கே.எல்.புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜி.கரிகாலன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
படத்தில் தயாரிப்பாளர் ஜி.கரிகாலனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷா ஹரிதாஸ் நாயகியாக நடித்திருக்கிறார்.
இவர்களுடன் நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திரசீனி, சக்திவேல், நாராயணசாமி, துரை.சுந்தரம் என்று பல புதிய முதியவர்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – வைகறை பாலன், இசை – முத்தமிழ், ஒளிப்பதிவு – பாபு குமார், கலை இயக்கம் – ரவீஸ், படத் தொகுப்பு – மப்பு ஜோதி பிரகாஷ், பாடல்கள் – முத்தமிழ், வைகறை பாலன், ஒலி வடிவமைப்பு – ஜி.தரணிபதி, புகைப்படங்கள் – எஸ்.பி.சுரேஷ், நடன இயக்கம் – அப்சர், சண்டை இயக்கம் – பி.சி., விளம்பர வடிவமைப்பு – சபிர், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, தயாரிப்பு மேற்பார்வை – பேச்சி முத்து, இணை தயாரிப்பு – லில்லி கரிகாலன், தயாரிப்பு – ஜி.கரிகாலன்.
‘சியான்கள்’ என்பது தென் தமிழகத்தில் முதியவர்களை அழைக்கும் ஒரு வட்டாரச் சொல். இப்படம் முதியவர்களின் வாழ்க்கையை அவர்கள் பார்வையில் சொல்வதால் இந்தத் தலைப்பை வைத்திருக்கிறார்கள்.
மண் சார்ந்த கதைகள் அருகி வரும் இந்தக் காலத்தில் இப்படம் நம் கிராமத்து அழகியலை மீட்டெடுத்து, நம் மீது மண் வாசத்தை, அன்பை தெளிக்கும் படைப்பாக இருக்கிறது.
நம் எல்லோருக்கும் வயதான அப்பா, அம்மா இருப்பார்கள். அவர்களை நாம் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நம் கிராமத்து மண் சார்ந்து கூறும் படைப்பாக இந்த ‘சியான்கள்’ படம் அமைந்திருக்கிறது.
உறவுகளை தூர வைத்துவிட்டு இன்ஷியலை மட்டும் கூடவே வைத்துக் கொள்கிறோம். அன்பையும், பாசத்தையும் மறந்துவிட்ட காலத்தில் வாழ்கிறோம். முதியவர்களின் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். இச்சை இருக்கும். அதை வெளிப்படையாக பேசுகிறது இந்தப் படம். கூடவே, இப்போதைய இளைய சமுதாயத்தினரை பிரதிபலிப்பதைப் போல ஒரு காதல் கதையும் படத்தில் இருக்கிறது.
வயது முதிர்ந்த, கிராமத்து முதியவர்கள் 7 பேரின் வாழ்வில் நடக்கும் கதையை, நம் மண்ணின் மனம் மாறமல் கூறும் படம் இது.
இப்படம் 7 முதியவர்களின் பார்வையில் அவர்களின் நிறைவேறாத ஆசைகளைப் பற்றிக் கூறும் படம். சுருக்கமாக சொன்னால், ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்தை வயதானவர்கள் இணைந்து நடத்தினால் எப்படி இருக்குமோ... அதுதான் இந்தப் படம்.
ஏழு முதியவர்களுக்கும் தனித்தனிக் கதைகள் உண்டு. அந்தக் கதைகளெல்லாம் நம் வீட்டில் அல்லது எதிர் வீட்டில் அல்லது நமது உறவினர் வீடுகளில் நடந்த கதைதான். அதனாலேயே அந்தக் கதைகள் நம் மனதைத் தொடுகின்றன.
மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்க்கும் நாயகன், நடமாடும் மருத்துவராக கிராமங்களுக்கு வந்து மாத்திரை, மருந்துகளைக் கொடுத்து வருகிறார். இவருக்கும் அந்த ஊர்ப் பெண்ணுக்குமாய் ஒரு காதல் உருவாகிறது. இந்தக் காதல் எப்படி ஜெயிக்கிறது என்பதும் இன்னொரு இணையான கதையாய் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு முதியவருக்கு வீட்டில் மரியாதை இல்லை. அந்த வீட்டில் இருக்கும் நாய்க்குக்கூட நல்ல சாப்பாடு கிடைக்கிறது. இவருக்குக் கிடைக்கவில்லை. பசி தாங்காமல் சோறெடுத்து சாப்பிடுபவரை மருமகள் அடித்துவிட.. அந்த அவமானத்தில் தூக்கில் தொங்குகிறார்.
இன்னொரு முதியவருக்கு இப்போது ஒரு புதிய காதல் பிறக்கிறது. ஆனால் இது மகனுக்குப் பிடிக்கவில்லை. ஆளை வைத்து அடித்துத் தூக்கி வந்து தன் வீட்டில் வைத்து விஷம் கலந்து கொடுத்து கொல்கிறான். இந்த முதிய நண்பர்களால் அது கொலை என்று தெரிந்தும் தடுக்க முடியவில்லை.
ஏழு முதியவர்களில் ஒருவரான நளினிகாந்திற்கு எப்படியாவது ஒரு நாளாவது விமானத்தில் பறந்துவிட வேண்டும் என்ற ஆசை. அவருடைய காதல் மனைவி இறந்துவிட்ட பின்பு மகன்களும், மகளும் தனியே போய்விட.. அவருடைய ஆசையை நிறைவேற்ற முடியாமல் போகிறது.
அந்த ஆசையை நிறைவேறும் ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கிறார் நாயகன். தனது காதலியை தனக்குக் கைப்பிடித்துக் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்திருக்கும் அந்த முதியவர்களின் எளிய ஆசையை நிறைவேற்ற அவர்களை சென்னைக்கு அழைக்கிறார் ஹீரோ.
வந்த இடத்தில் நடைபெறும் விபத்தில் ஒருவர் இறக்க.. மற்றவர்கள் உயிருடன் இருக்க.. அந்த விமானப் பயணம் நல்லபடியாக நிறைவேறியதா..? இல்லையா..? என்பதை உணர்வும், உயிரோட்டமாயும் அமைந்த திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
முதியவர்களின் நடிப்பில் குற்றம், குறை கண்டால் நமக்குக் கண்ணில்லை என்றுதான் அர்த்தம். அந்த வயதுக்கேற்ற தடுமாற்றத்துடன் இயல்பான நடை, உடை, பாவனையுடன் நடித்திருக்கிறார்கள். யாரையும் மிகைப்படுத்திக் காண்பிக்கவில்லை.
நளினிகாந்த் மற்றும் அவரது மனைவி சம்பந்தப்பட்ட காட்சிகள் ரம்யம். இதேபோல் புதிதாக ஒரு தோழியைப் பிடித்துவிட்ட சந்தோஷத்தில் இருக்கும் அந்தப் பெரியவரும் ரசிக்க வைக்கிறார். இன்னொரு பக்கம் பசிக்குச் சோறு கிடைக்காமல் அல்லாடும் அந்தப் பெரியவரின் முகமும், தோற்றமும் நமக்குள் கொலை வெறியைத் தூண்டுகிறது. இங்கேதான் இயக்குநர் ஜெயித்திருக்கிறார்.
ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பான குணங்கள் உண்டு என்பதை எடுத்துக் காட்டுவதுபோல.. இவர்களை வைத்து சமையல் புரோகிராம் செய்து அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி தேசிய அளவில் பெயரை பெற்றுக் கொடுக்கும் சுவாரஸ்யமான பிளாக்கை இடையில் வைத்திருக்கிறார் இயக்குநர். புத்திசாலித்தனமான திரைக்கதை. இதுதான் கடைசிவரையிலும் பொதுமக்களிடத்தில் இந்த முதியவர்களை இணைக்கிறது.
இடையில் கரிகாலனின் காதல் ஸ்டோரியும் ஒரு பக்கம் வளர்கிறது. நாயகி ரிஷாவின் கண் ஜாடையைப் பார்த்து காதல் பிறக்காமல் இருந்தாலே ஆச்சரியம். அவருடைய சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களில் சொக்கிப் போகலாம். மிக அழகான நாயகி. தமிழ்ச் சினிமாவுலகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கரிகாலன் நாயக பிம்பமாக இல்லாமல் அந்த எளிய மனிதனாக.. உதவும் எண்ணமுள்ள சராசரி மனிதனாக தனது கதாபாத்திரத்தை செய்திருக்கிறார். காதலில் சிக்குண்டு கண்ணாலேயே பேசிக் கொள்ளும் அந்தத் தருணத்தில் தனது பணியை அழகுரச் செய்திருக்கிறார்.
நாயகியின் சித்தியாக நடித்தவரின் நடிப்பும் கவர்கிறது. அவருக்கான போர்ஷனில் எழுதப்பட்டிருக்கும் திரைக்கதையும், வசனமும் ஒரு முழு நீளப் படத்திற்கானவை. அந்த அழகான குறும்படத்தை அந்தக் கதையில் காணலாம்.
அனைத்து முதியவர்களும் தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். இயக்குநரின் அழகான அற்புதமான இயக்கத்தினால்தான் இது சாத்தியமாகியிருக்கிறது.
வழக்கம்போல கிளிஷேவாக விபத்தில் அடிபட்ட முதியவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பணத்திற்காக அலைவது.. கடைசியில் ஒரு முதியவர் தற்கொலை நாடகம் நடத்துவதெல்லாம் சினிமாத்தனம்.. இதை மட்டும் கொஞ்சம் மாற்றியிருக்கலாம்.
அந்த அழகான கிராமத்தையும், அதன் வாழ்விடத்தையும், எளிய மனிதர்களையும், அவர்களின் கூட்டத்தையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். கிராமத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அழகு கொட்டியிருக்கிறது.
முத்தமிழின் இசையில் 2 பாடல்கள் மீண்டும் கேட்க வேண்டும்போல வைக்கிறது. முதியவர்களின் அட்டகாசத்தைச் சொல்லும் இன்னொரு பாடலும் எழுந்து ஆட வைக்கிறது. அவர்களின் கதையை நகர்த்தவும் உதவியிருக்கிறது. பாடல் காட்சிகளில் யாரும் எழுந்து வெளியேற முடியாமல் போனதே இசையமைப்பாளரின் வெற்றியைக் காட்டுகிறது.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொருவர் கலை இயக்குநர். இடத்திற்குத் தகுந்தாற்போல் எப்படித்தான்.. எங்கேயிருந்துதான் இத்தனையையும் பிடித்து வைத்தார் என்று தெரியவில்லை. கிராமியக் காட்சிகளில் ஒவ்வொரு பிரேமும் அழகாக இருக்கிறது.
நமக்கும் பாட்டி, தாத்தா இருக்கிறார்கள் அல்லவா.. அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கும். மனது இருக்கும். ஆசைகள் இருக்கும். நம்பிக்கை இருக்கும். அந்த நியாயமான ஆசைகளை நிறைவேற்றுவது நமது கடமை. அவர்கள் மீது காட்டும் அன்பு, நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் அன்புதான்.
நாம் நமது பெற்றோர்களை காப்பாற்றினால் நம்மை நம் பிள்ளைகள் காப்பாற்றுவார்கள். யாரோ, எங்கயோ.. எப்படியோ போங்கள் என்று சொல்வதற்கா கல்யாணம் செய்து பிள்ளைகளைப் பெற்று.. படிக்க வைத்து.. ஆளாக்கி.. கல்யாணம் செய்துவித்து அழகு பார்ப்பது..?!
ஒரு நிமிடம் இதெல்லாம் எதற்காக என்று யோசிக்க வைத்திருக்கிறது இத்திரைப்படம்.
இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் தங்களது வீட்டில் இருக்கும் பெரியவர்களை இதுவரையிலும் நாம் எப்படி பார்த்தோம் என்று யோசிக்க வைத்தாலே அதுவே இந்தப் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இருக்கும்.
இந்த ‘சியான்கள்’ அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்..!