தமிழ்த் திரையுலகத்தில் ‘இயக்குநர் சிகரம்’ என போற்றப்படும் கே.பாலசந்தரின் நினைவாக சென்னை, ஆழ்வார்பேட்டையில் அமைந்திருக்கும் போக்குவரத்துத் தீவிற்கு ‘கே.பாலசந்தர் போக்குவரத்துத் தீவு’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் வாழ்ந்த தெருவிற்கு, ‘கே.பாலசந்தர் சாலை’ என பெயர் சூட்டவும், மயிலாப்பூரில் அவரின் திருவுருவ சிலை வைக்கவும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் தமிழக அரசிடம் வைக்கப்பட்டிருந்தன.
கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கவிதாலயா வீ.பாபுவும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார், சிரஞ்சீவி, மம்மூட்டி போன்ற முக்கிய நடிகர்கள், நடிகைகள், மற்றும் திரையுலக பிரபலங்களின் சிபாரிசு கடிதத்தோடு இது குறித்து தமிழக அரசிடம் மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு இந்த மனுக்களை பரிசீலனை செய்து, பெருநகர சென்னை மாநகராட்சி, முதன்மைச் செயலர் ஆணையரின் கருத்துரு அரசால் கவனமாக விரிவான ஆய்வுக்கு பின், பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-9, பகுதி-25, கோட்டம் 123-ல் உள்ள லஸ் சர்ச் சாலையில் காவேரி மருத்துவமனை அருகே, சுமார் 1000 சதுர அடி அளவில் ‘போக்குவரத்து தீவு’ என்று அமைந்துள்ள இடத்தினை, “இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு” என்று பெயர் மாற்றம் செய்து பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையர் அவர்களுக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
‘கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு’ என்ற பெயரை சாலையில் நிறுவுவதற்கு கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தின் தலைவரும், நடிகருமான ராஜேஷ் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமான பூச்சி எஸ்.முருகன், ஒளிப்பதிவாளரும், இயக்குநரும், கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான கவிதாலயா வீ.பாபு ஆகியோர் பெரும் முயற்சி எடுத்துள்ளனர்.
இந்த அறிவிப்பினை இன்றைக்கு ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 94-வது பிறந்த நாளையொட்டி தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இன்று ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் அவர்களின் 94-வது பிறந்த நாளை முன்னிட்டு, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் நிறுவப்பட்டிருக்கும் கே.பாலசந்தர் திருவுருவ சிலைக்கு மலர் மாலை சூட்டி, கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
இவ்விழாவில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி முருகன், தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி, கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க பொதுச்செயலாளர் வீ.பாபு, இயக்குநர்கள் வஸந்த், சரண், மங்கை அரிராஜன், நடிகர்கள் பூ விலங்கு மோகன், தாசரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.