ தயாரிப்பாளர்கள் படத்தை வெளியிடத் தயங்கி நிற்கிறார்கள்.
இது குறித்து தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினரும், தயாரிப்பாளர்கள் சங்கத்தினரும் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனாலும் தமிழக அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதன் காரணமாகவே நடிகர் விஜய் முதல்வர் எடப்பாடியை சந்தித்துப் பேசியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை வைத்தும், தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்த பின்பும் தமிழக அரசு அமைதியாக இருந்ததன் காரணமே, நடிகர் விஜய் நேரில் வந்து கோரிக்கை வைக்க வேண்டும் என்று எதிர்பார்த்ததுதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
ஏனெனில் நடிகர் விஜய் அரசியலுக்கு வரப் போவதாக இந்த வருடம் வெளி வந்த சில செய்திகளும், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சியைத் துவக்கியபோது நடந்த நாடகங்களும் ஆளும் கட்சித் தரப்புக்கு பெரும் எரிச்சலைத் தந்திருக்கிறது.
ஏற்கெனவே கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் அரசியல் களத்திற்குள் நுழைந்திருப்பதால் நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் நிலையில் நடிகர் விஜய்யும் அரசியலுக்குள் வருவதாக இருந்தால் தங்களுடைய வாக்கு வங்கியில் ஓட்டை விழுமே என்பதால்தான் நடிகர் விஜய்யை அலைக்கழிக்க நினைத்த தமிழக அரசு, இதுவரையிலும் இதில் எந்த முடிவையும் சொல்லாமல் அமைதி காத்தது.
இதனை தாமதமாகப் புரிந்து கொண்ட நடிகர் விஜய் வேறு வழியில்லாமல் முதல்வர் எடப்பாடியை நேற்றைக்கு சந்தித்து பேசியிருக்கிறார்.
என்ன பேசினார்கள் என்பது முழுமையாகத் தெரியாத நிலையில் நிச்சயமாக விஜய்க்கு அரசியல் வேண்டாம் என்ற அறிவுரையும், கூடவே எச்சரிக்கையும், படம் வெளியாக வேண்டிய உதவிகள் செய்யப்படும் என்ற வாக்குறுதியையும் எடப்பாடி அளித்திருப்பார் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தினர்.
ஆக, ‘மாஸ்டர்’ படம் நிச்சயமாக பொங்கலுக்கு வெளியாக வாய்ப்புண்டு என்றே நம்பலாம்.