‘தர்பார்’ பட விவகாரம் – அனிருத்திற்கு இசைக் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம்..!

‘தர்பார்’ பட விவகாரம் – அனிருத்திற்கு இசைக் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம்..!

லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில்… இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘தர்பார்’ படத்தில் தங்களது சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களை பயன்படுத்தாமல் விட்டதற்காக பிரபல இசையமைப்பாளர் அனிருத்திற்கு தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும், இசையமைப்பாளருமான தினா, சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசும்போது, "தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம், 50 வருட பாரம்பரியம் கொண்டது. பிரபல மூத்த இசையமைப்பாளரான எம்.பி.சீனிவாஸ் மற்றும் பலரால் துவக்கப்பட்டது.

music union-interview

இந்தச் சங்கத்தில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், தேவா போன்ற மிகப் பெரிய இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள், பாடலாசிரியர்கள் உள்பட 1,200 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

23 சங்கங்களைக் கொண்ட ‘பெப்சி’ எனப்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்தில் எங்களது தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கமும் அங்கம் வகிக்கிறது.

இப்போது பிரச்சினை என்னவெனில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படத்திற்கு இசையமைக்கும் பணியில் பாரம்பரியம் மிக்கதும், தமிழ்த் திரையுலக சங்கங்களில் மூத்த சங்கமுமான தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு பணி வழங்காதது எங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த முந்தைய படமான ‘பேட்ட’ படத்திலேயே எங்களது சங்க உறுப்பினர்களுக்கு அதிகமாக வேலை கிடைக்கவில்லை. இதனால் அப்போதே அனிருத்திடம் இது குறித்து நாங்கள் பேசினோம். ‘இப்போது அனைத்து ஏற்பாடுகளும் முடிஞ்சிருச்சு ஸார். கண்டிப்பா அடுத்தப் படத்தில் நான் நம்ம சங்கத்து ஆட்களைப் பயன்படுத்திக் கொள்கிறேன்...’ என்று எங்களிடம் வாக்குறுதி அளித்தார் அனிருத்.

darbar-audio-function-stills-51

இந்த முறை ‘தர்பார்’ படம் துவங்கியபோது 2 மாதங்களுக்கு முன்பேயே நான் அனிருத்திடம் இது குறித்து போனில் பேசினேன். ‘இந்த முறை நான் நிச்சயமாக நமது சங்க உறுப்பினர்களைப் பயன்படுத்திக் கொள்வேன்’ என்று என்னிடம் உறுதியளித்தார் அனிருத்.

இது போதாதென்று அவருக்கு வாட்ஸ்அப்பில் நாங்கள் இந்தக் கோரிக்கையை அனுப்பினோம். அதையும் அவர் பார்த்துவிட்டு ஸ்மைலி சிம்பலை அனுப்பினார். கடைசி முயற்சியாக எங்களது சங்கத்தின் நிர்வாகக் குழு கூடி ஒரு தீர்மானம் நிறைவேற்றி அதனை ஒரு கடிதத்தில் அனிருத்திற்கு அனுப்பி வைத்தோம்.

இத்தனை செய்த பின்பும் அனிருத் எங்களது ‘தர்பார்’ படத்தின் இசையமைப்புப் பணிகளில் எங்களது சங்க உறுப்பினர்களில் வெறும் 4, 5 பேர்களுக்குத்தான் வேலை கொடுத்திருக்கிறார் என்பது இப்போதுதான் எங்களுக்குத் தெரிய வந்திருக்கிறது.

எந்தவொரு திரைப்படத்தின் இசையமைப்புப் பணியில் பங்கேற்கும் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் கன்வேயன்ஸ் தொகைக்கான பட்டியலை அந்தந்த இசையமைப்பாளர்கள் எங்களது தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இது எங்களது சங்கங்களிடையே உள்ள சட்ட விதி.

darbar-audio-function-stills-37

அதன்படி ‘தர்பார்’ படத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட எங்களது சங்கத்தின் இசைக் கலைஞர்கள் பட்டியலை அனிருத் இப்போதுதான் எங்களது சங்கத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

அதில் மொத்தமே 3200 ரூபாய்க்குத்தான் இன்வாய்ஸ் இருக்கிறது.  அதிலும் அனிருத் மற்றும் அவரது உதவியாளரையும் சேர்த்தால் 1800 ரூபாய் போய்விடும். மீதமிருக்கும் 1400 ரூபாய் என்றால் அதிகப்பட்சம் 4 அல்லது 5 உறுப்பினர்களைத்தான் அவர் பயன்படுத்தியிருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

ஆனால், ‘தர்பார்’ படத்தின் பாடல்களைக் கேட்கும்போது நிச்சயமாக ஒரு பாடலுக்கு 25-ல் இருந்து 30 நபர்களுக்கு மேல் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இவர்களில் வெறும் 5 பேர் மட்டுமே இசைக் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் மற்றவர்களெல்லாம் சங்கத்தைச் சேராதவர்கள் என்றுதான் அர்த்தம்.

இப்படி செய்தால் 1200 உறுப்பினர்கள் கொண்ட எங்களது சங்க உறுப்பினர்களின் கதி என்ன ஆவது..? சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் என்றால் அது அதிக பட்ஜெட்டில் படமாக்கப்படும் படம். இதில்கூட எங்களது சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்கவில்லையென்றால் இது எந்த வகையில் நியாயம்..?

darbar-audio-function-stills-05

ஏற்கெனவே பல முறை நாங்கள் எங்களது சங்க உறுப்பினர்களை மட்டுமே இசைப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம். தயாரிப்பாளர் கவுன்சிலுக்கும், பெப்சிக்கும் கடிதங்கள் மூலம் தெரியப்படுத்தியுள்ளோம்.

ஒருவேளை வெளிநாட்டு கலைஞர்களைப் பயன்படுத்த நேர்ந்தால் அந்த எண்ணிக்கைக்கு சமமாக எங்களது சங்க ஆட்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுற்றறிக்கையையும் அனுப்பியிருக்கிறோம்.

darbar-audio-function-stills-45

இத்தனைக்குப் பிறகும் அனிருத் இப்படி செய்தது நியாயமல்ல. இத்தனைக்கும் அனிருத்தும் எங்களது சங்கத்தில் ஒரு உறுப்பினர்தான். ஒரு சங்கத்தில் உறுப்பினராக இருந்து கொண்டே, அந்தச் சங்கத்தின் கொள்கைகளுக்கு விரோதமாக நடப்பது தவறானது.

அனிருத்தின் இந்தப் பொறுப்பற்ற  செயல் எங்களது தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தை அவமதித்தது போலாகும். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் செயற் குழுக் கூட்டத்தில் வற்புறுத்தப்பட்டது. அதன்படி, சங்க சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படாத அனிருத்தை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இருந்தாலும் இனி வரும் காலங்களில் அனைத்து பெரிய படங்களிலும் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் எங்களது திரையிசைக் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களது குடும்பங்களையும் காப்பாற்றும்படி தமிழ்த் திரையுலக இசையமைப்பாளர்களையும், நடிகர்களையும், தயாரிப்பாளர்களையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினியிடமும் இதை நாங்கள் ஒரு கோரிக்கையாக வைக்கிறோம். அவருக்கு எங்களது சங்கம் பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியெல்லாம் நன்கு தெரியும். இப்போது இந்தப் பேட்டி மூலமாகவும் இதனை அவர் புரிந்து கொள்வார் என்று நம்புகிறோம்.." என்று சொல்லி முடித்தார் இசையமைப்பாளர் தீனா.