தமிழ் படம் 2.0 – சினிமா விமர்சனம்

தமிழ் படம் 2.0 – சினிமா விமர்சனம்

Y Not Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சசிகாந்த் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் சிவா ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார்.

மேலும், சதீஷ், நிழல்கள் ரவி, மனோபாலா, சேத்தன், ஆர்.சுந்தர்ராஜன், சந்தானபாரதி, கலைராணி, கஸ்தூரி, அஜய் ரத்தினம், ஓ.ஏ.கே.சுந்தர், ஜார்ஜ், திஷா பாண்டே, கார்த்திகேயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மக்கள் தொடர்பு – நிகில், உடை வடிவமைப்பு – ஸ்ருதி கன்னத், கலை இயக்கம் – செந்தில் ராகவன், சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், நடன இயக்கம் – கல்யாண், பாடல்கள் – மதன் கார்க்கி, தியாரு, சி.எஸ்.அமுதன், கே.சந்துரு, இசை – என்.கண்ணன், படத் தொகுப்பு – டி.எஸ்.சுரேஷ், ஒளிப்பதிவு – கோபி அமர்நாத், வசனம் – கே.சந்துரு, இணை தயாரிப்பு – சக்ரவர்த்தி ராமச்சந்திரா, தயாரிப்பு – எஸ்.சசிகாந்த், எழுத்து, இயக்கம் – சி.எஸ்.அமுதன்.

முதல் பாகத்தின் முடிவில் போலீஸ் வேலையில் இருந்து விலகி ஓய்வெடுக்கப் போகும் சிவாவை மீண்டும் போலீஸ் வேலைக்குள் இழுப்பதுதான் படத்தின் கதைக் கரு.

மதுரைக்கு அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தில் சாதிக் கலவரம் வெடிக்கிறது. இரண்டு சாதிகளின் தலைவர்களும் தங்களது சாதியாட்களை உசுப்பேற்றிவிட கலவரமாகிக் கிடக்கிறது. போலீஸார் குவிக்கப்படுகின்றனர். மக்களை சமாதானப்படுத்தாவிட்டால் நாளை பெரும் கலவரமாகி துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாக இருக்கும்.

இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்துவிட்டு பேச்சுவார்த்தை மூலமாக மக்களை அமைதிப்படுத்த நினைக்கிறார் போலீஸ் டி.ஐ.ஜி. சேத்தன். இதற்காக மீண்டும் சிவாவை அழைக்க முடிவு செய்து அழைக்கிறார்கள். முதலில் வர மறுக்கும் சிவா பின்பு வருகிறார்.

ஊருக்கு வந்த இடத்தில் அறு, அறுவென்று அறுத்தெடுத்து, பேசியே கொன்று பொதுமக்களை அமைதிப்படுத்துகிறார். சிவாவை மீண்டும் போலீசில் சேரும்படி வற்புறுத்துகிறார் டிஜஜி சேத்தன். ஆனால் அதை சிவா மறுத்துவிட்டுப் போகிறார்.

இன்னொரு இடத்தில் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் வில்லன் பி சிவாவின் மனைவிக்கு செல்போனை அனுப்பி அதனை வெடிக்க வைத்து சிவாவின் மனைவி திஷாவை கொலை செய்கிறார்.

இதனால் அதிர்ச்சியாகும் சிவா மீண்டும் போலீஸ் டிபார்ட்மெண்டுக்குள் நுழைகிறார். தனது மனைவியை படுகொலை செய்த கொலைகாரனை கண்டுபிடிக்க முனைகிறார். இந்தக் கொலையைச் செய்தது வில்லன் பி என்பது மட்டுமே அவருக்குத் தெரிகிறது.

வில்லனை பழி வாங்கத் துடிக்கிறார் சிவா. ஆனால் சாகாவரம் பெற்ற வில்லனான பி அதை முறியடித்துக் கொண்டே வருகிறார். கடைசியில் என்ன ஆகிறது.. என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

 படத்தில் காட்சிக்கு காட்சி உள்ளூர் சினிமா முதல் ஹாலிவுட் சினிமாவரை அனைத்தையும் நையாண்டி செய்திருக்கிறார்கள்.

படத்தின் துவக்கத்தில் ரஜினியின் சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு போலவே ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ என்கிற டைட்டில் பட்டத்தோடு அறிமுகமாகிறார் சிவா.

முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் தனது கவுண்டர் பன்ச் டயலாக்குகளால் ரசிகர்களை வெகுவாக சிரிக்க வைத்திருக்கிறார் சிவா. ரொம்ப விழுந்து, விழுந்து சிரிக்காவிட்டாலும், எப்போதும் சிரிப்புடன் இருக்கும்படிதான் படம் முழுவதும் இருக்கிறது.

ஒரு காட்சியில் ‘உனக்கு நடிக்க வராது… எனக்கு நடிப்புன்னா என்னான்னே தெரியாது’ என்று வசனம் பேசி தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்கிறார் சிவா.

படத்தில் ‘தேவர் மகன்’, ‘கபாலி’, ‘மெட்ராஸ்’, ‘வேதாளம்’, ‘வீரம்’, ‘விவேகம்’, ‘துப்பாக்கி’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘விஸ்வரூபம்’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘பாகுபலி’, ‘வால்டர் வெற்றிவேல்’ என 30க்கும் அதிகமான படங்களின் காட்சிகளை கேலி, கிண்டல் செய்திருக்கிறார் இயக்குநர் அமுதன். இவற்றுடன் இன்னமும் திரைக்கே வராத ‘எந்திரன் 2.0’ படத்தைக்கூட விட்டுவைக்கவில்லை.

படங்கள் என்றில்லை தனிப்பட்ட முறையில் நடிகர், நடிகைகளையும் கிண்டல் செய்து ஓய்ந்திருக்கிறார் இயக்குநர். ரஜினி, கமல், அஜீத், விஜய், விஷால், தனுஷ், சூர்யா, ஸ்ருதிஹாசன், ஜெனிலியா, ரித்விகா, எம்.ஜி.ஆர்., டி.ராஜேந்தர்வரையிலும் வறுபட்டிருக்கிறார்கள் படத்தில். 

சினிமா நடிகர்கள் மட்டும்தான் என்றில்லை.. பிரதமர் நரேந்திர மோடி, ஓ.பன்னீர்செல்வம், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை இயக்குநர்.  சசிகலா ஜெயலலிதாவின் சமாதியில் மூன்று முறை அடித்து சத்தியம் செய்த காட்சியைக்கூட அழகான, பொருத்தமான இடத்தில் பகடி செய்திருக்கிறார் இயக்குநர்.

முதல் பாகத்தை போலவே இதிலும் சிவாவின் நண்பர்களாக வயதான யூத்துகள் மூன்று பேர் இருக்கிறார்கள். ஆர்.சுந்தர்ராஜன், சந்தானபாரதி, மனோபாலா என்ற இவர்களின் மேக்கப் ஓகேதான். ஆனால் எந்த வசனத்திலும் துளிகூட காமெடியில்லை. சிரிப்பும் வரவில்லை. படத்தில் ஒரு சில காட்சிகளில் ஜீவா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் திடீரென தோன்றி மறைகிறார்கள்.

நகைச்சுவை நடிகர் சதீஷ் வில்லன் பி-யாக நடித்திருக்கிறார். அதிலும் தோன்றும் காட்சிகளிலெல்லாம் கெட்டப்புகளை மாற்றிக் கொண்டு திகைக்க வைக்கிறார். மொத்தம் 15 கெட்டப்புகளாம். ‘16 வயதினிலே’ ‘பரட்டை’யில் இருந்து ‘2.0’ வில்லன் அக்சய்குமார்வரை அனைத்து வகையான வில்லன் கெட்டப்புகளையும் போட்டு கை தட்டல்களை அள்ளியிருக்கிறார். தோற்றம் மட்டுமே சிரிக்க வைக்கிறதே ஒழிய.. ஒரு வசனம்கூட சிரிக்க வைக்கவில்லை என்பது சோகம்தான்.

நாயகியான ஐஸ்வர்யா மேனன் மூன்று கேரக்டர்களையுமே செய்திருக்கிறார். பார்க்க பளிச்சென்று இருந்தாலும் நகைச்சுவை படமென்பதால் நடிப்புக்கு அதிகமாக ஸ்கோப் இல்லை. அடுத்தப் படத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

முதல் பாகத்தை போலவே இதிலும் ஒரு பாட்டி சிவாவுக்கு இருக்கிறார். முதல் பாகத்தில் இருந்த பரவை முனியம்மாவுக்கு பதிலாக இதில் கலை ராணி. படத்தின் ஓரிடத்தில் சசிகலா பாணியில் சத்தம் செய்கிறார். கடைசியாக படம் முடிந்தவுடன் ‘பாகுபலி’ கட்டப்பா பாணியில் அடு்த்த பெண்ணை பார்க்கக் கிளம்பும் சிவாவை குத்திக் கொல்கிறார்.

முதல் பாகம் போலவே இதிலும் கஸ்தூரிக்கு ஒரு ஐட்டம் சாங். அந்த பாடல் வரும் காட்சியும், சிச்சுவேஷனும் செம கலாய்ப்பாக இருக்கிறது. ஆனால் நடனம். மகா கொடுமை. கஸ்தூரியை சகிக்க முடியவில்லை. நடிப்பிலேயே முடியாது. இப்போது நடனமென்றால் எப்படிங்க இயக்குநரே..?

வசனங்கள்தான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம்.

“சிவா, நாளைல இருந்து வட சென்னையை நீங்கதான் பார்க்கணும்.”

“அப்போ ஏற்கனவே அத பாத்துட்டு இருந்த ‘வெற்றிமாறன்’..?

“அவரை ‘விசாரணை’-ல தூக்கி போட்ரலாம்…” – இப்படித்தான் பாதி வசனங்கள் சினிமாக்களுடனும், சினிமா துறையுடனும் சம்பந்தப்படுத்தியே எழுதப்பட்டிருக்கிறது. இதனாலேயே படத்தை வெகுவாக ரசிக்க முடிந்திருக்கிறது.

ஓ.பி.எஸ். ஜெயலலிதா சமாதி முன் அமர்ந்து தர்ம யுத்தம் துவங்கியதாக சீன் போட்ட காட்சி, ‘பில்லா’ படத்தில் அஜித், நயன்தாரா இடம் பெற்ற நீச்சல் குளம் காட்சி, ‘சதுரங்க வேட்டை’ பாணியில் ‘ஒருத்தனை அழிக்கனும்னா முதல்ல அவன்கிட்ட இருக்கற பவரை அழிக்கணும்’ என்று பேசும் வசனம், ‘தேவர் மகன்’ கமல் அடுத்தத் தலைவராகும் காட்சியை பகடி செய்வது, ‘விக்ரம்’ படத்தில் இடம் பெற்ற புகழ் பெற்ற வசனமான ‘யார் அந்த டேவிட் பிள்ளை’யை கச்சிதமாக பொருத்தமான இடத்தில் பயன்படுத்தியிருப்பது.. ‘சத்ரியன்’ படத்தின் ‘திரும்பி வரணும்.. பழைய பன்னீர்செல்வமா திரும்பி வரணும்’ என்ற வசனக் காட்சி, போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்திற்கே ரகசியமாக பதவி ஏற்பு நிகழ்ச்சியை நடத்துவது, ‘ரெமோ’ படத்தில் இடம் பெற்ற பிறந்த நாள் விழா காட்சி, சிவாஜி படத்தின் புகழ் பெற்ற வசனமான ‘பேரைக் கேட்டாலே ச்சும்மா அதிருதுல்ல’ என்பதை பயன்படுத்தியிருப்பது, ‘விக்ரம் வேதா’ படத்தின் விசாரணை காட்சியில் பேசப்பட்ட ‘ஒரு கதை சொல்லட்டுமா’ என்ற வசனத்தை கிண்டலடித்திருப்பது, ‘குருதிப் புனல்’ படத்தில் கமல் பேசும் ‘பயம்ன்னா என்னன்னு தெரியுமா’ என்ற வசனத்தை வைத்திருப்பது, ஹாலிவுட் ‘ஸ்பீடு’ படத்தின் திரைக்கதையை பயன்படுத்தி பேருந்தை விபத்தில் இருந்து காப்பாற்றுவது, ‘துப்பாக்கி’ படத்தின் மொட்டை மாடி துப்பாக்கி சூடு காட்சி, ‘முத்து’ படத்தின் ‘விடுகதையா இந்த வாழ்க்கை’ பாடல் காட்சியை கிண்டல் செய்திருப்பது, ‘16 வயதினிலே’ படத்தின் ‘இது எப்படி இருக்கு’ வசனத்தை ரீவைண்ட் செய்திருப்பது, ‘எவண்டி உன்னை பெத்தான்..’, ‘அட்ரா அவள.. வெட்ரா அவளை’ என்ற பாடல்களையும் ட்ரோல் செய்திருப்பது, ‘நீ பற்ற வைத்த நெருப்பு’ என்று ‘விஸ்வரூபம்’ பாடல் காட்சி, ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் டெட் பாடி காட்சி என்று ஏகத்துக்கும் அடித்து ஆடியிருக்கிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன்.

இத்தனை காட்சிகளையும் மனதில் கொண்டு இதற்கேற்றாற்போல் கச்சிதமாக திரைக்கதை அமைத்திருக்கும் இவரது திறமைக்கு ஒரு சல்யூட். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் ஹெச்.ராஜாவையும் கிண்டலடித்திருக்கிறார்கள்.

கோவையில் நடைபெற்ற பிரியாணி திருட்டை மனதில் வைத்து ‘சோறு போடறதா சொன்னாங்க. ஆனால் போடலை.. யூ ஆல் ஆண்ட்டி இந்தியன்ஸ்’ என்று கிண்டல் செய்யும்போது மொத்தக் கை தட்டல்களும் கிடைத்தன.

இதேபோல் கவர்னர் பன்வாரிலால்-நிர்மலா தேவி விஷயத்தை வைத்தும் விளையாடியிருக்கிறார் இயக்குநர் அர்ச்சனை தட்டோடு நிற்கும் பெண்ணின் கன்னத்தைத் தடவிவிட்டு ‘நான் உன் தாத்தா மாதிரி’ என்று சொல்லிவிட்டுபோகும் காட்சியில் உண்மை உணர்ந்து தியேட்டரை அலறுகிறது.

மோடியின் கருப்புப் பண ஒழிப்பையும் போட்டுத் தாக்கியிருக்கிறார் இயக்குநர். வில்லன் பி தனது அத்தனை கருப்புப் பணமும் வீணாகிவிட்ட நிலையில் அவர் புலம்பும் புலம்பலும், தொடரும் காட்சிகளும்கூட கலகலப்பைக் கூட்டுகின்றன.

வில்லனை வீட்டைவிட்டு வெளியே வரவழைக்க பணத்தைச் செல்லாக்காசாக்கிவிட்டால் என்ன என்ற ஐடியாவும் ஏடிஎம் வாசலில் வில்லன் பி போட்டோ எடுத்து அனுப்புவது கலாய்ப்பின் உச்சம்.

இப்போதைய தமிழ் சினிமா டிரெண்டின்படி லூஸுத்தனமான பெண்களைத்தான் ஹீரோக்கள் விரும்புகிறார்கள் என்பதால் அதேபோல் பெண்ணை எதிர்பார்த்து ஏமாந்து போன சிவான கொதிக்கும் கொதிப்பில் தமிழ் சினிமாவின் கதையும் அடங்கியிருக்கிறது.

முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று நாம் கருதி வரும் வேளையில் ‘பாகிஸ்தானியர்களை நமது சகோதரர்கள்’ என்று சொல்லி சொந்தம் கொண்டாடச் சொல்லும் சிவாவின் ஐடியா புத்திசாலித்தனமானது.

பல அரசியல் கட்சிகள் தங்களது பொதுக்கூட்டங்களுக்கு மின்சாரத்தை கொக்கி போட்டு இழுப்பதைச் சுட்டிக் காட்டி நாடு எப்படி முன்னேறும் என்று தைரியமாகக் கேட்டிருக்கிறார் சிவா.

காதலித்து ஏமாற்றும் ஆண்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும்விதமாக ஹீரோயின் பாடும் பாடல் ஒலிப்பது வித்தியாசம்தான்.

எப்போதும் நமது போலீஸ் குற்றவாளிகளுக்கு சல்யூட் அடித்து வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்துவிட்டு பின்புதான் அவர்களைத் தேடி அலைவார்கள் என்பதையும் கிண்டலாக்கியிருக்கிறார்கள்.

கிளைமாக்ஸ் எடுக்கப் போகும் பின்னி மில் கிரவுண்ட்டைகூட கிண்டலாக்கியிருக்கிறார்கள். கடைசியாக “போய் புள்ளை குட்டிகளை என்ஜீனியரிங் தவிர வேற எல்லாத்துக்கும் படிக்க வைங்க…” என்று நோகமாமல் சொல்வதுவரையிலும் சிவாவின் கலாய்ப்பு தாங்க முடியவில்லை.

இயக்குநருக்கு ஏற்ற ஒளிப்பதிவாளராக களம் கண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத். மதுரை கிராம காட்சிகள், வில்லன் சதீஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள், பாடல் காட்சிகள் என்று பலவற்றிலும் கேமிராவின் பணி பாராட்டுக்குரியது.

இசையமைப்பாளர் கண்ணனின் இசையில் பாடல்கள் தியேட்டரில் மட்டுமே கேட்கும் ரகமாக அமைந்தது சோகம்தான். நான் யாருமில்ல பாடலை மட்டும் மாண்டேஜ் காட்சிகளோடு தொகுத்திருப்பதால் ரசிக்க முடிகிறது. மேலும், ‘எவடா உன்னை பெத்தா’, ‘வா வா காமா’, ‘என் நடனம்’, ‘செல்லப் பெண்ணே’ என்ற சின்னச் சின்னப் பாடல்களாலும் படத்தினை சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

டி.எஸ்.சுரேஷின் படத் தொகுப்புப் பணியும் பாராட்டத்தக்கது. இத்தனை வித்தியாசமான திரைக்கதையை கொஞ்சமும் அதன் நகைச்சுவை பாணி கெடாமல் கொடுத்திருக்கிறார்.

முதல் பாதியை சிரித்தபடியே நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். திரைக்கதையும் விறுவிறுப்பாகவே அமைக்கப்பட்டிருப்பதால் பெருமளவு ரசிக்க முடிகிறது. ஆனால் இடைவேளைக்கு பின்புதான் படம் நொண்டியடித்திருக்கிறது. முதல் பாதி அளவுக்கான சுவாரஸ்யமான காட்சிகள் பின்பாதியில் இல்லாததுதான் படம் மிகப் பெரிய வெற்றி என்கிற விஷயத்துக்கு தடையாகிவிட்டது.

“சில படங்களின் ட்ரெய்லர் பிரமாதமா இருக்கும். ஆனால், படம் மொக்கையா இருக்கும். சில படங்களின் ட்ரெய்லர் மொக்கையா இருக்கும். ஆனால், படம் பிரமாதமா இருக்கும்.” என்று இந்தப் படத்திலேயே ஒரு வசனம் இருக்கிறது. இது இந்தப் படத்திற்கும் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. டிரெயிலரில் இருந்த எதிர்பார்ப்பு படத்தில் இல்லை என்பது மட்டும் உண்மை.

பல திரைப்படங்களை கலாய்த்துதான் இந்தப் படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருப்பதால் தொடர்ந்து சினிமா பார்த்துக் கொண்டேயிருக்கும் சினிமா ரசிகர்களுக்குத்தான் இந்தப் படம் புரியும். அவர்களால்தான் இந்தப் படத்தை ரசித்துப் பார்க்க முடியும். சிரிக்க முடியும்.. மற்றவர்களுக்கு கண்ணைக் கட்டி காட்டில்விட்ட கதைதான்..!

எப்படியிருந்தாலும், நிச்சயமாக ஒரு முறை பார்த்து ரசிக்கலாம் என்று சொல்ல வைத்திருக்கிறது இந்த தமிழ்ப் படம் 2.0.

Our Score