full screen background image

சூரகன் – சினிமா விமர்சனம்

சூரகன் – சினிமா விமர்சனம்

3rd Eye Cine Creations சார்பாக தயாரிப்பாளர் கார்த்திகேயன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் சதீஷ் கீத குமார் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

தனக்கு ஏற்பட்ட விபத்தினால் கண் பார்வை பாதிப்புக்குள்ளான போலீஸ் அதிகாரி, சில குற்றவாளிகளைப் பிடிக்கின்ற தருணத்தில் தவறுதலாக சுட்டு ஒரு அப்பாவி இளம்பெண்ணை கொன்று விடுகிறார்.

இதனால் பணியிலிருந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட அவர் குற்றவுணர்ச்சியில் இருக்கும் காலத்தில், ரோட்டோரம் அடிபட்டுக் கிடந்த ஒரு பெண்ணை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்க, அந்தப் பெண்ணின் உயிரையும் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது.

இது மேலும அந்த போலீஸ் அதிகாரிக்கு குற்றவுணர்ச்சியைக் கொடுக்க, அப்பெண்ணின் மரணத்தின் பின்னால் இருக்கும் மர்மத்தை உடைக்க அந்த வழக்கை ரகசியமாக விசாரிக்கத் துவங்குகிறார்.

அந்த விசாரணை அவருக்கு வெற்றியைக் கொடுத்ததா..? அப்பெண் எப்படி..? எதற்காக..? யாரால்..? இறந்து போனார் என்பதைத்தான் விவரிக்கிறது இந்த “சூரகன்” திரைப்படம்.

கண் பார்வை பாதிப்புக்குள்ளான போலீஸ் அதிகாரி ஈகை வேந்தனாக அறிமுக நாயகன் கார்த்திகேயன் விநாயகம் நடித்திருக்கிறார்.

நடித்திருப்பதோடு திரைக்கதையையும் இவரே எழுதியிருக்கிறார்.

சண்டைக் காட்சிகளில் சிறப்பான செயல்பாடு. ஆனால் சோகம் ததும்பும் காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும், எமோஷ்னல் காட்சிகளிலும் ஸ்கோர் செய்ய திணறுகிறார்.

நாயகியாக சுபிக்ஷா கிருஷ்ணன். நாயகனோடு ஆடிப் பாடவும், நாயகன் சோர்வாகும்போது வந்து தோள் கொடுக்க உதவும், தமிழ் சினிமாவின் தடம் மாறாத கதாநாயகி கதாபாத்திரம்.

நடிப்பதற்கு இவருக்கும் சொல்லிக் கொள்ளும்படியான காட்சிகளே இல்லை எனலாம்.

இவர்கள் தவிர்த்து, நிழல்கள் ரவி, மன்சூர் அலிகான், பாண்டியராஜன், வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, சுரேஷ் மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி, வின்செண்ட் அசோகன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

நிழல்கள் ரவி க்ளைமாக்ஸ் காட்சியில் ஒரு மிகப் பெரிய துப்பாக்கியை தூக்கிக் கொண்டு வருகிறார். மன்சூர் அலிகான் ஒன்றிரண்டு துப்பாக்கிகளையும், சில, பல துப்பாக்கிகளையும் கொண்டு வருகிறார்.

இந்த இருவரும் இந்த ஆயுதங்களை வைத்து என்ன செய்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

சிறிது நேரமே வந்தாலும் ரேஷ்மா பசுபுலேட்டி வரும் காட்சி ரசிக்கும்படி இருக்கிறது. மன்சூர் அலிகான் வழக்கம்போல் ஒரு கேலியான வில்லன் கதாபாத்திரத்தில் வந்து போகிறார்.

வின்செண்ட் அசோகன் கையில் ஒரு துப்பாக்கியை வைத்துக் கொண்டு கண்ணில் பார்ப்பவர்களை எல்லாம் காக்கா குருவியை சுடுபவர்களைப் போல் சுட்டுத் தள்ளிக் கொண்டே போகிறார்.

அவர் சுட்டுக் கொல்லும் ஆட்களில் கமிஷ்னரின் மகனான உயர் போலீஸ் அதிகாரி ஒருவரும் அடக்கம். இருப்பினும் யாரும் அது குறித்து கேள்வி கேட்பதில்லை.

வின்செண்ட் அசோகனை தேடும் முயற்சியில் இறங்கினார்களா..? என்பது மருந்துக்குகூட கதையில் இல்லை.

கமிஷனராக வரும் ஜீவா ரவி கதாபாத்திரம் “சஸ்பெண்ட் செய்யப்பட்ட நீ இந்த கேஸுல் மூக்கை நுழைக்காதே” என்று நாயகனை பல்வேறு இடங்களில் மிரட்ட மட்டுமே பயன்பட்டு இருக்கிறது.

இது தவிர்த்து அக்காவாக வினோதினி வைத்தியநாதனும், அக்கா கணவராக பாண்டியராஜனும் வந்து செல்கிறார்கள். பாண்டியராஜன் ஹீரோவை மிரட்டுவதற்காக கடத்தப்படுகிறார்.

க்ளைமாக்ஸில் ஹீரோவால் காப்பாற்றப்படுகிறார். அவ்வளவே..!

அச்சு ராஜாமணியின் இசை காட்சிகளுக்கு பலம் சேர்க்கப் போராடுகிறது. சில இடங்களில் காட்சிகளின் சோர்வுத் தன்மையை கூட்ட உதவி இருக்கிறது.

ஒரு சந்தேகத்திற்கிடமான மரணம், அதை துப்பு துலக்கும் போலீஸ் அதிகாரி, அதன் பின்னால் இருக்கும் கயவர்கள் கூட்டம் என மிக சாதாரணமான ஒன் லைனர்தான்.

இதை வைத்துக் கொண்டு அதையும்விட சுமாராக திரைக்கதை செய்திருக்கிறார்கள்.

நாயகனுக்கு ஏற்பட்டிருக்கும் மெடிக்கல் கண்டிஷன் என்ன…? ஏன் அவன் தலைகீழாக தொங்கிக் கொண்டு பயிற்சி எடுக்க வேண்டும், வீடியோ மற்றும் நாயகனிடம் வந்து செல்லும் பட்டாம்பூச்சி பற்றிய முழுமையற்ற விளக்கம்..?

இப்படி படம் தொடர்பாக கேட்பதற்கு பல்வேறு கேள்விகள் இருந்தாலும், அது எதற்குமே பதில் அளிக்காமல் படம் முடிந்து போய்விடுகிறது.

சாதாரண கதை, மிக பலவீனமான திரைக்கதை என்று போவதால் திரைப்படம் சுவாரஸ்யமற்ற காட்சிக் கோர்வையாக நகர்ந்து நம்மையும் சோதிக்கிறது!

RATING : 2 / 5

Our Score