டிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..!

டிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..!

தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளைத் துவக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஏப்ரல் 23-ம் தேதியில் இருந்து தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகள் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் நிறுத்தப்பட்டிருந்தன.

கடுமையான ஊரடங்கு சட்டம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில் உலகம் முழுவதுமே வேறு வழியில்லாமல் தொழில் துறையை மீண்டும் திறந்துவிட்டுள்ளனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் பல்வேறு வகையான தொழிலகங்கள் துவக்கப்பட்டு இயல்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அண்மையில் கடந்த மே 11-ம் தேதி முதல் சினிமா மற்றும் சீரியல் போஸ்ட் புரொடக்ஷன்‌ பணிகளுக்கு மட்டும் நிபந்தனையுடன் கூடிய அனுமதியை தமிழக அரசு அளித்துள்ளது. அதாவது படத் தொகுப்பு, பின்னணி குரல் கொடுத்தல், கிராபிக்ஸ், பின்னணி இசை, ஒலிக் கலவை போன்ற பணிகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல் சின்னத்திரை படப்பிடிப்புகளையும் தொடர்ந்து நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரி மாநில செய்தித் துறை அமைச்சரிடம் தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கமும், பெப்சி அமைப்பும் கேட்டுக் கொண்டிருந்தன.

இந்தக் கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு இப்போது சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளது. அதே நேரம் இந்தப் படப்பிடிப்புகள் நடத்தப்படுவதற்கு சில முக்கியமான நிபந்தனைகளையும் தமிழக அரசு விதித்துள்ளது.

"சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்களை படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்கக் கூடாது."

"தடை செய்யப்பட்ட பகுதி மற்றும் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது."

"படப்பிடிப்புத் தளத்தில் பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது."

"படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் தவிர தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும்."

"படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், சாதனங்கள் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட வேண்டும்."

"சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமும் முன்அனுமதி பெற வேண்டும்..."

என்பன உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த அனுமதியைக் கொடுத்தமைக்காக தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளரான நடிகை குஷ்பூ தமிழக முதல்வருக்கும், செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.