தொட்டு விடும் தூரம் – சினிமா விமர்சனம்

தொட்டு விடும் தூரம் – சினிமா விமர்சனம்

உஷா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் பி.ராமநாதன் மற்றும் ரக்ஷந்த் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.சுரேஷ் ஆகியோர் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ‘நீ என்ன மாயம் செய்தாய்’ மற்றும் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ.’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்த விவேக் ராஜ் நாயகனாக நடித்திருக்கிறார். இது இவருடைய மூன்றாவது படமாகும்.

‘ஜீனியஸ்’, ‘ஜீவி’, ‘தோழர் வெங்கடேசன்’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்த மோனிகா சின்னகோட்லா இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

மற்றும் சீதா, லிவிங்ஸ்டன், சிங்கம்புலி, கிரேன் மனோகர், ராஜசிம்மன், பால சரவணன், ஜீவா ரவி ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கே.ராம்குமார், இசை – நோவா, பாடல்கள் – க.ராம்பாரதி, படத் தொகுப்பு – வீர.செந்தில்ராஜ், நடன இயக்கம் – ராதிகா, சண்டை இயக்கம் – இளங்கோ, மக்கள் தொடர்பு – பி.டி.செல்வக்குமார், இணை தயாரிப்பு – ஆர்.சுரேஷ், தயாரிப்பு – பி.ராமநாதன், எழுத்து, இயக்கம் – வி.பி.நாகேஸ்வரன். நேரம் : 1 மணி 58 நிமிடங்கள்.

நாயகன் ‘அழகு சுரேஷ்’ என்னும் விவேக் ராஜ், நாகர்கோவில் அருகில் இருக்கும் ‘தெள்ளாந்தி’ என்னும் ஊரில் தனது அம்மா சீதாவுடன் வசித்து வருகிறார். மருந்து விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறார் விவேக் ராஜ். உள்ளூரிலேயே இருக்கும் இவருடைய மாமா இவருக்குப் பெண் கொடுக்கத் தயாராய் இருக்கிறார். பெண்ணும் விவேக் ராஜூக்காகக் காத்திருக்கிறார்..!

அதே ஊருக்கு சென்னையில் இருந்து ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவர், மாணவிகள் என்.எஸ்.எஸ். கேம்ப்பிற்காக வருகிறார்கள். இந்தக் குழுவில் நாயகி பிரியாவும் இருக்கிறாள். அழகு சுரேஷ் சில சமூக சேவைகளையும், உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் செய்து வருவதைப் பார்த்தவுடன் அவன் மீது விருப்பம் கொள்கிறாள் பிரியா. நாயகனும் இந்தக் காதலை ஏற்றுக் கொள்ள காதல் வீடுவரையிலும் வருகிறது.

இந்நிலையில் வேலை விஷயமாக அழகு ஒரு நாள் வெளியூர் சென்றுவிட்டு ஊருக்குத் திரும்புவதற்குள் நாயகி தனது கேம்ப்பை முடித்துவிட்டு சென்னைக்குக் கிளம்பிச் செல்கிறாள். இருவரும் சந்திக்க முடியாமல் போகிறது.

இந்தச் சூழலில் அழகு, பிரியாவின் சென்னை முகவரியை வைத்துக் கொண்டு அவளைத் தேடி சென்னைக்குச் செல்கிறான். அங்கே அவன் பிரியாவை சந்தித்தானா..? அவனது காதல் என்னவானது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

தமிழ்ச் சினிமாக்களில் காதலை பல வகைகளிலும் கொத்து புரோட்டா போட்டுவிட்டாலும் இன்னமும் சொல்லப்படாத காதல் கதைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் ஒரு வித்தியாசமான நிறைவேறாத காதலை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், ஒரு சமூக அக்கறைக்கான விழிப்புணர்வைக் கொடுக்கும் கையோடு காதலும் விடைபெறுவதாக இந்தப் படத்தின் திரைக்கதையில் சொல்லியிருக்கிறார்கள். இதற்காக இயக்குநருக்கு ஒரு ஷொட்டு.

நாயகன் விவேக்ராஜ் அவ்வளவு கவன ஈர்ப்பாக இல்லை. தனக்குக் கிடைத்த கேரக்டரில் இயக்குநர் சொல்லிக் கொடுத்ததுபோல நடித்திருக்கிறார். அவ்வளவுதான். ஏதாவது சிறப்பான நடிப்போ, வித்தியாசமான கலைத் திறமையோ இருந்தால்தான் சினிமாவில் அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்ல முடியும். இதைக் கவனித்தில் கொள்வார் என்று நம்புகிறோம்.

நாயகி மோனிகா சின்னகோட்லாவும் அழகாக நடித்திருக்கிறார். சில காட்சிகளில் ‘தாராளமாயும்’ நடித்திருக்கிறார். சின்னப்புள்ளைத்தனமாய் இருக்கும் அவரது முகம், இந்தக் கேரக்டருக்கு மிகவும் பொருந்தியிருக்கிறது. இறுதிக் காட்சியில் இவரது நடிப்புக்கு மிகப் பெரிய ஸ்கோப் இருந்தும் சாதாரணமாகிவிட்டார். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருந்தால் கிளைமாக்ஸில் கைக்குட்டைகளுக்கு வேலை கிடைத்திருக்கும். இயக்குநர் அம்போவென்றுவிட்டுவிட்டார்.

சிங்கம்புலியின் காமெடி சகிக்கவில்லை. எத்தனையோ பழைய படங்களில் கவுண்டமணியும், செந்திலும் கசக்கிப் போட்டதை இவர்கள் எடுத்து கந்தையாக்கியிருக்கிறார்கள்.

சீதா அமைதியான அம்மாவாக சில காட்சிகளில் பாந்தமாக நடித்திருக்கிறார். ராஜசிம்மன் ரவுடிபோல் காட்சியளித்திருக்கிறார். இவரையும் கடைசியில் அம்போவென்று விட்டுவிட்டார்கள்.

காதல் கதையில் இன்னும் கொஞ்சம் காதலை சேர்த்திருக்கலாம். அப்படி கொடுத்திருந்தால் அது, கிளைமாக்ஸ் காட்சி சொல்லியிருக்கும்விதத்தை ஏற்பதற்கு பார்வையாளர்களுக்கு கொஞ்சம் மனக் கஷ்டத்தைக் கொடுத்திருக்கும். அது போல் இல்லாததால் கிளைமாக்ஸ் காட்சி எந்தப் பாதிப்பையும் பார்வையாளர்களுக்குள் ஏற்படுத்தவில்லை.

மீடியம் பட்ஜெட் படங்களுக்கே உரித்தான ஒளிப்பதிவு. தயாரிப்பாளர் சந்தோஷப்பட்டிருப்பார். நோவாவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். ஆனால் எதுவும் மனதில் நிற்கவில்லை. ‘பூக்கள் காதல் மொழி’ மட்டுமே தேறும்.

சண்டை காட்சிகளை அமெச்சூர்த்தனமாக படமாக்கியிருக்கிறார்கள். கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

தொட்டு விடும் தூரத்தில் நாயகனும், நாயகியும் இருந்தாலும் அவர்களால் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள முடியவில்லை என்பதைத்தான் சுற்றி வளைத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

நாயகனின் போன் இல்லையென்றால் என்ன…? அவருடைய அம்மாவுக்கு போன் செய்து கேட்டால் போகிறது.. இத்தனை தூரம் படித்தப் பெண்ணுக்கு இதுகூடவா தெரியாது..!?

நாயகன், நாயகியை சென்னை ஹோட்டலில் தற்செயலாகப் பார்க்கும்போது வேறு ஒரு இளைஞன் உடன் இருப்பதால் அவள் வேறொரு காதலில் இருப்பதாக நினைத்து ஒதுங்கிப் போவது, சுத்த ஹம்பக்கான திரைக்கதை. முடிவை இப்படித்தான் வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து திரைக்கதையை நகர்த்தியிருப்பது போலத் தெரிகிறது.

ஒரு மீடியம் பட்ஜெட்டில் தங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு ஒரு பொழுது போக்குப் படத்தை வழங்கியிருக்கிறார்கள். அவ்வளவுதான்..!

Our Score