full screen background image

உயிர் தமிழுக்கு – திரைப்பட விமர்சனம்

உயிர் தமிழுக்கு – திரைப்பட விமர்சனம்

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்த படத்தை தயாரித்துள்ளதுடன், அவரே இந்த படத்தை இயக்கியும் உள்ளார்.

இந்தப் படத்தில் அமீர், சாந்தினி ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணிய சிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவண சக்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – மூன் பிக்சர்ஸ், இயக்கம் – ஆதம்பாவா, இசை – வித்யாசாகர், ஒளிப்பதிவு – தேவராஜ், படத் தொகுப்பு ; சார்லஸ், பாடல்கள் – பா.விஜய், வசனம் –  பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன் பாலா, தயாரிப்பு மேற்பார்வை – R.S.வெங்கட், நிர்வாக தயாரிப்பு – B.மகேஷ், பத்திரிக்கை தொடர்பு – A.ஜான்.

மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு அமீர் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் இது. 10 வருடங்களாகப் பல்வேறு பெயர்களில் உருவாகி, பயணித்து கடைசியில் இந்த ‘உயிர் தமிழுக்கு’ என்ற தலைப்பில் பல்வேறு சிக்கல்கள், இடையூறுகளையும் தாண்டி இந்த வாரம் வெளியாகியுள்ளது.

டைட்டிலை பார்த்தவுடன் ஏதோ அரசியல் களத்தில் அமீர் விளையாடியிருக்கிறார் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். காதலுக்காக அரசியலை புறந்தள்ளும் ஒரு பக்கா அரசியல்வாதி பிளஸ் காதலன் ஒருவனின் கதைதான் இந்தப் படம். இதில் ‘தமிழ்’ என்பது நமது மொழியைக் குறிப்பதல்ல. படத்தில் நாயகியின் பெயர் ‘தமிழ்’. அந்தத் ‘தமிழு’க்கு உயிரைக் கொடுக்க முன் வரும் நாயகனின் கதைதான் இந்தப் படம்.

கேபிள் டிவி பிஸினஸ் செய்து வரும் ‘பாண்டியன்’ என்ற அமீரின் நெருங்கிய நண்பர் இமான் அண்ணாச்சி. அந்தச் சமயத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் அந்த வார்டுக்கு இமான் அண்ணாச்சி தான் சார்ந்த கட்சியில் சார்பில் நிற்கவிருக்கிறார். வேட்பு மனு தாக்கலுக்கு உடன் வரும்படி அமீரை அழைக்கிறார் இமான்.

அந்த நேரத்தில் கலெக்டர் ஆபீஸூக்கு வரும் அமீரின் கண் பார்வையில் படுகிறார் எதிர்க்கட்சியின் மாவட்டச் செயலாளரான ஆனந்த்ராஜின் ஒரே மகளான சாந்தினி ஸ்ரீதரன்.

பார்த்த மாத்திரத்திலேயே காதலில் விழும் அமீர் சாந்தினியை இன்னமும், தினமும் நெருக்கமாகப் பார்த்துப் பழகிப் பேச முடியுமென்றால் தானும் கவுன்சிலராக வேண்டும் என்று நினைத்து அந்த ஸ்பாட்டிலேயே இமானை அழைத்துக் கொண்டு அந்தக் கட்சிக்கு சென்று தனக்கு சீட் கேட்கிறார். தேர்தலில் நிற்கிறார். ஜெயிக்கிறார்.

சாந்தினிக்கு காதல் தூது விடுகிறார். காதல் ஓகேவாகிறது. இருவரின் காதலையும் ஆனந்த்ராஜ் ஏற்கவில்லை. ஒப்புதல் தர மறுக்கிறார். இந்த நேரத்தில் திடீரென்று ஆனந்த்ராஜ் கொலை செய்யப்பட பழி அமீரின் மீது விழுகிறது.

இந்தக் கொலையை நான் செய்யவில்லை என்கிறார் அமீர். ஆனால் சாந்தினி இதை நம்பத் தயாராக இல்லை. அமீர்தான் கொலையாளி என்று சாந்தினி நினைக்க.. அத்தொகுதியில் இடைத்தேர்தலை அறிவிக்கிறார்கள்.

இந்த இடைத்தேர்தலில் சாந்தினியும், அமீரும் போட்டியிடுகிறார்கள். தேர்தலில் அமீர் ஜெயித்தால் அவரைத் திருமணம் செய்து கொள்வதாக சாந்தினி சொல்ல.. அமீர் மும்முரமாய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

கடைசியில் என்னவானது..? அமீர் ஜெயித்தாரா இல்லையா..? சாந்தினி என்னவானார்..? என்பதுதான் இந்த ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் மீதமான திரைக்கதை.

அமீருக்கு இது முற்றிலும் புதிய வேடம். ஆனாலும் காமெடி வருவதைப் போல பேசி, ஆச்சரியமாக நடித்தும் இருக்கிறார். அரசியல்  உண்மைகளை விளக்கமாகப் பேசியிருக்கும் தோரணையைப் பார்த்தால், அமீரின் இந்தப் படத்தின் நாயகன் வேடத்துக்கும் பின்னால் ஏதோவொரு அரசியல் இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

காதலில் விழும் சாதாரணமான நாயகனாகவும் நடித்திருக்கும் அமீரின் தோற்றம் நமக்கு இடித்தாலும், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனது காதல் விளையாட்டைத் தொடர்ந்திருக்கிறார் அமீர்.

காதல் காட்சிகளிலும், டூயட் காட்சிகளிலும் அசட்டுத்தனத்தை மட்டும் காட்டாமல் பக்கா மாஸான, கிளாஸான, மெச்சூர்டான காதலனாக மட்டும் தன்னைக் காண்பித்துத் தப்பித்திருக்கிறார். மேடைப் பேச்சில் அடுக்கு மொழியில் அள்ளி விடும்போது அசர வைத்திருக்கிறார் அமீர். வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!

பார்த்த கணத்திலேயே சொக்கிப் போகும் அளவுக்கு பேரழகி’ என்று அமீரால் சொல்லப்படும் சாந்தினி ஸ்கிரீனில் நிஜமாகவே அப்படித்தான் இருக்கிறார். படம் 10 ஆண்டுகளாக நகர்ந்திருக்கிறது என்பதால் முதல் காட்சியில் பார்க்கும் சாந்தினியும், கிளைமாக்ஸில் பார்க்கும் சாந்தினியும் வேறு, வேறாகத் தெரிகிறார்கள். ஆனால் வசீகரமும், முக கவர்ச்சியும் அதேதான்.

புன்னகை இளவரசியான சினேகாவுக்குப் போட்டியாக சிரிக்கும்போது எதிரில் இருப்பவர்களை மொத்தமாக கிளீன்போல்டாக்கும் அளவுக்கு வசீகரிக்கிறார் சாந்தினி. எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தான் ஒரு அழகிதான் என்று சொல்லும் அளவுக்கு தனது முக அழகைக் காட்டி தான் வரும் பிரேமில் தன்னை மட்டுமே பார்க்கும்படி செய்திருக்கிறார் சாந்தினி. தனக்கு நடிப்பும் வரும் என்பதை தன் அப்பாவின் சமாதியில் நின்று அமீருடன் சவால் விடும் காட்சியில் வெளிப்படுத்தியிருக்கிறார். வாங்கம்மா.. வாங்க.. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இவரையும் வாழ வைக்கும் என்று நம்புவோம்..!

காமெடியில் வில்லத்தனம், வில்லத்தனத்தில் காமெடி என்று இரண்டையும் ஒருசேர செய்து வரும் ஆனந்த்ராஜ், இந்தப் படத்திலும் இதே நடிப்பைக் காண்பித்திருக்கிறார். சில வசனங்களை ஆனந்த்ராஜ் பேசும்போது நம்மை அறியாமலேயே சிரிப்பு தானாய் வருகிறது.

மேலும் ஜால்ரா அடித்துக் கொண்டேயிருக்கும் இமான் அண்ணாச்சி, மாவட்டச் செயலாளராக இருந்து அமீரை வளர்த்தெடுக்கும் ராஜ் கபூர், சாந்தினிக்கு அட்வைஸராக இருக்கும் மாரிமுத்து, அமீரின் அல்லக்கைகளான சரவண சக்தி, கஞ்சா கருப்பு என்று படத்தில் இருக்கும் அத்தனை பேருமே கை தேர்ந்த அரசியல்வாதிகளின் நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள். யாரும் சோடை போகவில்லை. சிறப்பான இயக்கத்தினால் இது சாத்தியப்பட்டுள்ளது.

அரசியல் படம் என்பதால் வசனங்களில் தீயைப் பரவ வைத்திருக்கிறார்கள் வசனகர்த்தாக்கள். சம கால அரசியலைக் கலந்து, திரைக்கதையில் மறைமுகமாக சமீபத்திய டிரெண்ட்டிங் நியூஸ்களையெல்லாம் தொகுத்து வழங்கியிருப்பது தனி சிறப்பு. மேலும் பல வசனங்களுக்கு மியூட் செய்திருப்பதும், அந்த வசனங்கள்கூட நமக்குக் கேட்கும் லெவலுக்கு இருப்பதும் சிறப்புதான். வசனகர்த்தாக்களான பாலமுரளி வர்மன், மற்றும் அஜயன்பாலாவுக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

தொழில் நுட்பத்திலும் இந்தப் படம் தனது சிறப்பினைக் கொண்டுள்ளது. 10 ஆண்டுகளாக உருவான படம் என்று யாராலும் சொல்ல முடியாத அளவுக்கு ஒளிப்பதிவினை தரமாக ஒன்று போலவே கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேவராஜ். பாடல் காட்சிகளிலும், மற்றைய காட்சிகளிலும் நாயகி சாந்தினியை சொக்க வைக்கும் அளவுக்கு அழகுபட காண்பித்தமைக்காக ஒளிப்பதிவாளருக்கு கூடுதல் பாராட்டுக்கள்.

வித்யாசாகரின் இசையில் எம்.ஜி.ஆரின் பாடலும், பாடல் காட்சியும் செம ஜோர். மேலும் காதல் பாடலும் கேட்கும்படிதான் இருக்கிறது. தேர்தல் காட்சிகளைத் தொகுத்தளித்திருக்கும் பாடலும் இனிமேல் தேர்தல் கால பாடல்கள் லிஸ்ட்டில் நிச்சயமாக இடம் பிடிக்கும்.

பொதுவாக அரசியல் படங்களில் சீரியஸாக கதையைச் சொல்லித்தான் முடித்திருப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் அந்தக் கொடுமையையெல்லாம் செய்யாமல் ஒரு காதலுக்காக ஒருவன் எப்படி சமூக சேவகர் வேடம் போட்டு அரசியலில் நுழைந்து, பால பாடம் பயின்று அரசியலில் எப்படி மேலே, மேலே வருகிறான் என்பதை நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆதம்பாவா. அவருடைய சிறப்பான இயக்கத்தினால் படம் நெடுகிலும் சிரித்துக் கொண்டே அரசியல் கலாட்டாக்களை ரசிக்க முடிந்திருக்கிறது.

இதில் மறக்கவும், மறுக்கவும் முடியாத பிம்பமான எம்.ஜி.ஆரை பயன்படுத்தியிருப்பது இயக்குநருக்கும், அமீருக்குமே பெரும் உதவியாக இருந்திருக்கிறது. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்பதுபோல எத்தனை ஸ்டார்கள் வந்தாலும் சினிமாவில் எம்.ஜி.ஆரின் புகழ் மறையப் போவதில்லை என்பதை இந்தப் படமும் நிரூபித்திருக்கிறது.

உயிர் தமிழுக்கு – நகைச்சுவை விருந்து..!

RATING : 4 / 5

Our Score